அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்: ”உறவு என்பது, அர்ஷை பிடித்துக் கொண்டு ”என்னை இணைத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக் கொள்வான். என்னைப் பிரித்து விடுபவரை அல்லாஹ்வும் பிரித்து விடுவான்” என்று கூறும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்)
அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தன்னை துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே இணைத்து வாழ்பவர் ஆவார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அபூஅப்துல்லாஹ் என்ற அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”இன்ன கூட்டத்தார் எனக்கு விருப்பமானவர்களல்லர். நிச்சயமாக எனக்கு விருப்பமானவர்கள், அல்லாஹ்வும், அவனை நம்பிக்கை கொண்ட நல்ல அடியார்களும் தான். எனினும் அந்தக் கூட்டத்தாரிடம் எனது இரத்த பந்தம் உள்ளது. அதை அதன் (சேர்த்துக் கொள்ளுதல் எனும்) நீரால் நனைத்துக் கொள்வேன்” என ஒளிவு மறைவு இன்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் (புகாரி,முஸ்லிம்)
அபூஅய்யூப் என்ற காலித் இப்னு ஸைத் அன்சாரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ”இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்கின்ற, நரகிலிருந்து என்னைத் தூரமாக்கி விடுகின்ற ஒரு செயலை என்னிடம் கூறுங்கள்” என்று ஒருவர் கேட்டார். ”நீ அல்லாஹ்வை வணங்குவீராக! எதையும் அவனுக்கு இணைவைக்காதீர்! தொழுகையைப் பேணுவீராக! ஜகாத் கொடுப்பீராக! உறவினரை இணைந்து வாழ்வீராக!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”தன் உணவு (வாழ்வாதாரம்) தனக்கு அதிகரிக்கப்படவும், தன் ஆயுள் தனக்கு நீடிக்கப்படவும் ஒருவர் விரும்பினால் அவர் தன் உறவினரை இணைந்து வாழட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”அபூதல்ஹா (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் மதீனாவிலேயே மதீனாவாசிகளில் பேரீத்தம் பழத்தோட்டங்கள் அதிகம் உள்ளவராக இருந்தார். அவரது சொத்துக்களில் அவருக்கு மிக விருப்பமானதாக ‘பய்ரூஹா’ தோட்டம் இருந்தது. பள்ளி வாசலுக்கு அருகில் அது அமைந்திருந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் உள்ளே போய், அதன் சுவையானத் தண்ணீரைக் குடிப்பார்கள்.
”உங்களுக்கு விருப்பமானவற்றை (இறைவழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும் எதனை நீங்கள் செலவழித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.” 3:92 வசனம் இறங்கியதும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அபூதல்ஹா வந்தார்.
”இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்கள் மீது 3:92 வசனத்தை இறக்கி உள்ளான். என் சொத்தில் எனக்கு மிகவும் விருப்பமானது ‘பய்ரூஹா’ தான். அதை அல்லாஹ்வின் வழியில் (நான்) தர்மம் (செய்கிறேன்). அதன் நன்மையை, நற்கூலியை அல்லாஹ்விடமே ஆதரவு வைக்கிறேன். இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் நாட்டப்படி அதை நீங்கள் (செலவு) செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”நல்லது. இது லாபம் தரும் சொத்தாகும். இது லாபம் தரும் சொத்தாகும் என (இருமுறைக்) கூறிவிட்டு ”இது விஷயமாக நீ கூறியதைக் கேட்டேன். உன் நெருங்கிய உறவினர்களுக்கு இதை பங்கீடு செய்வதை நான் விரும்புகிறேன்” என்றும் கூறினார்கள். உடனே அபூதல்ஹா அவர்கள் ”இறைத்தூதர் அவர்களே! அப்படியே செய்கிறேன்” என்று கூறிவிட்டு, அபூதல்ஹா அந்த தோட்டத்தை தன் நெருங்கிய உறவினர்களுக்கும் தன் சிறிய தந்தையின் மக்களுக்கும் பங்கீடு செய்தார். (புகாரி, முஸ்லிம்)