அல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழிகள்
குலாம் தஸ்தகீர்
அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமைபடைத்தவர் யார்? என்று நான் கேட்டேன்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்;
உன் தாய் என்றார்கள்.
அடுத்ததாக யார்? எனக் கேட்டேன்.
உன் தாய் என்றார்கள்.
அடுத்ததாக யார்? எனக் கேட்டேன்.
உன் தாய் என்றார்கள்.
அடுத்ததாக யார்? எனக் கேட்டேன். உன் தந்தை என்றார்கள்.
(அறிவிப்பவர்:அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு; புகாரி, முஸ்லிம்)
பெற்ற தாய்க்கும், உடன் பிறந்த சகோதரிகளுக்கும் பரிவு காட்ட வேண்டும்
ஒரு மனிதர் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ”அல்லாஹ்வின் தூதரே! நான் மிகப்பெரிய பாவம் செய்து விட்டேன் மன்னிப்பு உண்டா?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”உனக்குத் தாய் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் ”இல்லை” என்றார். ”உன் தாயின் சகோதரி இருக்கிறாரா?” என்று கேட்டார்கள்.அவர் ”ஆம்” என்றார். அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ”அவருக்கு உதவிகள்செய்வீராக” என்றனர். இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹு: திர்மிதீ.
முதியவயதை அடைந்த பெற்றோரை உதாசீணப்படுத்தக்கூடாது
அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! யார்?” எனக் கேட்டேன். ”முதுமையான வயதில் பெற்றோர்கள் இருவரையோ, அல்லது அவர்களில் ஒரு வரையோ அடைந்தும் சுவர்க்கம் செல்லாதவன்” என விடையளித்தார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு:முஸ்லிம், திர்மிதீ)
இஸ்லாத்தை ஏற்காத தாய்க்கும் அடைக்கலம் தரவேண்டும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் என் தாயார் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் என்னை நாடிவந்தார். என் தாய் என்னிடம் (எதிர் பார்த்து) ஆர்வத்துடன் வந்துள்ளார், அவரைச் சேர்த்துக் கொள்ளலாமா? என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன் தாயாரைச் சேர்த்துக் கொள் என்றனர்.” (அறிவிப்பவர்: அஸ்மாபின் அபீபக்கர் ரளியல்லாஹு அன்ஹு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.)
மனைவிக்கும் பரிவு காட்ட வேண்டும்
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21) ‘மக்களே! பெண்களுடன் நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகள் நிலையிலுள்ளனர். அவர்கள் உங்களிடம் தப்பாகநடந்து கொள்ளும்பொழுது மட்டும்தான் நீங்கள் அவர்களிடம் கண்டிப்புக்காட்டலாம். அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்தால், அவர்களை இம்சிக்கநீங்கள் எந்த வழியும் தேடவேண்டாம். தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீது உங்கள் மனைவியர்க்கு நியாயமான பல உரிமைகள் உண்டு-அதனைக் காப்பாற்றுங்கள்! முக்கியமாக அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும், உடையும் அளிக்கவேண்டும்.’ (ஆதாரம்-புகாரி)
ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியே.அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண்(மனைவி), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளுடையபொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புஹாரி 893)
பெண்களை சீர்திருத்த வேண்டும்
நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள், அவர்களும் தங்கள் பார்வையை கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக்கொள்ளவும் அன்றி, தங்கள் தேகத்தில் வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர.தங்கள் (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக்கொள்ளவும் தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக்கொள்ளவும். (திருக்குர்ஆன் 24:31)
பெண்களும் உயர்ந்த பண்புகளை பெற்றிருக்க வேண்டும்
பெண்களிடையே மிக உயர்ந்தவள் யார் எனக் கேட்கப்பட்டது. அவன் (கணவன்)அவளைப் பார்த்தாள் அவனை மகிழ்வுறச் செய்வாள். அவன் ஒன்றை ஏவினால் அவனுக்கு வழிப்படுவாள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயி 8686)
உறவினர்களை, இரத்த பந்தங்களை மதிக்க வேண்டும்
இந்த இரத்த பந்தம், ‘உபகாரம் செய்தல்’ என்ற நீர் ஊற்றப் படும்போது அன்பு, தூய்மையெனும் கனியை அது தருகிறது, துண்டித்து வாழ்வதால் அதுகாய்ந்து கோபத்தையும் வெறுப்பையும் வளரச் செய்கிறது. உண்மை முஸ்லிம் பிறரை நேசிப்பவரும் மற்றவர்களால் நேசிக்கத் தகுந்தவருமாவார். அவரிடம் குடிகொண்டுள்ள நற்பண்புகளின் காரணமாக அனைத்து மக்களும் அவரை மிகவும் நேசிப்பார்கள். இதனால்தான் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுக்குக் கொடுத்த ஆடையைத் தனது தாய் வழி சகோதரர் முஷ்ரிக்காக இருந்தும் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
உறவினர்களிடம் உறவை துண்டிக்கக்கூடாது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இக்கருத்தை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள். “பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக, உறவினர்கள் உறவை துண்டித்து வாழ்ந்தாலும் அவர்களுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் அவார்.” (ஹீஹுல் புகாரி)
எனெனில், “இரத்த பந்தம் என்பது அர்ஷுடன் இணைத்துக் கட்டப்பட்டதாயிருக்கும். ‘எவர் என்னைச் சேர்த்துக் கொள்கிறாரோ அல்லாஹ்அவரைச் சேர்த்துக் கொள்கிறான். எவர் என்னைத் துண்டிக்கிறாரோ அல்லாஹ் அவரைத் துண்டித்து விடுகிறான்’ என்று அது கூறுகிறது” (ஸஹீஹுல் புகாரி,ஸஹீஹ் முஸ்லிம்)
அல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழி
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்: “”அல்லாஹ்வின் தூதரே! எனக்குசில உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் இணைந்திருக்கின்றேன். அவர்கள் என்னைத் துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன், அவர்கள் எனக்கு தீங்கிழைக்கின்றனர். அவர்களுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்கிறேன், அவர்கள் என்னுடன் மூடத்தனமாக நடந்துகொள்கின்றனர்” என்று கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “நீசொல்வது போலவே நீ நடந்து கொண்டிருந்தால் அவர்களைச் சுடும் சாம்பலைசாப்பிட வைத்தவனாவாய். நீர் அதே நிலையில் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி உமக்கு நீங்காதிருக்கும்” என்றுகூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன்
நான் எனது இறைவனையே பிரார்த்திக்கின்றேன். அவனுக்கு யாரையும் இணையாக்கமாட்டேன் என (முஹம்மதே) கூறுவீராக! (அல்குர்ஆன் 72:20)
என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கின்றேன். எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் (அல்குர்ஆன் 40:60)என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில்
இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போதுபிரார்த்தனைக்குப் பதிலளிக்கின்றேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும் (அல்குர்ஆன் 2:186) சகோதர, சகோதரிகளே உறவுகளைப் பேணுவோம், உரிமைகளை கொடுப்போம் உண்ணதமான சுவனத்திற்கு செல்ல ஏகத்துவத்தை உயிர் மூச்சாக கருதி அதில் என்றென்றும் நிலையாக இருப்போமாக! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
அல்ஹம்துலில்லாஹ்!