அகீதாவும் அஹ்லாக்கும் ( 1 )
[ ”அல்லாஹ்வைத்தவிர வணங்கி வழிபடத் தகுதியானவன் வேறெவருமில்லை; முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதரும், அவனது அடியாரும் ஆவார். அவன் இணை துணையற்றவன்; அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன் அவனே; அவன் தந்த மார்க்கம் மட்டுமே சத்தியமானது” என்ற ஒப்புதலையே பிரதானமாக அகீதா உள்ளடக்கியுள்ளது.]
”திண்ணமாக நீர் அதி உன்னதமான பண்புகளை உடையவராக இருக்கின்றீர்…” என்ற குர்ஆன் வசனத்தை சரிவர புரிந்து கொள்வதற்கு நமக்கு நேரமெடுக்கிறது. மேற்படி குர்ஆன் வசனத்தை பல்லாயிரம் தடவை ஓதியிருப்போம். ஆனால், அல்லாஹ்வின் தூதரது உயர்ந்த பண்புகளை மெச்சிப் பாராட்டும் வார்த்தைகள் அவை என்பதற்கு அப்பால் செல்வதில்லை. குர்ஆன் நமது உள்ளத்தின் ஆழத்திற்குச் சென்று ஆன்மாவை உசுப்புவதற்கு நாம் அனுமதி கொடுப்பதில்லை.
அல்லாஹ்வின் நபி மீது தினந்தோறும் குப்பைக் கொட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்த பெண், நோய்வாய்ப்பட்ட செய்தி கேட்டு அவரை நோய் விசாரிக்கச் சென்ற தூதரின் மனோபாவத்தை அனுமானிக்கத் திராணியற்றவர்களாக உள்ளோம். அது நம்பிக்கைக்குரிய சிறப்புப் பண்பு எனவும், எமது அயலிலுள்ள ஹேமலதா அல்லது பார்வதி எமக்குக் கொடுமை இழைத்தால் அவர்களுடன் அப்படி நடந்து கொள்வது சாத்தியமற்ற செயல் எனவும் சிலர் இதை அலட்சியப்படுத்தும் அதேவேளை வேறு சிலரோ, அல்லாஹ்வின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்அப்படி நோய் விசாரிக்கச் சென்ற அச்சந்தர்ப்பத்தை அழகாகப் பயன்படுத்தி அம்மாதுவை மதம் மாற்றியதாக விளக்கம் செய்ய முயற்சிப்பதையும் நாம் பார்க்கலாம்.
ஒருவரின் அகீதா உறுதியாக இருப்பது அவசியம்
நமது நம்பிக்கையிலும் நாம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை விளங்கி வைத்துள்ள விதத்திலும் ஏதோ ஒரு அடிப்படைத் தவறு இருப்பது போல் தோன்றுகிறது. எமது அடிப்படை நம்பிக்கை சார்பான விஷயங்களில் கூட தளம்பல் இருக்கிறதோ என்ற அச்சம் தோன்றுகிறது. இஸ்லாத்தை வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்ட ஒருவரின் அகீதா உறுதியாக இருப்பது அவசியம்.
அகீதா என்பது ஒரு முஸ்லிம் ஈமான் கொள்ள வேண்டிய அடிப்படையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாகும். ஈமான் கொள்ள வேண்டிய எல்லாஅம்சங்களையும் நாம் பள்ளிக் கூடத்திலும் வேறு வழிகளிலும் படிக்கிறோம்.”அல்லாஹ்வைத்தவிர வணங்கி வழிபடத் தகுதியானவன் வேறெவருமில்லை; முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதரும், அவனது அடியாரும் ஆவார். அவன் இணை துணையற்றவன்; அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன் அவனே; அவன் தந்த மார்க்கம் மட்டுமே சத்தியமானது” என்ற ஒப்புதலையே பிரதானமாக அகீதா உள்ளடக்கியுள்ளது.
வாழ்க்கையமைப்பின் ஊற்றுக்கண்ணும் இந்த அகீதாவே!
