இணை வைக்கும் (ஷிர்க்) இமாமைப் பின்பற்றி தொழுகலாமா?
கடமையான ஐங்கால தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவது மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட செயல். தக்க காரணமின்றி ஜமாஅத்தை விட்டு தனித்துத் தொழக்கூடாது என்பதற்கு பல ஹதீஸ் ஆதாரங்கள் இருக்கின்றன.
இமாமின் தொழுகை கூடாமல் போனாலும் அதன் காரனமாக பின்பற்றித் தொழுபவர்களின் தொழுகை கூடாமல் போகாது; நிறைவேறி விடும். இதற்கு மாற்றமாக ஷிர்க் பித்அத் புரியும் சில இமாம்கள் பின்னால் தொழும் தொழுகை நிறைவேறாது; அப்படிப்பட்ட இமாம்கள் பின்னால் தொழக்கூடாது என்று கூறி ஊர் இரண்டு படுவதற்கும், தனிப்பள்ளி கட்டுவதற்கும் சிலர் வழி வகுக்கின்றனர்.
அவர்களின் தவறான கூற்றிற்கு சம்பந்தமில்லாத ஹதீஸ்களைக் காட்டி சொந்த வியாக்கியானத்தை கொண்டு தங்கள் தவறான கொள்கையை நிலை நாட்டுவதுடன் சமுதாயத்தில் பிளவுகள் ஏற்பட காரணமாக இருக்கின்றனர். ஆகவே எப்படிப்பட்ட இமாமையும் பின்பற்றி தொழுதாலும் அதனால் நமது தொழுகைக்கு எந்த பாதிப்பு இல்லை என்பதையும் இனி விரிவாக பார்ப்போம்.
”(நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு – நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நாம் அவர்களுக்கு அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ்வே இருதயங்களில் உள்ளவற்றை அறிபவன்.” (திருக்குர்ஆன் 31:23)
தோல்வியுற்று ஓடும் எதிரிப்படையில் ஒருவனை நபித்தோழர் ஒருவர் பாய்ந்து அவரைத் தாக்க முற்பட்டபோது அவர் ‘லா இலாஹ இல்லல்லாஹு’ என்று கூறினார். அப்போது நபித்தோழர் அதைப் பொருட்படுத்தாமல் அவரை வெட்டி வீழ்த்திவிட்டார். பிறகு அவரை வெட்டியது பற்றி வருந்தி நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இது விஷயத்தை எடுத்து கூறினார். அப்போது ‘அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே கலிமாவைக் கூறினான்’ என்றார். அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘நீர் அவனது உள்ளத்தைப் பிளந்து பார்த்தீரோ? உள்ளக்கிடக்கியை நாவின் மூலமே வெளியிட முடியும்’ என்றார்கள். (அறிவிப்பாளர்: கபீஸாபின் துவைபுரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அப்திர் ரஜ்ஜாக், இப்னு அஸாக்கீர்)
இந்த குர்ஆன் ஹதீஸ் இரண்டிலுமிருந்து ஒருவனுடைய உள்ளத்தின் நிலை பற்றிய திட்டமான அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கிறது. அது விஷயத்தில் நாம் தலையிடுதல் கூடாது என்பதை சுட்டிக் காட்டுகின்றன.
‘மறுமை நாளின்போது முறையே புனிதப் போரில் ஷஹீதானவரில் ஒருவரையும், தானும் கற்று பிறருக்குத் கற்பித்துக் கொடுத்த ஆலிம் – அறிஞரில் ஒருவரையும், நிறைய செல்வங்கள் அளிக்கப்பட்ட செல்வந்தரில் ஒருவரையும் கொண்டு வரப்பட்டு முதன் முதலாக இவர்களுக்கு தீர்ப்பளிக்கப்படும். இவர்களில் ஒவ்வொருவருக்கும் தான் செய்துள்ள அருட் கொடைகளை அல்லாஹ் அவர்களுக்கு எடுத்து உணர்த்துவான். அப்போது அவர்களும் அதை உணர்ந்து கொள்வார்கள். அப்போது அவர்களை நோக்கி நீங்கள் இவற்றிற்காக என்ன கைமாறு செய்தீர்கள் என்று கேட்பான். அதற்கு ஒருவர் (யா அல்லாஹ்) நான் உனக்காக குர்ஆனை ஓதினேன். இல்மை நானும் கற்று பிறருக்கு கற்பித்தும் கொடுத்தேன் என்பார். மூன்றாம் நபர் நீ விரும்பும் அத்துனை விஷயங்களுக்கும் நான் உனக்காக அனைத்துப் பொருள்களையும் செலவு செய்தேன் என்பார்.
