[ பாகிஸ்தான் பிரிவினையின் போது இங்குள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட குற்ற உணர்வின் காரணமாகவும், ராணுவ பலம் மூலம் தெலுங்கானா இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதாலும், தெலுங்கானா முஸ்லிம்கள் இதை எதிர்த்துப் போராடும் மனநிலையில் இல்லை. அதற்கான மனவலிமையும் அவர்களுக்கு அப்போது இல்லை. அன்று விதைத்ததைத் தான் காங்கிரஸ் இப்போது அறுவடை செய்கிறது.
சென்னையில் இருந்து பிரிக்கப்பட்ட ஆந்திராவுடன் தெலுங்கானாவைச் சேர்த்து விட்டால் முஸ்லிம்கள் சிறுபான்மையாகி விடுவார்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே ஆந்திராவுடன் தெலுங்கானா இணைக்கப்பட்டது. நேருவும் பட்டேலும் அத்துடன் திருப்தி அடையவில்லை. சென்னையில் இருந்து பிரிந்த பகுதிகளில் உள்ள ஆதிக்க சாதியினரை தெலுங்கானா பகுதியில் குடியமர்த்தும் குள்ள நரித்தனத்தையும் செய்து முடித்தனர்.
பொதுவாக பார்க்கும் போது பெரிய மாநிலங்கள் பிரிக்கப்படுவது சிறந்த நிர்வாகத்தைத் தர உதவும். 30 கோடி மக்களைக் கொண்டதாக இந்தியா இருக்கும் போது 25 மாநிலங்கள் இருந்தன என்றால் இன்று நூற்றிப் பத்து கோடியை மக்கள் தொகை தாண்டிய பிறகு 100 மாநிலங்களாவது அமைவது தான் சரியான தீர்வாக இருக்க முடியும். ]
பற்றி எரியும் ஆந்திரா! விதைத்ததை அறுவடை செய்யும் காங்கிரஸ்!!
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் போராட்டங்கள் அறுபது ஆண்டுகளாக நடந்து வருகின்றன.ஆளும் வர்க்கம் இதற்குச் செவி சாய்க்க மறுத்து வந்தது. இன்றோ அலட்சியப்படுத்த முடியாத அளவுக்குப் போராட்டம் தீவிரமடைந்ததால் வேறு வழியின்றி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தற்காலிகமாகச் சமாதானப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் அரசின் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று சொல்ல முடியாது. மக்கள் கொந்தளிக்கும் போது அதை நீர்த்துப் போகச் செய்வதற்காக இது போல் வாக்குறுதி கொடுத்து பின்னர் கிடப்பில் போடுவது தான் காலம் காலமாக காங்கிரஸ் கடைப்பிடித்து வரும் தந்திரம். பாபர் மசூதி அதே இடத்தில் கட்டித் தரப்படும் என்பது போல் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன.அதற்கான உள்ளடி வேலைகளையும் காங்கிரஸ் செய்ய ஆரம்பித்துள்ளது.
மாநிலத்தைப் பிரிப்பதற்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இப்போது காங்கிரஸ் கூறுகிறது. சட்டசபையில் தீர்மானம் போட்டுத் தான் பிரிக்க முடியும் என்றால் அது சாத்தியமே இல்லை. ஏனெனில் தெலுங்கனா பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்ற பகுதி சட்டமன்ற உறுப்பினர்களை விட குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.
தெலுங்கானா பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் தான் ஆதரவாக வாக்களிப்பார்கள். மற்றவர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்பதால் தீர்மானம் நிச்சயம் தோற்று விடும். சட்டசபையில் தீர்மானம் போட்டுத் தான் பிரிக்கப்படும் என்றால் தெலுங்கானா பிரிக்கப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தது எப்படி?
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி பிரிப்பது என்றால் அளவில் சிறிதாக உள்ள புறக்கணிக்கப்படும் பகுதி ஒருக்காலும் பிரிந்து செல்ல முடியாது. பெரும்பாலானவர்கள் பிரிந்து செல்ல ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். எனவே ஒரு பக்கம் தெலுங்கானா அமைக்கப்படும் என்று கூறிவிட்டு மறு பக்கம் தெலுங்கானா அமையாமல் இருப்பதற்குரிய வேலையைச் சத்தமில்லாமல் செய்து வருகிறது காங்கிரஸ் அரசு.
பிரிக்கப்பட வேண்டுமா? இல்லையா?
பிரிக்கப்படுமா? பிரிக்கப்படாதா? என்பதை விட பிரிக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பது தான் நாம் ஆராய வேண்டிய விஷயம்.
