அல்லாஹ் அல்லாதவர்களால் எதையும் கொடுக்க முடியாது
அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்;
1. ”அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன,
அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகளெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியேற்கமாட்டார்கள்,
செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள், கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 35: 13,14)
2. ”மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.” (அல்குர்ஆன் 22: 73)
3. ”நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! ” (7:194)
4. ”நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன, அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக. கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.” (46:4,5)
5. ”மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். ” (அல்குர்ஆன் 40: 20)
விளக்கம்: அல்லாஹ் அல்லாதவர்களிடம் நாம் ஏதாவது ஒரு தேவையைக் கேட்டு பிரார்த்தித்தால் அல்லது ஒரு ஆபத்திலிருந்து பாதுகாப்புத் தேடினால், நாம் அவர்களிடம் கேட்கும் எந்த விஷயத்தையும் அவர்களால் செவிமடுக்கவோ, உணரவோ முடியாது என்பதே ஒரு முஸ்லிமின் நம்பிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக நாம் கப்ரில் உள்ளவர்களிடம் பிராத்தித்தால் அதை அவர்களால் செவிமடுக்கவும் உணரவும் முடியும் என்று மேற்கூறும் பாடல் கூறுகின்றது.
மனமுறண்டாக சொல்லப்படுவதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், அவர்களால் நமக்கு எந்த உதவியையும் கியாம நாள் வரை செய்ய முடியாது. அவர்களால் அல்லாஹ்வின் அற்ப படைப்பாகிய ஒரு ஈயைக்கூட படைக்க முடியாது, அவர்களிடமிருந்து ”ஈ” எதையாவது எடுத்துச் சென்றால் அதை அவர்களால் மீட்டவும் முடியாது, இப்படிப்பட்ட இயலாதவர்களிடம் கேட்பவர்களைவிட முட்டாள் யாரும் இருக்க முடியமா? -போன்ற பல உதாரணங்களைக்கூறி சிறுவர்களும் விளங்குமளவிற்கு அல்லாஹ் திருமறையில் தெளிவுபடுத்தியிருக்கின்றான். அல்லாஹ்வின் நல்லடியார்களிடம் பிரார்த்தித்து அல்லாஹ்விற்கு ஷிர்க் வைத்ததையும் அந்த நல்லடியார்கள் நாளை மறுமையில் மறுத்துவிடுவார்கள் என்ற கருத்துக்களை பொதிந்துள்ள எத்தனையோ இறை வசனங்களுக்கு இந்தப் பாடல் முரண்படவில்லையா?
அல்லாஹ் அல்லாதவர்களால் எதையும் தடுக்கவும் முடியாது
அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்
1. ”வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; ”அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக ”அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்; அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக” அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.” 39: 38
2. ”கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிக்க குறைவே யாகும்.” 27:62
3. ”அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது. அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான்; அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.” 10:107
4. ”(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.” 6:17
விளக்கம்: அல்லாஹ் அல்லாதவர்களால் நாம் கேட்கும் ஒன்றை கொடுக்கவும் முடியாது அல்லது நமக்கு வரும் எந்த ஆபத்தையும் அவர்களால் தடுக்கவும் முடியாது என்பதை மேற்கூறப்பட்ட இறைவசனம் தெளிவுபடுத்துகின்றது. இதற்கு மாறாக நமது சமுதாயத்திடம் அதுவும் பல பெண்களிடம் மொழியப்படக்கூடிய ஒரு வார்த்தைதான் ”யா முஹ்யித்தீன்” என்னும் வார்த்தை. அதாவது தன் கையில் இருக்கும் ஒரு பொருள் விழும்போது அல்லது கால்வழுக்கி கீழே விழப்போகும் போது அல்லது தனது பிள்ளை விழப்போகும் போது அல்லது இது போன்ற நிலைகள் ஏற்படும் போது திடீரென்று ”யா முஹ்யித்தீன்” என்று கூறிவிடுவார்கள்.
இந்த வார்த்தையின் கருத்து என்னவென்றால், எங்களுக்கு நிகழப்போகும் இந்த ஆபத்திலிருந்து முஹ்யித்தீன் என்றழைக்கப்படும் பக்தாதில் அடங்கப்பட்டிருக்கும் அப்துல் காதிர் ஜைலானி அவர்களே! எங்களை பாதுகாத்திடுங்கள் என்பதாகும். பக்தாதில் அடங்கப்பட்டிருக்கும் அல்லாஹ்வின் நல்லடியாரான அப்துல் காதிர் ஜெய்லானிரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நாம் இவ்வளவு தூரத்திலிருந்து பலர் பல மொழிகளில் அழைப்பதை அவர்களால் கேட்க முடியுமா?
இப்படி அல்லாஹ்விடத்தில் மாத்திரமே பிரார்த்திக்க வேண்டும், அவன் அல்லாதவர்களிடம் பிரார்த்திக்கக்கூடாது, அல்லாஹ் அல்லாதவர்களிடம் நாம் பிரார்த்தித்து கேட்டாலும், அவர்களால் எந்த நன்மையையும் நமக்குச் செய்யவும் முடியாது, ஒரு ஆபத்திலிருந்து நம்மை அவர்களால் தடுக்கவும் முடியாது என்ற தெளிவான இறைவசனங்களையும் நபிமொழிகளையும் நாம் கேட்டபின்பும் முற்றிலும் இத்தனை வசனங்களுடனும் நபிமொழிகளுடனும் மோதக்கூடிய பாடல்களை, எப்படி இஸ்லாமிய பாடல் என்று கேட்பது?