இஸ்லாம் மார்க்கத்தின் மூலமும் இஸ்லாமிய வாழ்க்கையமைப்பின் ஊற்றுக்கண்ணும் இந்த அகீதாவே. இந்த அகீதாவானது மாசற்றதாகவும் மூடக்கொள்கைகள் கலந்து அதன் புனிதத்தன்மை சிறப்புடையதாகவும் இருப்பது அவசியமாகும். ஒரு முஸ்லிம் தனது வாழ்வின் ஏனைய விஷயங்களில் நெகிழ்ந்து கொடுக்க இடமுண்டு, ஆனால் அவனது அகீதாவில் எந்த நெகிழ்வுக்கோ பேரம் பேசுவதற்கோ இடம் கிடையவே கிடையாது.
அகீதாவின் சில கூறுகளை விட்டுக் கொடுக்கவோ அல்லது தள்ளிப்போடவோ முடியாது. தளம்பலோ அல்லது சோர்வோ தோன்ற முடியாது. முஸ்லிமின் அகீதா அந்தளவு இறுக்கமானதாக அமைய வேண்டும் என்பதை இஸ்லாம் அழுத்தமாக கூறுகிறது. ஏனெனில் அதில் பலவீனம் காணப்பட்டால் ஒருவர் இஸ்லாத்தை சரிவர பின்பற்ற முடியாது. அறுபடவோ துருப்பிடிக்கவோ முடியாத கயிற்றை ஒருவர் பற்றிப் பிடித்திருப்பதைப் போல் ஒரு முஸ்லிம் தனது அகீதாவை பற்றிப் பிடித்துக் கொண்டால் மட்டுமே சவால்களுக்கு அசைந்து கொடுக்காது அல்லாஹ்வுடைய தீனில் பற்றுறுதியுடன் இருக்க முடியும்.
அகீதாவினால் தனிமனிதன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்
இந்த அகீதாவானது ஒரு தனிமனிதன் வாழ்வில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதன் கோழையாக இருக்கலாம் சோம்பலும் பொடுபோக்கும் உடையவனாக இருக்கலாம் அல்லது தலைக்கணம் பிடித்து பெருமையடித்து திரியலாம் அல்லது படாடோப வாழ்க்கை வாழ்பவனாக இறை நிராகரிப்பில் ஊறித்திளைத்து அதன் காவலனாக, கல் நெஞ்சம் படைத்தவனாக, கொடூர குற்றங்கள் புரிபவனாக, தில்லு முல்லுகளில் மூழ்கி சம்பாத்தியம் செய்பவனாக அல்லது வேறு எப்படியான மனிதனாக இருந்தாலும் கூட அவனைப் புடம்போடப்பட்ட தங்கமாக்கி விடுகிறது இந்த அகீதா.
ஒரு மனிதன் ஏகதெய்வக் கோட்பாடான தவ்ஹீதை ஏற்ற பின் அவனுள் ஒன்பது வகையான மாற்றங்கள் ஏற்படுவதாக ஸய்யித் அபுல் அஃலா மௌதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹிகுறிப்பிடுகிறார்கள். இந்த ஒன்பது மாற்றங்களையும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களதும் சஹாபிகளதும் வாழ்வில் நாம் அவதானிக்க முடிகிறது.
”என்னை விடுங்கள் அந்த முஹம்மதை தீர்த்துக் கட்டி விட்டு வருகிறேன்” என ஆவேசத்துடன் கிளம்பிய உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை முழு உலகும் புகழும் நீதிமிக்க ஆட்சியாளனாக மாற்றியது இந்த அகீதாவே. காலா காலமாக அற்பத்தனமான சண்டையில் ஈடுபட்டு அழிந்து கொண்டிருந்த அவ்ஸ் கஸ்ரஜ் கோத்திரங்களை சகோதர வாஞ்சையால் பிண்ணிப் பிணைத்து முழு மனித குலத்தின் சுபிட்சத்திற்காக ஒன்றிணைந்து உழைக்கும் அணியாக மாற்றியமைத்ததும் இந்த அகீதாவே. தலைநிமிர்ந்து எஜமானின் முகத்தைப் பார்க்கவும் தைரியமற்ற கொடூர அடிமைத்துவம் அரசோச்சிய காலத்தில் ”அல்லாஹு அஹத்” (அல்லாஹ் தனித்தவன்) என்ற பிரகடனத்தை, முழங்குவதற்கான தைரியத்தை ஹபஷிப் பெண்ணின் மகனான பிலாலுக்கு இந்த அகீதாவே கொடுத்தது.
