அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து, முடித்தபோது, ‘உறவு‘ எழுந்து நின்றது. ”(என்னை) துண்டித்துக் கொள்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது” என்று கூறியது. ”ஆம்! உன்னை சேர்த்துக் கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னை துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். ”திருப்திதான்” என உறவு கூறியதும், ”உனக்கு அது உண்டு” என்று அல்லாஹ் கூறினான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டு, பின்பு ”நீங்கள் விரும்பினாhல் (பின்வரும் – ”நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான்.” (அல்குர்ஆன் : 47:22,23) வசனத்தை ஓதுங்கள்” என்றும் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
அபூஅப்துர்ரஹ்மான் என்ற அப்துல்லா இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ‘அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டேன். உரிய நேரத்தில் தொழுவது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். பின்பு எது? என்று கேட்டேன். பெற்றோருக்கு நன்மை செய்தல்’ என்று கூறினார்கள். பின்பு எது? என்று கேட்டேன். ‘இறைவழியில் போர் புரிதல்’ என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) அபூஹுரைரா
ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். மேலும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தன் உறவினருடன் இணைந்து வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைச் சொல்லட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ்வின் வழியில் நீ செலவு செய்த ஒரு தீனார், அடிமையை விடுதலை செய்ய நீ செலவு செய்த ஒரு தீனார், ஏழைகளுக்கு நீ தர்மம் செய்த ஒரு தீனார், உன் குடும்பத்தாருக்கு நீ செலவு செய்த ஒரு தீனார், ஆகிய (நான்கில்) கூலி பெறுவதில் மிக மேன்மையானது, உன் குடும்பத்தாருக்கு நீ செலவு செய்ததுதான்” என நபி நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்) அபூஷுரைஹ் குஸாஈ ரலியல்லாஹு அன்ஹு
அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் பக்கத்து வீட்டாரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளட்டும், அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர் தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், நல்லதைப் பேசட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும்” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ‘‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ”இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு பக்கத்து வீட்டார் உண்டு. அவ்விருவரில் எவருக்கு நான் அன்பளிப்பு வழங்குவது?” என்று கேட்டேன். ”அவ்விருவரில் எவரின் வாசல் உமக்கு நெருக்கமாக உள்ளதோ அவருக்கு” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் கூறினார்கள்.(புகாரி)
அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”தன் தோழரிடம் சிறந்தவரே, அல்லாஹ்விடம் தோழமைக்குரியவர்களில் சிறந்தவர் ஆவார். தன் பக்கத்து வீட்டாரிடம் சிறந்தவரே, அல்லாஹ்விடம் சிறந்தவராவார்” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ)