தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் கல்விமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி:
கடந்த 2003-04ல் துவங்கப்பட்ட தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஆரம்பத்தில் 9,534 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். ஆனால், தற்போது இப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துவிட்டது.
சான்றிதழ், டிப்ளமோ, இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், தொழில் சார்ந்த படிப்புகள் என 108 படிப்புகளை வழங்கிவருகிறது. தமிழகத்தில் மட்டும் 652 கல்வி மையங்களையும், பிற மாநிலங்களில் 43 கல்வி மையங்களையும் கொண்டுள்ளது. தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட 11.54 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
முறைப்படி பள்ளிக் கல்வியை நிறைவு செய்யாத மாணவர்களுக்கு பட்டப்படிப்புகளுக்கான வாய்ப்புகள் எப்படி?
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக் கல்வி முறையில் இளநிலை பட்டப்படிப்புகளை வழங்குகின்றன. ஆனால், பல்வேறு காரணங்களால் பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டவர்களுக்கும் பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பினை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்குகிறது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தான் இளநிலை பட்டப்படிப்பு படிக்க முடியும் என்றில்லை. திறந்தநிலை பல்கலைக்கழகங்களுக்கு அதில் விதிவிலக்கு உண்டு. அதன்படி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் இணைப்பு கல்வியில் சேர எந்தவித கல்வித் தகுதியும் தேவையில்லை; 18 வயது நிரம்பியிருந்தால் போதும். இந்த 6 மாத கால பயிற்சிக்கு பிறகு நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் திறந்தநிலை பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இளநிலை படிப்புகளில் சேர முடியும்.
இணைப்பு பயிற்சியில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவரால் பிற கல்லூரி, பல்கலைக்கழகத்தில் சேர முடியுமா?
இணைப்பு பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் திறந்தநிலை பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர மட்டுமே தகுதி உண்டு.
தொலைநிலைக்கல்வி பட்டப்படிப்புகளை விட, ரெகுலர் பட்டப் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறதே?
அரசு பணிகளைப் பொறுத்தவரை, இந்த நிலை கிடையாது. ரெகுலர் பட்டங்களுக்கு சமமாகவே தொலைநிலைக் கல்வி பட்டங்களும் கருதப்படுகின்றன. இவ்வாறு அதிகம்பேர் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர். மேலும், வேலைக்கு செல்பவர்களுக்கு பட்டப்படிப்பு படிக்கும் வசதியை தொலைநிலைக் கல்வி முறை வழங்கிவருகிறது. இதனால், லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். அறிவை வளர்த்துக்கொள்ளவும், பதவி உயர்வு பெறவும் தொலைநிலைக் கல்வி மிகச் சிறந்த முறை.
ஐகோர்ட் உத்தரவால் வயதை மட்டுமே தகுதியாகக் கொண்டு திறந்தநிலைக் கல்வி முறையால் பட்டப்படிப்பு படித்தவர்களின் நிலை என்ன?
ஐகோர்ட் உத்தரவின்படி, முறையான கல்வித் தகுதி இல்லாமல் வயதை மட்டுமே தகுதியாகக் கொண்டு எந்த ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புகளிலும் சேர முடியாது. இதனை சில மாணவர்கள் தவறாக புரிந்துகொள்கின்றனர். திறந்தநிலை கல்வி முறையில் வழங்கப்படும் படிப்புகளால் மதிப்பில்லை என்று அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால், திறந்தநிலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இணைப்பு படிப்பிற்கு பிறகான இளநிலை பட்டப்படிப்பிற்கும், அதனை தொடர்ந்த முதுநிலை பட்டப்படிப்பிற்கும் உரிய மதிப்பு உண்டு. இந்த பட்டப்படிப்பினை கொண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து கொள்ளவும், அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளை பெறவும் முடியும்.
21 வயது நிரம்பியவர்கள் இளநிலை பட்டப்படிப்பு படிக்காமலேயே நேரடியாக முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து வந்தனர். இந்த முறையை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மட்டுமின்றி, பிற பல்கலைக்கழகங்களும் வழங்கி வந்தன. இதற்கு ஐகோர்ட் தடை விதித்துவிட்டது. எனினும், இம்முறையில் ஏற்கனவே படித்து பட்டம் பெற்றவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது.
நாட்டில் பெண்கல்வி எந்த நிலையில் உள்ளது? உயர்பதவி வகிக்கும் பெண்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படுகிறதா?
சமீபகாலமாக, அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படிப்பவர்களில் பெண்களே அதிகம் உள்ளனர். உயர்பதவிகளுக்கு பெண்கள் வந்தாலும், ஒரு படி குறைவாகவே பார்க்கின்றனர். நல்ல திட்டங்களை செயல்படுத்தக்கூட அதிகம் போராட வேண்டியுள்ளது. பெண்கள் மீதான தவறான கண்ணோட்டம் மாற வேண்டும்.
courtesy: www.kalvimalar.com