மினா: உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சவூதி அரேபியாவில் உள்ள இரு புனித தலங்களான மக்கா – மதீனாவை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், ஜம்ராத்தில் கல் எறியும் பகுதியான மினாவில் உள்ள ”ஜம்ராத் பாலம்”, ஐந்தடுக்குகளாக ஹை-டெக் வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு இவ்வருட ஹஜ் கிரியைகளுக்காக தயாராகி உள்ளது.
கிட்டத்தட்ட 4.5 பில்லியன் சவூதி ரியால் பட்ஜெட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 10 நுழைவாயில்களும், 12 வெளியேறும் வாயில்களும் உள்ளதாக இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 5 அடுக்கு ஜம்ராத் பாலம், ஒரு மணி நேரத்தில், 3 லட்சம் பேர்கள் கல்லெறிய வசதியாக அமையும். கல்லெறியும் இடத்தில் ஹாஜிகளுக்கு பாதுகாவலாகவும், கூட்டத்தை ஒழுங்கு படுத்தவும், 12,000 காவல்துறையினர் தயாராக இருப்பார்கள் என்று ஹஜ் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஹஜ் கிரியையின் மிக முக்கிய அம்சமான, பிறை 9 ஆம் நாள் (அரஃபா தினம்) வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி வியாழக்கிழமை என்பதாக, சவூதி சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
சவூதியின் பல பகுதிகளில் 17.11.2009 செவ்வாய் அன்று பிறை பார்த்ததின் அடிப்படையில், சவுதியில், துல்ஹஜ் முதல் பிறை நவம்பர் 18 புதன் கிழமை என்றும், அரஃபா தினம் நவம்பர் 26 வியாழக்கிழமை என்றும், ஹஜ் பெருநாள் நவம்பர் 27 வெள்ளிகிழமை என்றும், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி அப்துர்ரஹ்மான் அல்-கெல்யா அறிவித்துள்ளார்.