அடையாளங்களை இழப்பது ஆபத்து!
[ ஒருவரின் விருப்பு, வெறுப்புகள், ஆர்வங்கள், ஈர்ப்புகள் ஆகியவற்றைக் கொண்டுதான் ஒருவருடைய ஆளுமை எடை போடப்படுகின்றது. அவற்றைக் கொண்டுதான் ஒருவர் அடையாளம் காணப்படுகின்றார்.]
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பிற சமூகத்தைப் பின்பற்றி நடக்கின்றவர் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராகி விடுகின்றார். நூல்: அஹ்மத், அபூதாவூத்.
பல்வேறு சமூகங்கள், இனங்கள், பண்பாடுகள், மதங்களைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து வாழும் போது ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
வேறொரு சமூகத்தைப் பார்த்து தம்முடைய தனித்தன்மையை இழக்கவும் தயாராகி விடுவது இழிவான மனோபாவமாகும்.
ஒரு சமூகத்தைப் பார்த்து அதன் மினுமினுப்பில் மயங்கி, அதில் மனதைப் பறிகொடுத்து அந்தச் சமூகத்தைப் போலவே ஆகிவிட வேண்டும் என்கிற ஆசை மனதுக்குள் அலைமோத, ஈயடிச்சான் காப்பியாக அந்தச் சமூகத்து மக்களைப் போலவே நடை, உடை, பாவணைகள், பேச்சுவழக்கு, ஆடையலங்காரங்கள், இருப்பிடங்களின் அமைப்புகள், வழிமுறைகள், செயல்படுகின்ற பாணிகள், சிந்திக்கின்ற கோணங்கள், ஒழுக்க மாண்புகள் என எல்லாவற்றையும் திருத்திக் கொண்டு சொந்த அடையாளத்தை இழந்து விடுவது முஸ்லிமுக்கு அழகல்ல.
முஸ்லிம்கள் அவ்வாறு நடத்தல் கூடாது. முஸ்லிம்கள் எந்த நிலைமையிலும் தமது தனித்தன்மையை, அடையாளத்தைக் கைவிடக் கூடாது. பிறரின் அடையாளங்களை நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறோம் எனில் அதற்கு என்ன பொருள்?
நம்மிடம் நம்முடைய மார்க்க, இஸ்லாமிய அடையாளங்களைப் பேணி அவற்றை மதித்து நடக்கின்ற பண்பு இல்லாமல் போய்விட்டது என்பதைத்தானே குறிக்கிறது.
இவ்வாறு கண்களை மூடிக் கொண்டு மாற்றாரின் வழிமுறைகளை மேற்கொள்வதற்கு என்ன பொருள்?
மாற்றாரின் நாகரிகத்தின் மீதும், அவர்களின் பண்பாட்டின் மீதும், அவர்களின் சடங்குகள், சம்பிரதாயங்களின் மீதும் நமக்கு ஈர்ப்பும், பற்றும் ஏற்பட்டு விட்டன என்பதைத்தானே குறிக்கிறது.
நம்முடைய பண்பாட்டை விட, நம்முடைய முன்னோர்கள் விட்டுச் சென்ற மாண்புகளை விட அவர்களின் பண்பாடும் மாண்புகளும் நம் மனதுக்குப் பிடித்தவையாக மாறிவிட்டதென்பதைத் தானே குறிக்கிறது.
ஒருவரின் விருப்பு, வெறுப்புகள், ஆர்வங்கள், ஈர்ப்புகள் ஆகியவற்றைக் கொண்டுதான் ஒருவருடைய ஆளுமை எடை போடப்படுகின்றது. அவற்றைக் கொண்டுதான் ஒருவர் அடையாளம் காணப்படுகின்றார்.
மாற்றாரின் அடையாளங்களையும், தனித்தன்மைகளையும் கண்களை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வதன் மூலமாக, அவற்றைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் மூலமாக ஒருவர் எதனை உணர்த்துகின்றார்?
அவர் தம்முடைய அந்த நடத்தையின் மூலமாக, விருப்பு, வெறுப்புகளைப் பொருத்தவரைதாம் மற்றாருடன் இருப்பதாகச் சொல்லாமல் சொல்கின்றார் என்றுதானே சொல்ல வேண்டும்? இது இஸ்லாமிய ஆளுமையின் மரணம் அன்றி வேறென்ன?
இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பிற சமூகங்களில் பயனுள்ள, நன்மையைத் தருகின்ற அம்சம் இருக்குமேயானால் அதனை ஏற்றுக் கொள்வதை இந்த நபிமொழி தடுக்கவில்லை. தன் சமுதாயத்தின் மதிப்பீடுகளும், தனித்தன்மைகளும், கண்ணியமும் குலைகின்ற அளவுக்கும் தனித்தன்மையே இல்லாமல் போய்விடுகின்ற அளவிற்கு மாற்றாரின் நடத்தைகளையும் நடை, உடை, பாவனைகளையும், பண்பாட்டையும், ஒழுக்க மாண்புகளையும் ஒருவர் கடை பிடிக்கத் தொடங்குகின்ற போதுதான் சீர்கேடும், சீரழிவும் ஏற்படுகின்றன.
”Jazaakallaahu khairan” சமரசம்