அல்லாஹ்வின் நினைவை அருளும் அன்பளிப்புகள்
இன்று வழங்கப்படும் அன்பளிப்பு பொருட்கள் பல்வேறு பயன்களை நல்கும் விதமாக அமைகிறது. அன்பளிப்பாக வழங்கப்படும் அலங்கார விளக்குகள் அதிசயிக்கத்தக்க வகையில் ஒளியால் கண்சிமிட்டி மகிழ்வை தருகிறது. மேலும் வாட்ச், கடிகாரம் மணிபார்க்க உதவுகிறது. மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் பல்வேறு பலன்களை வழங்கு கிறது. ஆனால் மார்க்க ரீதியான தீனுக்கு சாதகமாக ஏதாவது அன்பளிப்புகள் பரிமாற்றம் செய்யப்படுகிறதா? என்று பார்த்தால் அது மிகவும் குறைவு.
ஆனால் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக திகழும் ஸஹாபாக்கள் வாழ்வில் அன்பளிப்பு பரிமாற்றங்கள் அல்லாஹ்வை நினைவு கூறத்தக்க வகையில் அமைந்திருந்ததை வரலாற்றில் பல்வேறு இடங்களில் காண முடிகிறது. இறையச்சம் நிரம்பப் பெற்ற சாதாரண ஒரு ஏழைப் பெண்மணிக்கு ”அந்தப் பெண் இறையச்சம் உடையவளாக இருக்கிறார்” என்ற ஒரே காரணத்தால் கலீபா என்ற ஜனாதிபதி பதவியை வகிப்பவர் தன் மகனையே ”அன்பளிப்பாக” வழங்கி திருமணம் செய்து கொடுத்திருப்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.
நீதிக்கும், நேர்மைக்கும் பெயர் சொல்லும் கலீபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர் களின் ஆட்சி காலம் அது ! இரவு நேரங்களில் வலம் வந்து மக்களின் குறைகளையும் குமுறல்களையும் ஊரின் நிலைமையையும் அணிந்து அதற்கேற்றார் போல் துரித நடவடிக்கை எடுப்பது ஹள்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி முறை! வழக்கம் போல் ஒரு நாள் இரவு கலீபா ஹள்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்க்ளின் பிரியமான தோழர் ஹள்ரத் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் நகர் வலம் வருகிறார்கள்.
ஒவ்வொரு வீதியாக வந்து இறுதியாக குடிசை குடியிருப்புகள் இருக்கும் பகுதிக்கு வருகிறார்கள். அப்போது ஒரு குடிசையினுள் வயோதிகப்பெண்மணி ஒருவரும் இளம்பெண் ஒருவரும் பேசும் ஓசை குடிசை தாண்டி கலீஃபாவின் காதுகளில் விழுகிறது. வயோதிகப் பெண்மணி கூறுகிறாள். ”நாளுக்கு நாள் நமக்கு வறுமை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. எனவே இனிமேல் நாம் விற்பனை செய்யும் பாலில் தண்ணீரை கலந்து விற்றால் தான் நமக்கு கட்டுப்படியாகும்”
இதற்கு அந்த இளம் பெண் பதறியடித்தவளாக பதில் தருகிறாள் ”வேண்டாம்மா! ஒருபோதும் கலப்படம் செய்து வியாபாரம் செய்யக்கூடாது. இது நம் நாட்டின் கலீஃபா அவர்களின் உத்தரவு!” இதனைக் கேட்ட அந்த தாய் ”கலப்படம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பது எனக்குத் தெரியும்.நாம் கலப்படம் செய்வது கலீபாவுக்கோ, அல்லது அதிகாரிகளுக்கோ தெரிந்தால் தானே பிரச்சனை! நாம் இரவோடு இரவாக பாலைக் கறந்து தண்ணீரை கலந்து விடலாம்” என்று கூறுகிறார்.
உடனே அந்த இளம் பெண் ”இந்த நடுஇரவில் நாம் பாலில் தண்ணீர் கலப்பது கலீஃபாவுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் போகலாம். ஆனால் உன்னையும் என்னையும் இந்த பேருலகத்தையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு தெரியாமலா போகும் அவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறானே ! என்று பதில் பகர்கிறார்.
குடிசையில் இருந்து வந்த இந்த உரையாடலை கேட்ட வண்ணமாக அவ்விடத்தை விட்டும் அகன்ற கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் நண்பரிடம் ”வறுமையிலும் வழி தவறாமல் நேர்மையை யும் இறையச்சத்தையும் கடைபிடிக்கும் இந்த இளம்பெண்ணுக்கு என்ன பரிசளிக்கலாம்?” என்று வினவுகிறார்கள். நண்பர் ஹள்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ”நேர்மை தவறாத தக்வாவுடைய அந்தப் பெண்மணிக்கு ஆயிரம் திர்ஹம் வரை பரிசளிக்கலாம்” என்று பதில் பகர்கிறார்கள். ஹள்ரத் கலீஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ”இல்லையில்லை. அதைவிட அதிகமாக உயர்ந்த அன்பளிப்பு ஒன்றை நான் அளிக்கலாம் என எண்ணியுள்ளேன்” என்று கூறினார்கள். அப்படி என்ன உயர் அன்பளிப்பு? என புரியாமல் நண்பர் கலீபாவை பின் தொடர்ந்து வீட்டுக்கு வருகிறார்கள்.
