M.A.முஹம்மது ஸலாஹுத்தீன் B.Com
[ முஸ்லிம்களின் செல்வாக்கு ஃபிரான்ஸில் வளர்ந்து வருகிறது. அதுவும் நேரிடையாக பார்க்கும் வண்ணம் என்பதை நினைக்கும்போது மகிழ்வு ஏற்படுவது இயற்கையே. அல்ஹம்துலில்லாஹ்.
வியக்க வைத்த ஒரே ஒரு புள்ளி விபரம். நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வசிக்கிறார்கள்.
இங்கு பயணம் செய்து அல்லாஹ், அல்லாஹு அக்பர், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், இன்ஷா அல்லாஹ் போன்ற வார்த்தைகளை காதால் கேட்காமல் திரும்பி வந்துவிட முடியாது. கேட்பவர்கள் எப்படியாவது பயன்படுத்ததானே செய்வார்கள். ஆம் ‘இன்ஷா அல்லாஹ்‘ ஃபிரெஞ்சு மொழியில் ‘இன்ஷல்லாஹ்‘ என்று மருவி நுழைந்துவிட்டது.]
நிகோலா சர்கோஜ் இன்று ஃபிரெஞ்சு அதிபர். உள்துறை அமைச்சராக இருக்கும்போதே ஆளும் வலதுசாரி கட்சியின் தலைவராகவும் விளங்கினார். அரசியலில் மிகப்பெரும் செல்வாக்கு பெற்றதற்கு முக்கிய காரணம் திறன்மிக்க நடைமுறை, சொன்னதை செய்வது. கறைபடா கரங்கள், துணிவான அணுகுமுறை என்று அடுக்கலாம்.
ஃபிரான்ஸில் ஏராளமான வெளிநாட்டவர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை மற்றும் தராதரம் இவையெல்லாம் புள்ளி விபரமாக அவருக்குத் தெரியும். அது அவருடைய துறை.
முஸ்லிம்களின் அதிகரிப்பு, பள்ளிவாசல்களின் பெருக்கம், இவற்றுக்கு மத்தியில் அரசியல் ரீதியாக கண்டு கொள்ளப்படாத சமூகமாகவே இருப்பது அவருக்கு தென்பட்டு இருக்கிறது. இரண்டாவது மதமாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டவர்களின் சமூகம் என்று ஒதுக்கிவிட முடியாத அளவு ஏராளமான துறைகளில் முஸ்லிம்களின் பங்கேற்பு கணிசமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.
ஒரு சில முஸ்லிம்கள் தேச அளவிலும், ஏன் சர்வதேச அளவிலும் அங்கீகாரம் பெற்றுவிட்டார்கள். மக்களின் மதிப்பை பெற்ற முதன்மை 50 பேரிலும் முதன்மை இடத்தை ஒரு முஸ்லிம் விளையாட்டு வீரர் சில காலம் பெற்று இருந்தார். ஆம் பிரெஞ்சு மக்களுக்கு மிகவும் விருப்பமானவரில் முதலிடத்தை சில காலம் அவர் பெற்றிருந்தார். மற்றொருவருக்கு இந்தியாவே வரவழைத்து பரிசளித்து மகிழ்ந்ததை ‘இந்தியா டுடே‘ படம் போட்டே விளக்கியது.
இது மட்டுமின்றி பிரெஞ்சு மக்களுக்கு பலஸ்தீன முஸ்லிம்களின் மீது ஒரு மானசீக ஆதரவும், இரக்கமும், உதவும் மனப்பான்மையும் உண்டு.
ஃபிரெஞ்சு மக்கள் விடுமுறை கால உல்லாசப் பிரயாணம் செய்வதற்கு மிக முக்கியத்துவம் அளிப்பர். வெளிநாட்டுக்கு செல்வதில் அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது எட்டு நாடுகளுக்கு அதில் 2004-ம் ஆண்டில் முதல் மூன்று இடத்தை மொரோக்கோ, தூனிசியா, எகிப்தும் ஆறாவது இடத்தை துருக்கியும் பெற்றிருந்தது. இந்த நான்கு நாடுகளும் பெருவாரியான முஸ்லிம்களை குழமக்களாக கொண்ட சிறப்பிற்கு உரியவை.
