சமுதாயம் தூய்மை அடைய பக்தியுணர்வு வேண்டும்
[ மக்களுக்கு ஆற்றிய சிறு தொண்டு ஒரு மனிதருக்கு இறைவனின் நேசத்தை பெற்றுத் தந்துவிட்டது என்று சொல்லுகிற மார்க்கத்தை பின்பற்றுவதாக சொல்லுகிற முஸ்லிம் சமுதாயத்தில், பள்ளிவாசலின் தலைமை பொறுப்பேற்றால், அதுவே இருக்கிற கொஞ்ச நஞ்ச நன்மைகளையும் அழித்து விடும் என்று ஒருவர் அச்சப்படுகிறார் என்றால், முஸ்லிம் சமூகத்தில் தனிமனிதனுடையவும் சமூகத்தினுடையவும் மதிப்பு எந்த நிலையில் இருக்கிறது? என்ற பலத்த கேள்வியை அது எழுப்புகிறது.
ஈமான் என்கிற சரியான நம்பிக்கையும், இஸ்லாம் என்கிற சரியான நடவடிக்கைகளும் மரணத்திற்குப்பின்னால் மட்டுமல்ல இந்த உலக வாழ்க்கையையும் அழகுபடுத்துகிற இரண்டு முக்கியமான நன்மைகளை கொண்டுள்ளன. அந்த நன்மைகள் தான் ஒரு முஸ்லிமிடம் ஈமான் இருக்கிற இஸ்லாம் இருக்கிறது என்பதற்கான அடையாளங்களாகும்.]
அவர் ஒரு முஸ்லிம் அதிகாரி. வணிக வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றுகிறார். மார்க்கப்பற்று மிக்கவர். ஓரு பள்ளிவாசலின் தலைமைப் பதவிக்கு அவருடைய பெயரை பலரும் பிரேரனை செய்த போது அப்பொறுப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார். ஏன் மறுக்கிறீர்கள்? என்று கேட்டேன். ”நான் செய்யும் நற்செயல்களே குறைவுதான். அதையும் வீணடித்து விடக் கூடாதே என்ற கவலைதான் காரணம்” என்று அவர் சொன்னார்.
அந்த பதில் பலத்த யோசனையை கிளறி விட்டது. சமுதாயத்திற்காக பணியாற்றும் ஒரு வாய்ப்பு அதிக நன்மையை பெற்றுத்தருவதாக அமைய வேண்டும். நம் மார்க்கம் அப்படித்தான சொல்லித்தருகிறது.
ஓரு நபித்தோழர் ஜமாத்துடன் தொழுவதற்காக வேகமாக வந்த கொண்டிருந்தார். வழியில் ஒரு மரக்கிளை முறிந்து விழுந்து கிடந்தது. அதை அப்புறப்படுத்திவிட்டு வருவதற்குள் தாமதமாகிவிட்டது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுகைகைய நிறைவு செய்தார். உள்ளுர ஒரு பயம் இருந்தது.
தாமதமாக வந்ததற்காக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்கோபித்துக் கொள்வார்களோ என அவர் அஞ்சிக் கொண்டிருந்தார்.
அவர் பயந்ததது போலவே பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அவரை அழைத்தார்கள். ஆனால் பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கேட்ட கேள்வி வித்தியாசமாக இருந்தது.
‘நண்பரே! நீங்கள் என்ன நற்செயலை செய்து விட்டு வந்தீர்கள்! நீங்கள் செய்த காரியம் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்துவிட்டதே! நீங்கள் செய்த காரியத்திற்காக அல்லாஹ் உங்களுக்கு நன்றி செலுத்துகிறான். அப்படி என்ன நற்செயலை செய்தீர்கள்?’ என்று கேட்டார்கள்.
அந்த வார்த்தைககளை கேட்டு அந்த நபித்தோழர் அளவிலாத ஆனந்தம் அடைந்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லை.
அவர் மட்டுமல்ல அவரைப் போலவே மக்களுக்கு பயன்படுகிற சமூகத்தொண்டாற்றுகிற எவருக்கும் பெரும் மகிழ்ச்சியயை தருகிற வார்த்தைகள் தான் அவை.
