[ மீண்டும் ஒரு முறை கூவத்தைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார் துணை முதல்வர் ஸ்டாலின். சிங்கப்பூர் தன் மாசுபடிந்த ஆற்றைத் தூய்மைப்படுத்திய வெற்றியைப் பற்றி அறிந்து கொள்ள சிங்கப்பூர் சென்றிருந்த துணை முதல்வர், கூவத்தைத் தூய்மைப்படுத்திச் சுற்றுலா இடமாக மாற்றுவோம் என்று வாக்களித்திருக்கிறார். சென்னை முழுவதும் மேம்பாலம் கட்டிய இவர் இதை மட்டும் செய்தால், மாபெரும் சாதனையாளர் என்று சென்னை வரலாற்றில் இடம் பெறலாம்..]
கூவம் மணக்கும்” என்ற வாக்குறுதியை 1967 தேர்தலுக்கு முன்னே தி.மு.க. கூட்டணி மக்கள் முன்னிலையில் வைத்தது. முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறிய தி.மு.க. சென்னையில் செய்த பெருமுயற்சிகளில் கூவத்தைத் தூய்மைப் படுத்துவதும் ஒன்று.
சென்னையின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது பக்கிங்காம் கால்வாய். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1857-ல் சென்னை ராஜதானியில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மாகாண ஆளுநராக இருந்த பக்கிங்காம், தமிழகத்தில் உள்ள மரக்காணத்தில் தொடங்கி ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா, கோதாவரி ஆகிய ஆறுகளின் கழிமுகப் பகுதிகள் வழியாக பெத்தகஞ்சம் என்ற இடம் வரை கால்வாய் வெட்டினார். இதனால் பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு வேலை கொடுத்து கூலியும் வழங்கப்பட்டது. இத்திட்டம் ரூ.30 லட்சம் செலவில் 1876-ல் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்பட்டது.இரண்டாம் உலகப் போரின்போது ராணுவப் பணிகளுக்கு ரயில்கள் மற்றும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டபோது கிராமப் புறங்களிலிருந்து காய்கறிகள், பால், உப்பு, மீன், கருவாடு, இறைச்சி, உணவு, ஆடு, கோழி, அரிசி, தேங்காய், வைக்கோல், விறகு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் படகுகள் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப் படகில் பயணிப்பது மிக ரம்மியமாகப் பயன்பட்டது. இந்தக் கால்வாயில் இரவு நேரத்தில் அமைதியாக நிலவைப் பார்த்துக் கொண்டு நீரில் பயணம் செய்வது இனிமையாக இருக்கும். மறைந்த திரைப்பட இயக்குநர் ஸ்ரீதரும், சின்ன அண்ணாமலையும் இந்த அனுபவத்தை மிகவும் அனுபவித்துச் சொல்வார்கள். விடுமுறை நாள்களில் வேடிக்கை பார்க்க சிறுவர்களும், இளைஞர்களும் மெரினா கடற்கரையைப் போன்று பக்கிங்காம் கால்வாய் பகுதிக்கும் செல்வார்கள்.
இக்கால்வாயில் படகுப் போக்குவரத்து 1950-ம் ஆண்டு வரை நடைபெற்றது. அப்போது மரக்காணத்திலிருந்து வேதாரண்யம் வரை விரிவு செய்திட அரசு திட்டமிட்டது. ஆந்திர மாநிலம் காகிநாடாவில் இக்கால்வாய் பெரிதும் பயன்பட்டது. மரக்காணத்திலிருந்து அடையாறு வரை 105 கி.மீ.; அதன்பின் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை 7.7கி.மீ.; தமிழக எல்லையான மூசாமணி வரை 58 கி.மீ.; ஆக தமிழகத்தில் இக்கால்வாயின் மொத்த நீளம் 170.7 கி.மீ. ஆகும். இக்கால்வாயின் மொத்த நீளம் சுமார் 420 கி.மீ. ஆகும். இது எழும்பூர் கால்வாய் என்றும் அழைக்கப்பட்டது எனவும், இதன் பயணக் கட்டணமும் மலிவு என்றும் சென்னை பற்றிய வரலாறு ஆய்வாளர் எஸ்.முத்தையா குறிப்பிட்டுள்ளார்.