இங்கு பயணம் செய்து அல்லாஹ், அல்லாஹு அக்பர், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், இன்ஷா அல்லாஹ் போன்ற வார்த்தைகளை காதால் கேட்காமல் திரும்பி வந்துவிட முடியாது. கேட்பவர்கள் எப்படியாவது பயன்படுத்ததானே செய்வார்கள். ஆம் இன்ஷா அல்லாஹ் ஃபிரெஞ்சு மொழியில் இன்ஷல்லாஹ் என்று மருவி நுழைந்துவிட்டது. மேலும், ஏராளமான முஸ்லிம், அரபு நாடுகளில் ஃபிரெஞ்சு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
சர்சேல் (Sarcells) என்ற ஊருக்கு சென்று இருந்தேன். மார்கெட்டிற்கு மருமகனோடு சென்றிருந்தேன். ஒரு பிரெஞ்சுகார இறைச்சிக்கடை முதலாளியிடம் பேச்சுக் கொடுத்தேன். ”எனது போட்டிக்கடைக்காரர் ஹலால் இறைச்சி விற்றார். நான் ‘ஈ‘ ஓட்ட வேண்டிய நிலை. எத்தனை நாள்தான் இப்படி இருப்பது? நானும் ஹலால் இறைச்சி விற்க ஆரம்பித் துவிட்டேன் ” என்றார்.பக்கத்து ஊருக்கு வேறு ஒரு மருமகன் வீட்டிற்கும் சென்றேன். கார்கஜ் (Garges) என்ற அந்த ஊரில் தற்போது எட்டு பள்ளி வாசல்கள் இருப்பதாக சொன்னார். ஆக பல வகைகளில், பல துறைகளில் செல்வாக்குடன் இஸ்லாமிய சமூகம் விரிந்துகொண்டெ வருகிறது. இவற்றையெல்லாம் விளங்கிய பிறகு முஸ்லிம்களின் சக்திமிக்க வாக்கு வங்கி குறித்தும் தெளிவாகவே புரிந்து கொண்டார் சர்கோஜி அவர்கள்.
கண்டும் காணாமல், பெயரளவிற்கு நமதூர் அரசியல் கட்சி போன்று சில சலுகைகள், உதவிகள் செய்து அதை கைப்பற்ற முயன்று இருக்கலாம். இவ்வளவுக்கும் இன்றுவரை பிரான்ஸில் தெளிவான முஸ்லிம் அரசியல் கட்சி அமையவில்லை. எக்கச்சக்கமான இஸ்லாமிய சங்கங்கள் உண்டு. அவை அரசியல் கலவர சமூக, சமுதாய அமைப்புகள்.
வியக்க வைத்த ஒரே ஒரு புள்ளி விபரம். நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வசிக்கிறார்கள். இந்தியப் பெருங்கடலில் மடகாஸ்கர் தீவுக்கு அருகே கொமோர் (Comors) என்ற ஒரு சின்னதீவு உள்ளது. இலங்கையை விட முப்பது மடங்கு சிறியது. பெரும்பாலோர் கறுப்பு முஸ்லிம்கள். கண்ணியமான இஸ்லாமிய தோற்றம் உடையவர்கள். அவர்கள் அணியும் உயர்தரமான முஸ்லிம் தொப்பியை வைத்தே அவரது தேசத்தை சொல்லிவிடலாம்.
ஏனென்றால் மற்ற நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஒரு தொப்பிக்காக இந்தளவு செலவு செய்வதில்லை. விலையைக் கேட்டால், அடேயப்பா! இதன் விலையில் தமிழகத்தில் ஜிப்பா, கைலி, தொப்பி என்ன தலைப்பாகையையே கூட இரண்டு, மூன்று செட் வாங்கிவிடலாம். அப்படிப்பட்ட ஒரு உயர்ரக தொப்பி. கிராஅத்தை கேட்டும் அவர்களது நாட்டை சொல்லிவிடலாம். நல்ல தொனி!சென்ற ஜூன் மாதம் ஒரு விமான விபத்தில் கொமோர் தீவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வஃபாத்தானார்கள்.
இதன் காரணமாக பிரான்ஸின் தலைநகர பள்ளிவாசலில் ஃபாத்திஹா ஓதப்பட்டது. அதில் சர்கோஜி கலந்து கொண்டார். பிரதமர் ஃபிரான்சுவா ஃபுய்யோன் கொமோர் தீவிற்கே சென்று ஆறுதல் சொன்னார். அவரை வரவேற்ற அந்த சின்னஞ்சிறு தீவின் அதிபர் முழுக்க தலைப்பாகை, தாடி, நீண்ட அங்கி சகிதமாக சுன்னத்தான கோலத்தில் வரவேற்க வந்தது மகிழ்வை அளித்தது. பலியானோரில் பெரும்பாலோர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுவிட்டவர்கள். 1982-ம் ஆண்டு இவர்களின் எண்ணிக்கை 14,000 மட்டுமே. 2003-ல் 26,000. விமான விபத்துக்குப் பிறகு வியப்பூட்டும் செய்தி என்னவென்றால் இந்த சகோதர முஸ்லிம்கள் மர்செய்ல் (Marseille) என்ற துறைமுக நகரத்தில் மட்டும் 80,000 எண்ணிக்கையில் வாழ்கிறார்கள் என்பது தெரியவந்தது.
