சகோதரி, லறீனா அப்துல் ஹக்
சவூதி போன்ற இஸ்லாமிய நாடுகளில் பிற மதத்தவர் வணக்கத்தலங்கள் அமைக்க அனுமதிப்பதில்லையே அது ஏன்? ”அனைவரும் சமம்” என கூறும் இஸ்லாத்தில் ஏன் இப்படி? என மாற்று மத நண்பர்கள் கேட்கிறார்கள் அவருக்கு என்ன பதில்!
சவூதி முதலான முஸ்லிம் நாடுகளில் முஸ்லிமல்லாதோரின் (கிறிஸ்தவ ஆலயம், இந்துக்கோவில், பௌத்த விகாரை முதலான) வழிபாட்டுத்தலங்களை அமைக்க அனுமதிப்பதில்லை. ஆனால், முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் மஸ்ஜித் அமைப்பதைத் தமது அடிப்படை உரிமையாகக் கருதுகின்றனர். இது எப்படி நியாயமாகும்? இந்தக் கேள்வி பலரிடையே எழுவதுண்டு.
உண்மையில், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஏனைய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள், அந்நாட்டின் சொந்தக் குடிமக்கள். அங்கே தமது தொழுகைக்காக மஸ்ஜித் அமைத்துக்கொள்ளும் உரிமையை ஏனைய மக்களைப் போலவே நாட்டுப்பிரஜைகளான, மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களும் கோருவதில் எந்தத் தவறும் இல்லை. அது நியாயம்தான்.
ஆனால், சவூதி போன்ற நாடுகளின் முழுமொத்த மக்கள் தொகையினரும் முஸ்லிம்கள்தாம். ஏனையவர்கள் தொழில் முதலான இன்னபிற காரணங்களால் தற்காலிகமாக அங்குவந்து தங்கியிருக்கும் விருந்தாளிகள் மட்டுமே. அவர்கள் அந்நாட்டின் பிரஜைகள் அல்லர். அத்தோடு, அந்நாடுகளில் மேற்கு நாடுகள் போல் நீண்டகாலம் வசித்த காரணத்தால் மட்டும் (நானறிந்த வரையில் நம்போன்ற பிறநாட்டு முஸ்லிம்களுக்குக்கூட) குடியுரிமை வழங்கப்படுவதுமில்லை. எனவே, அங்கே ஏனைய வழிபாட்டுத்தலங்களைக் கட்டுதல் என்பது அந்நாடுகளின் (விசேஷமாக சவூதியின்) அரசியல், சமூக, கலாசார, சமய நடைமுறைகளின் அடிப்படையில் பிழையாகவோ, அப்படிக் கட்டுவது அவசியமற்றது என்றோ கருதப்படுவதைத் தவறு என்று கூறுவதற்கில்லை.
ஏனெனில், எந்தவொரு சமயத்தலமும் மரியாதைக்குரியது என்றும் போர் ஏற்பட்ட காலத்தில்கூட அவற்றை இடிப்பதோ சமயப் பெரியோரை (பாதிரி, பூசாரி, பிக்கு) கொலை செய்வதோ கூடாது என்று தடைவிதித்த மார்க்கம் இஸ்லாம். அப்படிப்பட்ட மார்க்கத்தைத் தமது நாட்டின் ஒரே மார்க்கமாகக் கொண்டுள்ள நாட்டில், ‘இன்று இருந்துவிட்டு நாளை (தத்தமது நாடுகளை நோக்கிப்) போகப்போகும் மக்கள் சமுதாயம் இன்று கட்டுகின்ற ஆலயத்தை நாளை போகும்போது என்னசெய்வது? இடித்துத் தகர்ப்பதா? அப்படி இடிப்பதால் பிரச்சினைகள் எழாதா?’ என்ற கேள்விகள் எழுகின்றன.