அகீதா ஒருவனில் ஏற்படுத்தும் பிரதான பண்புகள்:
தன்னடக்கமும் பணிவும்
தன்னடக்கமும் பணிவும்இஸ்லாமிய அகீதா ஒருவனில் ஏற்படுத்தும் பிரதான பண்புகளாகும். ஒரு முஃமின் கர்வம் கொண்டவனாகவோ தலைக்கணம் பிடித்தவனாகவோ அகந்தையுடன் காரியமாற்றுபனாகவோ இருக்க முடியாது. அவன் புகழ் தேடி அலைந்து திரிபவனாக, தற்பெருமை கொள்பவனாக இருக்க முடியாது. அவன் ”அல்ஹம்துலில்லாஹ்” என பிரகடணம் செய்யும் போது சர்வ புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியவை என்பதை ஒப்புக் கொள்கிறான். அவனிடம் காணப்படும் செல்வம், செல்வாக்கு, அறிவு, ஆற்றல்கள், வசதிவாய்ப்புகள் அனைத்தும் தனக்கு அல்லாஹ் அருளியவை என்பது அவனுக்கு தெரியும். அவை அல்லாஹ்வின் நாட்டமின்றி தனக்கு கிடைத்திருக்காது என்பதும் தெரியும். ஆகையால்தான் அற்பமானவன் எனக் கருதி இவ்வுலகில் அடக்கத்துடனும், பணிவாகவும் காரியமாற்றுவான். தற்பெருமையும், அகந்தையும் ”ஷிர்க்” இன் இரு அடையாளங்கள் என்பது இஸ்லாத்தின் கருத்தாகும்.
மேற்படி பணிவும் அடக்கமுமே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை, தனது மேனியில் தினந்தோறும் குப்பைக் கொட்டிய பெண்மணியை நோய் விசாரிக்கச் செல்லும்படி உந்தித் தள்ளியது. மக்காவில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேசித்த மனிதர்களில் அபூஜஹ்லும் ஒருவர். அவரை இஸ்லாத்திற்கு தந்துதவும்படி துஆ கேட்கிறார்கள். அபூஜஹ்ல் பத்ர் யுத்தத்தில் கொலையுண்ட போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருத்தப்படவும் செய்தார்கள்.
அபூதாலிபின் மரணத் தருவாயில் அவரை நரகத்திலிருந்து காப்பாற்ற எடுத்த கடினமுயற்சி எத்தகையது?! அப்போதைய உலகின் விசாலமானதொரு பகுதியை ஆட்சி செய்த உமர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் குத்பா மேடையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது, பெண்களின் மஹர் தொகை தொடர்பான அவர்களது கருத்தில் பிழையிருப்பதை அங்கே அமர்ந்திருந்த பெண் சுட்டிக்காட்டிய வேளை, ”அல்லாஹ்வின் அடிமையாகிய உமர் தவறு செய்து விட்டார்” என ஒப்புக் கொள்ளத் தூண்டியது மேற்படி அடக்கமும் பணிவுமே.
இந்த அகீதா ஒருவனை நன்மையின்பால் ஈர்க்கப்பட்டவனாகவும் தலை நிமிர்ந்து நடக்கக் கூடியவனாகவும் ஆக்குகிறது. ஏனெனில் தனது உள்ளத்தை தூய்மைப்படுத்தி, ஆத்ம சுத்தியுடன் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் பூரணமாக சரணடைவதிலேயே தனது இம்மை மறுமை வெற்றி தங்கியுள்ளது என்பது அவனுக்குத் தெரியும். ஆகையால் தன்னால் முடியுமான அளவு நன்மைகள் செய்து அல்லாஹ்வை நெருங்க முயற்சிக்கிறான்.
