[ இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும்போது ஒரு தாஇ இவ்விரண்டுக்கும் இடையில் சமநிலையைப் பேணுவது முக்கியம். சிலர் சமூகத்தில் சீரான அகீதாவை ஸ்தாபிப்பதற்க்கு மாத்திரம் கூடுதல் அழுத்தம் கொடுகின்றனர். வேறு சிலரோ ஒருவனது அடிப்படை அகீதா என்னவானாலும் பரவாயில்லை என்றாற்போல் அஹ்லாக் அம்சங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
இவ்விரண்டு அணுகுமுறைகளும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிக்கு புறம்பானவை. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எவர் அகீதாவை கற்றாரோ அந்த மனிதரது நடைமுறை வாழ்க்கையில் அது செல்வாக்கு செலுத்தியது; அவரது அஹ்லாக்கை அது செம்மைப்படுத்தியது. அவரது அகீதா வெறும் நம்பிக்கையாக மாத்திரம் நின்று விடவில்லை.
இஸ்லாமிய அமைப்புக்கள் வளர்த்தெடுக்கும் தஃவா ஊழியர்கள் உறுதியான அகீதாவைக் கொண்டிருப்பது போன்று சிறப்பான அஹ்லாக்குடையோராகவும் வளர்க்கப்பட வேண்டும்.]
ஒரு மனிதனின் நடத்தையில் ”அகீதா” ஏற்படுத்தும் மாற்றங்கள்
அகீதா ஒரு மனிதனுள் ஏற்படுத்தும் நடத்தை மாற்றங்களில் ”அல்இஹ்ஸான்” என்ற பக்குவநிலை பிரதானமானது. ”அல்இஹ்ஸான்”என்பது அல்லாஹ்வைக் காண்பது போல் வணங்குதல். அவ்வாறு முடியாத போது அல்லாஹ் பார்க்கின்றான் என்ற உணர்வோடு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாகும். இப்பிரபஞ்சத்தில் அவனால் பார்க்க முடியாத இடமோ அல்லது அவனது ஆட்சிக்கு வெளியுள்ள பகுதி என்ற இடம் எதுவும் கிடையாது.
இத்தகைய கட்டுப்பாடுகளும், பலவீனங்களும் மனிதர்களுக்குரியவை. இந்த தன்னம்பிக்கை ஒருவனது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்ததின் பிரதிபலிப்பு எப்படி அமையுமெனில், அல்லாஹ்வின் பார்வையிலிருந்து தான் ஒருபோதும் தப்பிவிட முடியாதென மனிதன் உணர்கிறான். தான் கடும் இருளில் இருந்தாலும், காற்றுப் புக முடியாத பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்தாலும், கருங்கல் பாறையினாலான இருண்ட குகைக்குள் ஒளிந்திருந்தாலும், கடலுக்கு அடியில் சென்றிருந்தாலும், மனிதர்கள் நுழைய முடியாத அளவு விஷஜந்துக்கள் நிறைந்த வனாந்தரத்தில் இருந்தாலும் கூட, தன்னை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்திலேயே காலம் கழியும்.
இத்தகைய ஒருவரிடத்தில் உங்களுடைய செல்வப் பெட்டகத்தின் சாவியை ஒப்படைக்கலாம். உங்களது தொழில் நிறுவனத்தின் பணக்காப்பாளராக அவரை நியமிக்கலாம். மோசடிகளோ, வாக்குறுதி மீறலோ நடைபெறலாம் என நீங்கள் அஞ்சாது பெறும் பொறுப்புகளை ஒப்படைக்கலாம். பொதுச்சொத்துக்களைப் பராமரிப்பதற்கு அச்சமின்றி நியமிக்கலாம். நீங்கள் அவருக்கு நியமித்த சம்பளத்துக்கு மேலால் எதனையும் அவர் தொட்டுப் பார்க்க மாட்டார்; நீங்கள் விதித்த பொறுப்புகளை உங்களின் மேற்பார்வை இல்லாமலே செய்து முடிப்பார்.
