யாரைப்பார்த்தாலும் விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். மருத்துவர்களிடம் போனாலும் “நல்ல விட்டமின் மாத்திரைகள் எழுதிக் கொடுங்கள்.‘ என்றே கேட்கிறார்கள். சாதாரணமாக மூன்று ரூபா முதல் முப்பது ரூபாய் வரை என இவை பலவகைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. தாராளமாக வாங்கிப் போடுகிறார்கள். தாராளமாக செலவு செய்கிறார்கள் ஆனால் செலவழிக்கும் பணத்திற்கு பலன் கிடைக்கிறதா?
இன்னொரு முறையில் சிந்தித்துப் பார்த்தால் இது ஒருவகை நாகரிக மோகம் போலாகிவிட்டதோ எனவும் தோன்றுகிறது. ஏனைய பலரையும் விட, மாதவிடாய் நின்ற பின் பெண்கள் விட்டமின்களை நாடுவது அதிகம். மாதவிடாய் நின்ற பின் மாரடைப்பு புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பு அதிகமென கருதப்படுகிறது. அதைத் தடுக்க மாத்திரைகளை நாடுகிறார்கள். இதனால் அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறதா மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறதா, புற்றுநோய் வராமல் காப்பாற்றுகிறதா?இல்லை என்கிறது Archives of Internal Medicine என்ற மருத்துவ இதழ். ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமான பெண்களை உள்ளடக்கிய ஆய்வின் முடிவு என 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி இதழ் கூறுகிறது.
ஆனால் இவற்றை உட்கொள்வதால் வேறு நோய்கள் வருகிறதா என்று கேட்டால் அதற்கும் ஆதாரம் இல்லை. அதாவது அத்தகைய விட்டமின் மாத்திரைகளால் நன்மை ஏற்படுவதாகவும் தெரியவில்லை. தீமைகள் ஏற்படுவதாகவும் தெரியவில்லை. எனவே கொடுக்கும் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என அவற்றின் பாவனையாளர்கள் தாங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஆனால் மருந்துகளை விட சாதாரணமாகக் கடைப்பிடிக்கக் கூடிய பல ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் இத்தகைய நோய்கள் வராமல் தடுக்கின்றன என்பதை மறக்கக் கூடாது.
உதாரணமாக புற்றுநோய்களையும் அழுத்தங்களையும் தடுக்க கூடிய ஒட்சிசன் (Antioxidents) எதிரிகள் காய்கறிகளிலும் பழங்களிலும் தாராளமாகக் கிடைக்கின்றன. இவை இயற்கையானவை என்பதால் உடலுக்கு தீங்கற்றவை என கருதலாம். இவற்றைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொண்டால் விட்டமின் மாத்திரைகளை நாட வேண்டியதில்லை.
அடுத்ததாக இந் நோய்களைத் தடுக்க ஒருவர் செய்ய வேண்டியது உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியாகும். உடலுக்கு வேலை கொடுக்காது சோம்பேறியாக இருந்தால் என்ன நடக்கும் ?
எடை கூடும், நீரிழிவு, பிரஸர், கொலஸ்டரோல் போன்ற நோய்கள் தேடி வரும்.
காலத்திற்கு முன்பே நோயுற்று “இறைவனடி‘ சேர நேரிடும். உடலுளைப்பற்ற வாழ்க்கை முறையானது தசைகளைப் பலவீனப்படுத்தும் எலும்புகளை தேய்வடையச் செய்யும் என்பதையும் மறக்கக் கூடாது.
பெரும்பாலான விட்டமின் மாத்திரைகள், மருந்துகளாக அன்றி மேலதிக உணவு (Supplimentary Food) என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இதனால் மருந்துகள் மீது இருப்பது போல அரசின் இறுக்கமான கட்டுப்பாடுகளோ, கண்காணிப்போ குறைவு. அத்துடன் விலைகளும் அதிகமாக இருக்கின்றன. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளிலும் விளம்பரப்படுத்தக் கூடியன. எனவே கவர்ச்சியான விளம்பரங்களாலும் ஏமாந்து வீணாகச் செலவு செய்யும் நிலைமை நிலவுகிறது.
எனவே அடுத்த தடவை நீங்கள் விட்டமின் மருந்துகளை வாங்குமுன் இரண்டு தடவை சிந்தியுங்கள். உங்கள் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள். மாத்திரைகளுக்குப் பதிலாக உணவின் மூலம் அவற்றை எடுக்க முடியுமா என மீள பரீசிலனை செய்யுங்கள். (மாதவிடாய் நின்ற பெண்கள் ஓஸ்டியோபொரோசிஸ் நோயைத் தடுப்பதற்காக மேலதிக கல்சியம் எடுப்பது வேறு விஷயம் அதை நிறுத்த வேண்டாம்.) – டாக்டர் எம்.கே. முருகானந்தன்
அதிக விட்டமின் மாத்திரைகளால் எற்படும் எதிர் விளைவுகள்
பிள்ளைகள் அதிகமாக விட்டமின் மாத்திரைகளை உண்பதால் பல எதிர் விளைவுகளை சந்திக்க நேருகிறது என்று புதிய ஆய்வு வெளியாகியுள்ளது. விற்றமின் மாத்திரைகளில் இனிப்பை சேர்த்து தயாரிப்பதால் அதிகமான பிள்ளைகள் அவற்றை விரும்பி உண்கிறார்கள். இவ்வாறு விட்டமின் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் அவை பிள்ளைகளின் உடலில் எதிர்வினையாக செயற்பட்டு நச்சுத் தன்மையை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு ஐந்து பிள்ளைகளுக்கும் ஒரு பிள்ளை என்றளவில் இந்தப் பாதிப்பு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு வருடத்தில் பல ஆயிரக்கணக்கான தொலைபேசிகள் விட்டமின் நஞ்சூட்டல்கள் குறித்து தமக்கு வருவதாகவும், அமெரிக்காவில் பல பிள்ளைகள் இத்தகைய பாதிப்பால் மடிந்துமுள்ளனர் என்றும் இந்த ஆய்வில் பங்கேற்ற டேனிஸ் வைத்தியர் கிம் டால்கொப் தெரிவித்தார்.
அளவுக்கு அதிகமாக விட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டால் உடலில் சேர முடியாத சத்துக்கள் சிறுநீராக வெளியேறிவிடும் என்ற பழைய கருத்தில் ஒரு திருத்தத்தை உண்டு பண்ணும்விதமாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.
விட்டமின் மாத்திரைகளை வாங்கும்போது இரும்புச்சத்து 8 மில்லி கிராமிற்கு குறைவாக இருக்கக் கூடிய மாத்திரைகளை வாங்கும்படியும், மாத்திரைகளை உயரமான இடத்தில் வைக்கும்படியும், ஒரு நாளைக்கு ஒரு மாத்திரையை மட்டுமே வழங்குங்கள் என்றும் பல அறிவுரை கூறும் இந்த ஆய்வு, விட்டமின் மாத்திரைகளை அளவோடு உட்கொள்வதை தவறென்று கூறவில்லை என்பதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டியதாகும்.
விட்டமின் மாத்திரைகளுக்கு மாற்றாக சக்தி வாய்ந்த உணவு மருந்துகள்
சோர்வை அகற்றும் பழம்
நான்கு பேரீச்சம் பழங்களை எடுத்து நன்கு கழுவி அரை டம்ளர் தண்ணீரில் போட்டுவிட்டு இரவில் படுக்கைக்குச் செல்லுங்கள். காலையில் கொட்டைகளை நீக்கிவிட்டு ஊறிய பேரீச்சம் பழங்களையும் அந்தத் தண்ணீரையும் அருந்துங்கள். வாரம் இரு தினங்களில் இது போல் சாப்பிட்டு வந்தால், சோம்பல் எட்டியே பார்க்காது. மாணவ மாணவிகளுக்கு இது ஒரு சுறுசுறுப்பு டானிக்!
தலைவலியை முன்கூட்டியே தடுக்க முடியும்!