கடல் பகுதியில் இருந்த கடற்கழிகள், ஓடைகள், நீர் நிலைகள் ஆகியவை இந்தக் கால்வாய் மூலம் இணைக்கப்பட்டன. அதன் பின்னர் ஆந்திரம் வரை தோண்டி இணைத்து நீட்டப்பட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கால்வாய் காலப்போக்கில் உரிய பராமரிப்பின்றி பயனற்ற நிலைக்குள்ளாகிவிட்டது. இதைக் கவனிக்க நாம் தவறிவிட்டோம்.
இக்கால்வாயின் மேல் பெரிய தூண்கள் அமைத்து சென்னை துரித ரயில் சென்னை கடற்கரை–வேளச்சேரி திட்டம் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதனால் இக்கால்வாய் தற்போது மிகவும் குறுகிவிட்டது. இருப்பினும், மழைக்காலத்தில் வெள்ள நீரை வெளியேற்றி சென்னை மக்களைக் காக்கும் அரணாக இந்தக் கால்வாய் உள்ளது. வடசென்னையில் பெரம்பூர், வில்லிவாக்கம், செங்குன்றம், மாதவரம் ஆகிய பகுதிகளில் சேரும் நீர் இந்தக் கால்வாயின் மூலம் எண்ணூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.
இக்கால்வாயில் பல கழிவுகள் சேர்வதால் இதன் ஆழம் குறைந்துவிட்டது. சி.பி.சி.எல். நிறுவனத்திலிருந்து வெளியேறும் கச்சா எண்ணெய்க் கழிவுகள், எண்ணூர் அனல் மின்நிலையம், வடசென்னை அனல் மின் நிலையம் திடக் கழிவுகள், நீர்க் கழிவுகள் யாவும் இந்தக் கால்வாயின் மூலமே வெளியேறுகின்றன. இதனால் எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்வளம் மிகவும் குறைந்துவிட்டது. இக்கால்வாயின் ஆழம் குறைந்துவிட்டதால் மழைக்காலத்தில் வடசென்னையின் சில பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. இக்கால்வாயை ஆழப்படுத்த 2001-ல் திட்டமிடப்பட்டது. அதற்கு மேல் பணிகள் நடைபெறவில்லை.
கடந்த 2004-ம் ஆண்டு தமிழகத்தை சுனாமி தாக்கியபோது கடல் நீர் இக்கால்வாயின் உள்ளே சென்று கடலுக்குத் திரும்பியது. இதனால் சென்னை மாநகருக்கு ஏற்பட இருந்த பெரும் பாதிப்புகள் தடுக்கப்பட்டன.
இக்கால்வாய் மாமல்லபுரம், திருப்போரூர், திருவான்மியூர், சென்னை, பழவேற்காடு, நெல்லூர், ஓங்கோல், மசூலிப்பட்டினம், விஜயவாடா, காகிநாடா, போலவரம், வாசிராபாத் வரை நகரங்கள் வழியே செல்கிறது. இன்னும் சில ஆறுகள், நீர்நிலைகளை இணைத்திருந்தால் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் வரை சென்று ஒரிசா மாநிலம் வரை இக்கால்வாய் தொட்டிருக்கும். இன்று நம்மால் பேசப்படும் நதிகள் இணைப்புக்கு முன்னோட்டமாகவும் அமைந்திருக்கும்.
தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது பக்கிங்காம் கால்வாயை ஆழப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்ற மிகவும் விரும்பினார். இந்தக் கால்வாயில் தான் பயணம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். 1985-ல் எம்.ஜி.ஆர் இதை நிறைவேற்ற மத்திய அரசிடம் வாதாடினார். இக்கால்வாய்த் திட்டம் மற்றும் 773.20 கி.மீ. தூரம் அமையவுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலைத் திட்டங்கள் எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டங்களாகும். தமிழக சட்டமன்றத்தில் பழ.நெடுமாறன் இந்த இரண்டு திட்டங்கள் குறித்துப் பேசியபோது தனக்கும் இதை நிறைவேற்ற ஆர்வமும் ஆசையும் உள்ளதாக அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். கூறியது சட்டப்பேரவைக் குறிப்பில் இருக்கிறது. 1985-ல் இத்திட்டம் குறித்து எம்.ஜி.ஆர். ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழு தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியது. 1987-ல் சேவியர் அரைக்கல், உள்நாட்டு நீர் போக்குவரத்துக் கழகத் தலைவரிடம் ஆய்வு செய்தார். ஆனால், இதைக் கிடப்பில் போட்டுவிட்டனர்.