இப்படியான நம்பிக்கை ஒரு முஸ்லிமிடம் இருக்கத்தான் முடியுமா? அப்படி இருந்தால் அவருடைய ஈமானின் நிலை என்ன? இந்த நம்பிக்கை மேற்கூறப்பட்ட இறைவசனங்களுடன் மோதுகின்றதே? இன்னும் இதுபோன்றே பல கேள்விகளுக்கு உள்ளாகின்றதே? மேற்கூறப்பட்ட இறைவசனங்களும் நபிமொழிகளும் இப்படிப்பட்டவர்களுக்கு விடை தருகின்றது.
மிகப் பழைய பாடல்கள் தான் இவ்வாறு இருக்கிறதென்றால், சமீப காலத்தில் பாடப்பட்ட பாடல்களிலும் கூட இணைவைக்கும் கருத்துக்கள் காணப்படுவதை உணரலாம்.
உதாரணமாக. ”சஞ்சலம் தீர்க்கும் எங்கள் கஞ்சஷவாயி நாகூரா” என்றொரு பாடல் பாடப்படுகிறது. சஞ்சலம் என்றால் துன்பம் துயரம் என்று பொருள். சஞ்சலம் தீர்ப்பவன் அல்லாஹ்வை தவிர வேறெவராலும் முடியாது.
கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவேயாகும். (அல்குர்ஆன் 27:62)
உயிரோடு உள்ள போது கூறினாலும் மனிதர் என்ற ரீதியில் தம்மால் இயன்ற அளவுக்கு சஞ்சலம் தீர்த்து வைக்க சாத்தியமுண்டு. அவர் இறந்து போன பின் எப்படி சஞ்சலம் தீர்த்து வைப்பார். அவர் இப்போதும் சஞ்சலம் தீர்த்து வைப்பார் என்று எண்ணிப் பாடினால், அல்லது பாடக் கேட்டால் அவருக்கு இறந்த பின்பும் அந்த ஆற்றல் உள்ளது என்ற நம்பிக்கை நமக்கு இருப்பதாகப் பொருள்.
அவ்வாறு என்றும் சஞ்சலம் தீர்ப்பவன் எப்போதும் உயிரோடுள்ள எல்லா ஆற்றலும் பெற்ற அல்லாஹ்வின், அந்தத் தன்மை நாகூராருக்கு இருப்பதாக நம்புவது இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதகச் செயலன்றி வேறென்ன?
இன்னும் இது போன்ற பல ஷிர்க்கான வார்த்தைகள் உள்ள பாடல்களை, இஸ்லாமிய பாடல்கள் என்கிற பேரில் நாம் கேட்டுக் கொண்டும், பாடிக் கொண்டும் தான் இருக்கின்றோம்.
இவ்வாறு இஸ்லாம் தடுக்கும் சமாதி வழிபாட்டை ஆதரித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து சமாதிகளையும் பெரிய ஒரு பட்டியலிட்டு, அவைகளை தரிசிக்கச் சொல்லி படிக்கின்றார், இன்னுமொரு ஷேக் அப்துல்லாஹ் என்னும் பாடகர், இஸ்லாம் தடுக்கும் சமாதி வழிபாட்டை ஆர்வமூட்டக்கூடிய பாடல், இஸ்லாமிய கீதமாகுமா? சிந்தியுங்கள், இஸ்லாமிய நெஞ்சங்களே!
இதே போன்று நூறு மஸ்அலா என்றும் விறகு வெட்டியார் கதை சூபித்துவத்தையும் இந்து மதக் கொள்கையாகிய ஹமோ வஸ்து – எல்லாம் அவனே என்ற – மஸ்தான்மார்களின் பாடல்களையும் நாம் இஸ்லாமிய லேபில்களில் கேட்டுக் கொண்டிருக்கின்றோம், ஆகவே இனிமேலாவது இப்படிப்பட்ட விஷயங்களில் நாம் விழிப்பாக இருப்போமாக.!
தமிழில் இப்பாடல்கள் இருப்பதால் அதிலுள்ள தவறுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. அரபியில் சில பாடல்கள் நம்மவர்களால் மௌவிது என்ற பெயரில் இயற்றப்பட்டு பாடப்படுகின்றன. அவற்றில் இதை விட படுபயங்கரமான நச்சுக்கருத்துக்கள் இருக்கின்றன என்பதை நம் யாருக்கும் தெரியாத ஒன்றல்ல. அதாவது அல்லாஹ்வின் தன்மைகளை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், வலிமார்களுக்கும் பங்கு வைத்துக் கொடுக்கும் பாடல்களாகும். இவைகள் நமது வீடுகளில் வணக்கம்? என்கிற பெயரில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. அவைகளில் சில வரிகளை உங்கள் முன் தருகின்றோம்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்