ஆந்திர மாநிலத்தின் வரலாற்றைத் தெரிந்து கொண்டால் தான் இக்கோரிக்கையில் நியாயம் இருக்கிறதா என்பதை அறிய முடியும். வெள்ளையர்கள் ஆட்சியின் போதும், நாடு விடுதலை அடைந்த போதும் ஆந்திரா என்ற மாநிலம் இருக்கவில்லை. தெலுங்கானா எனப்படும் தக்கானம் தான் இருந்தது. இது ஹைதராபாத் நிஜாம் மன்னரின் ஆளுகையின் கீழ் இருந்தது. நாடு விடுதலை அடைந்த பின்னர் தனி நாடாக இருந்த தெலுங்கானாவை இந்திய அரசு பலப்பிரயோகம் செய்து இந்தியாவுடன் இணைத்துக் கொண்டது.
இந்தியாவின் ஒரு மாநிலமாக தெலுங்கானா ஆக்கப்பட்டது. தெலுங்கானாவைத் தவிர ஆந்திராவில் உள்ள மற்ற பகுதிகள் அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்தன. தெலுங்கு பேசும் இப்பகுதியினர் சென்னை மாகாணத்தில் இருந்து தங்கள் பகுதியைப் பிரித்து தெலுங்கு மாநிலம் அமைக்கப் போராடி வந்தனர். ராமுலு ரெட்டி என்பவர் இதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தவுடன் தெலுங்குப் பகுதிகளில் வன்முறை வெடித்து மத்திய அரசு பணிந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சென்னை மாகாணத்தில் இருந்த தெலுங்கு பகுதிகள் ஆந்திரா எனும் மாநிலமாக ஆக்கப்பட்டது.
சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த பகுதிகள் ஆந்திரா என்றும், நிஜாம் மன்னரின் ஆளுகையில் இருந்த தெலுங்கானா இன்னொரு மாநிலமாகவும் இருந்தால் குடிமூழ்கப் போவதில்லை. ஆனாலும் இரண்டையும் இணைத்து ஒரு மாநிலமாக்க வேண்டும் என்று நேருவும், பட்டேலும் விடாப்பிடியாக இருந்தனர்.
இணைக்க வேண்டும் என்று எந்தப் போராட்டமும் நடக்காமல் இருந்தும் பெரும்பானமை மக்கள் அதை விரும்பாமல் இருந்தும் மக்கள் விருப்பத்துக்கு மாற்றமாக இரண்டையும் இணைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர்.
இதற்காக அமைக்கப்பட்ட சீரமைப்புக்குழு இணைப்பதில் கேடுகள் தான் அதிகம் என்று அறிக்கை தந்த பின்பும் தெலுங்கானாவை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்று மக்கள் விருப்பத்துக்கு எதிராக இணைத்தனர். இதற்குக் காரணம் என்ன?
தெலுங்கானா பகுதியில் ஆதிலாபாத், நிஜாம் பாத், கரீம் நகர், ஹைதராபாத், மஹ்பூப் நகர் ஆகிய ஐந்து மாவட்டங்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மை மாவட்டங்களாக இருந்தன. (மாவட்டங்களின் பெயர்களே இதைச் செல்லும் வகையில் உள்ளன). மேடக், வாரங்கல், கம்மம், ரங்காரெட்டி, நலகொண்டா ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கவில்லை. தெலுங்கானா தனி மாநிலமாக இருந்து முஸ்லிம்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் தொடர்ந்து ஒரு முஸ்லிம் தான் முதலமைச்சராக வர முடியும் என்ற நிலைமை வல்லபாய் பட்டேலுக்கும், நேருவுக்கும் உறுத்தலாக இருந்தது.
சென்னையில் இருந்து பிரிக்கப்பட்ட ஆந்திராவுடன் தெலுங்கானாவைச் சேர்த்து விட்டால் முஸ்லிம்கள் சிறுபான்மையாகி விடுவார்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே ஆந்திராவுடன் தெலுங்கானா இணைக்கப்பட்டது.
நேருவும் பட்டேலும் அத்துடன் திருப்தி அடையவில்லை. சென்னையில் இருந்து பிரிந்த பகுதிகளில் உள்ள ஆதிக்க சாதியினரை தெலுங்கானா பகுதியில் குடியமர்த்தும் குள்ள நரித்தனத்தையும் செய்து முடித்தனர்.
அதாவது தெலுங்கானா பகுதியில் கூட முஸ்லிம்களின் பெரும்பான்மையை ஒழிக்க வேண்டும் என்பது தான் இதற்குக் காரணம்.
மக்கள் விரும்பாத போதும், இணைக்கக் கூடாது என்று நிபுணர்கள் அறிக்கை அளித்த பின்பும் இணைப்பதற்கு நேரு சொன்ன காரணம் ஒரு மொழி பேசும் மக்கள் இரண்டு மாநிலங்களாக இருக்கக் கூடாது என்பது தான்.
