செய்த பாவத்திற்கு வாழ்நாளிலேயே பரிகாரம்!
[ அல்லாஹ் நாடினால் இன்று இஸ்லாமிய எதிரிகளாக காட்சி தருபவர்களையும் இஸ்லாத்தை நிலைநாட்டுபவர்களாக மாற்றிக் காட்டுவான் என்பதற்கு சான்றாக விளங்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தையார் மாவீரர் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை உஹது களத்தில் ஷகீதாக்கிய வஹ்ஷீ அவர்கள் வரலாறு ]
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தையார் மாவீரர் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை உஹது களத்தில் ஷகீதாக்கிய வஹ்ஷீ அவர்கள் அந்த சம்பவத்தை வர்ணிக்கிறார்கள்;
”ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு பத்ருப்போரில் (என் எஜமான் ஜுபைருடைய தந்தையின் சகோதரரான) துஐமா இப்னு அதீ இப்னி கியார் என்பாரைக் கொலை செய்தியிருந்தார். எனவே, என் எஜமான் ஜுபைர் இப்னு முத்யிம் என்னிடம், ‘என் சிறிய தந்தை(யின் கொலை)க்குப் பதிலாக ஹம்ஸாவை நீ கொன்றால் நீ (அடிமைத் தளையிலிருந்து) விடுதலையாவாய்” என்று கூறினார்.
எனவே, அய்னைன் (உஹுது) ஆண்டில் – அய்னைன் என்பது உஹுது மலைக்கரும்லுள்ள ஒரு மலையாகும். இந்த இரண்டு மலைகளுக்குடையில் ஒரு பள்ளத்தாக்கு உண்டு (குறைஷி) மக்கள் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றபோது அம்மக்களுடன் போர்(க் களம்) நோக்கி நானும் சென்றேன். மக்கள் போருக்காக அணிவகுத்து நின்றபோது சிபாஉ இப்னு அப்தில் உஸ்ஸா என்பவன் (அணியைவிட்டு) முன்னால் வந்து, ‘(என்னோடு) தனியே மோதுபவர் உண்டா?’ என்று கேட்டான்.
அவனை நோக்கி ஹம்ஸா பின்அப்தில் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹு கிளம்பி வந்து, பெண்களுக்கு விருத்தசேதனம் செய்யும் உம்மு அன்மாரின் மகனே! சிபாஉவே! நீ அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் (பகைத்துக் கொண்டு) மோத வந்திருக்கிறாயா?’ என்று கேட்டார்கள்.
பிறகு ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவன் மீது (பாய்ந்து) கடுமையாகத் தாக்கினார்கள். அவன் கழிந்து போட்டவிட்ட நேற்யை தினம் போல் (மடிந்தவனாக) ஆகி விட்டான். நான் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன்.
ஹம்ஸா அவர்கள் என்னை (க் கவனிக்காமல்) நெருங்கி வந்தபோது, என்னுடைய ஈட்டியை அவரின் மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன். அது (பாய்ந்து) அவரின் புட்டத்திற்கிடையிலிருந்து வெளியேறியது. அதுதான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷிகள் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்றபோது நானும் அவர்களுடன் திரும்பினேன்.
மக்காவிற்கு போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்று விட்டேன். தாயிஃப் வாசிகள் (இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.
அப்போது, என்னிடம், ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்கு தொல்லை தரமாட்டார்கள்: (எனவே, தூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்)” என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவினருடன் நானும் புறப்பட்டு, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து சேர்ந்தேன்.
என்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டபோது, ‘நீ வஹ்ஷி தானே?’ என்று கேட்டார்கள்.
நான், ‘ஆம்” என்று கூறினேன்.
‘நீ தானே ஹம்ஸாவைக் கொன்றாய்?’ என்று கேட்டார்கள்.
நான், ‘உங்களுக்கு எட்டியபடி விஷயம் நடந்தது உண்மைதான்” என்று கூறினேன்.
அப்போது அவர்கள், ‘(உன்னைக் காணும்போது என் பெரிய தந்தை ஹம்ஸாவின் நினைவு வரும், எனவே,) என்னைவிட்டும் உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?’ என்று கேட்டார்கள்.
உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டுவிட்டேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்துவிட்டபோது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பொய்யன் முஸைலிமா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களிடம் போரிடுவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூ பக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் படை திரட்டி அதற்கு காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்.
நான் (என் மனத்திற்குள்), ‘நிச்சயம் நான் முஸைலிமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன். அவனை நான் கொல்ல (வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொன்தற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடுசெய்யலாம்” என்று கூறிக் கொண்டேன். (அபூ பக்ர் – ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுப்பிய போர்ப்படையிலிருந்து) மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன்.
அப்போதுதான் அவனுடைய விஷயத்தில் நடந்தது நடந்து முடிந்தது. அப்(போரின்)போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்றிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன் மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) என்னுடைய ஈட்டியை எறிந்தேன். நான் அந்த ஈட்டியை அவனுடைய இரண்டு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனுடைய பின் தோள்களுக்கிடையிலிருந்து வெளியேறியது.
அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடி வந்தார். தம் வாளால் அவனுடைய உச்சந்தலை மீது ஓங்கி வெட்டிவிட்டார். (அவன்தான் முஸைலிமா) அப்துல்லாஹ் இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹு கூறினார்: (முஸைலிமா கொல்லப்பட்ட போது) ஒரு சிறுமி வீட்டின் முகட்டிலிருந்து கொண்டு, ‘அந்தோ! நம்பிக்கையாளர்களின் தலைவரை ஒரு கறுப்பு அடிமை (வஹ்ஷீ) கொலை செய்துவிட்டான்” என்று (உரக்கச் சப்தமிட்டுச்) சொன்னாள்.” [ஹதீஸ் சுருக்கம்: புகாரி எண் 4072]
வஹ்ஷீ அவர்கள் தமது அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறும் ஆசையில் மாவீரர் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை உஹதில் கொன்றதன் மூலம் மிகப்பெரிய பாவியாக இருந்த அவர், அல்லாஹ்வின் நாட்டப்படி இஸ்லாம் அவரது உள்ளத்தில் குடியேறியபின், ஒரு சிறந்த மனிதரை, ஒரு சிறந்த நல்லடியாரை கொன்ற பாவத்திற்கு பரிகாரமாக, தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று வாதிட்ட பொய்யனை கொன்று பரிகாரம் தேடிக்கொள்கிறார்கள்.
இதன் மூலம் இஸ்லாமிய வரலாற்றில் தன்னையும் இணைத்துக்கொண்டவராக திகழ்கிறார். எனவே அல்லாஹ் நாடினால் இன்று இஸ்லாமிய எதிரிகளாக காட்சி தருபவர்களையும் இஸ்லாத்தை நிலைநாட்டுபவர்களாக மாற்றிக் காட்டுவான் என்பதற்கு வஹ்ஷீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகப்பெரிய சான்றாக திகழ்கிறார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் வஹ்ஷீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை பொருந்திக்கொள்வானாக!
”Jazaakallaahu khairan” முகவை எஸ்.அப்பாஸ் ”ஸஹாபாக்களின் வாழ்வினிலே…”