MUST READ
கோ.தனபால்
[ உலகிலேயே முதல் முறையாக கண்டுபிடிக்கபட்டுள்ள இந்த செயற்கை சிறுநீரகத்தை விலங்குக்கு பொருத்தி மருத்துவர்கள் செய்த சோதனை முழு வெற்றி அடைந்துள்ளது.]
பெங்களூர்: சிறுநீரகங்கள் செயலிழப்பதால் பாதிக்கப்படும் நோயாளிகளின் உயிரைக் காக்க உதவும் செயற்கை சிறுநீரகத்தை கண்டுபிடித்து மருத்துவ உலகில் சாதனை படைத்துள்ளார் பெங்களூர் பொறியியல் கல்லூரி மாணவர். பெங்களூர் ஞானபாரதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் மருத்துவ மின்னணு பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ள அவரது பெயர் புதாதித்யா சட்டோபாத்யாய (24); கோல்கத்தாவைச் சேர்ந்தவர்.
உலகில் சிறுநீரக செயல் இழப்பால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான மக்களுக்கு புத்துயிர் ஊட்டியுள்ள இந்த கண்டுபிடிப்பு குறித்து புதாதித்யா அளித்த பேட்டி:
நமது உடல் இயல்பாக செயல்பட சிறுநீரகம் மிகவும் முக்கிய பங்கு வகுகிறது. உடலின் தண்ணீர், உப்பின் அளவை முறையாக பராமரிப்பது, ரத்தத்தை சுத்தப்படுத்துவது, கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது போன்ற பணிகளை 2 சிறுநீரகங்களும் செய்கின்றன. ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சரியாக செயல்படாமல் போனால் மற்றொரு சிறுநீரகம் மூலம் உயிர் வாழலாம். இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டால் நோயாளி இறக்க நேரிடும்.
சிறுநீரகங்கள் செயலிழக்கும் சமயத்தில் குறிப்பிட்ட நோயாளிக்கு “டயாலிசிஸ்’ சிகிச்சை செய்யப்படும். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டால் நோயாளியின் ஒரே ரத்த மாதிரியைக் கொண்டவர்கள் அல்லது குடும்பத்தினரின் பொருத்தமான சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை செய்து எடுத்து பொருத்துகிறார்கள். சில நோயாளிக்கு பொருத்தமான சிறுநீரகம் கிடைப்பது சிரமமாக உள்ளது. டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சையில் பல சிக்கல்களும் ஆபத்தும் உள்ளன.
நோயாளியின் வாழ்நாளும் வாழ்க்கைத் தரம் மேம்படுவதும் குறைவே. எனவே, இந்த சிக்கல்கள் இல்லாமல் நோயாளியின் உயிரைக் காக்கும் “மாற்றத்தகுந்த செயற்கை சிறுநீரகத்தை’ கண்டுபிடித்துள்ளோம். பயோகம்பேட்டபில் பாலிமர் மெட்டீரியலால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறுநீரகத்தை ஒரு சிறுநீரகமோ, 2 சிறுநீரகங்களுமோ செயலிழந்த நோயாளிக்கு பொருத்திவிட்டால் இயற்கை சிறுநீரகத்தைப் போலவே செயல்படும்.
அதிகபட்சம் 18 ஆண்டுகள் வரை வெளிப்புற பேட்டரியின் உதவியுடன் இது இயங்கும். இதைப் பொருத்திய பிறகு அடிக்கடி சிகிச்சை செய்யத் தேவையில்லை. டயாலிசிஸ் போல வலி ஏற்படாது, சிகிச்சைக்கு அதிக செலவாகாது.
நான் 9-ம் வகுப்பு படிக்கும்போது எனது உறவினர் ஒருவர் சிறுநீரகங்கள் செயலிழப்பால் இறந்தார். இதையடுத்து சிறுநீரக நோயாளியை காப்பாற்ற புதிய மருத்துவ சிகிச்சையை கண்டுபிடிக்க வேண்டுமென குறிக்கோள் வைத்து படித்தேன்.
