டெஸ்ட் டியூப் வழிக் குழந்தைப் பெற்றுக்கொள்வது மருத்துவ வளர்ச்சியின் புதிய முறையாக சொல்லப்படுகிறது. இந்த முறையை இஸ்லாம் அனுமதிக்கிறதா? இதனால் சிவில் சட்ட சிக்கல்கள் உருவாகுமா?
டெஸ்ட் டியூப் என்றால் என்ன? என்பதை முதலில் விளங்குவோம்.
அ) கணவன்- மனைவி உறவின் மூலம் கருத்தரிக்கும் தன்மை இரு காரணங்களால் தடைபடுகின்றன. ஆணிடம் உள்ள நோய் போன்ற குறைபாடுகள். இயற்கையான முறையில் கருத்தரிக்க செய்ய முடியாத அளவிற்கு உயிரணுக்கள் குறைந்து போய் பலவீனப்பட்டிருத்தல்.
ஆ) பெண்ணின் கருப்பைக்கு பக்கத்தில் உள்ள கருமுட்டையுடன் காத்திருக்கும் பலோப்பியன் குழாய் இரண்டும் அடைபட்டிருப்பது.
இந்த இரு காரணங்களால் குழந்தை பாக்கியம் தடைபட்டு அல்லது தள்ளிப்போகும். இந்தக் காரணிகளை அறியாத மக்கள் கடந்த காலங்களில் சாமியார், மந்திரம், ஜோஷியம், சாபக்கேடு என்ற மன உளைச்சலுடன் காலத்தையும் பொருளாதாரத்தையும் வீணடித்துக்கொண்டிருந்தார்கள்.
மருத்துவத்துறை மலட்டுத்தன்மைக்கான காரணிகளை கண்டறிந்து மாற்றுவழி போதித்தது அதுவே டெஸ் டியூப் பேபி எனும் பரிசோதனைக் குழாய் குழந்தை. எண்பதுகளில் இந்த மருத்துவ முறை மேற்குலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் பலத்த ஆர்வத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இயற்கை விதிப்படி சட்டப்பூர்வமான கணவன் மனைவிக்கு மட்டும் பயன்பட வேண்டிய இந்த மருத்துவ முறை பல கெடுதிகளுக்கு வழி வகுத்து நிற்கிறது. பாலியல் ஒழுங்கு, வம்சாவழி உறவு, இரத்த தொடர்பு பற்றியெல்லாம் அக்கறையில்லாத மேற்குலகம் இந்த மருத்துவ முறையையும் தவறாகப் பயன்படுத்துகிறது.
இயற்கையாகக் கருத்தரிக்க முடியாதபோது ஆணுடைய உயிரணுவையும் பெண்ணுடைய சினை முட்டையையும் வெளியில் எடுத்து செயற்கையாக அதை இணைத்து கருவறைக்கு ஒத்த இடத்தில் அதை வைத்து வளர்ச்சி நிலை கண்டறியப்பட்டு பின் பெண்ணுடைய கருவறையில் வைத்து விடுவதே பிரபலமான டெஸ்ட் டிய+ப் முறையாகும்.
நான்கு முறைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன
1) மருத்துவருக்கு மட்டுமே தெரிந்த ஒருவருடைய விந்தணுவை கணவன் மனைவி சம்மதத்துடன் மனைவியின் கருமுட்டையில் சேர்த்து அவளது கருப்பையில் வைத்து விடுவது. இதில் விந்தணுவை கொடுப்பவரும் அதைப்பெறுபவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாமல் மருத்துவருக்கு மட்டுமே அறிமுகமான நிலையில் இது நடக்கிறது. ரகசியம் பாதுகாக்கும் பொறுப்பு மருத்துவருக்குண்டு. இங்கிலாந்து அமெரிக்காவில் சட்டபூர்வமாக இது அனுமதிக்கப்பட்டுள்ளது. இம்முறையில் பிறக்கும் குழந்தையை சொந்த மகனாகக் கருதாமல் வளர்ப்பு மகனாகவே அமெரிக்கா கருதுகிறது.
2) பல ஆண்களுடைய விந்தணுக்கள் வங்கிகளுக்கு தானமாகக் கொடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். குழந்தை தேவைப்படும் பெண் வங்கியை அணுகி தேவையான அணுவை தம் கருமுட்டையுடன் இணைத்து குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம். ரோமன் கத்தோலிக்கர்கள் இதை அனுமதிக்கிறார்கள்.