மறுநாள் காலை கலீஃபா அவர்களின் இருப்பிடத்திற்கு அந்தப் பெண்ணும் அவளின் தாயாரும் வரவழைக்கப்படுகிறார்கள். இருவரும் கலீபா அவர்கள் ஏன் தங்களை அழைத்துள்ளார்களோ? என்று மனதில் பதறியபடி நிற்கிறார்கள். அவர்களை கலீஃபா அவர்கள் கனிவோடு அமரச் சொல்கிறார்கள். பின்பு தனக்கருகில் நின்றிருந்த தனது அருமை மகனை அழைத்து இரவில் நகர்வலம் சென்றபோது நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொல்லி ”இது போன்ற இறையச்சம் நிறைந்த ஒரு பெண் தான் உனக்கு மனைவியாக வர வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன். நீ என்ன எண்ணுகிறாய்? என வினவுகிறார்கள்.
அதற்கு கலீஃபா அவர்களின் மகனார் ”நான் இந்தப் பெண்ணை மனப்பூர்வமாக திருமணம் செய்ய விரும்புகிறேன்” எனக் கூறினார்கள். இங்கு அந்தஸ்து அழகு செல்வாக்கு என்று எந்த உலகாதய நோக்கமும் பார்க்கப்படவில்லை. அந்த ஏழைப்பெண் ”இறையச்சம் மிகுந்தவளாக இருக்கிறாள்” என்ற ஒரே மறு உலக அம்சத்தை தகுதியாக பார்த்து தன் அருமை மகனை அந்தப்பெண்ணுக்கு கணவராக ஆகும் பேறை கலீஃபா அவர்கள் அன்பளிப்பு செய்கிறார்கள். இருவருக்கும் எளிமையான வகையில் திருமணம் நடைபெறுகிறது. இதுபோன்று நாம் வழங்கும் அல்லது பெறும் அன்பளிப்புகள் மறுமைக்கு சாதகத்தை ஏற்படுத்தும் வகையில் நன்மையை நல்கும் அம்சமாக அமைவது மிகவும் பலன் தரத்தக்க விஷயமாகும்.
அழிவைத்தரும் அன்பளிப்புகள்
அன்பளிப்பு பரிமாற்றம் என்பது பரஸ்பரம் அன்பு, நட்பு, உறவு, என்ற அம்சத்தின் அடிப்படையில் அமைவது அன்பளிப்பின் மரபு. அதே வேளையில் தற்போது ”காரியம் சாதித்துக் கொள்ளும் ”லஞ்சமாக”வும் அன்பளிப்பு வழங்கப்படுகிறது. இது அன்பளிப்பின் நன்மையை சிதைத்து அழிவுப் பாதையில் தள்ளி விடும். ஹள்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது ஆழ்ந்த ஆதங்கத்தை ”தற்கால அன்பளிப்பு பரிமாற்ற” விஷயங்களில் வெளியிடுகிறார்கள். ”அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் அன்பளிப்பு அன்பளிப்பாக இருந்தது. தற்காலத்தில் அது லஞ்சமாக மாறிவிட்டது” என தனது வருத்தத்தை வெளியிடுகிறார்கள்.
ஒருவர் அன்பளிப்பு செய்துவிட்டு அதை திரும்பக் கேட்டான் என்றால் வாந்தி எடுத்து அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் (அறிவிப்பாளர் : ஹள்ரத் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி) என்று அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆக அன்பளிப்பு என்பது அன்பு, நட்பு, உறவு ஆகியவற்றை பரிமாற்றம் செய்ய இருக்க வேண்டுமே தவிர காரியம் சாதிக்க உதவும் லஞ்சமாக அமைந்து விடக்கூடாது.
எந்தப் பொருளை அன்பளிப்பு செய்யலாம்?
அன்பை பரிமாற இன்று எத்தனையோ பொருட்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுகின்றன. அன்பளிப்புப் பொருட்களில் சிலருக்கு மிகவும் மனம் கவர்ந்த பொருட்களும் இருக்கத்தான் செய்கின்றன. அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகவும் உகந்த அன்பளிப்புப் பொருள் யாது? ஹள்ரத் சுமாமா அவர்கள் கூறுகிறார்கள். ”அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எவராவது வாசனைத் திரவியத்தை அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை நிராகரிக்க மாட்டார்கள்”. (புகாரி – 2582)
இதுபோன்று தற்காலத்தில் சமுதாயத்திற்கு மிகவும் பலன் தரத்தக்க அன்பளிப்புப்பொருள் என்னவெனில் பயனுள்ள வழிகாட்டும் நெறி நூல் களை அன்பளிப்புச் செய்யலாம். அன்பை பரிமாறவும் அறவழியை வளர்க்கவும் நூல் பரிமாற்றங்கள் நிச்சயம் துணை நிற்கும். அறிஞர் ஷேக்சஅதி அவர்களின் வரலாற்றில் ஒரு சான்றை இதற்கு சாட்சியாக கூறலாம்.
