முஹம்மது சிராஜ்
நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கி விட்டால்…
நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும். அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனருகில் அமர்வர்.
அவர் அவனை நோக்கி, கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும்.
நனைத்த கம்பளி துணியிலிருந்து முள்ளுக் கம்பியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார். (இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கி எடுத்த உயிரை) கொஞ்ச நேரங்கூட தன் கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார்.
இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது எவனுடைய கெட்ட உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள்.
அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا
تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ
حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي
الْمُجْرِمِينَ
நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)
ஏக இறைவன், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள ”ஸிஜ்ஜீன்” (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறு உத்தர விடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் (என்ற இடத்துக்கு) எறியப்படும். பிறகு பின்வரும் ஆயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ
فَكَأَنَّمَا خَرَّ مِنْ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي
بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ
இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:31)
இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். ”கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், ”கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார். ”கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான்.
அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து அவன் பொய் சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும்.
அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும் விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும். இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய, மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.
உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவன், றைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான். (நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)
கப்ரின் விசாரணைக்கு பயந்துக்கொள்ளுங்கள்! உங்கள் மார்க்கம் எது என்பதில் உறுதியாக நில்லுங்கள்! ஆளாளுக்கு ஏதேனும் காரணம் காட்டி அல்லாஹ் உருவாக்கிய இஸ்லாம் எனும் சுவனப்பாதையை பிளவுபடுத்தி கூறு போடாதீர்கள்!
மரணித்துவிட்டால் உங்கள் ஜமாஅத் அல்லது ஜமாஅத் தலைவர் உங்களுக்கு பரிந்துரைக்க வருவாரா? கைசேதப்பட்டு நிற்காமல் இன்றே முடிவு செய்யுங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒற்றுமை முக்கியமா? உங்கள் ஜமாஅத் தலைவர்கள் கூறும் வேற்றுமை முக்கியமா?
அவ்லியாக்களை தலைவர்களாக பின்பற்றி சென்றுக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்! அது வெற்றிபெறுமா?
ஜமாஅத் தலைவர்களை பின்பற்றி சென்றுக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்! அது வெற்றிபெறுமா?
குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை பின்பற்றி சென்றுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்! அது வெற்றிபெறுமா?
உங்களுக்கு குர்ஆன், ஹதீஸ் வந்த பின்னரும் பிரிந்து கிடக்கலாமா?
அல்லாஹ் கண்காணிக்கிறான் என்பது இந்த பிரிவினை வாதிகளுக்கு தெரியவில்லையா?
மிகத் தொலைவில் இருக்கும் உங்கள் நண்பரை அழைப்பதற்கு செல்ஃபோன்–ஐ பயன்படுத்துவீர்கள் அதற்கு கூட ஒரு நிமிட நேரம் பிடிக்கும் ஆனால் உங்கள் இறைவன் அல்லாஹ் உங்கள் பிடரி நரம்பிற்கு மிக சமீபமாக இருக்கிறான் ஒரு செகண்டு கூட ஆகாது அவனை அழைத்து பிரார்த்திக்க ஆனால் நாம் இன்று அவனைஅழைத்து உள்ளத்தால் பிரார்த்திக்கிறோமா!
ஒரு வினாடி சிந்திங்கள்! நாம் ஏகத்துவத்தில் வந்துவிட்டோம் சுவனப்பாதையை அடையும் வழிகளில் களமிறங்கிவிட்டோம் ஆனால் ஷைத்தான் இங்கு ஜமாஆத் என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி நம்மை சுவனப்பாதைகளிலிருந்து விலக்கி மண்ணரைகளின் விசாரணைகளுக்கு பதில் சொல்லவிடாமல் தடுக்கப்பார்க்கிறான்! சகோதரர்களே மரணத்தை நாம் எல்லோரும் அடைவது நிச்சயம்! ஒன்றுபடுவோம் முஸ்லிம் என்று சொல்வோம், அனைத்து தரப்பு மக்களிடமும் தூய இஸ்லாத்தை பரப்பி தாஃவா புனிதமான எத்திவைக்கும் பணியை நிறைவேற்றுவோம்!
ஆயுதத்தால் பலனில்லை! ஒற்றுமையால்தான் பலனுண்டு!
மேற்கண்ட விளக்கம் எனது சொந்தக் கருத்துத்தான் இதில் தவறு கண்டால் எனக்கு தெரியப்படுத்தவும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன் ஏனெனில் ஒருமுறை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேன் அருந்தமாட்டேன் என்று தன்னிச்சையாக முடிவெடுத்து அதனை அல்லாஹ் கண்டித்தவுடன் தனது தவற்றை உணர்ந்து தவறுகளை திருத்திக் கொண்டார்கள் இநத் மனோ பக்குவத்தை எனக்கும் உங்களுக்கும் ஏக இறைவன் வழங்கி அருள்புரிவானாக.
(கொண்ட கொள்கைதான் பெரியது என நம்பி வாழும் நம் ஆலிம் பெருமக்களுக்கும் சேர்த்து துவா செய்து கொள்வோமாக! அல்லாஹ் நம் பிரிந்து நிற்கும் சமதாயத்திற்கு ஒற்றுமையை அருளி நம்மை தனது அர்ஷின் நிழலில் நிற்கச்செய்து கேள்விக்கணக்கின்றி சுவனத்தில் புகுத்துவானாக! ஆமீன்!)
நாம் முஸ்லிம்கள்! நாம் அமைதியாக இஸ்லாத்தை கடைபிடித்து எவருக்கும் எந்த மனிதனுக்கும், இந்து, முஸ்லிம். கிருத்தவ ஏன் எந்த இன, மத, மொழி பேசக்கூடியவர்களுக்கும் தீங்கிழைக்காமால் வாழுவோம் என்று சபதமேற்று சுவனப்பதையை வளமாக்கிக்கொள்வோமாக!
அன்புடன் சிராஜ்