முஸ்லிம் ஆதரவை மறைந்து கொள்ள சர்கோஜியின் நேர்மையும், துணிவும் இடம் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். புகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். இரண்டு சான்றுகள். தியாகத் திருநாளின்போது முஸ்லிம்களுக்கு குறிப்பாக தலைநகரிலும், புறநகர் பகுதியிலும் குர்பானி கொடுப்பது சிரமமாக இருந்தது. சுட்டப்படி ஆடு அறுக்க முடியாது. மிகப்பெரிய வேன் ஏற்பாடு செய்து அதில் அறுத்துக்கொள்ள வசதி செய்து கொடுத்தார். ஒரு முஸ்லிமின் கண்யோட்டத்தி; கடமையான ஒரு நல்ல காரியத்திற்கு அனுமதி கொடுக்கிறார். வசதி செய்தும் கொடுக்கிறார். அப்படித்தானே பார்க்க முடியும். பார்க்க வேண்டும்.
இரண்டாவது, முக்கியமான ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். அதன் பெயரே அதன் சிறப்பை உணர்த்தும் ஊசுஊஆ முஸ்லிம்களின் மாநில வழிபாட்டு ஆலோசகம். உண்மையில் இது தேசிய அளவில் உள்ள அமைப்பு. அனைத்து மாநிலம் என்று பொருள்தரும். இதன் தலைவரும் தலைநகர பெரும்பள்ளி நிர்வாகத் தலைவரும் ஒருவரே. அவர் அல்ஜீரியர்.
முஸ்லிம்களும் தங்களின் ஆதரவை அவருக்கு உண்டு என்று நாட்டத் தவறவில்லை. ஃபிரெஞ்சு இஸ்லாமிய அமைப்புகளின் ஐக்கியம் UOIF என்ற அமைப்பு ஆண்டுதோறும் பிரம்மாண்டமான கண்காட்சி, கருத்தரங்கு நடத்தும். மொரோக்கோ நாட்டு சகோதரர்களால் நடத்தப்படும் அப்பெருவிழா பொதுவாக 3 நாட்கள் நடைபெறும். உலகிலேயே பெரிய விமான கண்காட்சி ஆண்டுதோறும் அந்த பூர்ஜே (Bourget) நகரிலேயே நடைபெறும்.
ஒரு நாள் நுழைவு கட்டணம் 10 யூரோ (650 ரூபாய்) உணவு, பானம் எல்லாவற்றுக்கும் செலவு செய்தே தீர வேண்டும். போக்குவரத்து செலவு தனி. அப்படி இருந்தும் தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும், விருந்தினர்கள் சர்வதேச ரீதியிலும் வந்திருந்தனர். மொத்த நுழைவு 2004ம் ஆண்டில் 1,30,000 பேர்கள். அவ்வாண்டு விழாவில் விருந்தினராக பங்குபெற வாய்ப்பு கிடைத்தது.
பார்வையாளர்களில் பெரும்பாலோர் பெண்கள், இளம்பெண்கள். எங்கும் முக்காடுமயம்! முக்காடு போடாதவர்களை எண்ணிவிடலாம். 2003ம் ஆண்டு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தவர். அன்றைய உள்துறை அமைச்சர் நிகோலா சர்கோஜி. வரவேற்பு உரையில் சங்க செயலாளர் மாண்புமிகு என்றெல்லாம் குறிப்பிடவில்லை. எமது நண்பர் என்றே அழைத்தார்.
ஆனால் அதிபர் தேர்தலின்போது முஸ்லிம்கள் தங்களின் ஆதரவை பகிரங்கமாக நாட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால் சில குறைகளும் இருந்தன. சர்கோஜி தனக்கு தெரிந்ததை செயல்படுத்துபவர். சில இஸ்லாமிய நடைமுறைகள் அவருக்குப் புரியவில்லை. இவ்வளவுக்கும் சர்கோஜி எகிப்து நாட்டு அல் அஜ்ஹர் பல்கலைகழகத்திற்கு நேரடியாக சென்று விசாரித்த பின்பே சட்ட முடிவு எடுக்கும் அளவுக்கு, ஆய்வுக்கு நேரம் ஒதுக்கியவர்.
இன்ஷா அல்லாஹ், தொடரும்…