அப்போது அல்லாஹ் முதலாம் நபரை நோக்கி நீர் பொய் சொல்கிறீர். உண்மையில் நீ ஒரு மாவீரன் என்று அழைக்கப்படுவதற்காக வெட்டப்பட்டு ஷஹீதாகியுள்ளீர். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார். மற்றொருவரை நோக்கி நீர் பொய் சொல்கிறீர் உண்மையில் நீ ஓர் ஆலிம் – அறிஞர் அழகாக ஓதுபவர் என்று அழைக்கப்படுவதற்காக செயல்பட்டுள்ளீர். அவ்வாறு கூறப்பட்டு விட்டது என்று கூறி இவரும் முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார். மூன்றாமவரை நோக்கி, நீரும் பொய் சொல்கிறீர். உண்மையில் நீர் ஒரு கொடை வள்ளல் என்று அழைக்கப்படுவதற்காகவே செலவு செய்துள்ளீர். அவ்வாறு அழைக்கப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழ இவரும் இழுக்கப்பட்டு நரகில் தள்ளப்படுவார்’ என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியுள்ளார்கள். (ஹதீஸ் சுருக்கம்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்)
சத்தியத்தை நிலை நாட்டுவதற்காக ஒருவர் அந்த சத்தியத்தை எதிர்த்து போராடுபவர்களை எதிர்த்து சண்டையிட்டு மரணிக்கிறார். அதனை நாம் கண்ணால் காணுகிறோம். அந்த சண்டையில் வெட்டுப்பட்டு மரணிப்பதும் நமக்கு தெரிகிறது. நம் காணும் அறிவின் படி அவர் வெட்டுப்பட்டு ஷஹீதாகியுள்ளார். ஆனால் அப்படிப்பட்ட ஷஹீதை முதன் முதலில் அல்லாஹ் நரகில் எறிகிறான் என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது.
அடுத்து ஆலிம் ஒருவர் தனது அறிவைக்கொண்டு மக்களை அல்லாஹ்வின்பால் அழைக்கிறார். அவரது உபதேசங்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் உண்மையை உணர்ந்து தங்களின் தவறுகளை விட்டு தெளபா செய்து நேர்வழிக்கு வந்து விடுகின்றனர். அவரைப் பெரும் சீர்த்திருத்தவாதி என உலகமே போற்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு ஆலிமையும் அல்லாஹ் நரகில் எறிவதாகவும் இந்த ஹதீஸ் கூறுகிறது.
அதே போல் மிகப் பெரிய செல்வந்தர் தமது செல்வங்களில் பெரும் பகுதியை அல்லாஹ்வுடைய பாதையில் அள்ளித் தருவதை நமது கண்களாலேயே பார்க்கிறோம். அவர் பெரும் கொடை வள்ளல் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் அல்லாஹ் அவரையும் நரகில் எறிவதாக இந்த ஹதீஸ் கூறுகிறது.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? நாம் நமது கண்களால் திட்டமாகப் பார்ப்பதை வைத்தோ, அல்லது நமது அறிவு ஆராய்ச்சியால் திட்டமாக விளங்கியோ ஒருவனுடைய உள்ளத்தில் இருப்பது ஈமானா – இறை விசுவாசமா, குஃப்ரா – இறை நிராகரிப்பா என்று முடிவு கட்டிவிட முடியாது. அந்த இரகசியம் அல்லாஹ்வுக்கே வெளிச்சம். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் பார்ப்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று நம் நாட்டு பழமொழி. ஆயினும் இங்கு ஒருவனுடைய உள்ளத்திலிருப்பதை தீர விசாரித்தும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. இந்த நிலையில் தொழ வைக்கும் ஒரு இமாமின் குப்ரை பற்றித் திட்டமாகத தெரிந்து கொள்வது எப்படி சாத்தியம்?
மக்கத்து காபிர்களின் அதே கொள்கையைத் தங்களின் கொள்கையாக கொண்டிருப்பதை இணைவைத்தலை ஆதரிப்பதை நம்மால் திட்டவட்டமாக உர்ஜிதம் செய்ய முடியாது. இந்த நிலையில் தன்னை முஸ்லிம் என்று சொல்வதோடு இந்த உம்மத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ள ஒருவர் அல்லாஹ்வின் கட்டளையின்படியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைப்படியும் ஒருவர் தொழும்போது அதனைப் பின்பற்றித் தொழமாட்டேன் என்று எவ்வாறு ஒரு முஸ்லிம் சொல்ல முடியும்? அப்படிச் செய்தால் அல்லாஹ்வின் கட்டளையையே நிராகரித்த குற்றத்திற்கல்லவா ஆளாக நேரிடும். மேலும் அப்படிப்பட்ட ஒருவரைப் பின்பற்றித் தொழுவதால் அவரின் தவறான கொள்கைகளுக்கும் நாம் துணை போவதாக பொருளாகாது.