ஆனால் இந்தி மொழிக்கு மட்டும் பல மாநிலங்கள் இருந்தது எப்படி என்று சிந்திக்கும் போது நேரு சொன்ன காரணம் பொய்யானது என்பது தெரிய வரும்.
பாகிஸ்தான் பிரிவினையின் போது இங்குள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட குற்ற உணர்வின் காரணமாகவும், ராணுவ பலம் மூலம் தெலுங்கானா இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதாலும், தெலுங்கானா முஸ்லிம்கள் இதை எதிர்த்துப் போராடும் மனநிலையில் இல்லை. அதற்கான மனவலிமையும் அவர்களுக்கு அப்போது இல்லை.அன்று விதைத்ததைத் தான் காங்கிரஸ் இப்போது அறுவடை செய்கிறது.
ஆந்திராவை விட தெலுங்கானா நீர் வளமும், கனிம வளமும் நிறைந்ததாக இருந்தும் ஆந்திராவின் உயர்சாதி ஆதிக்கவாதிகளால் எல்லா வளமும் ஆந்திராவுக்கு என்று ஆனது.
தெலுங்கானாவில் உற்பத்தியாகும் நதிகளில் 90 சதவீதம் தண்ணீர் ஆந்திராவுக்கும், பத்து சதவீதம் தெலுங்கானாவுக்கும் என்று அநீதி இழைக்கப்பட்டது. இதன் காரணமாகவே இங்கே நக்ஸலைட்டுகள் உருவானார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் ஆதிக்க சாதியினர் ஒடுக்குகிறார்கள் என்பதால் சட்டத்தை நக்ஸலைட்டுகள் கையில் எடுக்கும் அளவுக்கு தெலுங்கானா புறக்கணிக்கப்பட்டது. இதை வெகுஜன மக்களின் கருத்தாக சந்திரசேகர ராவ் மாற்றினார்.
ஹைதராபாத் நிஜாம் பெயரில் அமைந்த உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களும் இப்போராட்டத்தில் குதித்ததால் நிலைமை தீவிரமடைந்தது; மத்திய அரசைப் பணிய வைத்துள்ளது. இப்போது தெலுங்கானா பிரிக்கப்படுவதால் முஸ்லிம்கள் பெரும்பான்மை மாநிலமாக அது அமையாது.
ஏனெனில் குடியேற்றத்தின் மூலம் முஸ்லிம் பெரும்பான்மை என்பது குறைக்கப்பட்டு விட்டது. ஆனால் கனிசமான இடங்களை முஸ்லிம்கள் பெறக் கூடிய நிலைமை தெலுங்கானாவில் இருக்கும். அநியாயமாக, கெட்ட எண்ணத்துடன் ஆந்திராவில் சேர்க்கப்பட்ட தெலுங்கானா தனி மாநிலமாக ஆவது தான் செய்த அநியாயத்திற்கான ஒரே பரிகாரமாகும் என்பதில் ஐயமில்லை.
மேலும் பொதுவாக பார்க்கும் போது பெரிய மாநிலங்கள் பிரிக்கப்படுவது சிறந்த நிர்வாகத்தைத் தர உதவும். 30 கோடி மக்களைக் கொண்டதாக இந்தியா இருக்கும் போது 25 மாநிலங்கள் இருந்தன என்றால் இன்று நூற்றிப் பத்து கோடியை மக்கள் தொகை தாண்டிய பிறகு 100 மாநிலங்களாவது அமைவது தான் சரியான தீர்வாக இருக்க முடியும்.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் குறைந்தது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டால் ஒரு முதல்வரால் சிறப்பாகக் கண்காணிக்க முடியும். அமைச்சர்களை மக்கள் எளிதாகச் சந்திக்க முடியும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சமமாக முன்னேற முடியும். தமிழகத்தில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப் படுவதை யாரும் மறுக்க முடியாது.
மக்கள் போராட்டம் நடத்தாவிட்டாலும் அறிவும், தூர நோக்கும் மக்கள் நலனில் அக்கறையும் உள்ள அரசாங்கம் தானாக முன் வந்து மாநிலங்களைப் பிரிக்க வேண்டும். ஒரு மாநிலம் என்பது ஒரு கோடி முதல் இரண்டு கோடி மக்களைக் கொண்டதாக இருக்கும் வகையில் பிரிப்பது நாட்டுக்கு நல்லது. இதனால் மொழி வெறி கூட மறைந்து போய் விடும்.
Jazaakalaahu khairan” தொகுப்பு: – onlinepj.com