நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழுநிலவு போன்று இருப்பார்கள்.
அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள்.
அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள், முக்குச்சளி சிந்த மாட்டார்கள். எச்சில் துப்பமாட்டார்கள். அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும்.
அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவாகளுடைய குணங்கள் (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள்.
அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது, காலை மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி. அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”என்னுடைய சமுதாயத்தில் இரண்டு பிரிவினர் நரகத்திற்கு செல்வர். அவர்களை நான் பார்த்ததில்லை.
ஒருசாரார் தங்களின் கைகளில் (அதிகாரம் எனும்) மாட்டுவால் போன்ற சாட்டையை வைத்துக்கொண்டு மக்களை அடிப்பார்கள்.
இன்னொரு சாரார் அரைகுறை ஆடை அணிந்த நிர்வாணமான பெண்கள். அவர்கள் ஆடிஆடி நடப்பார்கள். பிறரையும் அவர்களின்பால் சாய வைப்பார்கள்.
அவர்களின் தலை ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்றிருக்கும்.
இவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள்.
அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அதன் நறுமணம் இவ்வளவு தூரத்திற்கு வீசும்” (நூல்: முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”உலகத்தில் ஓர் அடியானுடைய குறையை மற்றொரு அடியான் மறைத்தால், மறுமை நாளில் அல்லாஹ் அவனை (அவனது குறையை) மறைப்பான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்).
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”என் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் வெற்றி பெறுவர். ஆனால் (பாவங்களை) பகிரங்கப்படுத்துவோரைத் தவிர. ஒருவன் இரவில் ஒரு செயலைச் செய்கிறான். அதை அல்லாஹ் மறைத்திருக்கும் நிலையில் காலையில் எழுகிறான். (பின் தன் நண்பனிடம்) இன்னாரே இன்ன, இன்ன குற்றங்களை இரவில் செய்தேன் என்று கூறுகிறான் இதுதான் (பாவத்தை) பகிரங்கப்படுத்துவதாகும். அவனது பாவத்தை அவனது இறைவன் மறைத்திருந்தான். அவனோ காலையில் அல்லாஹ் மறைத்திருந்த (பாவத்தை) பகிரங்கப்படுத்தி விட்டான்”என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டேன். (புகாரி,முஸ்லிம்)
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவர் மற்றவருக்கு அநீதி இழைக்க வேண்டாம்.அவரை ஆதரவற்றவராக விட்டு விட வேண்டாம். தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுபவனாக ஒருவன் இருந்தால், அவனது தேவையில் (உதவிட) அல்லாஹ் இருப்பான். ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை ஒருவன் நீக்கி வைத்தால், மறுமையில் பல கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை அவனை விட்டும் அல்லாஹ் நீக்கி வைப்பான். ஒரு முஸ்லிமின் குறையை மறைத்தால், மறுமை நாளில், அல்லாஹ் அவனது ஒரு குறையை மறைப்பான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)