ஒரு முறை ஹஸன் பஸரீரஹ்மதுல்லாஹி அலைஹிஅவர்களிடம் பித்அத்தையுடைய இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அத்தகையவருக்குப் பின்னால் அவருடைய ‘பித்அத்’ அவரிடமே இருக்கும் நிலையில் தொழுவீராக! என்றார்கள் (ஹிஷாமும் பின் ஹஸ்ஸான்ரஹ்மதுல்லாஹி அலைஹி. முஸ்னத் ஸயீது பின் மன்சூர்)
அதிய்யு பின் கியார் என்பவர் உஸ்மான்ரளியல்லாஹு அன்ஹுஅவர்களிடம் வந்து, நீங்கள் அனைவருக்கும் பொது இமாமாக இருந்து கொண்டிருந்தீர்கள். இப்போது நாங்கள் காணும் நிலையில் உங்களுக்குத் துன்பம் வந்து சம்பவித்துள்ளது. (இப்போது) எங்களுக்குக் குழப்பவாதியான இமாம் தொழுகை நடத்துகிறார். அவரைப் பின்பற்றி தொழுதால் நாமும் பாவிகளாகி விடுவோமோ என்று கருதி சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். அதற்கு அவர்கள் ‘தொழுகைதான் மக்களுடைய அமல்களில் மிக்க அழகானதாகும். மக்கள் அதை அழகுறச் செய்யும்போது, அவர்களுடன் சேர்ந்து நீரும் அதை அழகுறச் செய்து கொள்வீராக! அவர்கள் தீமை விளைவிப்பவர்களாய் இருப்பின் அவர்களின் அத்தீமையை நீர் செய்யாமல் உம்மை தற்காத்துக் கொள்வீராக’ என்றார்கள். (அதிய்யு பின் கியார்ரஹ்மதுல்லாஹி அலைஹி, புகாரி)
மேற்காணும் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹுஅவர்களின் கூற்றிலிருந்து தொழ வைப்பவர், அவர் ‘பித்அத்’ காரராக அல்லது வேறு தவறுகள் செய்பவராக இருப்பினும், நாம் ஜமாஅத்துடைய பலன் இழந்து நஷ்டம் அடைவதைவிட அவர்களுடன் சேர்ந்து ஜமாஅத் தொழுவதே மேல் என்பதை அறிய முடிகிறது.
பின்பற்றி தொழுவோர் முறையாகத் தொழுதிருக்கும்போது, இமாம் முறை கேடாகத் தொழுது இமாமுடைய தொழுகை முறிந்து விடுவதால், அவரை பின்பற்றித் தொழுதவரின் தொழுகைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
”உங்களுக்கு சில இமாம்கள் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் முறையாகத் தொழ வைப்பார்களானால் உங்களுக்கு நல்லதுதான். அவர்கள் தவறிழைப்பார்களானால் உங்களுக்கு நல்லதுதான். அன்றி அவர்களுக்குத் தான் கேடு” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி)
இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் ஹஜ்ஜாஜுபின் யூசுப் எனும் மிகக் கொடிய அநியாயம் செய்தவனுக்குப் பின்னால் தொழுதுள்ளார்கள் என்று இமாம் புகாரிரஹ்மதுல்லாஹி அலைஹிஅவர்களும், அபூஸயீதில் குத்ரிரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் பெரும் குழப்பவாதியாக இருந்த ‘மர்வான்’ என்பவருக்குப் பின்னால் பெருநாள் தொழுகை தொழுதுள்ளார்கள் என்பதாக இமாம் முஸ்லிம்ரஹ்மதுல்லாஹி அலைஹிஅவர்களும், மற்றும் திர்மிதீ, அபூதாவூத், நஸயீ முதலியோரும் தமது நூல்களில் வெளியிட்டுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் காலத்தில் இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் கஷ்பிய்யா, காரிஜிய்யா ஆகிய பெரும் குழப்பவாதிகளுக்குப் பின்னால், அவர்கள் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தொழுதார்கள்.