2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நாடாளுமன்ற நிலைக்குழு இக்கால்வாய் குறித்து ஆய்ந்து மதிப்பீடு செய்து வழங்கியது. அதில் இக்கால்வாயை தமிழகத்திலிருந்து மேற்கு வங்கம் வரை நீட்டிக்கலாம் என்று கூறியது. அதில் புதுவையிலிருந்து காகிநாடா வரையுள்ள தூரம் 1,095 கி.மீ. நீட்டித்து அதன் பின்னர் காகிநாடா கால்வாய் மற்றும் எல்லரு கால்வாய்களை இணைத்து பத்ராசலம், இராஜமுந்திரி வரை மேலும் இணைக்கலாம். இதன் தொடர்ச்சியை மகாநதி வழியாக ஒரிசா வரை சென்று வங்கத்தை இணைக்கலாம் என்ற ஆலோசனையைத் தெரிவித்தது. இதில் மொத்த நீளம் ஆந்திரத்தில் 907 கி.மீ., தமிழகத்தில் 186 கி.மீ., புதுவையில் 200 கி.மீ., ஆகும். இதை “ரைட்ஸ்‘ என்ற நிறுவனம் ஆய்வு செய்து மொத்த திட்டமதிப்பீடு ரூ.542 கோடி வரை ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளது
நீண்டகாலமாகக் கிடப்பில் உள்ள திட்டம் கடந்த 2003-ல் மத்திய அரசு திரும்பவும் ஆய்வு செய்து படிப்படியாக ரூ.542 கோடி செலவில் இக்கால்வாயை ஆழப்படுத்தி சீர்செய்யத் திட்டமிடப்பட்டது. கால்வாயை ஆழப்படுத்தி அதன் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கரைகளை நன்கு கட்டி அதன் ஓரங்களில் மரங்களை நட்டு பசுமையாக்க வேண்டும். இதைச் செயல்படுத்த ஆட்சியாளர்களின் இதயசுத்தியான உறுதியான நடவடிக்கை தேவை.
கூவம் மணக்குமா?
கூவம் மணக்கும் என்ற வாக்குறுதியை 1967 தேர்தலுக்கு முன்னே தி.மு.க. கூட்டணி மக்கள் முன்னிடை வைத்தது. முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறிய தி.மு.க. சென்னையில் செய்த பெருமுயற்சிகளில் கூவத்தைத் தூய்மைப் படுத்துவதும் ஒன்று
விந்தை என்னவென்றால், ஒரு காலத்தில் கூவமும், அடையாறும் சென்னைக்குக் குடிநீர் தந்த ஆறுகள். பக்கிங்காம் கால்வாய் சரக்குப் போக்குவரத்துக்கு முக்கியமான ஒரு நீர்வழி. பக்கிங்காம் கால்வாயின் மயிலாப்பூர்ப் பகுதியிலிருந்து அடையாற்றைக் கடந்து கஸ்தூர்பா நகர்பக்கத்தின் பகுதிக்குச் செல்வதற்காக வைத்திருந்த அடைப்புக் கதவுகளின் பெயரால்தான் அடையார் கேட் ஓட்டலுக்கு அந்தப் பெயர் வந்தது.
சென்னை முன்னொருகாலத்தில் ஆறுகளும், ஏரிகளும், குளங்களும், எண்ணற்ற நீர்நிலைகளையும் கொண்டு இயற்கை வளம் செழித்திருந்த பகுதியாக இருந்திருக்கிறது. இந்த நகரமயமாக்கல் சென்னையின் இயற்கை வளத்தை அழித்தது மட்டுமல்ல. மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் வெகுவாகக் குறைத்திருக்கிறது.