இந்த அகீதா அவனை எந்த ஒரு மனிதனின் முன்னிலையிலும் தலைசாய்க்கவோ அல்லது சிரம் பணியவோ விடாது. ஏனெனில் அப்படிச் செய்வதன் மூலம் அவர்களால் அவனுக்கு எந்த நன்மையோ அல்லது தீமையோ ஏற்படுத்த முடியாது; அவனுக்கு வெற்றியையோ அல்லது தோல்வியையோ அளிக்க முடியாது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுவர் ருபியா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹுஅப்போதைய வல்லரசான பாரசீக ராஜ்யத்தின் மேலதிகாரியான ருஷ்துமிடம் சென்ற போது, நிமிர்ந்து நின்று ஆணித்தரமாக தஃவாவை எத்திவைப்பதற்கு இந்த அகீதாவே தூண்டியது.
பைத்துல் முகத்தஸ் கைப்பற்றப்பட்ட பின், அதன் சாவியை கொடுப்பதற்காக உமர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்களை கிறிஸ்தவ பாதிரிமார் எதிர்பார்த்திருந்தனர்; பட்டாளம் சூழ கலீஃஃபா வந்திறங்குவார் என்பதே பாதிரிமார்களின் எதிர்பார்ப்பு. ஆனால் கலீஃபா தனது வேலையாளை வாகனத்தில் அமர்த்தி அதன் மூக்கணத்தை கையில் பிடித்தவராக வருவதைக் கண்ட பாதிரிகளுக்கு திக்பிரமை ஏற்பட்டது. பாதிரிகளுக்கு தனது எளிமையையும், பணிவையும் பிரச்சாரம் செய்வதற்காக கலீஃபா அப்படிச் செய்யவில்லை.மாறாக தாம் போகவேண்டிய இடத்தை அடையும் வரையில் சுழற்சி முறையில் ஒருவர் மாறி ஒருவர் சவாரி செய்வதுதான் ஏற்பாடு. சுழற்சியின் கடைசிக் கட்டமாக வேலையாள் சவாரி செய்யும் சந்தர்ப்பம் வந்தது.
இந்தப் பணிவையும், தன்னடக்கத்தையும் அகீதாவின்றி வேறு எது உமர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்களுக்கு கொடுத்திறுக்க முடியும்? சர்வ வல்லமை கொண்ட ஆட்சியாளனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் தான் ஓர் அற்பப் படைப்பே என உமர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் விளங்கி வைத்திருந்தமையே இதற்குக் காரணம்.
தைரியமும், பொறுப்புணர்வும்
மதீனாவுக்கான ஹிஜ்ரத் எந்த நேரமும் நடை பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் அதற்குப் பொருத்தமான ஒட்டகைகளை தயார் செய்து, அதற்காகவே வீட்டு வாசலில் காத்திருந்து, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்ததும் உடனே வெளியேறி, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடலில் ஒரு சிறு முள்கூட தைக்காமல் பாதுகாப்பாக மதீனா கொண்டுபோய்ச் சேர்க்கத் தேவையான தைரியத்தையும், பொறுப்புணர்வையும் இந்த அகீதாவே அபூபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹுஅவர்களுக்கு கொடுத்தது.
தனது அன்புக்குரிய சிறிய தந்தை ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹுஅவர்களை வெட்டிக் கொலை செய்து, நெஞ்சைப் பிளந்து ஈரலைச் சப்பித் துப்பிய ஹிந்தாவை மன்னிப்பதற்கும், மஸ்ஜிதில் சிறுநீர் கழித்த நாட்டுப்புற அரபியை கனிவான வார்த்தைகள் கொண்டு நேர்வழிபடுத்துவதற்கும், ஹுதைபியா உடன்படிக்கையின்போது இஸ்லாத்தின் எதிர்கால நன்மை கருதி தூரநோக்குடன் நிராகரிப்பாளர்களுக்கு பல விட்டுக் கொடுப்புகளை செய்வதற்கும் தேவையான மனோ வலிமையையும் இந்த அகீதாவே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொடுத்தது.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்