இத்தகைய ஒருவர் கடும் உஷ்ண காலத்தில் நோன்பு வைத்திருப்பார். சிரமப்பட்டு வேலை செய்வார். அவருக்கு களைப்பு ஏற்படும்; குளிர்பானமும் அருகிலிருக்கும். சுற்றுப்புறத்தில் எந்தவொரு மனிதனும் இருக்க மாட்டார். இருப்பினும் அவர் அதனை தீண்டவும் மாட்டார். ஈனத்தனமாக பாவங்களில் ஈடுபட அவருக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும். மனிதர்களை ஏமாற்றுவதற்கும், பலவீனர்களின் சொத்துகளை சூறையாடுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் மோசடி செய்வதற்கும், மனிதர்களுக்கிடையில் பாரபட்சமாக நடந்து கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்; கோள்மூட்டுவதற்கும், மனிதர்களைப் பிரித்து வைப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால் இவை ஒன்றிலும் அவர் பங்கேற்க மாட்டார். ஏனெனில், தன்னை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவரைத் தடுத்துக் கொண்டிருக்கும்.
”அஹ்லாக்” என்பதுஎன்ன?
”அகீதா’ ஒரு மனிதனில் ஏற்படுத்தும் இத்தகைய புரட்சிகர நடத்தை மாற்றத்தினையே ”அஹ்லாக்” என்கிறோம். அஹ்லாக் என்பது அகீதாவின் செயல் ரீதீயான வெளிப்பாடாகும். அல்லாஹுத்தஆலாவை தனது எஜமானனாக ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு தனிமனது வாழ்விலும் அஹ்லாக் ரீதியான பல அடிப்படை மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அப்படி மாற்றம் ஏற்படாவிட்டால் அவனது அகீதாவில் கோளாறு இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய அகீதா என்பது ஒரு வகையில் ஒரு பண்பாட்டுப் புரட்சிதான்.
இஸ்லாமிய அகீதா என்பது ஒரு வகையில் ஒரு பண்பாட்டுப் புரட்சிதான். அப்படி இருந்திராவிட்டால் தமது சொந்தப் பாலகர்களை உயிருடன் புதைத்து கல்லையும் பிசாசையும் வணங்கி அறியாமையின் அடித்தட்டில் மூழ்கியிருந்த அற்ப மனிதர்கள் உலகின் வழிகாட்டிகளாக மாறியிருக்கவே முடியாது.
”அஹ்லாக்” என்பது அதிசக்திவாய்ந்த ஆயுதம் என குர்ஆன் குறிப்பிடுகிறது. ரசூலுல்லாஹ் அதி உன்னத அஹ்லாக்குடைய மனிதரென குர்ஆன் வர்ணிக்கிறது. ரசூலுல்லாஹ் தனது பணியின் நோக்கம் பற்றிக் குறிப்பிடும் போது ”நான் சங்கைமிக்க அஹ்லாக்கை பூர்த்தி செய்வதற்காகவே அனுப்பப்பட்டேன்” என்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பண்புகள் எப்படி இருந்தன எனக் கேட்டதற்கு, ”அன்னாரது அஹ்லாக் குர்ஆனாகவே இருந்தது” என மொழிந்தார்கள்.
”இந்தக் (குர்ஆனைக்) கொண்டு உண்மையான ஜிஹாதை மேற்கொள்ளுங்கள்…” என அல்லாஹ் கூறுகிறான். குர்ஆன் என்பது துப்பாக்கியோ அணுகுண்டோ அல்ல. அப்படியெனில் குர்ஆனைக் கொண்டு எப்படி ஜிஹாத் மேற்க்கொள்ள முடியும்? இந்த அஹ்லாக்கே அந்த ஆயுதம்! அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா குறிப்பிட்டதும் இதே ஆயுதத்தைதான். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருபத்து மூன்று வருடகால அயராத முயற்சியின் பலனாக ஏற்பட்ட சமூக மாற்றம் ”அஹ்லாக்” என்ற ஆயுதம் மூலமே உருவானது.
