[ மதம், சாதி முதலானவற்றை துஷ்பிரயோகம் செய்பவர்களை தண்டிப்பதற்கு கடுமையான சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும். அதன் கீழ் விரைவாக விசாரித்து தண்டனை வழங்குவதற்கு ஏற்ற வகையில் நாட்டின் நான்கு திசைகளிலும் விசாரணை ஆணையங்களை அமைத்திட வேண்டும் என்று கமிஷன் பரிந்துரைத்திருந்தது.
அனைத்து விதமான காவல் அமைப்புகளையும் கண்காணிப்பதற்கும், அவற்றை முறைப்படுத்துவதற்கும் ‘கிரிமினல் ஜஸ்டிஸ் கமிஷன்‘ ஒன்றை புதிதாக அமைக்க வேண்டும் என்று லிபரான் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
காவல் துறையினருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே இருக்கும் கூட்டணி, அதிகார வர்க்கத்துக்கும், அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் கூட்டணி ஆகிய வற்றைப் பற்றி இதற்கு முன்னால் அமைக்கப்பட்ட கமிஷன்களும் தமது பல்வேறு அறிக்கைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவற்றையெல்லாம் நடைமுறைப் படுத்தாததுதான் நாடு இந்த அளவுக்கு பாதிக்கப்படுவதற்குக் காரணம் என்று லிபரான் கமிஷன் கூறியுள்ளது.]
பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து… மத்திய அரசால் அமைக்கப்பட்ட லிபரான் கமிஷனின் அறிக்கை, இப்போது மக்களவையில் வைக்கப் பட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்பே மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுவிட்ட அந்த அறிக்கை, இப்போதுதான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுவும் பத்திரிகைகள் சில, இந்த அறிக்கையின் சில பகுதிகளை வெளியிட்ட பிறகே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இந்தியாவில் அமைக் கப்பட்ட கமிஷன்களிலேயே மிக நீண்ட காலமாக 17 ஆண்டு காலம் விசாரணை செய்து தனது அறிக்கையை அளித்திருக்கிறது லிபரான் கமிஷன்!
லிபரான் கமிஷனின் அறிக்கை… பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைந்துள்ளது. ‘பாபர் மசூதி இடிப்புக்கான காரணங்கள் என்ன? அதில் ஈடுபட்டவர்கள் யார்?’ என்று கண்டறிந்து கூறியதோடு, இனிமேலும் இப்படியரு சம்பவம் நடந்துவிடாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் லிபரான் கமிஷன் பரிந்துரைத்திருக்கிறது. இதுதான் முக்கியத்துவம் வாய்ந்தது.
‘பாபர் மசூதி இடிப்பு என்பது, உணர்ச்சிவசப்பட்ட இந்துக்கள் தன்னிச்சையாகச் செய்த காரியம்!’ என பி.ஜே.பி. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் கூறிவந்தன. ஆனால், அது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றுதான் என்பதை லிபரான் கமிஷன் தெளிவுபடுத்தியிருக்கிறது. அப்போது உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த கல்யாண்சிங்கும், அவரது அமைச்சர்களும், அன்றிருந்த அதிகார வர்க்கமும் வேண்டுமென்றே பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கான சூழலை ஏற்படுத்தினார்கள். அதனால்தான் அந்த சம்பவம் நடந்தது என்று லிபரான் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது. இந்த இடிப்புக்குக் காரணமானவர்கள் என 68 பேரை கமிஷன் குறிப்பிட்டுள்ளது. வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பி.ஜே.பி-யின் அனைத்து முன்னணித் தலைவர்களும் அந்த குற்றவாளிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இப்போது காவல் துறையும், அதிகார வர்க்கமும் மக்கள் நம்பிக்கையைப் பெருமளவில் இழந்து விட்டனர். எனவே, சீர்ப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!’ என்று கூறியுள்ள லிபரான் கமிஷன், அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்துக்குமிடையே இருக்கும் கூட்டணியை உடைத்து, பொறுப்பு வாய்ந்த காவல் துறையையும் மற்றும் அதிகார வர்க்கத்தையும் உருவாக்கிட வேண்டும் என்று கூறியுள்ளது. காவல் துறையிலிருந்தும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமிருந்தும் மதவாத சக்திகளை அடையாளம் கண்டு, களைய வேண்டும். அதிகாரிகள் பணி ஓய்வு பெற்றதற்குப் பின்னால் ஆதாயம் தரும் பதவி எதையும் வகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் போன்ற ஆலோசனைகளையும் அந்த கமிஷன் கூறியுள்ளது. லிபரான் கமிஷன் அறிக்கையோடு சேர்த்து மத்திய அரசு, தான் எடுத்த நடவடிக்கை அறிக்கையையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. கமிஷனின் பரிந்துரைகள், அதன்மீது அரசு எடுத்தநடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘ஆக்ஷன் டேக்கன் ரிப்போர்ட்’ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சிகள் பலவும் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தன. லிபரான் கமிஷன் அறிக்கையும் ஒரு சார்பாக இருக்கிறது என்று குற்றம் சாட்டின.
பி.ஜே.பி. இப்படி சொல்வதை நாம் புரிந்துகொள்ளலாம். ஏனென்றால், அதுதான் தற்போது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள கட்சி. அதே சமயம், இடதுசாரி கட்சிகளும் சில கருத்துகளைக் கூறியுள்ளவற்றை நாம் கவனிக்க வேண்டும்.
லிபரான் கமிஷன் அளித்துள்ள பரிந்துரைகளைப் பாராட்டுகிற அதே நேரத்தில் பாபர் மசூதி இடிக்கப் பட்டபோது, ஆட்சியிலிருந்த மத்திய அரசு குறித்து கமிஷன் எந்த விதமான குற்றச்சாட்டையும் சொல்லாதது அதனுடைய நடுநிலைமையை கேள்விக்குட் படுத்துகிறது என்று இடதுசாரிகள் கூறியுள்ளனர். பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு உளவு அமைப்புகளும் மத்திய அரசுக்கு அங்கிருந்த சூழலை எடுத்துக் கூறிக்கொண்டிருந்தன.
அது மட்டுமல்லாமல், தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டத்திலும் பாபர் மசூதியை பாதுகாப்பதற்காக உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இவற்றின் மீதெல்லாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அப்போது மௌனம் காத்தது மத்திய அரசு. அது தலையிட்டிருந்தால், பாபர் மசூதி இடிக்கப்படாமல் தடுத்திருக்கலாம். உண்மை இப்படியிருக்க… மத்திய அரசுக்கு இதில் ஒரு பொறுப்பும் இல்லை என்பது போல கமிஷன் கூறியிருப்பது எந்த அளவுக்கு நியாயம் எனத் தெரியவில்லை.
தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சிலுக்கு சட்டரீதியான அதிகாரத்தை வழங்க வேண்டும். அந்த கவுன்சிலில் அரசியல் கட்சியைச் சாராத மதத் தலைவர்கள், சமூகப் பணியாளர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரை சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படிச் சேர்த்துக்கொள்ளப்படும் உறுப்பினர்கள் எவரும் அரசியல் பொறுப்புகளை வகிக்கத் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட வேண்டும் என்று கமிஷன் பரிந்துரைத்திருந்தது.
ஆனால், இதை மத்திய அரசு ஏற்கவில்லை. தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் என்பது, ஆலோசனை கூறும் ஓர் அமைப்புதான். அதற்கு சட்ட அதிகாரம் வழங்கத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது. அரசியல் தலைவர்கள், பொது முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளை வகிப்பவர்கள், குறிப்பாக அமைச்சர்கள் எவரும் மதம் சார்ந்த அமைப்புகளிலோ , அறக்கட்டளைகள் முதலான நிறுவனங்களிலோ பங்கேற்கக் கூடாது என்று கமிஷன் கூறியிருக்கிறது. அந்தப் பரிந்துரையின் ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு குறிப் பிட்டுள்ளது. பொது முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகிக்கிற எவரும் அதே நேரத்தில் மத நிறுவனங்களில் பதவிகளை வகிக்கக்கூடாது என்பதை மட்டும் தாம் ஏற்றுக்கொள்வதாகவும், மற்ற அம்சங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மதம், சாதி முதலானவற்றை துஷ்பிரயோகம் செய்பவர்களை தண்டிப்பதற்கு கடுமையான சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும். அதன் கீழ் விரைவாக விசாரித்து தண்டனை வழங்குவதற்கு ஏற்ற வகையில் நாட்டின் நான்கு திசைகளிலும் விசாரணை ஆணையங்களை அமைத்திட வேண்டும் என்று கமிஷன் பரிந்துரைத்திருந்தது. இதை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள மத்திய அரசு, இதற்காகத்தான் மத வன்முறைத் தடுப்பு மசோதா தயாரிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளதாக பதிலளித்திருக்கிறது. அனைத்து விதமான காவல் அமைப்புகளையும் கண்காணிப்பதற்கும், அவற்றை முறைப்படுத்துவதற்கும் ‘கிரிமினல் ஜஸ்டிஸ் கமிஷன்’ ஒன்றை புதிதாக அமைக்க வேண்டும் என்று லிபரான் கமிஷன் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக சட்ட ஆணையத்தின் கருத்து கோரப்பட்டு, அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு பதில் அறிவித்துள்ளது.
தேர்தல் நேரத்தில் மத உணர்வுகளை பயன்படுத்துவது, வாக்காளர்களிடம் மத உணர்வுகளைத் தூண்டுவது, அரசியல் ஊர்வலம் என்ற போர்வையில் மத ஊர்வலங்களை நடத்துவது முதலிய விஷயங்கள் தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு புகார் செய்யப்பட்டால், அத்தகைய புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லிபரான் கமிஷன் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அரசியலிலிருந்து மதத்தைப் பிரிப்பதற்கான வழிவகைகள் உடனடியாகக் கண்டறியப்பட வேண்டும் என்று கமிஷன் கூறியிருந்ததை, மத்திய அரசு ஏற்றுக்கொண்டு விட்டது.
காவல் துறையினருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே இருக்கும் கூட்டணி, அதிகார வர்க்கத்துக்கும், அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் கூட்டணி ஆகிய வற்றைப் பற்றி இதற்கு முன்னால் அமைக்கப்பட்ட கமிஷன்களும் தமது பல்வேறு அறிக்கைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவற்றையெல்லாம் நடைமுறைப் படுத்தாததுதான் நாடு இந்த அளவுக்கு பாதிக்கப்படுவதற்குக் காரணம் என்று லிபரான் கமிஷன் கூறியுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, உள்துறை அமைச்சகம் இது பற்றி ஏற்கெனவே பரிசீலித்திருப்பதாகவும், பல்வேறு அறிக்கைகளிலுமிருந்து 49 பரிந்துரைகளைத் தொகுத்து எடுத்திருப்பதாகவும், அவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுப்பதோ ஒழுங்குபடுத்துவதோ செய்யப்படும் என்றும் அது கூறியுள்ளது.
மாநில எல்லைகள், நாட்டின் எல்லைகள் ஆகிய வற்றைக் கடந்த சர்வதேசத் தன்மை கொண்ட குற்றங்களை விசாரிக்கும் பணியை, சி.பி.ஐ. அல்லது அதையத்த அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கமிஷன் கூறியிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, தேசிய குற்றப்புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.) அதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
கலவரங்களைத் தடுப்பது தொடர்பாகப் பரிந்துரை களை வழங்கியிருக்கும் கமிஷன் , காவல் நிலையங்களில் தினசரி காவல் பணிகளைச் செய்யும் காவலர்களை வைத்து கலவரங்களை முழுமையானவிதத்தில் தடுத்திட முடியாது. எனவே, இதற்கென்று தனியே ஒரு காவல்படை உருவாக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு புதிய பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்படும் என அறிவிப்பு செய் துள்ளது. நீண்ட காலமாகச் செய்யப்படாமலிருக்கும் காவல் துறை சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. அது பற்றி உள்துறை அமைச்சகம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், ‘நேஷனல் போலீஸ் கமிஷனின்’ அங்கமாக அந்தப் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அரசு பதிலளித்துள்ளது. நம் நாட்டின் உளவுத் துறை குறித்தும் பல்வேறு பரிந்துரைகளை லிபரான் கமிஷன் அறிக்கை முன்வைத்துள்ளது.
மத்திய-மாநில உறவுகள் குறித்தும் இந்த அறிக்கையில் பேசப்பட்டிருக்கிறது. ஒருவர் சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ பதவி ஏற்றுக்கொண்டால் அதன் பிறகு அவர் எல்லோருக்குமான மனிதராகி விடுகிறார். எனவே, ஒருவரை கட்சியை வைத்து மதிப்பீடு செய்வது சரியல்ல என்று லிபரான் கமிஷன் கூறியுள்ளது. மத்திய – மாநில அரசு உறவுகள் குறித்து இன்றைய சூழலில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது. மத்திய-மாநில உறவுகளைப் பற்றி ஆராய தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் பூஞ்ச் கமிட்டியைப் பற்றி எடுத்துரைத்துள்ள மத்திய அரசு, அந்த கமிட்டி 2010-ம் ஆண்டுக்குள் தனது அறிக்கையை அளித்துவிடும். அதனடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கட்டடங்கள் குறித்து ஆராய்வதற்கான தகுதி நீதித் துறைக்குக் கிடையாது. அதைச் செய்ய வேண்டியவர்கள் வரலாற்று அறிஞர்கள், மானுடவியலாளர்கள் போன்றவர்கள்தான். அவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கமிஷன் குறிப்பிட்டுள்ளது.
லிபரான் கமிஷன் பத்திரிகைகள் தொடர்பாக வழங்கியுள்ள பரிந்துரைகள் மிகவும் கவனமாகப் பார்க்கப்பட வேண்டியவையாகும். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் போல் அல்லாமல் பத்திரிகையாளர் களுக்கென்று எந்தவிதத் தொழில் சார்ந்த வரையறைகளும் உருவாக்கப்படவில்லை. அது போலவே, பத்திரிகையாளர்கள் தமது தொழிலை துஷ்பிரயோகம் செய்தால், அதைக் கட்டுப்படுத்துவதற்கோ, அவர்கள் மீது சொல்லப்படும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கோ எந்தவொரு அமைப்பும் இல்லை. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா இத்தகைய நடவடிக் கைகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக விளங்கவில்லை. எனவே, மெடிக்கல் கவுன்சில், பார் கவுன்சில் போல ஊடகத் துறையில் பணியாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கென ஆணையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
நன்றி: ஜூனியர் விகடன்
Posted by: Umar Farook