எனவே அவை அதனைத் தடைசெய்வதைத் தவறு என்று கூறுவதற்கில்லை. இந்த நிலையிலும், கத்தார், குவைத் முதலான நாடுகள் இந்நிலையினை ஓரளவுக்குத் தளர்த்தி அனுமதி அளித்துள்ளன. அது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததையும் நாமறிவோம். கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் (Military Base) தான் பிரத்தியேகமான அந்த ஸர்ச் அமைந்துள்ளது. மக்கள் பரவலாகப் போய்வரும் பொது இடத்திலல்ல என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இது அந்த மாற்றுமத சகோதரருக்குத் தெளிவுபடுத்தக்கூடிய பதில். ஆனால், முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் இதனை இன்னும் சற்றே விரிவாய் நோக்குவது நல்லது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
சவூதிக்கு உம்ரா, ஹஜ் நிறைவேற்றச் செல்வோர் இடைவழியில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் எனப் பாதைகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டிருப்பர். அது ஏன்?
அல்லாஹ் கூறுகின்றான்:
3:96 (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. மனிதர்கள் 29:67 அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?
எனவே, பாக்கியம் பொருந்திய அந்தத் தலமும் அதைச் சுற்றியுள்ள பிரதேசமும் பரிசுத்தமானவை. இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்தக் கஃபத்துல்லாஹ்வைக் கட்டிமுடித்தபோது அல்லாஹ்விடம் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்கள் என அல்குர்ஆன் இவ்வாறு எடுத்துரைக்கின்றது:
14:35 நினைவு கூறுங்கள்! ‘என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சம் தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!’ என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).
14:36 (‘என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்துவிட்டன. எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்குமாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை. என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்.’
14:37 ‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன்வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே!- தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன். எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றிசெலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!’ என்று பிரார்த்தித்த இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ்வுதஆலா,
22:26 நாம் இப்றாஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து ‘நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர். என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக’ என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).
22:29 பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை ‘தவாஃபும்’ செய்ய வேண்டும்.
22:30 இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்¢ இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, விக்கிரகங்களின் அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.
2:125 (இதையும் எண்ணிப் பாருங்கள். ‘கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம். இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்’ (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் ‘என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்’ என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம். என்று அல்லாஹ் கூறுகின்றான்:
‘தூய்மை’ என்ற எண்ணக்கரு (concept) இங்கு முக்கியமானது. தூய்மை என்பது ஈமானாகும். இஹ்லாஸாகும். அதாவது, மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில், சிலைகள் விக்கிரகங்கள் என்பன அசுத்தமானவையே! அவற்றை வணங்குவோரும் அசுத்தமானவர்களே என்பதையும் அவர்கள் கஃபாவுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்பதும் அல்லாஹ்வின் கட்டளையே என்பதை,
9:28 ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே¢ ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது. (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் – அல்லாஹ் நாடினால் – அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் – நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
எனும் அல்குர்ஆன் வசனம் எமக்குத் தெளிவுபடுத்துகின்றது. அவ்வாறு இணைவைப்போரின் வருகையைத் தடைசெய்தால் அவர்களின் வருகையால் கிடைக்கக்கூடிய வியாபாரம், சுற்றுலாத்துறை சார்ந்த வருமானங்கள் இதனால் கிடைக்காமல் போய்விடுமோ என்றெல்லாம் அஞ்சத்தேவையில்லை என்று தெளிவுபடுத்தியே அல்லாஹ் இந்தக் கட்டளையை இறக்கியிருப்பதைக் கவனியுங்கள்.
எனவே, யாவுமறிந்த அல்லாஹ்வின் தீர்ப்பு இது. இதனை நாம் எந்த மனக்கிலேசமுமின்றிப் பொருந்திக் கொள்ளுதல் நம்மீது கடமையாகும். அனைத்தினதும் ஆட்சி அல்லாஹ்வுக்குரியது. அவனே மிகைத்தவன். அவனே ஞானமிக்கவன்.