மனைவி தன் கணவனுக்கு ஆடையாக…
“பெண்கள் மெல்லியர்தான்; ஆனால் பெண்மை வலியுடைத்து” என்ற தமிழ்க்கவிஞனின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையிலும் வீரப் போர் நிகழ்த்தினாளே-
கண்ணைக்கசக்கிக் கொண்டு மூலையில் முடங்கி விடாமல், தன் கணவனின் மானம் காக்கப் போராட முனைந்து நின்றாளே-
அந்த மகத்தான நிகழ்வைப் பதிவு செய்வதற்கும் அவளது முன்னுதாரணத்தை நம் வாசகப் பார்வைக்கு வைப்பதற்குமே இந்த கட்டுரை!
தாம்பத்தியப் புரிந்துணர்வின் உயிர்ப்பாக “ஒரு கணவன் மனைவிக்கு ஆடையாகவும், ஒரு மனைவி தன் கணவனுக்கு ஆடையாகவும் அமைதல் வேண்டும்” என தன் திருமறையில் இறைவன் உத்தரவிடுகிறான்.
இதில் பொதிந்துள்ள நுட்பங்கள் பற்றி பக்கம் பக்கமாக ஆய்வாளர்கள் எழுதித்தள்ளுகிறார்கள். மனிதப்பிறவிகளின் மானத்தைக் காப்பது ஆடை; உடலோடு அண்மித்து ஒட்டியிருப்பது ஆடை; விலங்குகளிலிருந்து மனிதனைப் பிறித்துக் காட்டுவது ஆடை என்று அவ்வாய்வுகள் விரிகின்றன.
சமீபத்திய நிகழ்வொன்று ஒரு முஸ்லிம் கணவனுக்கு அவனது மனைவி அல்லாஹ்வின் ஆணைப்படி ஆடையாகிப்போன அதிசயத்தின் வித்தியாசமான பரிமாணத்தை உணர்த்தியிருக்கிறது. அதனைப் பதிவு செய்வதற்கே இதனை தருகிறோம்.
கண்ணியமான ஒரு குடும்பத்தில் பிறந்து, இஸ்லாமிய நெறிகளைப் பேணி ஒழுக்கத்துடன் வளர்ந்து, படித்து டாக்டராகி, வெளிநாட்டில் கண்ணியமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு இந்திய முஸ்லிம் தனக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையைப் பார்ப்பதற்காக பாசத்துடன்- பதைபதைப்புடன் தாயகத்துக்குப் புறப்படுகிறான். அங்கே விதி சதி செய்து அவனை வீழ்த்துகிறது!
விமான நிலையத்தில் அவன் மீது ‘தீவிரவாதி’ என்ற அமிலவீச்சு நிகழ்கிறது. டாக்டர் ஹனீஃப் ஆஸ்த்ரேலியாவில் சிக்கிக்கொண்டிருந்த அப்பிரச்சினை உலகத்தையே ஒரு மாதம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது! அந்த நிரபராதிக்கு நிகழ்ந்த கொடுமை பற்றி நடுநிலை உணர்வுடைய மனித சமுதாயமே குரல் கொடுத்தது.
அவர் அத்தகைய அடக்குமுறைக்குள்ளான ஆஸ்த்ரேலியாவிலேயே மக்கள் கொதித்துப் போனார்கள்; ஊடகங்கள் கடுமையான எதிர்ப்பை காட்டின. மனித உரிமைக் குழுக்கள் போராட்டம் நடத்தின. அதற்கு இறைவன் வெற்றியளித்திருக்கிறான்; ஹனீஃப் தாயகம் திரும்பியிருக்கிறார்.
ஆனால் அதனை விரிவாகப் பதிவு செய்வதல்ல இவ்வெழுத்தாக்கத்தின் முக்கிய நோக்கம்!
குழந்தை பெற்று அதன் உடல் ரீதியான பாதிப்புக்கள் இன்னும் மாறாதநிலையில் -நாட்டுப்புற வார்த்தைகளில் சொல்வதானால், ‘பச்சை உடம்பு’ மாறாத நிலையில் , கணவனின் வருகையினை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த அந்த ஹனீஃபின் இளம் மனைவி ஃபிர்தௌஸ் அர்ஷியா என்ற முஸ்லிம் பெண்.
தன் உடல் பதற -உயிர் துடிக்க துடித்தெழுந்து தன் கணவன் நிரபராதி என்று உரத்துக் குரல் எழுப்பி, அதன் மூலம் இந்த உலகத்தின் நேர்மையாளர்களை உசுப்பிவிட்டாளே – உலுக்கிவிட்டாளே,
அந்த தீரத்தை -அந்த தாம்பத்திய நேர்மையை- இஸ்லாம் கூறும் தாம்பத்தியத் தத்துவார்த்தத்தின் வலிமையினை நிலை நிறுத்தவும் ,
“பெண்கள் மெல்லியர்தான்; ஆனால் பெண்மை வலியுடைத்து” என்ற தமிழ்க்கவிஞனின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையிலும் வீரப் போர் நிகழ்த்தினாளே-
கண்ணைக்கசக்கிக் கொண்டு மூலையில் முடங்கி விடாமல், தன் கணவனின் மானம் காக்கப் போராட முனைந்து நின்றாளே
அந்த மகத்தான நிகழ்வைப் பதிவு செய்வதற்கும் அவளது முன்னுதாரணத்தை நம் வாசகப் பார்வைக்கு வைப்பதற்குமே இந்த கட்டுரை!