3) இயற்கையான உறவின் மூலம் கருத்தரிக்காதபோது கணவனின் உயிரணுவை எடுத்து அவன் மனைவியின் கருமுட்டையில் செயற்கையாகப் பொருத்தி குழந்தை பெற வைப்பது.
4) ஆணின் உயிரணுவை அவன் மனைவியல்லாத வேறொரு பெண்ணின் கருமுட்டையுடன் இணைத்து அதை வேறொரு பெண்ணின் கருப்பையில் வைத்து குழந்தையைப் பெற்றெடுப்பது.
இப்படியாக பரிசோதனைக் குழாய் வழிமுறைகள் பலதரப்படுகின்றன. இதில் பிந்திய இரு முறைகளில் மூன்றாவது நிலையை இயல்பாகவும் நான்காவது நிலையை சில நிபந்தனைகளோடும் இஸ்லாம் அனுமதிக்கிறது. முந்தைய இரு நிலைகள் முற்றாக தடுக்கப்பட்டுள்ளன.
வம்சாவழி குண நலன்கள், முறையான சந்ததித் தொடர்புகள் போன்றவற்றை தமது குழந்தைகள் மூலம் வளர்த்துக் கொள்ள மனித சமுதாயம் விரும்புகிறது. விபச்சாரம், கள்ளத் தொடர்பு போன்றவை தடுக்கப்பட்டதற்கு இதுவே முதல் காரணம். நோய் போன்ற இதர காரணங்கள் அடுத்தவைதான். டெஸ்ட் டியூபின் முந்தைய இரு நிலைகளை பயன்படுத்தும்போது குடும்ப வம்சாவழி ஒழுங்குமுறை சிதைகிறது.
ஒரு ஆணும் பெண்ணும் திருமண உறவின் மூலம் கணவன் மனைவி என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள். உலக முழுவதுமுள்ள சட்டங்கள் சந்தோஷமாக இதை வரவேற்கிறது.
இந்த அனுமதி ஏன்?
வெறும் உடல் இச்சையை தீர்ப்பதற்கு மட்டுமா? நிச்சயமாக இல்லை. உடல் பசி தீரவேண்டும் என்பதோடு அதன் மூலம் சந்ததி பெருக்கம் வேண்டும் என்பதும் நோக்கமாகும். ஒவ்வொரு ஆணும் தம் மனைவி தன் மூலம் கர்ப்பம் தரிப்பதையே விரும்புவான்- விரும்ப வேண்டும்.
எவன் மூலமாவது குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றால் திருமணம்- கணவன்- மனைவி என்ற கோட்பாடுகளே தேவையில்லாமல் போய்விடும். மனைவியை கர்ப்பம் தரிக்க வைக்கும் சக்தி கணவனிடம் குறைந்து காணப்பட்டால் அதாவது உயிரணுக்களின் எண்ணிக்கை குநை;திருந்தால் சோதனைக்குழாயின் மூன்றாவது முறையைப் பயன்படுத்தி தமது உயிரணுவைக் கொண்டு தன் மனைவியைக் கர்ப்பம் தரிக்க வைத்துவிட முடியும். கணவனிடம் சுத்தமாகவே உயிரணு இல்லையென்றால் அத்தகைய கணவனோடு சேர்ந்து வாழத்தான் வேண்டும் என்று எந்த சட்டமும் பெண்ணை நிர்ப்பந்திக்கவில்லை. எனவே சோதனைக்குழாயின் முதலிரண்டு வழிமுறைகளை அனுமதிக்க முடியாது- அனுமதிக்கக்கூடாது.