இன்று இஸ்லாமிய சமூக அமைப்பொன்றை கட்டியெழுப்புவதற்கும் சமூகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குமாக பல்வேறு மட்டங்களில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் பணியாற்றுவது மகிழ்ச்சி தரக்கூடிய விடயம். இத்தகைய அமைப்புக்களின் காத்திரமான பணிகள் நிச்சயம் நல்ல மாற்றங்களையும் விருத்திகளையும் சமூகத்தில் ஏற்படுத்தும். ஒவ்வொரு ஊழியரிடத்தும் சிறந்த அஹ்லாக் இருப்பது பிராதானமாகும்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு சிறந்த பண்பாடுகள் மிக்க மனிதராகத் திகழ்ந்தார்? இதனைக் கண்டுபிடிப்பதற்காக மண்டையை உடைத்துக் கொள்ளத் தேவையில்லை. இதற்கான விளக்கம் மிக எளிதானது. குர்ஆனிய போதனைகளை அல்லாஹ்வை திருப்திபடுத்தும் நோக்கில் எடுத்து நடந்தார்கள். அவ்வளவுதான்! அதனை அவதானித்த மக்கள், இதைவிடச் சிறந்த வாழ்க்கை முறை எங்கே இருக்க முடியும் எனக் கருதி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
அகீதாவும் அஹ்லாக்கும் சமநிலையில் இருக்க வேண்டும்
இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும்போது ஒரு தாஇ இவ்விரண்டுக்கும் இடையில் சமநிலையைப் பேணுவது முக்கியம். சிலர் சமூகத்தில் சீரான அகீதாவை ஸ்தாபிப்பதற்க்கு மாத்திரம் கூடுதல் அழுத்தம் கொடுகின்றனர். வேறு சிலரோ ஒருவனது அடிப்படை அகீதா என்னவானாலும் பரவாயில்லை என்றாற்போல் அஹ்லாக் அம்சங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இவ்விரண்டு அணுகுமுறைகளும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிக்கு புறம்பானவை. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எவர் அகீதாவை கற்றாரோ அந்த மனிதரது நடைமுறை வாழ்க்கையில் அது செல்வாக்கு செலுத்தியது; அவரது அஹ்லாக்கை அது செம்மைப்படுத்தியது. அவரது அகீதா வெறும் நம்பிக்கையாக மாத்திரம் நின்று விடவில்லை.
இஸ்லாமிய தஃவா இரு பகுதிகளை தன்னுள் அடக்கியுள்ளது. ஒன்று நன்மையான காரியங்களை மக்கள் மத்தியில் ஏவுதல். இதனை அல்அம்ர் பில் மஃரூஃப் என்கிறோம். நன்மையை ஏவுவதன் மூலம் தீமை தானாக விலகிவிடும் என்ற வாதம் குர்ஆனிய போதனைக்குப் புறம்பானது. ரசூலுல்லாஹ் நன்மையை ஏவுவதற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ, அதேயளவு முக்கியத்துவம் தீமையின் ஊற்றுக்கண்களை அடைப்பதற்கும் கொடுத்தார்கள். தஃவாவின் அடுத்த பகுதி தீமையை தடுத்தல் என்பதாகும். இதனை ”அன்னகி அனில் முன்கர்” என்கிறோம். இஸ்லாம் எதிர்பார்க்கும் நன்மைகள் சமூகத்தில் விளைய வேண்டுமென்றால் ஷைத்தானும் அவனது சாகாக்களும் புரையோடியுள்ள அனாச்சாரங்கள் கிள்ளி எறியப்பட வேண்டும்.
ஓர் ஆரோக்கியமான இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்க்கு இந்தச் சமநிலையான அணுகுமுறை முக்கியமானது. இஸ்லாமிய தஃவாவின் குறிக்கோள் சமூகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதே; சீர்குலைவுகளை ஏற்படுத்துவதல்ல. ரசூலுல்லாஹ் ஒரு சீர்திருத்தவாதியாகவே அனுப்பப்பட்டார்கள். நன்மாராயம் கூறுபவராகவும் நரக வேதனையிலிருந்து பாதுகாப்பதற்கான எச்சரிக்கையை விடுப்பவர்களாகவுமே அனுப்பப்பட்டார்கள். மக்கள் மீது இரக்கம் காட்டி அவர்கள் மேல் அளவிலா பிரியத்தோடு அவர்களை அரவணைப்பவர்களாகவே அனுப்பப்பட்டார்கள். குர்ஆன் கீழ்வருமாறு வர்ணிக்கிறது:
“உங்களிலிருந்தே ஒரு ரசூல் உங்களிடம் திண்ணமாக வந்துவிட்டார். உங்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்துவது அவருக்கு தாங்க முடியாத வேதனையைக் கொடுக்கிறது. உங்களது நலனில் அதிக அக்கறை கொண்டவராகவும் முஃமின்கள் மீது அன்பும் கிருபையும் உடையவராகவும் இருக்கின்றார்.” (அத்தெளபா: 128)
ஒவ்வொரு மனிதனும் இஸ்லாத்தில் நுழைந்து நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரார்வம் கொண்டவராக காணப்பட்டார்கள். அதற்கு இசைவான சூழ்நிலையையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தினார்கள். மக்கள் அன்னாருடன் சேர்ந்து இருப்பதற்கு அதிக ஆர்வம் காட்டினார்கள்.