இவ்வாறு மக்களுக்கு ஆற்றிய சிறு தொண்டு ஒரு மனிதருக்கு இறைவனின் நேசத்தை பெற்றுத் தந்துவிட்டது என்று சொல்லுகிற மார்க்கத்தை பின்பற்றுவதாக சொல்லகிற முஸ்லிம் சமுதாயத்தில், பள்ளிவாசலின் தலைமை பெறுப்பேற்றால், அதுவே இருக்கிற கொஞ்ச நஞ்ச நன்மைகளையும் அழித்து விடும் என்று ஒருவர் அச்சப்படுகிறார் என்றால், முஸ்லிம் சமூகத்தில் தனிமனிதனுடையவும் சமூகத்தினடையவும் மதிப்பு எந்த நிலையில் இருக்கிறது? என்ற பலத்த கேள்வியை அது எழுப்புகிறது.
இன்றைய முஸ்லிம் சமுகத்தில் இஸ்லாம் என்கிற பெயரும் தூய இஸ்லாம் என்ற கோஷமும் சமுதாயத்திற்காக என்ற முழக்கங்களும் முன்னெப்போதையும் விட அதிகமாக பேசப்படுகிறது. கடற்த 10 ஆண்டுகளாக இது பற்றி தமிழ் முஸ்லிம் உலகில் மிக நிறைய பேசப்பட்டு விட்டது. இவை ஏற்படுத்திய விளைவுகளை சீர் தூக்கிப்பார்த்தால் சமுதயத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுவதன் பின்னணியில் பக்தியுணர்வு என்பது அருகிப்போய்விட்டதை வெள்ளிடை மலையென அறியலாம்.
இதற்கான உதாரணங்களைப் பேசப் புகுந்தால் அது பற்றி எழுதப்படுகிற காகிதங்கள் கூட நாற்றமடிக்கும் என்ற அளவுக்கு கசப்பான செய்திகள் நிறைய உண்டு என்பது, சமதாயத்தை கவனித்துவருகிற அனைவருக்கும் தெரியும்.
முஸ்லிம் சமூகத்திலே பெரிய அளவிலே பேசப்படுகிற ஈமான் இஸ்லாம் என்ற வார்த்தைகள் வெறும் வார்த்தகைளாக உச்சரிக்கப்படகிறதே அன்றி அவற்றின் முழுப்பரிமாணமும் புரிந்து கொள்ளப்பட வில்லை என்பதை எதார்த்த நிகழ்வுகள் பிரதி பலிக்கின்றன.
ஒவ்வொரு முஸ்லிமிமிடமும் ஈமான் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இஸ்லாம் என்ற நடைமுறையும் இருக்கிறது.
ஈமான் என்பது சரியான நம்பிக்கையை குறிக்கிறது. ஈமான் என்பது இறைவனை பற்றிய சரியான நம்பிகை;கை மட்டுமல்ல. அது வாழ்வை பற்றிய சரியான நம்பிக்கையும் கூட. வாழ்கை, மரணம், மரணத்திற்குப் பிந்தைய நிலைகள் என விரியும் ஈமானிய அம்சங்கள் முழு மனித வாழ்வையும் சரியான நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டி எழுப்புகின்றன. இந்த விஷயங்களில் எது சரியாக நம்புதலுக்கு உரியதோ அதை நம்பு வதே ஈமான் ஆகும்.
இஸ்லாம் என்பது சரியான செயல்பாட்டை குறிக்கிறது. வணக்க வழிபாடுகள் சமுதாய தொடர்புகள் சமூக உறவுகள் அனைத்திலும் சரியான நடவடிக்கையை மேற்கொள்வதே இஸ்லாம் ஆகும்.
இவ்விரண்டு விஷயங்களும் மக்களின் நாளைய சொர்க்க வாழ்வை நிச்சயிக்கின்றன. அதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால் இவற்றால் இந்த உலகில் ஒருவர் பெறுகிற நன்மை என்ன என்ற கேள்வி பிரதானமானது.
ஈமான் என்கிற சரியான நம்பிக்கையும் இஸ்லாம் என்கிற சரியான நடவடிக்கைகளும் மரணத்திற்குப்பின்னால் மட்டுமல்ல இந்த உலக வாழ்கையையும் அழகுபடுத்துகிற இரண்டு முக்கியமான நன்மைகளை கொண்டுள்ளன. அந்த நன்மைகள் தான் ஒரு முஸ்லிமிடம் ஈமான் இருக்கிற இஸ்லாம் இருக்கிறது என்பதற்கான அடையாளங்களாகும்.