அது சமயம் அவர்களை நோக்கி, தமக்குள் சண்டை செய்து கொண்டும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தாருக்கு பின்னால் நின்று தொழுகிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், யார் ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ (தொழுகைக்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அவருக்குப் பதில் அளிப்பேன். யார் ‘ஹய்ய அலல் ஃபலாஹ்’ (வெற்றியடைவதற்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அவருக்கும் பதில் அளிப்பேன். ஆனால் யார் ‘ஹய்ய அலாகத்லி அக்கீல் முஸ்லிமி வ அக்தி மாலிஹீ’ (உமது சகோதர முஸ்லிமை வெட்டி அவருடைய பொருளை அபகரிப்பதற்காக வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அதற்கு மாட்டேன் என்று கூறிவிடுவேன்’ என்றார்கள் (நாபிஊரளியல்லாஹு அன்ஹு, ஸூனனு ஸயீது பின் மன்சூர்)
ஒரு முறை அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்களிடம் ஒளூவில்லாமல் ஒருவர் மக்களுக்கு தொழ வைத்து விட்டால் என்ன செய்யவேண்டும்? என்பதாக கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அவர் மட்டும் தொழுகையை மீட்ட வேண்டும்; அவரைப் பின்பற்றி தொழுதவர்கள் மீட்ட வேண்டியதில்லை என்றார்கள். (ஸாலிம்ரளியல்லாஹு அன்ஹு, தாரகுத்னீ)
ஒரு முறை உமர்ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் தாம் ஜுனுபாளி – குளிப்புக் கடமை உள்ளவர்களாயிருக்கும் போது (விஷயம் தெரியாமல்) மக்களுக்குத் தொழ வைத்து விட்டார்கள். பின்னர் (விஷயம் தெரிந்ததும்) மீட்டித் தொழுதார்கள். ஆனால் தொழுகையை மீட்டும்படி மற்றவர்களுக்கு அவர்கள் ஏவவில்லை. (அஷ்ஷரீதுஸ்ஸகஃபி, தாரகுத்னீ)
மேற்காணும் ஹதீஸ்கள் அஃதர்- ஸஹாபாக்களின் சொற்செயல்கள் வாயிலாக தொழ வைக்கும் ஓர் இமாம் அவர் தொழுகையிலோ அல்லது வெளியிலோ என்ன கோளாறுகள் செய்திருந்தாலும் அவற்றால் அவருடைய தொழுகைக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படுமே தவிர, அவரைப் பின்பற்றித் தொழுவோர் முறையாக தொழுதிருக்கும் போது, அவற்றால் இவர்களின் தொழுகைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிகிறோம்.
தொழுகையில் இமாம் செய்யும் தவறுகளே மற்றவர்களின் தொழுகையைப் பாதிக்காது எனும்போது, தொழுகைக்கு வெளியில் அவர் செய்யும் தவறு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும்?
எவர் நமது தொழுகையைத் தொழுகிறாரோ, நமது கிப்லாவை முன்னோக்குகிறாரோ, நாம் அறுத்ததைச் சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம். அவர் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வின் தூதரினதும் பாதுகாப்பில் உள்ளார். எனவே இந்த பாதுகாப்பில் இருப்பவருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர். (அனஸ்ரளியல்லாஹு அன்ஹு, புகாரி, அபூதாவூத், திர்மிதி, அப்னுமாஜ்ஜா, தாரமி, அஹ்மத்)
அப்படியானால் அவர் ஒரு முஸ்லிம், மற்ற முஸ்லிம்களுக்கிருக்கும் அதே உரிமைகளும், கடமைகளூம் அவருக்கும் உண்டு. (புகாரி) என்று இன்னொரு அறிவிப்பில் இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்களிலிருந்து ஷிர்க், பித்அத் சடங்குகளைச் செய்கிறவர்கள் பின்னால் தொழுதாலும், தொழுபவரின் தொழுகை கூடாமல் போகாது; மேலும் இக்காரணங்களைக் கூறி ஒருவர் பின்னால் தொழுவதை ஒருவர் தவிர்த்துக் கொண்டால், அந்த இமாம் முஸ்லிம் இல்லை; காஃபிர் அல்லது முஷ்ரிக் என்று இவர் முடிவு செய்தே பின்பற்றாமல் இருக்கிறார்.
ஒருவரது உள்ளத்தில் இருப்பதை அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் அறிய முடியாது. அவர்களின் வெளிரங்கமான செயல்களை வைத்து ஒருவரை காஃபிர் என்றோ, முஷ்ரிக் என்றோ ஃபத்வா கொடுக்கும் அதிகாரம் பெறமாட்டார். இதற்குப் பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் ஆதாரங்களாக இருக்கின்றன.