மவ்லவீ, டி.எம். முஜிபுர் ரஹ்மான் சிராஜி, திருப்பூர்
அன்பு பரிமாற்றம்
மனிதர்களுக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பு, நேசம், நட்பு ஆகியன நீடித்து நிலை பெறுவதற்குரிய காரணிகளை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் வாழ்வின் மூலம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவைகளில் ஒன்று அன்பளிப்புகளை பரஸ்பரம் வழங்கிக் கொள்வது.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள். ”அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். மேலும் அதற்கு பதிலாக (அதே சமயம் அல்லது வேறொரு சமயத்தில்) தாமும் ஏதேனும் வழங்குவார்கள்”. (நூல்: புகாரீ 2585)
அன்பளிப்பு பொருட்களை வாங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாமும் அதற்கு பிரதியாக அன்பளிப்புகளை நம்மால் இயன்றளவு செய்ய வேண்டும் என்பதை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வாழ்வில் செய்து காட்டி நமக்கு வழிகாட்டுகிறார்கள்.
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் எவர் ஒருவருக்கு அன்பளிப்பு வழங்கப் பட்டு அவரிடம் கொடுப்பதற்கு ஏதேனும் இருந்தால் அதற்கு பதிலாக தனக்கு அன்பளிப்பு செய்தவருக்கு அன்பளிப்பாக கொடுக்கவும். எதுவு மில்லையென்றால் (நன்றி கூறும் வகையில்) கொடுத்தவரை புகழட்டும். ஏனெனில் யார் புகழ்ந்தாரோ அவர் நிச்சயமாக நன்றி செலுத்தி விட்டார். யார் (புகழவில்லையோ மாறாக உபகாரத்தை) மறைத்தாரோ அவர் நன்றி மறந்தவராவார். – அறிவிப்பாளர் : ஹள்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு (நூல்: அபூதாவூது – 4813)
இந்த நபிமொழி மூலமாக அன்பளிப்புக்கு பிரதி உபகாரமாக நாமும் ஏதாவது ஒரு வகையில் அன்பளிப்பு வழங்கியவருக்கு நன்றி செலுத்த வேண்டும். அது தான் அன்பு நீடிக்க காரணமாகும் என்பதை அறிகிறோம்.
அன்பளிப்பில் அளவு பார்க்க வேண்டாம்
நம் வாழ்வில் பல்வேறு வைபவங்களில் விசேஷங்களில் அன்பளிப்பு செய்கிறோம். அல்லது அன்பளிப்பு பெறுகிறோம். அன்பளிப்பு செய்வதிலும் பெறுவதிலும் மனிதர்களுக்கு மனிதர் ஒருவருக்கோர் வித்தியாசப்படலாம். வசதியானவர்கள் உயர்வான அன்பளிப்பு பொருளை பரிமாற்றம் செய்து கொள்வர். ஏழ்மையானவர் அவரின் சக்திக்கு தக்கவாறு அன்பளிப்புகளை பரிமாற்றம் செய்து கொள்வர். ஏழையோ, பணக்காரரோ உயர்ந்த அன்பளிப்பு பொருளோ சிறிய அன்பளிப்பு பொருளோ இதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. எல்லாவற்றையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தான் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த வழிமுறையாகும்.
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். ”ஒரு ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாக பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாக தரப்பட்டாலும் சரி. அதைப் பெற்றுக் கொள்வேன்” என்று கூறிய அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”முஸ்லிம் பெண்களே ! ஓர் அண்டை வீட்டுக்காரி மற்றொரு அண்டை வீட்டுக்காரிக்கு ஒரு ஆட்டின் குளம்பை அன்பளிப்பாக கொடுத்தாலும் அதைக் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள் இழிவாக கருத வேண்டாம்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூஹூரைராரளியல்லாஹு அன்ஹு நூல்: புகாரீ 2566 -2568
ஒரு சுவையான வரலாறு
அன்பளிப்பு செய்பவரின் அன்பைத்தான் காண வேண்டுமே தவிர அவரின் அந்தஸ்தையோ அன்பளிப்பு பொருளின் தரத்தையோ பார்க்க கூடாது. அண்ணலாரின் வரலாற்றில் அன்பளிப்பு செய்ய வந்த ஒரு ஏழைப்பெண்மணியிடம் அன்னார் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது அன்பளிப்பு பெறுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.
மதீனா நகரில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பலர் அன்பளிப்பு கொடுத்து அதன் மூலம் மனம் நிறைவடைவார்கள். சிலர் தின்பண்டத்தை சிலர் பழங்களை என்று அவரவர்களுக்கு பிடித்தமான பொருளை மனமுவந்து அண்ணலார் ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கு வார்கள். ஒரு நாள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்கள் சூழ மஸ்ஜிதில் அமர்ந்திருந்த நேரத்தில் வயதான பெண்மணி ஒருவர் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு திராட்சை பழக்கொத்து ஒன்றை கொண்டு வந்து அன்பளிப்பாக வழங்கி அதை புசிக்குமாறு வேண்டி பணிவுடன் நின்றார். தோழர்களுக்கு மத்தியில் அமர்ந்து எதை சாப்பிட நேர்ந்தாலும் அதை தோழர்கள் எல்லோருக்கும் பகிர்ந்து வழங்கி விட்டு பின்பு தான் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்பார்கள். ஆனால் இப்போது அந்தப் பெண்மணி கொடுத்த திராட்சை பழக்கொத்தில் ஒன்றை ருசித்த அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்ந்து எல்லா பழங்களையும் ஒன்று கூட விடாமல் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள். யாருக்கும் வழங்கவில்லை. பரிசளித்த அந்த பெண்மணிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நான் வழங்கிய எல்லா திராட்சையையும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாப்பிட்டதை கண்டு மனம் நிறைவடைந்து அண்ணலாரிடம் இருந்து விடை பெற்று சென்றார்கள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த தோழர்களுக்கு ஆச்சரியம் தாளவில்ல. எந்த ஒரு தின் பொருளையும் பகிர்ந்தளித்து சாப்பிடும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த தடவை தங்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட திராட்சையிலிருந்து ஒன்று கூட யாருக்கும் வழங்கவில்லையே! என்ன காரணம்? இது குறித்து அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமே சில தோழர்கள் கேட்டும் விடுகிறார்கள்.