குலிஸ்தான், பூஸ்தான் போன்ற புகழ் பெற்ற காவிய நூல்களைப் படைத்த ஷேக்சஅதி அவர்கள் ஒரு பயணக்குழுவுடன் சேர்ந்து பார சீகத்திலிருந்து ஈராக்கிற்கு பயணம் செய்கிறார்கள். நீண்ட தூரப் பயணம். 13 நாட்கள் கடந்து 14 நாட்கள் காலையில் இவர்களின் பயணம் தொடர்ந்து கொண்டிருந்த போது திடீரென்று கொள்ளையர் கூட்டம் ஒன்று பயணக்கூட்டத்தை சுற்றி வளைத்தது. பயணிகள் திசைக்கொருவராக சிதறி ஓடுகிறார்கள். சஅதி அவர்கள் மட்டும் துணிவோடு இருந்த இடத்தை விட்டும் அகலாமல் பயணப்பொருளோடு நிற்கிறார். உத்தரவிட்டுக் கொண்டிருந்த (?) கொள்ளையர் கூட்டத் தலைவன் ஓடாமல் நிற்கும் சஅதி அவர்களுக்கு அருகில் வருகிறான்.
சஅதி அவர்கள் அவனைப்பார்த்து தன் பயணப்பொருட்களை சுட்டிக் காட்டி ”இதோ! இந்தப் பையில் முழுவதும் புத்தகங்கள் தான் இருக் கின்றன. இவற்றை நான் மனப்பூர்வமாக உமக்கு அன்பளிப்புச் செய்கிறேன். ஆனால் என் கவலை என்னவெனில் நான் பொக்கிஷமாக கருதும் இந்த புத்தகங்களை நீ நல்ல முறையில் உபயோகப் படுத்த வேண்டும் என்பது தான்!” என்றார். அதற்கு கொள்ளையர் தலைவன கிண்டலான தொனியில் ”இதை எப்படி நான் உபயோகிப்பது? என்று வினவ! ஒரு நல்ல ஆசிரியரை நியமனம் செய்து உனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கச் சொல். அந்த ஆசிரியருக்கு சம்பளம் நான் கொடுக்கிறேன்! என்று சஅதி கூறுகிறார்.
இந்த புத்தகங்களை எனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதால் என்ன பலன்? என்று அவன் மீண்டும் கேட்க; பிறர் பொருளை அபகரிப்பதும் களவாடுவதும் எவ்வளவு கொடிய செயல்! என்றும் அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு துன்பம் வேதனை அடைகிறார்கள் என்பது உனது குழந்தைகளுக்காவது தெரிய வேண்டாமா? என்று சஅதி சொன்னவுடன் சாட்டையடி பட்டவனாக கொள்ளையத் தலைவன் உணர்கிறான். மனதில் ஏதோ ரசாயண மாற்றங்கள் ஏற்படுவதைப் போன்று உணர்கிறான்.
உடனே ஷேக் சஅதி அவர்களின் கரங்களைப்பற்றி தம் அதரங்களில் ஒற்றிக் கொண்ட அவன் ”பெரியவரே! என் கண்களையும் என் மனதை யும் திறந்து விட்டீர்கள். இத்தனை நாள் தவறான பாதையில் சென்று கொண்டிருந்த என்னை எவரும் ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் என்னைக் கண்டு பயந்து ஓடினார்கள். ஆனால் நீங்கள் துணிச்சலான முறையில் என் முன் நின்றதோடு மட்டுமல்லாமல் எனக்கு அறிவுரை கூறி விட்டீர்கள். இனிமேல் நான் எந்த காரணம் கொண்டு இந்த தவறான தொழிலின் பக்கம் செல்ல மாட்டேன். இனிமேல் நானும் எனது கூட்டத் தினரும் உழைத்து பாடுபட்டு எங்கள் வாழ்க்கையை கழிப்போம்” என நெகிழ்வோடு கூறிய அவன் சஅதி அவர்களிடம் ”பெரியவரே! தயவு கூர்ந்து நீங்கள் கொண்டு வந்த புத்தகங்களை எனக்கு கொடுத்தீர்கள் என்றால் நான் திருந்தி வாழவும் அறவழியில் செல்லவும் எனக்கு அது பயன்படும்” என்று வேண்டுகோள் விடுக்க ஷேக் சஅதி அவர்கள் மிகவும் மகிழ்ந்து அந்தப் புத்தகப்பை அனைத்தையும் அவனுக்கு அன்பளிப்புச் செய்து அவன் நேர்வழி நடப்பதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து அனுப்பி வைக்கிறார்கள்.
நன்றி : குர்ஆனின் குரல் ( மே 2009 )