இதன் சிக்கல்கள்
முகம் தெரியாதவனின் விந்தணு கணவனின் அனுமதியுடன் மனைவியிடம் செலுத்தி குழந்தைப் பெற்றெடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். கருவை சுமந்து பெற்றதால் தாய்பாசம் இயல்பிலேயே அந்தப் பெண்ணிடம் இருக்கும். தந்தையென்ற இயல்பு அந்தக் கணவனிடம் இருக்குமா? நிச்சயமாகக் குறைந்திருக்கும் அல்லது இல்லாமலேயே போய்விடும். தந்தை-மகன் என்ற இந்தப் போலி உறவில் இடைவெளி ஏற்படும்போது தந்தையிடமிருந்து மகன் பெறும் கல்வி-பொருளாதாரத்தில் தேக்கம் எற்படும். இதனால் அந்தக் குழந்தையின் உயர் நிலைகள் பாதிக்கப்படும்
குழந்தை வளர வளர வேறொருவனுடைய வாரிசு இங்கு வளர்கிறது என்ற எண்ணம் கணவனிடம் மோலோங்க வாய்ப்புள்ளது. விந்துணுவை இணைத்த மருத்துவர் பணத்தாசையாலோ இதர காரணங்களாலோ ரகசியத்தை வெளிப்படுத்த, அதனால் பிரச்சனைகள் எழ, இவர் என் தந்தையில்லையென்று குழந்தை அறிய, யார் என் தந்தையென்று மருத்துவரை அணுக, விபரம் அறிந்த பிறகு பெற்ற தாயோடும் உண்மையான தந்தையோடும் தொடர்பை ஏற்படுத்த… தந்தை யாரென்று தெரியாவிட்டால் தந்தை பெயர் தெரியாதவன் என்ற அடைமொழியோடு வாழ்க்கை கசந்த போக இப்படி எத்துனையோ விடுவிக்க முடியாத சிக்கல்கள் முதலிரண்டு வழிமுறைகளில் உள்ளன.
தந்தையல்லாதவனை சொந்தத் தந்தையாக நினைத்து தந்தையென்று அழைப்பதை இறைத்தூதர் முஹம்மதுஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இப்படி எச்சரித்துள்ளார்கள்.
”எவனொருவன் தன் தந்தையல்லாத ஒருவரை (பெற்றெடுத்தவர் என்ற எண்ணத்தில்) தந்தையென்று அழைக்கிறாரோ அவர் இறை மறுப்பாளராகி விடுவார்.” (ஆதாரநூல்: முஸ்லிம்)
அறிவார்ந்த சட்டங்களால் நிறைந்து நிற்கும் இஸ்லாம் மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் கருத்தில் எடுத்துக்கொண்டுதான் எந்த ஒரு சட்டத்தையும் வகுக்கிறது. இஸ்லாத்தின் ஒவ்வொரு சட்டத்திலும் கால சூழ்நிலை மனித இயல்புகள் எல்லாம் பரிசீலிக்கப்படுகின்றன. இணையில்லா அறிவாளனான இறைவன் ஒருவனால் மட்டும்தான் இத்தகைய சட்ங்களை இயற்ற முடியும் என்பதை ஆழ்ந்த அறிவுள்ளோர் உணர்வர்.
பரிசோதனைக் குழாய் குழந்தையில் அனுமதிக்கப்பட்ட வழிகள்
மூன்றாவது வழிமுறை இயற்கையோடு ஒத்திருக்கும் விஷயமாகும். அதாவது கணவனுடைய விந்தணுவை மனைவின் கருமுட்டையில் செயற்கையாகச் சேர்த்து கருவறைக்கொப்ப ஒரு பாதுகாப்பான செயற்கைக் கருவறையில் வைத்து மூன்று நாட்களுக்கு கருவுற்ற முட்டையின் தன்மைகளைப் பரிசோதித்து விந்தணுவும் கருமுட்டையும் பொருந்திக் கொண்டது என்று உறுதியானவுடன் அதை மனைவியின் கர்ப்பப்பையில் சேர்த்து குழந்தை பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது. இந்த டெஸ்ட் டியூப் செயற்கைக் கருத்தரிப்பு முறை மிகவும் அக்கரையுள்ள மருத்துவர்களால் பலமுறை முயற்சித்தால் ஏதோ ஒருமுறை பலனளிக்கும். இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டும். இந்த வழிமுறையில் எவ்வித சட்ட சிக்கலும் இல்லையென்பதால் இதை இஸ்லாம் அனுமதிக்கிறது.
கணவனிடம் எக்குறையுமில்லாமல் மனைவியிடம் குறையுள்ளது- அதாவது கருமுட்டை உற்பத்திக் கோளாறு அல்லது கருவை சுமக்க முடியாத அளவிற்கு பலவீனமான கர்பப்பை என்றால் இப்போது என்ன செய்வது?
கணவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியிருந்து அதில் ஒருத்திக்குக் குறைபாடு என்று வைத்துக் கொள்வோம். ஒருத்திக்கு கருமுட்டை உருவாவதில் பிரச்சனை இருக்கிறது. அதேசமயம் குழந்தை பெறும் ஆவலுடன் அவள் இருக்கிறாள் என்றால் கணவனது மற்ற மனைவியின் கருமுட்டையை அவள் சம்மதத்துடன் எடுத்து கணவனின் உயிரணுவை அதில் இணைத்து கருத்தரிக்க வைத்து குழந்தை பெற வைப்பது. இதுவும் இஸ்லாமிய சட்ட வரையறையில் அனுமதிக்கப்பட்டதாகும்.
இதில் சிற்சில கருத்து வேறுபாடுகள் தென்படுகின்றன. கருமுட்டை தானத்தின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு தந்தை இன்னார் என்று தெளிவானாலும் தாய் யார்? என்பதில் சர்ச்சையெழலாம்.
இதைத் திருக்குர்ஆன் இப்படி அணுகுகிறது
(குழந்தையைப்)… பெற்றெடுத்தவர்களே அவர்களின் தாய்கள் ஆவர் (பார்க்க 58:2)
(குழந்தையை சுமந்தத்) தாய் பலவீனத்திற்கு மேல் பலவீனப்பட்டு அவனைச் சுமந்து (ப் பெற்றாள்) (பார்க்க 31:14)
கருமுட்டை மட்டும் ஒரு பெண்ணைத் தாயாக்கி விடாது. மாறாக அவள் கர்ப்;பத்தை சுமக்க வேண்டும். அதன் பலவீனத்தை உணரவேண்டும். பெற்றெடுக்க வேண்டும். இதுதான் தாயென்ற அந்தஸ்தைக் கொடுக்குமென இறைவன் கூறுகிறான். இந்த வசனங்களோடு குறிப்பிட்ட சட்ட பிரச்சனையை அணுகும்போது கருமுட்டை தானம் கொடுப்பவள் சொந்தத் தாயாக முடியாது சுமந்து பெற்றெடுப்பவளே குழந்தையின் தாயாக முடியும் என்பதை விளங்கலாம்.
டெஸ்ட் டியூப் வழிக்குழந்தைப் பெற்றுக்கொள்ள நாடும் முஸ்லிம் தம்பதியர்கள் சில ஒழுங்கு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
1) இயற்கை உறவினால் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று உறுதியான மருத்துவ முடிவு கிடைத்த பின்னரே ஒரு முஸ்லிம் பெண் இந்த வழிமுறையை நாடவேண்டும் ஏனெனில் நிர்ப்பந்தமான காரணமின்றி அன்னிய ஆண்களிடம் தம் மறை உறுப்புகளை வெளிப்படுத்திக் காட்டுவது இஸ்லாத்தில் வன்மையாகத் தடுக்கப்பட்டுள்ளது.
2) மருத்துவரை அணுகி செயற்கைக் கருத்தரிப்பு முறை செய்யும்போது கவனக்குறைவினால் உயிரணுக்களும் கருமுட்டைகளும் இடம் மாறிவிடாமல்- மற்றவர்களின் பரிசோதனையோடு கலந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3) கருமுட்டையையம் உயிரணுவையும் பரிசோதனையில் இணைக்கும் தருணங்களில் டாக்டரின் அனுமதியுடன் கணவன் உடனிருப்பது நலம்.
4) பரிசோதனைக் குழாய்களுக்கு அடையாளமிடுதல் ஒவ்வொரு குழாயையும் தனித்தனியாக வைத்து பாதுகாத்தல் போன்ற பொறுப்புகளில் மருத்துவர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
5) முஸ்லிம் அல்லாத மருத்துவர்கள் செயற்கைக் கருவுறுதல் பரிசோதனையை செய்வது பற்றி ஆட்சேபனையில்லை. ஆனால் அந்த மருத்துவர் இஸ்லாமிய குடும்பச் சட்டங்களை விளங்கியிருப்பது நலம்.
6) டெஸ்ட் டியூப் வழிக்குழந்தை பெற விரும்பி வரும் ஆணும்- பெண்ணும் உண்மையில் கணவன் மனைவிதானா? என்று அறிவது பொறுப்புள்ள டாக்டரின் மீது கடமையாகும்.
பரிசோதனைக்குழாய் குழந்தை வழிமுறையை இத்துணை விசாலாமாக இஸ்லாம் அணுகுகிறது.
(”இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சவால்கள்” புத்தகத்தில் இருந்து)