ஈமான் என்பது வாழும் முஸ்லிமுக்கு சிந்தனை தெளிவை வழங்ககுகிறது. வழங்க வேண்டும். இஸ்லாம் என்பது நல்ல பண்பாட்டை நற்குணங்களை தருகிறது. தரவேண்டும். இந்த நன்மைகள் ஏற்படாத பட்சத்தில் அவரிடம் ஈமானும் இஸ்லாமும் இருப்பதாக முழுமனதாக ஏற்றுக் கொள்வது இயலாது.
திருக்குர்ஆனின் அல்மாவூன் அத்தியாயம் மிக முக்கியமாக ஒரு விளக்கத்தை சமுதயத்திற்கு முன்னால் எடுத்து வைக்கிறது. தன்னுடைய வாழவு இஸ்லாமிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற எவரும் தவறாமல் ஞாபகத்தில் பதித்தருக்க வேண்டிய ஒரு அத்தியாயம் அது.
அல்மாவூன் அத்தியாயத்தின் தொடக்கத்தில், ”மார்க்கத்தை(அல்லது மறுமை நாளை) நிராகரிப்பவர் யார் தெரியுமா?” என்று இறைவன் கேட்கிறான்.
இந்தக் கேள்விக்கு பதில் நாம் சொல்லுவதாக இருந்தால் என்ன சொல்வோம்? அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாதவன். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை ஒத்துக் கொள்ளாதவன். மறுமை உண்டு என்பதை, சொர்க்கம் நரகம் உண்டு என்பதை நம்பாதவன் தான் காபிர் நிராகரிப்பவன் என்று பதில் சொல்வோம். ஆனால் அல்லாஹ் தருகிற பதில் ஆச்சரியமானது.
அநாதைகளை வெருட்டுபவர்களும் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டாதவர்களும் தான் மறுமை நாளை பொய் என்று நினைக்கிறார்கள் என அல்லாஹ் பதில் கூறுpகிறான்.ஆநாதைகளை விரட்டுவதும் ஏழைகளுக்கு உதவி செய்ய என்ற எண்ணமில்லாமல் வாழ்வதும், இதயம் இறுகி, சிந்தனை களங்கப்பட்டிருப்பதின் அடையாளங்களாகும். இவர்களது சிந்தனை எப்படி இருக்கும் என்பதை ”யாஸீன்” அத்தியாயத்தில் அல்லாஹ் இன்னும் விளக்கமாக கூறுகிறான்.
இத்தைகய நபர்களிடம் ஏழைகளுக்கு உணவளியுங்கள் என்று சொல்லப்பட்டால் அல்லாஹ் பட்டினி போட்டவனுக்கு நாங்கள் ஏன் உணவளிக்க வேண்டும் என்று கேட்பார்க்ள் என்று கூறுகிறான் அடுத்த வசனம் இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய நபர்கள் தொழுவார்கள் என்றால் அந்த தொழுகையாளிகளுக்கு கேடுதூன் என்கிறது அந்த வசனம். ஏனெனில் அவர்கள் தொழுகையில் கவனமில்லமல் இருப்பார்கள் முகஸ்துதிக்காக பெயர் பெறுவதற்காக தொழுவார்கள். ஒர ஊசியை கூட இரவலாக வழங்கமாட்டார்கள் என்று தொடர்ந்து அல்லாஹ் கூறுpகிறான்.
மிக விரிவாக பேசுவதற்குரிய கருத்தாழம் மிகுந்த இந்த அத்தியாயத்தை கவனித்துப்பாருங்கள் நல்ல சிந்தைன இன்றி இருப்பதும் பண்பாடில்லாமல் வாழ்வதும் ஈமான் இஸ்லாம் இன்மையின் அடையாளங்கள் என்பதை புலப்படுத்துவதை காணலாம்.
ஈமானுக்கும் இஸ்லாமுக்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பல் வேறு சமயத்தில் கொடுத்துள்ள பலதரப்பட்ட விளக்கங்கள் இதே கருத்தை பலப்படுததுவதாக உள்ளன.ஈமான் என்பது 63 சொச்சம் கிளைகளை கொண்டதாகும். வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளை என்றார்கள் பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு- நூல்: புகாரி)
மனிதனுடைய ஒரு உயர்தர உணர்ச்சி ஈமானிய நம்பிக்கையின் ஒரு அம்சமாகி அதன் அங்கமாகி விடுவதை இந்நபி மொழி புலப்படுத்துகிறது. வெட்கப்படுபவனை ஈமானிய வட்டத்திற்குள் கொண்டு வருகிறது.
