[ ஹிந்துக்களோடு இரண்டறக்கலந்து வாழ்ந்த இந்திய முஸ்லிம்களிடமிருந்துதான் இக்கலாசாரம் முஸ்லிம்களுக்குள் தோன்றியுள்ளது. ஹிந்து முனிவர்களிடம் காணப்படும் ”ஜெபமாலை” யின் மறுவடிவமே ”தஸ்பீஹ்மணி” என்பது வெளிவராத உண்மையாகும்.
சில ஸஹாபாக்கள் கற்களினாலும் பேரீத்தங் கொட்டைகளினாலும் திக்ர் செய்ததாக தப்லீக் ஜமாஅத் சகோதரர்களின் தஃலீம் தொகுப்பு எனும் நூலில் இடம் பெற்றுள்ள தகவல் முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்டதும் பலவீனமான செய்தியுமாகும். கைவிரல்களால் திக்ர் செய்யும் நடைமுறையே நபிவழியில் ஆதாரபூர்வமானதாகும்.
கைவிரல்களினால் நாம் திக்ர் செய்தால் கரங்கள் பேசும் அந்த மறுமை நாளில் நிச்சயம் அவைகள் நமக்கு சார்பாக சாட்சி சொல்லும் என்பதை நன்றாக சிந்தித்தால் தஸ்பீஹ் மணியை நாம் கையில் எடுக்கமாட்டோம்.]
திக்ர் செய்வது என்பது ஓர் வணக்கமாகும். வணக்கங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டு. அவனால் அறிவிக்கப்படும் சட்டங்களை மனிதகுலத்திற்கு ஒளிவு, மறைவின்றி எடுத்துரைப்பதுதான் நபிகளாரின் கடமையாகும்.
முஸ்லிம்களாகிய நம்மை திக்ர் செய்யுமாறு பணித்த அல்லாஹ் தஸ்பீஹ் மணியினால் அதனைச் செய்யுமாறு அல்குர்ஆனில் எங்குமே கூறவில்லை. திக்ர் செய்வதை ஆர்வமூட்டி அதை தன்வாழ்வில் அமுல்படுத்திய அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தஸ்பீஹ் மணிகளைப் பயன்படுத்தி அல்லாஹ்வை நினைவு கூர்ந்ததாக எவ்வித ஆதாரமும் ஹதீஸ் கிரந்தங்களில் காணக் கிடைக்கவில்லை.
இன்று மக்கள் பயன்படுத்தும் தஸ்பீஹ் மணி போன்ற சாதனங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் இருக்கவில்லை. ஆனாலும் பேரீத்தங் கொட்டைகளை வைத்தாவது திக்ர் செய்திருப்பார்களா? என ஹதீஸ் நூற்களில் தேடிப்பார்த்தால், எவ்விதச் சான்றையும் அதற்கும் காணவில்லை.
அல்லாஹ்வோ, அவனது தூதரோ சம்பந்தப்படாத எந்த வணக்கமும் அல்லாஹ்வின் பார்வையில் உண்மை வணக்கமாக அங்கீகரிக்கப்படமாட்டாது. இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்கின்ற போது தஸ்பீஹ் மணியினால் திக்ர் செய்யும் நடைமுறை மிக அண்மைக் காலத்தில்தான் முஸ்லிம் சமூகத்தினுள் புகுந்தது என்பதை அறிய முடிகின்றது.ஹிந்துக்களோடு இரண்டறக்கலந்து வாழ்ந்த இந்திய முஸ்லிம்களிடமிருந்துதான் இக்கலாச்சாரம் முஸ்லிம்களுக்குள் தோன்றியுள்ளது. ஹிந்து முனிவர்களிடம் காணப்படும் ”ஜெபமாலை” யின் மறுவடிவமே ”தஸ்பீஹ்மணி” என்பது வெளிவராத உண்மையாகும்.
அல்குர்ஆன் ஸஹீஹான ஹதீத்களில் அறவே இடம் பெறாத இந்தக் காரியம் வழிகேடானதும் நரகிற்கு அழைத்துச் செல்வதுமாகும். இக்காரியத்தை எவ்வகையிலும் நாம் அங்கீகரிக்க முடியாது. தஸ்பீஹ் மணியைப் பயன்படுத்தி திக்ர் செய்வது வழிகேடானது என நாம் கூறுவதால் அல்லாஹ்வை திக்ர் செய்வதை மறுக்கின்றோம் என தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
திக்ர் செய்யுமாறு கூறிய நபிகளார் தன் வாழ்வில் பேரீத்தங் கொட்டைகளைக் கூட பயன்படுத்தாமல் விட்டுள்ளார்கள் என்பது பிற சாதனங்களைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இருந்துங்கூட தன் கைவிரல்களினாலேயே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திக்ர் செய்துள்ளார்கள் என்பதை நமக்கு துல்லியமாக விளக்குகின்றது.
மேற்படி கைவிரல்களால் திக்ர் செய்யும் நடைமுறையே நபிவழியில் ஆதாரபூர்வமானதாகும். நபிகளாரை நேசிக்கும் ஒருவர் கைவிரல்களினாலேயே திக்ர் செய்ய வேண்டுமேயன்றி தஸ்பீஹ் மணியையோ இன்ன பிற சாதனங்களையோ பயன்படுத்தக் கூடாது.
அபூஹுரைரா, இப்னு மஸ்ஊத், அபூபக்கர் (ரளியல்லாஹு அன்ஹும்) போன்ற நபித் தோழர்கள் கற்களினாலும் பேரீத்தங் கொட்டைகளினாலும் திக்ர் செய்ததாக தப்லீக் ஜமாஅத் சகோதரர்களின் தஃலீம் தொகுப்பு எனும் நூலில் இடம் பெற்றுள்ளது. மேற்படி இத்தகவல் முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்டதும் பலவீனமான செய்தியுமாகும்.
ஆதாரமற்ற இவ்வாறான போலித்தகவல்கள் முஸ்லிம்களிடம் அதி வேகமாகப் பரவியிருப்பதனாலேயே ‘தஸ்பீஹ்மணி’யினால் திக்ர் செய்யும் பிழையான, ஸுன்னாவுக்கு மாற்றமான கலாசாரம் தோன்றியது. மார்க்க விஷயத்தில் போதிய தெளிவின்மையால் ஹிந்துக் கலாசாரமான ”ஜெபமாலை” அல்லாஹ்வின் ஆலயங்களில் ஆணிகளில் தொங்கவிடப்பட்டிருக்கும் துர்ப்பாக்கியத்தைக் காணுகின்றோம்.
இந்நடைமுறை மாற்றப்பட வேண்டும். இறையச்சத்தை நினைவூட்டுகின்றது என்றும், நல்லவர்களின் அடையாளமெனவும் இந்த தஸ்பீஹ் மணி இன்று உலமாக்களால் போதிக்கப்படுவது மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். கைவிரல்களினால் நாம் திக்ர் செய்தால் கரங்கள் பேசும் அந்த மறுமை நாளில் நிச்சயம் அவைகள் நமக்கு சார்பாக சாட்சி சொல்லும் என்பதை நன்றாக சிந்தித்தால் தஸ்பீஹ் மணியை நாம் கையில் எடுக்கமாட்டோம்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.