உலக மீடியாக்காரர்கள் உரக்கக் கேட்டனர்.
“உங்கள் கணவர் நிரபராதி என்று எப்படிச் சொல்கிறீர்கள்? “
“அவர் என் கணவர் அய்யா ! அவர் எப்படிப்பட்டவர் என்பதை நான் நன்கு அறிவேன்; அவர் நிச்சயமாக நிரபராதி”
அவரது பதிலில் இருந்த நியாயத்தை உலகம் நிதர்சனமாகப் பார்த்தது! ஹனீஃப் 2005-ல் இங்கிலாந்தைவிட்டு ஆஸ்த்ரேலியாவுக்குப் புறப்பட்டபோது விட்டுவிட்டு வந்த ‘சிம் கார்டுதான் அது! வெளிநாட்டில், – ஏன்? எல்லா நாடுகளிலுமே ஒருவரது சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துவது சர்வ சாதாரண விஷயம்!
மேலும் கேட்டார்கள்: ” பொதுவாக முஸ்லிம் பெண்கள் இப்படி மீடியாவுக்கு முன் வர பயப்படுவார்கள்; நீங்கள் எப்படி, இப்படி தைரியமாக?”
“என் கணவருக்கு நிகழ்ந்துவிட்ட இந்த கோர விபத்திலிருந்து அவரை காப்பாற்ற என்னை விடவும் தார்மீகக் கடமையுடையவர் வேறு யார் இருக்க முடியும்? என்று நினைத்தேன்; என் சோகத்தைத்தாங்கிக்கொண்டு உடனே நியாயம் கேட்டு வெளிவந்திருக்கிறேன்” என்று சொன்னார், எளிய வார்த்தைகளில்!
ஆனால் அந்த எளிய -மென்மையான- உருக்கமான வார்த்தைகள் இடி முழக்கமாக நாட்டின் – உலகின் நியாயக் கதவுகளைத்தட்டியது! இந்தியப் பிரதமர் நேரடியாகத் தலையிடும் நியாயம் பிறந்தது. அவரது அன்புக் கணவரை அவரிடம் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்த்தது.
அவரது அந்த தைரியம் -தன் கணவர் மேல் இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை -விசுவாசம்-தாம்பத்தியப் புரிந்துணர்வு இன்று அவரது கணவருக்கு நியாயம் கிடைக்க வழியமைத்துக் கொடுத்தது!
இன்றைய உலக யதார்த்தத்தில் யாருக்கும் எதுவும் நடக்கலாம்; ஆனால் அது முடங்கிப் போவதற்கான ஒரு வழிப்பாதையல்ல; அதனை இறைநம்பிக்கையுடனும் பொறுமையுடனும் கண்ணியமாக எதிர்கொண்டால் வெற்றி கிடைக்கும் என்ற இந்நிகழ்வு பெண்களுக்கு ஒரு பாடம். குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு ஒரு சூத்திரம்.
கூர்ந்து ஆய்ந்தால், அர்ஷியா தன் குடும்பத் தலைவனைத் திரும்பப் பெற்றதற்கு மிக முக்கியக் காரணம் தன் கணவன் நிரபராதி என்று அழுத்தமான நம்பிக்கை கொண்டதுதான் என்பது புரியும்.
ஒரு வரலாற்றுச் சூத்திரம்
நமக்கு இந்த நேரத்தில் இதன் பின்னணியில் நம்பிக்கையை அடிப்படியாகக் கொண்ட ஒரு வரலாற்றுச் சூத்திரம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை! ஹீரா குகையில் நபித்துவம்(நுபுவ்வத்) அருளப்பட்டவுடன் நடுநடுங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது துணைவியார் கதீஜா(ரளியல்லாஹு அன்ஹா) அம்மையாரிடம் “நான் அல்லாஹ்வின் தூதராக்கப் பட்டிருக்கிறேன்; வானவர் ஜிப்ரீல்(அலைஹிஸ்ஸலாம்) மூலம் எனக்கு நுபுவ்வத் அளிக்கப் பட்டிருக்கிறது; கதீஜா(ரளியல்லாஹு அன்ஹா) , நீர் இதை நம்புகிறீரா? ” என்று கேட்டார்கள்!
“ஆம்; நான் உறுதியாக நம்புகிறேன்! சந்தேகமில்லாமல் நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான்” என்று அந்தப் பெண்களின் பேரரசி முழங்கினார்கள்!
அர்ஷியாவின் இன்றைய இந்த நம்பிக்கை, கதீஜா(ரளியல்லாஹு அன்ஹா) பிராட்டியாரின் அன்றைய அந்த நம்பிக்கைக்கு அடிக்கோடிடுவது போல இருக்கிறதல்லவா?
அல்லாஹ் அர்ஷியாவின் அந்த நம்பிக்கைக்கு முழுமையான வெற்றியளித்து அவர்களது வாழ்வு சிறக்கவும் – அக்குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் நிறைவும் பெருகவும் அருள் பாலிக்க வேண்டுமென்பதே நம் அனைவரது பிரார்த்தனைகளுமாகும்!
– டாக்டர் ஹிமானா செய்யத்
source: நர்கிஸ் செப்டம்பர் 2007 இதழ்