[ ஆணைகளைப் பிறப்பிக்கும் போது அதை நிறைவேற்ற இயலாத வேளைகளில் எப்படி நிறைவேற்றுவது என்ற தீர்வையும் விளக்குகிறது இஸ்லாம். இது தான் இஸ்லாத்திற்கும் ஏனைய மதங்களுக்குமுரிய வேறு பாடு.
வேலைப் பளுவுக்காக தொழுகையை விடமுடியாது. எந்த வேலைக்காகவும்; நாம் நமது சொந்த அலுவல்களை விடுவதில்லை. அதை முறையாக நிறைவேற்றியே தீருகிறோம். அப்படியிருக்க நமது சொந்த வேலைகளில் காட்டும் அக்கரையை அல்லாஹ்வை வணங்குவதில் ஏன் காட்டக் கூடாது?
தொழுகையின் முக்கியத்தைப் புரிந்து கொண்டால் ‘களாத் தொழுகை‘யைக் கற்பனை கூட செய்வதற்குத் துணியமாட்டோம்.]
‘‘களா” தொழுகை என்றால் என்ன ?
தொழுகை நேரம் வருவதைத் தெரிந்து கொண்டே அலட்சியமாக இருந்து விட்டு பின்னர் மொத்தமாகச் சேர்த்துத் தொழும் தொழுகைக்குப் பெயர் தான் ”களாத் தொழுகை”
களாத் தொழுகை தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உங்கள் சொந்த அலுவல்களையெல்லாம் முடித்துவிட்டு உங்களுக்கு வசதிப்படும் போது மெதுவாகத் தொழுதால் போதும்‘ என ஏதேனும் சலுகையை வழங்கியிருக்கிறார்களா?
இதில் அலட்சியமாக இருந்துகொள்ள ஏதேனும் நபிமொழிகள் ஆதாரமாக உள்ளனவா? இறைவனுக்கு, ”உரிய வேளையில் செய்து முடிக்க வேண்டிய ஒரு கட்டாய வணக்கத்தை எப்படியும் செய்யலாம்” என விரும்பியவாறெல்லாம் மார்க்கத்தை வளைத்துக் கொள்ளும்; மக்களின் அறியாமையை என்னென்பது?
காலைக் கடனை தள்ளி வைப்பதில்லையே?
தான் செய்ய வேண்டிய காலைக் கடன்கள், பசிவரும் வேளையில் உண்ணவேண்டிய உணவுகள், காலை மாலை தேனீர் சிற்றுண்டிகள், உல்லாசப் பொழுது போக்குகள், இலாபம் தரும் வியாபார வேலைகள்;, மேல் அதிகாரிகளின் அதிரடி ஆணைகள்,கடின உழைப் பிற்குப்பின் ஓய்வெடுக்கும் தூக்க நேரங்கள் இவைகளை என்றாவது நாம் தள்ளிப் போட்டிருப்போமா? அலட்சியம் செய்திருப்போமா? இல்லவே இல்லை.
அல்லாஹ்வை அலட்சியம் செய்வது ஏனோ?
ஆனால் நம்மை அழகிய தோற்றத்தில் படைத்து, வேளா வேளைகளில் உணவளித்து, விரும்பிய வசதி வாய்ப்புகளை யெல்லாம் வாரி வழங்கி, இராப்பகலாக கண்காணித்து இமைகொட்டாது காத்து வரும் வல்லநாயனின் ஆணைகளை மதித்து உரியவேளையில் வணங்கி வழிபட மனிதன் தயங்குவது ஏனோ? உதாசீனம் செய்வது ஏனோ?
களாத் தொழுகை உண்டா?
களாத் தொழுகை உண்டா? என ஒரு கேள்வியை மக்களிடம் கேட்டால் ஒரே குரலில் ”ஆம்” என்றே பதில் வரும். ஏன்? அப்படித்தான் நமக்கு காலம் காலமாகச் சொல்லித் தந்தார்கள். மார்க்கம் போதிக்கும் அறிஞர்களும் அவ்வாறு தான் நமக்குப் போதித்தார்கள். அதைமீறி மறுத்துப் பேசும் தெம்பு நமக்கு வருவதில்லையே. காரணம் தொழுகையைப் பற்றித் தெரிந்து கொண்டதெல்லாம் அவ்வளவு தான்.
தொழுகையின் முக்கியத்தைப் புரிந்து கொண்டால் களாத் தொழுகையைக் கற்பனை கூட செய்வதற்குத் துணியமாட்டோம்.