இப்போதெல்லாம், சென்னையில் ஓடும் இரண்டாவது ஆற்றுக்கும் கூவம் என்றுதான் பெயர். அடையாறு என்பது ஆற்றின் பெயர் என்பதே பலருக்குத் தெரியவில்லை. கூவம், பக்கிங்காம் கால்வாய், அடையாறு எல்லாமே சாக்கடைகளாகி விட்டன. கூவம் என்றாலே சாக்கடை என்ற பொருள் வந்து விட்டது.
அண்மையில் சென்னையின் பணக்காரப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப் படும் சென்னைப் படகுக் குழாம் (CHENNAI BOAT CLUB) பகுதியில் இருக்கும் அண்ணா பல்கலைக் குழாமிலிருந்து அடையாற்றங்கரையைப் படம் எடுத்தேன். இங்கே நிலம் ஒரு கிரவுண்டுக்கு நாலு கோடியிலிருந்து பத்து கோடி வரை விலை பேசுகிறார்கள். அப்படிப் பட்ட இடத்தில் அடையாற்றின் கரை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
மீண்டும் ஒரு முறை கூவத்தைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார் துணை முதல்வர் ஸ்டாலின். சிங்கப்பூர் தன் மாசுபடிந்த ஆற்றைத் தூய்மைப்படுத்திய வெற்றியைப் பற்றி அறிந்து கொள்ள சிங்கப்பூர் சென்றிருந்த துணை முதல்வர், கூவத்தைத் தூய்மைப்படுத்திச் சுற்றுலா இடமாக மாற்றுவோம் என்று வாக்களித்திருக்கிறார். சென்னை முழுவதும் மேம்பாலம் கட்டிய இவர் இதை மட்டும் செய்தால், மாபெரும் சாதனையாளர் என்று சென்னை வரலாற்றில் இடம் பெறுவார்.
கூவத்தை மட்டுமல்ல, அடையாற்றையும், ஏன் பக்கிங்காம் கால்வாயையும் தூய்மைப் படுத்த வேண்டும். சென்னை போன்ற பெருநகருக்கு, குப்பையையும், கழிவுகளையும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் அகற்றத் தெரியவேண்டும். நினைத்தால் வழியுண்டு.
செய்ய வேண்டும். செய்யட்டும். அவர் முயற்சிக்கு நம் வாழ்த்துகள்.
இக்கால்வாய் அமைத்தால் ஏற்படும் பயன்கள்:
1. புதுவையிலிருந்து சென்னை, ஆந்திரா வட எல்லை வரை சரக்குப் போக்குவரத்து நடைபெறும். சாலைப் போக்குவரத்தின் நெரிசல் குறையும். அத்துடன் பெட்ரோலியப் பொருள்களின் பயன்பாடு பெருமளவில் குறையும்.
2. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பூமி வெப்பமயமாதலைத் தவிர்க்கலாம்.
3. இதனால் இதன் வழியே உள்ள நீர்நிலைகள் பாதுகாக்கப்படும். உதாரணத்திற்கு கூவம் ஆறு சுத்தமாகும், பழவேற்காடு, கிருஷ்ணா–கோதாவரி நதிகள் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
4. இக்கால்வாய் மக்களைக் கவர்ந்து சுற்றுலாப் பயன்பாடும் ஏற்படும். லண்டனில் உள்ள தேம்ஸ் நதியைப் போன்று இக்கால்வாய் செல்லும் வழியில் அமைந்துள்ள நகரங்கள், கிராமங்கள் அனைத்தும் சுற்றுலா வளர்ச்சி அடையும்.
5. இக்கால்வாய் மூலம் தேவையற்ற கழிவுகள் சேர்வது தடுக்கப்படும்.
6. மீன்வளம் பெருகும். புதுவை
7. 18.07 மில்லியன் டன் சரக்குகள் இக்கால்வாய் போக்குவரத்து மூலம் கையாளலாம். இப்படிப் பல வகையில் பயன்தரத்தக்க வகையில் இக்கால்வாயின் சீரமைப்புப் பணிகளை உடனடியாக நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயத் தேவையாகும். இதோ வருகிறது புலி என்ற கதைதான் இக்கால்வாய்த் திட்டத்தில் இருந்தது. கதையை உண்மையாக்க துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்திருப்பது பாராட்டத்தக்கதே.
நன்றி: கே.எஸ். இராதாகிருஷ்ணன்