முஸ்லிம் பெண்மணிகளும் போர்க்களமும்!
ZARINA ABDUL HAQ
”ஷஹீத்” என்ற சொல்லின் பொருள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் என்பதாகும். அதற்கு ஆயுதம் ஏந்திப் போர்செய்யும் போதுதான் கொல்லப்படல் வேண்டும் என்பதில்லை.
இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தால் முதன் முதலாக ஷஹீதாக்கப் பட்டவர் ஒரு பெண்மணிதான். அவர் பெயர் சுமைய்யா ரளியல்லாஹு அன்ஹாஎன்பதாகும்.
நவீன உலகிலும் இஸ்லாத்துக்கெதிரான சக்திகளால் முஸ்லிம் பெண்மணிகள் பலவாறு கொடுமைப் படுத்தப்பட்டும்கூட அராஜக சக்திகளுக்குத் தலைவணங்காது போராடியுள்ளனர் (மிகச் சிறந்த உதாரணம் மறைந்த ஸைனப் அல் கஸ்ஸாலி). இன்றும் போராடி வருகின்றனர். அதன்போது, அவர்கள் கொல்லப்பட்டால் அவர்களுக்கும் ஷஹீதுடைய அந்தஸ்தை வழங்குவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
எனவே, போராட்டம் என்பது ஆயுதமேந்திப் போராடுவது மட்டுமல்ல. பேனாமுனையால் கூட போராட்டம் நடத்தலாம். ஊடகத்துறையினூடாகப் பிரசார யுத்தத்திலும் பங்குபற்றலாம். அதன் மூலம் இஸ்லாத்திற்கெதிரான பொய்ப் பிரசாரங்களையும் வெற்றுப் புனைவுகளையும் முறியடித்தும் போராடலாம்.
சகோதரி இவான் ரெட்லி அவர்களைப் போல! (அன்னார் புதிதாய் இஸ்லாத்தைத் தழுவிய தலைசிறந்த ஊடகவியலாளர்களுள் ஒருவர். முஸ்லிம் பெண்கைதிகள், அவர்களுக்கெதிரான கொடுமைகள் பற்றிய உண்மைகளையெல்லாம் வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியவர்). எனவே, இஸ்லாத்திற்காய் அர்ப்பணித்து உழைக்கக்கூடிய இத்தகைய சாத்வீகப் போராட்ட களத்தில் ஒருவர் கொல்லப்பட்டாலும் அவரையும் ஷஹீத் என அடையாளப்படுத்தலாம்.
எண்ணங்களுக்கேற்பவே செயல்களும் அமையும் எனும் அண்ணலாரின் வாக்குக்கேற்ப எவரொருவர் கடுகளவு நன்மைசெய்தாலும் அதன்கூலியை அந்த அர்ஹமுர் ராஹிமீன் வீணாக்கிவிடப் போவதில்லை.
உஹத் போர்க்களத்தில்
“முஸ்லிம்களிடம் சண்டை செய்து கொண்டிருந்த இப்னு கமிஆவிடம் நபித்தோழியரான உம்மு அமாரா ரளியல்லாஹு அன்ஹாமோதினார். அவன் இவரது புஜத்தில் வெட்டியதால் இவருக்கு பெரும் காயம் ஏற்பட்டது. இவரும் அவனைப் பலமுறை வாளால் தாக்கினார்கள். ஆனால், அவன் மீது இரண்டு கவச ஆடைகள் இருந்ததால் அவன் தப்பித்துக் கொண்டான். இப்போரில் உம்மு அமாராவுக்கு 12 பலத்த காயங்கள் ஏற்பட்டன.”
மேலும் உமர் ரளியல்லாஹு அன்ஹுகூறுகிறார்கள்: ”உஹத் போரில் உம்மு ஸலீத் என்ற அன்சாரிப் பெண்ணும் தோல் துருத்தியில் தண்ணீர் நிரப்பி வந்து எங்களது தாகம் தீர்த்தார்கள்.” (ஸஹீஹுல் புகாரி)
“உம்மு அய்மன் ரளியல்லாஹு அன்ஹாஎன்ற பெண்மணியும் போர் மைதானத்திற்கு வந்தார்கள்.
முஸ்லிம்களில் சிலர் தோற்று மதீனாவுக்கு ஓடுவதைப் பார்த்த அவர், அவர்களின் முகத்தில் மண்ணை வாரி இறைத்தார்.
மேலும், அவர்களில் சிலரைப் பார்த்து ”இந்தா! ஆடை நெய்யும் ராட்டையை வாங்கிக் கொள். வாளை என்னிடம் கொடு!” என்று ரோஷ மூட்டினார்.
பின்பு, போர்க்களம் வந்து காயமடைந்தவர்களுக்குத் தண்ணீர் புகட்டினார்.
அது சமயம் ஹிப்பான் இப்னு அரக்கா| எனும் அரக்கன் ஒருவன் அப்பெண்மணியை நோக்கி அம்பெறிந்தான்…..”
பாரிஉ எனும் கோட்டையில் பெண்களும் குழந்தைகளும் ஒரே ஒரு ஸஹாபித் தோழரும் மாத்திரம் இருந்த நிலையில் உளவு பார்ப்பதற்காக வந்த இஸ்லாத்தின் எதிரியை ஒரு வீரப் பெண்மணிதான் கொன்றொழித்தார்கள்.
Sources: Tamililquran.com