மறுமை நாளில் முதன் முதலாக ஒரு மனிதனிடம் விசாரணை செய்யப்படுவது தொழுகையைப் பற்றித்தான்! பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணவேளையில் வலியுறுத்திச் சொன்னதும் ”அஸ்ஸலாத்! அஸ்ஸலாத்!” தொழுகை! தொழுகை! தான்.இப்போது பார்ப்போம்! தொழுகையைப்பற்றி வான்மறையும், வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் என்ன சொல்லியிருப்பார்கள்?
குறித்த வேளையில் தொழுவது (prayer in fixed time)
அல்லாஹ் கூறுகிறான் :
إِنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا
”நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது விசுவாசிகளின் மீது விதியாக்கப்பட்டுள்ளது.” (அல்–குர்ஆன் 4:103).
இந்த வசனம் தொழுகையை குறித்த வேளையில் காலம் தாழ்த்தாது தொழுது விடவேண்டும் என மிகத் தெளிவாகவே கூறுகிறது.
எனவே, தொழுகையை காலம் தாழ்த்துவதோ அதில் அலட்சியமாக இருந்துவிடுவதோ கூடாது என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் நமக்குத் தேவையில்லை. இவ்வாறு சொல்லும் போது வேலைகள்,பயணங்கள்,உடல் நலிவுகள் ஏற்பட்டால் என்ன செய்வது? எப்படித் தொழுவது ? என்று கேட்கலாம்.
இயலாதபோது எப்படித் தொழுவது?
அதற்கு மார்க்கம் அழகான முறைகளையும், எளிய வழிகளையும் சொல்லித்தருகிறது.
1. வேலைப் பளுவா?
2. உடல் நலக் குறைவா?
3. பயணக் களைப்பா?
கவலைப்படாதீர்கள் ! ஆணைகளைப் பிறப்பிக்கும் போது அதை நிறைவேற்ற இயலாத வேளைகளில் எப்படி நிறைவேற்றுவது என்ற தீர்வையும் விளக்குகிறது இஸ்லாம். இது தான் இஸ்லாத்திற்கும் ஏனைய மதங்களுக்குமுரிய வேறு பாடு.
வேலைப் பளுவுக்காக தொழுகையை விடமுடியாது. எந்த வேலைக்காகவும்; நாம் நமது சொந்த அலுவல்களையோ மலஜல உபாதைகளையோ விடுவதில்லை.அதை முறையாக நிறைவேற்றியே தீருகிறோம். அப்படியிருக்க நமது சொந்த வேலைகளில் காட்டும் அக்கரையை அல்லாஹ்வை வணங்குவதில் ஏன் காட்டக் கூடாது?
உடல் நலக் குறைவா?
உடல் நலக் குறைவு எனக் காரணம் காட்டலாம்.
உங்களால் தொழ முடியவில்லையா?
தொழ முடியாத அளவுக்கு உடல் நலம் பாதித்து விட்டதா?
பரவாயில்லை!
நின்று தொழ முடியவில்லையா?
உட்கார்ந்து தொழுங்கள்.!
அதற்கும் முடியவில்லையா?
படுத்துக் கொண்டு தொழுங்கள்.!
அதற்கும் முடியவில்லையா?
பக்கவாட்டில் சாய்ந்து கொண்டு தொழுங்கள்!
அதற்கும் முடியவில்லையா?
தலையை அசைத்துக்கொண்டு!
அதற்கும் முடியவில்லையா?
இதயத்தால்! மனதில் நினைத்துக் கொண்டே தொழுங்கள்!
இப்படியெல்லாம் செய்யும் போது ருகூவு, ஸுஜூது இவையெல்லாம் எப்படி நிறைவேற்றுவது? என்ற கேள்விகள் எழலாம்.
எப்படித் தொழுவது?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதற்கு பதில் கூறுகிறார்கள்.ஒருசமயம் இம்ரான் இப்னு ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலவியாதியினால் அவதிப்பட்ட வேளையில் எப்படித் தொழுவது எனக்கேட்ட போது பின்வருமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் அளித்தார்கள்.
”நீ நின்று கொண்டு தொழு! முடியவில்லை யென்றால் உட்கார்ந்து கொண்டு தொழு! அதுவும் முடியவில்லையென்றால் பக்கவாட்டில் சாய்ந்து படுத்துக் கொண்டு தொழு!” என்று கூறினார்கள். (ஆதாரம் புகாரி)
மற்றொரு சமயம் ஒரு நோயாளியை விசாரிக்கச் சென்ற போது அவர் தலையணையில் ஸஜதா செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள்.அதை தூக்கி எறிந்து விட்டுச் சொன்னார்கள்.
