நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே நேசிக்கிறான். கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ஒரு கிராமவாசி மஸ்ஜிது (நபவி)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார் அவரைத் தடுப்பதற்கு மக்கள் ஆவேசமடைந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்! அவரது சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் இலகுபடுத்தவே அனுப்பப்பட்டீர்கள். சிரமப்படுத்த அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நற்செய்தி கூறுங்கள்! வெறுப்படைய செய்யாதீர்கள், எளிதாக நடந்து கொள்ளுங்கள், சிரமப்படுத்தாதீர்கள்.’ (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஆயிஷாவே! மென்மையாக நடந்துகொள். அல்லாஹ் ஒரு குடும்பத்தினருக்கு நன்மையை நாடினால் அவர்களுக்கு மென்மையின்பால் வழிகாட்டுகிறான்.” மற்றோர் அறிவிப்பில்: “ஒரு குடும்பத்தினருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)
ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்னதுல் பஸ்ஸார்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நரகத்திற்கு ஹராமாக்கப்பட்ட ஒருவரைப் பற்றி அல்லது எவர் மீது நரகம் ஹராமாக்கப்படுமோ அவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மக்களை நெருங்கியிருக்கும் மென்மையான, இலகுவான, நளினமான ஒவ்வொருவர் மீதும் நரகம் ஹராமாக்கப்படும்.” (ஸுனனுத் திர்மிதி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் எல்லா விஷயங்களிலும் உபகாரத்தை விதித்திருக்கிறான். நீங்கள் கொலைத் தண்டனையை நிறைவேற்றினால் அழகிய முறையில் நிறைவேற்றுங்கள். பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுத்துக் கொள்ளுங்கள். உங்களில் ஒருவர் கத்தியை நன்கு தீட்டிக் கொள்ளட்டும். அதனால் பிராணிகளுக்கு (சிரமத்தை) இலேசாக்குங்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எந்த வீட்டில் ஒர் அநாதை இருந்து, அவனுடன் நல்லவிதமாக நடந்துகொள்ளப்படுகின்றதோ அந்த வீடே முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகச் சிறந்த வீடாகும். எந்த வீட்டில் ஓர் அநாதை இருந்து, அவனுடன் கோவமாக நடந்து கொள்ளப்படுகின்றதோ அந்த வீடுதான் முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகக் கெட்ட வீடாகும்.”(இப்னு மாஜா)