முகவை எஸ்.அப்பாஸ்
வருமுன் காப்போம் என்பது அரசின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். ஆனால் நம்மை ஆளும் அதிகார வர்க்கத்திற்கோ நாம் சில இழப்புகளை சந்தித்தபின்தான் அவர்களுக்கு சட்டம் போடவேண்டும் என்ற என்னமோ அல்லது இருக்கும் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்ற என்னமோ ஏற்படுவதை நாம் காண்கிறோம்.
தனியார் ஒரு கல்விக்கூடத்தை நடத்த வேண்டுமெனில், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளின் படிதான் தனியார் கல்வி நிலையங்கள் இயங்குகின்றதா என்பதை கடுமையாக கண்காணித்து இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை தீயின் கோரத்திற்கு பலிகொடுத்திருக்கமாட்டோம்.
அதுபோல் இரு தினங்களுக்கு முன் வேதாரண்யம் அருகே கத்திபுலம் என்ற இடத்தில் பள்ளி சிறார்களையும் ஆசிரியைகளையும் ஏற்றிவந்த தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் குளத்திற்குள் கவிழ்ந்து ஒரு ஆசிரியை உட்பட ஒன்பது குழந்தைகள் இறந்த சோகமான செய்தியை நாமெல்லாம் அறிவோம். அதே நாளில் வேறு ஒரு இடத்தில் ஒரு பள்ளி வேன் மரத்தின் மீது மோதி, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்த செய்திகளும் நாளிதழ்களில் வந்தன.இப்போதெல்லாம் குழந்தைகளை பள்ளி வேனில் அனுப்பும்போது குழந்தைகள் அழுவதில்லை. மாறாக அந்த குழந்தைக்கு ‘டாட்டா‘ காட்டும் தாய் அழுகிறாள். காரணம்; நம் செல்ல பிஞ்சு பள்ளிக்கு செல்கிறது; அங்கு பள்ளியில் எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ, அல்லது போகும் வழியில் வரும்வழியில் ஏதாவது நடந்துவிடுமோ என்பதால்தான்.
இன்றைய அரசு பள்ளிகளை எடுத்துக் கொன்டால், பெரும்பாலான பள்ளிக் கட்டிடங்கள் நான் இப்போ விழட்டுமா; பிறகு விழட்டுமா என்ற ரீதியில் பயம் காட்டுகின்ற வகையில் உள்ளன. கட்டிடங்கள் நன்றாக இருந்தால் அங்கே போதுமான ஆசிரியர்கள் இருப்பதில்லை. அதுவும் சரியாக இருந்தால் பசி போக்கும் சத்துணவு பல நேரங்களில் பல்லி நீந்தும் குளமாக மாறி, பிள்ளைகளுக்கு வயிற்று போக்கு வாந்தி பேதி போன்றவருக்கு காரணமாக அமைகிறது. இதையும் தாண்டி ஒரு அதீத நம்பிக்கையில்தான் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் அறிவை பெற்று வருகின்றன.
தனியார் பள்ளிகளை எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் புற்றீசல்கள் போல் ஏராளமாக உள்ளன. இந்த தனியார் பள்ளிகளுக்கு அரசின் அனுமதி கொடுக்கப்படுவதற்கு முன்பாக ஒரு பள்ளியில் இருக்கவேண்டிய அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா என்ற ஆய்வுக்கு பின்னர்தான் அனுமதி சான்றுகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், சிலர் புறவாசல் வழியாகவும் சான்றிதழ் வாங்கியும், வாங்காமலும் பள்ளிகள் நடத்தி வருவதை நாம் செய்திகளில் காண்கிறோம்.
அவ்வளவு ஏன் மேற்கண்ட வேன் விபத்திற்கு காரணமான பள்ளியின் அனுமதி கடந்த ஜூன் மாதமே நிறைவடைந்து விட்டதாம். அதற்கு பின்னால் அனுமதியின்றியே நடத்தி வந்துள்ளது பள்ளி நிர்வாகம். இந்த வேன் விபத்திற்கு பின்னர் அந்த பள்ளி கலெக்டரால் மூடப்பட்டுள்ளது. இந்த விபத்து நடக்கவில்லையானால் இந்த பள்ளி எந்த அதிகாரியின் கண்ணுக்கும் தெரிந்திருக்காது. வழக்கம்போல் இயங்கி கொண்டிருக்கும்.
படிக்கும் பிள்ளைகளின் உயிருக்கு உத்திரவாதமும், பெற்றோருக்கு நம்பிக்கையையும் தரவேண்டியது அரசின் பொறுப்பாகும். அரசு பள்ளிகள் மட்டுமன்றி தனியார் பள்ளிகளும் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படவேண்டும். அந்த கண்காணிப்பு சம்பிரதாயமானதாக இல்லாமல் தனியார் பள்ளிகளின் அனுமதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பரிசோதிக்கப்படவேண்டும்.
இதுபோக தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை அழைத்துவரும் வேன் பயணம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. வேனில் அதிகப்படியான பிள்ளைகளை ஏற்றிவருவது, குறிப்பிட்ட நேரத்தில் பல ஊர்களில் உள்ள குழந்தைகளை கொண்டுவர வேண்டியிருப்பதால் வேன் ஓட்டுனர்கள் ‘ஜெட்‘ வேகத்தில் வேனை இயக்குவது. தாமதமாகிவிட்டதோ என்ற மன குழப்பத்தில் வேன் ஓட்டுனர்கள் வேனை இயக்குவது. வேனை இயக்குபோது செல்போனில் உரையாடிக்கொண்ட இயக்குவது இவ்வாறு பல குறைகள் விபத்திற்கு காரணமாக அமைகிறது. இதுபோக சில தனியார் பள்ளிகள் தமது சொந்த வேன் அல்லாமல் வாடகை வேன்களை இயக்குவதாகவும் மக்களிடம் ஒரு கருத்து உண்டு.
மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் காலை நேரத்தில் பார்த்தால் ஒரு ரிக்ஷா அல்லது ஆட்டோவில் மூட்டைகளைப்போல் பல குழந்தைகளை திணித்து கொண்டு செல்வதை பார்க்கிறோம். இப்படி செல்வதை பார்க்கும் எந்த காவல்துறையும் இதை கண்டுகொள்வதில்லை.
எனவே நாம் அறிந்தவரை, உயர்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என கல்விக்கென இரு அமைச்சர்கள் உள்ள நிலையில், சமச்சீர் கல்வி கொண்டுவர முனைப்புடன் ஈடுபடும் நிலையில், அதற்கு முன்பாக படிக்கவரும் பிள்ளைகளின் பாதுகாப்பு அரசால் உறுதிப்படுத்தப் படவேண்டும். அதை செய்யாமல் விபத்து நடந்த பின் சம்மந்தபட்ட பள்ளியை மூடுவதாலோ, பள்ளி நிர்வாகிகளை கைது செய்வதாலோ, இழப்பீடு வழங்குவதாலோ உதிர்ந்த மழலை மொட்டுகளின் உயிர்களுக்கு ஈடாகாது என்பதை அரசு உணர்ந்து பள்ளிகள் குறித்த சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, அதை பாரபட்சமின்றி அதிகாரிகளால் அமுல்படுத்தப் படுகிறதா என்பதையும் கண்காணிக்க முன்வரவேண்டும்.
”Jazaakallaahu khairan” முகவை எஸ்.அப்பாஸ் ”நிழல்களும்-நிஜங்களும்’