”முடிந்தால் பூமியில் தொழு! இல்லையென்றால் சமிக்ஞை மூலம் தொழுது கொள்! ருகூவைவிட ஸஜதாவுக்கு தலையைச் சற்று தாழ்த்திக் கொள்”. (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : பைஹகீ)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சம்மணமிட்டுத் தொழுதததை நான் பார்த்துள்ளேன். என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: நஸாயீ,ஹாக்கிம்)
எந்த சூழ்நிலையிலும் தொழுகையை விடவே முடியாது.தொழாமல் தப்பிக்கவும் முடியாது என்பது தெளிவாகிறது.
பயணக் களைப்பா ?
பயண வேளைகளில் எப்டித் தொழ முடியும்? அது சிரமமாகவல்லவா இருக்கும்? நீண்ட பயணங்களின் போது வசதி வாய்ப்புகளெல்லாம் இருக்காதே! பேருந்துப் பயணங்கள், இரயில் பயணங்கள், விமானப் பயணங்கள் போன்றவைகளில் போதிய வசதிகள் இல்லாத போது வீட்டிற்கு வந்து மெதுவாகத் தொழது கொள்ளலாமே!
என்று தான் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல! இவையெல்லாம மார்க்கம் அங்கீகரிக்காத தவறான முடிவுகளாகும்..
எங்கிருந்தாலும் எப்படியிருந்தாலும் தொழுகையை விடுவதற்கோ,தள்ளிப் போடுவதற்கோ மார்கத்தில் அனுமதியே இல்லை. பின் எவ்வாறு களா தொழுவது?
வழியில் தொழ வசதியில்லையா? (கஸ்ரு) சுருக்கித் தொழுங்கள். இலலையேல் முன்னரோ பின்னரோ (ஜம்வு) சேர்த்துத் தொழுங்கள்.
இரண்டே வேளைகளில் மட்டுமே அனுமதி.
ஒருவர் தொழுகையை இரண்டே இரண்டு வேளைகளில் தான் தவறவிட முடியும். ஓன்று தூங்கிவிட்டால்! மற்றொன்று மறந்துவிட்டால்! இந்த இரு சந்தர்பங்களிலும் விழிக்கும் போதோ, நினைவு வரும் போதோ உடனே தொழுகையை நிறைவேற்றி விடவேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களில் எவரேனும் தொழுகையை விட்டும் உறங்கி விட்டால் அல்லது மறந்து வி;ட்டால் நினைவு வந்ததும் தொழட்டும். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக். ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லிம்)
மேற் கண்ட இரு காரணங்களுக்கே தவிர வேறு எக்காரணத்திற்காகவும் தொழுகையை தவற விடவே கூடாது.
தவறிவிட்ட தொழுகைக்கு பரிகாரம் என்ன?
தவறிவிட்ட தொழுகைகளை ஒவ்வொரு தொழுகையிலும் ஒவ்வொன்றாகச் சேர்;த்துத் தொழுது கடனை அடைத்துக்கொள்ள வேண்டுமெனச் சொல்கிறார்களே?
சேர்த்துத் தொழ அனுமதியே கிடையாது.அவ்வாறாயின் பின் என்ன செய்வது? தவறிவிட்ட தொழுகைக்காக இறைவனிடம் மனமுருகி மன்னிப்புக்கேட்டு இனிமேல் தவறாது தொழுது வரவேண்டும். அதுவே பரிகாரமாகும். பின்வரும் இறை வசனமே இதற்கு ஆதாரமாகும்.
فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا
إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُوْلَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ شَيْئًا
அவர்களுக்குப்பின் (வழிகெட்ட) சந்ததியினர் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். (இழிவான மன) இச்சைகளைப் பின்பற்றினார்கள்.மறுமையில் அவர்கள் (செய்த தீயவினையின் ) விளைவை (மறுமையில்) சந்திப்பார்கள்.
ஆயினும் (இவர்களில்) பாவமன்னிப்புக்கோரி இறைநம்பிக்கை கொண்டு நற்செயலும் புரிந்தோஇராத் தவிர. இவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். கடுகளவும் (அங்கே) அநீதி இழைக்கப்படமாட்டார்கள். (அல்–குர்ஆன் 1: 59,60)
”Jazaakallaahu khairan” www.albaqavi.com