விடா முயற்சியாலும் எங்கள் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் மார்டின் ஜெபராஜ், கோல்கத்தா மருத்துவர் அபிஜித், இந்திய அறிவியல் கழக (ஐஐஎஸ்) விஞ்ஞானி ஏ.ஜி.ராமகிருஷ்ணன், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் முகோபாத்யாய உள்ளிட்டோரின் உதவியாலும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபி.ஜே.அப்துல்கலாம் உள்ளிட்டோரின் ஊக்கத்தாலும் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த முடிந்தது.
உலகிலேயே முதல் முறையாக கண்டுபிடிக்கபட்டுள்ள இந்த செயற்கை சிறுநீரகத்தை விலங்குக்கு பொருத்தி மருத்துவர்கள் செய்த சோதனை முழு வெற்றி அடைந்துள்ளது.
அடுத்த கட்டமாக மத்திய அரசு அனுமதிபெற்று, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மனிதருக்கு பொருத்தி சோதனை செய்ய வேண்டும். இதுவும் வெற்றி பெற்றுவிட்டால் இந்த செயற்கை சிறுநீரகத்தை வர்த்தக ரீதியில் அதிகம் உற்பத்தி செய்து, சிறுநீரக செயலிழப்பு நோயால் அவதிப்பட்டு வரும் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு பொருத்தி அவர்களது உயிரைக் காப்பாற்றலாம் என்றார் அவர்.
புதாதித்யா தனது கண்டுபிடிப்பு குறித்து ஸ்வீடனில் நடந்த ஐரோப்பிய சிறுநீரக சங்க மாநாடு உள்ளிட்ட சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். பிரபல ஆக்ஸ்போர்டு என்டிடி மருத்துவ இதழிலும் அவரின் கண்டுபிடிப்பு பிரசுரமாகியுள்ளளது.
தனது கண்டுபிடிப்புக்காக சர்வதேச “பேடன்ட்’ எனப்படும் காப்புரிமை பெற்றுள்ள புதாதித்யா, 2012-ல் வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்த செயற்கை சிறுநீரகங்கள் விற்பனைக்கு வரும்; இதற்காக பல்வேறு இந்திய, வெளிநாட்டு நிறுவனத்தார் என்னை அணுகியுள்ளனர் என்றும் கூறுகிறார்.
நன்றி: தினமணி
==============
கிட்னி மாற்றச் சிகிச்சை: வேலூர் சி.எம்.சி. சாதனை!
வேலூர் கிருஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், இளைஞர் ஒருவருக்கு அவரது இரத்தப் பிரிவு அல்லாத வேறொருவரின் கிட்னி மாற்றம் வெற்றிகரமாக மேற்காள்ளப் பட்டது. இத்தகைய முறையில் மாற்றுவது இந்தியாவிலேயே இதுவே முதல் முறையாகும்.
21 வயதான அன்பரசு என்ற அந்த இளைஞருக்கு கிட்னி பழுதடைந்திருந்தது. அவரது இரத்தப் பிரிவு O பிரிவாகும். அவருக்கு அவரது தாயார் கிட்னி வழங்க முன்வந்தார். தாயாரின் இரத்தப் பிரிவு A. என்றாலும் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் நாள் இவருக்கு வெற்றிகரமாக கிட்னி மாற்றம் செய்யப் பட்டது. இருவரும் தற்போது உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை தகவல் கூறுகிறது.
இதன் மூலம் ஒரே பிரிவைச் சார்ந்த மாற்றுக் கிட்னி கிடைக்காதவர்கள் வாழ்நாள் முழுவதும் இயந்திரம் மூலம் இரத்தம் சுத்தம் செய்து கொள்வதே வழி என்ற நிலை மாறியுள்ளது.
அண்மைய காலம் வரை, ஒரே இரத்தப் பிரிவு உடையவர்களிடையே மட்டுமே கிட்னி மாற்றம் சாத்தியம் என்ற நிலை இருந்து வந்தது. அதனைத் தகர்த்து மாற்று இரத்தப் பிரிவு உள்ளவர்களின் கிட்னியையும் மாற்றிக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கு மருத்துவமனையின் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பு இருந்ததாகவும், எதிர் காலங்களில் இத்தகைய கிட்னி மாற்றங்கள் மேற்கொள்ளப் படும் என்றும் மருத்துவமனை செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.