மன நிம்மதி தேடியும் தமது பிரச்சினைகளை முறையிட்டு ஆறுதல் பெறுவதற்கு அல்லது தீர்வு, ஆலோசனை பெறுவதற்க்குமாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி வந்தனர். அவர்கள் கடுகடுப்பானவர்களாகவும் மக்களை விமர்சித்துத் தள்ளுபவராகவும் அவர்கள் மீது சீறிப் பாய்பவராகவும் இருந்திருந்தால், நமக்கு அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இறைபக்தியும், உமரின் நிர்வாக ஒழுங்கும், உஸ்மானின் தாராள மனமும், அலியின் நீதி நெறியும் கிடைத்திருக்காது.
மேலும், முழு மனித வரலாற்றிலேயே ஜொலித்த புனிதமிக்க மனிதர்களை கண்டிருக்கவும் மாட்டோம். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தனிமையில் விட்டுவிட்டு அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள். அல்லாஹ் கூறுகிறான்: ”அல்லாஹ்வின் பேரருள் காரணமாகவே அவர்களிடம் நீர் மிருதுவாக நடந்து கொண்டீர். நீர் கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், உம் சூழலை விட்டும் அவர்கள் பிரிந்தே போயிருப்பார்கள்.” (ஆலு இம்ரான்: 159)
அநேகமாக எல்லா தஃவா அமைப்புகளினதும் சீர்திருத்தப் பணிகள் அல்லது அத்தகைய பெரும்பாலான முயற்சிகள் முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே இருக்கின்றன என்ற அடிப்படை உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, சமூகத்தில் ஓரளவேனும் நிலவும் ஒழுங்கமைப்பை சீர்குலைத்து, சிறிய பிரச்சினைகளை ஊதிப் பிளவுபடுத்தும் முயற்சி நபி வழிக்குப் புறம்பானது. எனவே, தஃவா சீர்திருத்தத்துக்குப் பதிலாக சீரழிவை ஏற்படுத்துமானால் நிச்சயமாக எமது அழைப்பு முறையில் கோளாறு இருக்கிறது.
இஸ்லாமிய அமைப்புக்கள் வளர்த்தெடுக்கும் தஃவா ஊழியர்கள் உறுதியான அகீதாவைக் கொண்டிருப்பது போன்று சிறப்பான அஹ்லாக்குடையோராகவும் வளர்க்கப்பட வேண்டும். ஸஹாபிகளும் மற்றும் முன் சென்ற நல்லடியார்களும் இப்படியான மனிதர்களாகவே திகழ்ந்தனர். சீரான நீதிநெறிமிக்க இஸலாமிய சமூக அமைப்பை இவர்களாலேயே கட்டியெழுப்ப முடியும். இதற்கு மாற்றமாக கடின சித்தம் கொண்டு மக்கள் மீது துவேசத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்து குழப்பத்தையும் பிளவையும் தூண்டிவிடும். ஊழியர்களை உருவாக்குவது ஆபத்தானது.
ஏனெனில், இத்தகையோரது பிரசாரப் பணிகளால் கவரப்பட்டு இணைந்து கொள்ளும் மனிதர்களிடையேயும் இத்தகைய நடத்தைகள் தாக்கம் செலுத்தும். இவ்வழியில் உருவாகும் சந்ததி கலவர உணர்வும் பிடிவாதமும் சகிப்புத் தன்மையற்றதுமான சந்ததியாகவே அமையும். இத்தகையதொரு சந்ததியை ”முன்னுதாரண இஸ்லாமிய சந்ததி”என எடுத்துக் காட்டமுடியாது. ஏனெனில், இஸ்லாத்தின் மூலம் அமைதியை நாடும் மக்கள் விரண்டோடுவார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: ”இலகுபடுத்துங்கள், கடினமாக்காதீர்கள். நன்மாராயம் கூறுங்கள், விரண்டோடச் செய்யாதீர்கள்…”
”Jazaakallaahu khairan”
posted by: Iraivanin Adimai
ஆஸிம் அலவி அல்ஹஸனாத் அக்டோபர், நவம்பர் 2009