நமது உடலின் லைசின் என்ற அமினோ அமிலம் குறைந்தால், தலைவலிக்கு வரவேற்புக் கொடுத்த மாதிரிதான். லைசின் குறையாமல் பாதுகாத்து வருகிறது வைட்டமின் சி. இதைத் தடுக்க தினமும் இந்த வைட்டமின் மாத்திரையை டாக்டர் யோசனைப்படி சாப்பிடலாம். இதைவிடச் சிறப்பு சி வைட்டமின் அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தால் தலைவலி வராது. அந்த உணவுகள், பட்டாணி, சோளம், உளுத்தம் பருப்பு, முருங்கைக்கீரை மற்றும் காய், முட்டைக் கோஸ், பாகற்காய், நாட்டு நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சுச்சாறு, தேங்காய், தேங்காய்ப்பால், ஆட்டு ஈரல், பால்கோவா, நல்ல பசும்பால் ஆகியவற்றில் போதுமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளது.
கருத்தரிக்க வழி!
மூலிகைக் கடைகளில் அமுக்கிரா பவுடர் (இதுதான் உண்மையில் வாயாக்ராவாக உருவெடுத்துள்ளது) கிடைக்கிறது. மாதவிலக்கு முடிந்த மறுநாளிலிருந்து தினமும் இரவில் பாலுடன் இந்தப் பவுடரில் ஆறு கிராம் பவுடரைச் சேர்த்து அருந்த வேண்டும். இதன் மூலம் கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படலாம்.
மேலும், சில பெண்களுக்கு அபார்ஷனைக் கூடத் தடுத்துவிடலாம். இதற்கு ஃபோலிக் அமிலம் தேவை. அதற்காகக் கீரை வகைகளில் ஒன்றை பச்சைப் பருப்புடன் சேர்த்துக் சமைத்து பிரசவம் முடியும் வரை, தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வரவும். இதனால் பிரசவத்தில் தொந்தரவு இராது. ஆரோக்கியமான குழந்தையாகவும் பிறக்கும். கருத்தரிப்புத் தாமதமானால் மேற்கண்ட முறைகளுடன் தினமும் கணவனும் மனைவியும் 200 சர்வதேச அலகு வைட்டமின் ஈ மாத்திரையை சாப்பிட வேண்டும்.
ஜலதோஷம் தொடரக்கூடாது!
தொடர்ந்து ஜலதோஷம், மூக்கில் சளி என்றால் தொற்று நோய்க்கிருமிகள் உங்கள் மூக்கு வழியாக உடலுக்குள் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்று பொருள். எனவே, இதைத் தடுக்க வைட்டமின் சி மட்டுமல்ல, வைட்டமின் உள்ள உணவுப் பொருள்களும் உடனடியாகத் தேவை. வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவற்றை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது நல்லது. இல்லை எனில், ஜலதோஷம் குணமாகும்வரை இந்த இரு வைட்டமின்களும் தாராளமாக உள்ள தட்டைப் பயறு, சோயா மொச்சை, வெண்ணெய், முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, ஆரஞ்சு, மாம்பழம், கேரட் முதலியவற்றை உணவில் நன்கு சேர்த்து வந்தால், ஜலதோஷம் குணமாகி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
அழகைத் தரும் கீரைகள்!
கேரட், கீரை, முள்ளங்கிக்கீரை, டர்னிப் கீரை, உலர்ந்த திராட்சைப்பழம், பப்பாளி, சீத்தாப்பழம் முதலியன உடலுக்கும் கண்களுக்கும் அழகைத் தருகின்றன. பாதாம் பருப்பும் இந்த வகையில் உயர்வானது. தோல் சுருங்காமல், கண்கள் எரிச்சல் அடையாமல் எப்போதும் புதியனவாகக் காட்சியளிக்க இவற்றில் உள்ள ரிபோஃபிளவின் என்ற வைட்டமினே இந்தப் பணியைச் செய்கிறது.
மலச்சிக்கல் தீர!
பேதி மருந்து சாப்பிடுவதற்குப் பதிலாக 1/4 கிலோ திராட்சையை (அனைத்து இரகங்களும் உகந்தவை) இரவு சாப்பிடலாம். காலைவரை வேறு உணவு வேண்டாம். மலச்சிக்கல் உள்ளவர்கள், ஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இதே அளவு திராட்சையை வாரம் இருமுறை சாப்பிடவும். இதனால் குடல் முழுவதும் சுத்தமாகும். போனஸாக இதயமும் பலப்படும்!