”பெரியவர்களை மதிக்காதவர் சிறுவர்கள் மீது அன்பு காட்டாதவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல” என்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு- நூல்: திர்மிதி) பண்பாடில்லாமல் வாழ்பவரை ஒரு வகையில் இந்நபி மொழி இஸ்லாமிய சமூக மட்டத்திலிருந்து வெளியேற்றுவதை பார்க்கிறோம்.
இதுவெல்லாம் மிக அழுத்தமாக நமக்கு போதிக்கிற செய்தி என்ன? ஒரு கலிமாவை மொழிந்து விடுவது அல்லது அடையாளப்பூர்வமாக சில வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவது என்பதை தாண்டி இஸ்லாமும் ஈமானும் ஒரு மனிதரிடம் இன்னும் அதிகமான எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றன என்பது தானே!
அந்த எதிர்பார்ப்பை ஒவ்வொரு முஸ்லிம் தனிமனிதரும் சரியாக புரிந்து வைத்திருக்கிறாரா என்பது தான் இன்றுள்ள பிரதான கேள்வி. ஒரு முஸ்லிமுக்கு அவரது தனி வாழ்வையும் சமூக வாழ்வையும் கட்டமைக்கத் தேவையான சிந்தனை தெளிவை ஈமான் வழங்கியிருக்கிறதா? தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் மானுட மரியாதையோடு வாழ்கிற பண்பாட்டை இஸ்லாம் பழக்கப்படுத்தியிருக்கிறதா? என்பதை ரமலானை வரவேற்பதற்கு முன்னாள் நாம் தெளிவு படுத்திக கொள்ள வேண்டும்.
பொய் தெய்வங்களை கண்டறிந்து அவற்றை நிராகரிக்க கற்றுக் கொடுத்த ஈமான் மோசடித் தலைவர்களையும் போலிப் புரட்சியாளர்களையும் வேஷம் போடும் சமூக ஆர்வலர்களையும் கணடறிய துணை செய்ததா?
கட்டுப்பாட்டையும் ஒழுங்கமைப்பையும் ஒற்றுமை உணர்வையும் உருவாக கொண்ட வணக்கவழிபாடுகள் இஸ்லாமிய நடைமுறைகள், நகரீகக் குறைபாட்டையும் சண்டை சச்சரவுகளை அழித்துவிட்டதா?
மில்லியன் டாலர் பெருமானமுள்ள இந்தக் கேள்விகளுக்கு விடை தேடிப் பார்த்தால் தனிமனிதனுடையவும் சமூகத்தினுடையவும் மதிப்பை அளந்துவிட முடியும்.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாஅவர்கள் மீது அவதூறாக சொல்லப்பட்ட செய்தியை பரப்பினார் என்பதற்hக நபித்தோழர் ஹஸ்ஸான் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹுஅவர்களுக்கு 80 கசையடிகள் வழங்கப்பட்டன.
அதே ஹஸ்ஸான் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் பிற்காலத்தில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாஅவர்களுடைய வீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு ஒருவர் அன்னை அவர்களே உங்கள் மீதான அவதூறு வழக்கில் ஈடுபட்டபவரை உங்கள் அருகே அனுமதித்திருக்கிறீர்களே என்று கேட்ட போது, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாஅவர்கள் அளித்த பதில் மிகுந்த கவனத்திற்குரியது.
ஹஸ்ஸான் பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்டவர் அல்லவா அவரை குறை சொல்லாதீர்கள் என்று ஹஸ்ஸான் ரளியல்லாஹு அன்ஹுஅவர்களின் பெருமை நினைவு கூர்ந்தார் என்பது இஸ்லாமிய வரலாறு. ஈமானும் இஸ்லாமும் உருவாக்கிய தெளிவையும் பண்பையும் பறைசாற்றும் இந்த வரலாறு, ஒரு கால கட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தில் தனிமனிதர்களுடையவும் சமூகத்தினுடையவும் மதிப்பு எப்படி இழந்தது என்பதை வெளிச்சப்படுத்துகிறது.
ஒவ்வொரு முஸ்லிமும் தனது தனிப்பட்ட பக்தியுணர்வை இந்த அளவீடுகளில் பெருக்கிக் கொண்டு சமதாயம் தூய்மை அடைய உதவ வேண்டும். அப்படி ஒரு காலம் வரும் போது நல்லவர்கள் சமுதயப் பொறுப்பிற்கு வருவதற்கு அச்சப்பட மாட்டார்கள்.
( இக்கட்டுரையை எழுதிய அறிஞருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக. )
”Jazaakallaahu khairan”