அதற்கு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த பதில்! ”தோழர்களே ! அந்த பெண்மணி மிக அன்போடு திராட்சை குலைகளை எனக்கு வழங்கினார். அதை ருசித்த நான் அந்த பழங்கள் மிக புளிப்பாக இருப்பதை உணர்ந்தேன். அதை உங்களுக்கு யாருக்காவது கொடுத்தால் ”புளிக்கிறது” என்று கூறுவீர்கள். அல்லது முகத்தையாவது சுளிப்பீர்கள். இதனால் அந்தப் பெண்மணியின் மனம் நோகி விடும். எனவே தான் அந்தப் பெண்மணி மனம் சங்கடப்படக் கூடாது. சந்தோஷம் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் திராட்சைப் பழங்கள் முழுவதையும் அது புளிப்பாக இருந்தும் நானே சாப்பிட்டு விட்டேன். இதைக் கண்டு அந்தப் பெண்மணியும் மனநிறைவோடு சென்று விட்டார்” என்று அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அண்ணலாரின் இந்த பதில் தோழர்களை நெகிழச் செய்து விட்டது. எனவே அன்பளிப்பு பெறுபவர்கள் அன்பளிப்பு செய்பவரின் அன்பைத் தான் காண வேண்டும். அந்தஸ்தை அல்ல.
அன்பளிப்பில் ஹராம்! ஹலால்!
நம்முடைய வாழ்வில் கொடுக்கல், வாங்கல், உணவு மற்றும் எல்லா நிலைகளிலும் ஹராம் மற்றும் ஹலால் பேணி வாழ வேண்டும். அது போன்று அன்பளிப்பு பெறுகிற விஷயத்தில் ஹராம் ஹலாலை பேணிக் கொள்ள வேண்டும். இது நடக்கிற காரியமா? அன்பளிப்பு செய்பவரின் தொழிலை நாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியுமா? என்றெல்லாம் நம் மனதில் வினா எழலாம். ஆனால் நமக்கு வழி காட்டிகளாக திகழ்ந்த வலிமார்கள், ஆன்றோர்கள் அன்பளிப்பு பெறு வதில் மிகுந்த பேணுதலை கடைபிடித்துள்ளார்கள். மஹ்பூபே சுப்ஹானி ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வரலாற்றில் ஒரு சான்றை பார்ப்போம்.
மஹ்பூபே சுப்ஹானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அருளுரை (பயான்) வழங்குகிறார்கள் என்றால் அதைக் கேட்டு பண்படைய லட்சக்கணக்கில் மக்கள் திரளுவார்கள். ஒரு நாள் அவர்களின் உரையை கேட்க வந்த லட்சக்கணக்கான மக்களில் கலீபா முஸ்தன்ஜித் பில்லாஹ் அவர்களும் ஒருவராக அமர்ந்திருந்தார். நீண்ட நெடிய உரையை மஹ்பூபே சுப்ஹானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் முடித்தவுடன் அவர்களை கலீபா முஸ்தன்ஜித் பில்லாஹ் அணுகி தான் கொண்டு வந்திருந்த பத்து பைகள் நிரம்பிய பொற்காசுகளை அன்பளிப்பாக வழங்கி அதை ஏற்க வேண்டும் என பணிவுடன் வேண்டி நிற்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட மஹ்பூபே சுப்ஹானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அவை களில் இருந்து இரண்டு பைகளை எடுத்து தங்கள் கைகளால் பழத்தை பிழிவது போன்று பிழிகிறார்கள்.
அப்போது அனைவரையும் அதிர்ச்சி யடைய வைக்கும் ஒரு காட்சி நிகழ்கிறது. பிழியப்பட்ட அந்தப்பையில் இருந்து இரத்தம் பீறிட்டு வழிகிறது. கலீபா முஸ்தன்ஜித் பில்லாஹ் முதற்கொண்டு அங்கிருப்பவர்கள் எல்லாம் அதிர்ச்சியுடன் அதைப் பார்க்கிறார்கள்.
அப்போது மஹ்பூபே சுப்ஹானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள். ”என்ன பொற்காசுப் பையிலிருந்து இரத்தம் வழிகின்றது என்று பார்க்கிறீர்களா? இது என்ன தெரியுமா? உங்கள் ஆட்சியில் மக்களை கொடுமைப்படுத்தி அவர்களைப் பிழிந்து எடுத்த இரத்தமாகும். (அதாவது தவறான ஆட்சியின் மூலம் மக்களை கொடுமைப்படுத்து கிறீர்கள்) இனிமேலாவது மக்களுக்கு நேர்மையான நீதியான ஆட்சியை வழங்குங்கள்” என்று கூற, அதைக் கண்ணுற்ற கலீபா மயக்கமுற்று கீழே சாய்கிறார்கள். அப்போது அங்கிருப்பவர்களை நோக்கி மஹ்பூபே சுப்ஹானி அவர்கள் ”அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறேன். இவர் மட்டும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் சிறிய தகப்பனார் ஹள்ரத் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழித்தோன்றலாக இல்லாதிருந்தால் இவருடைய அரண்மனை வரை இந்த இரத்தத்தை பாய்ந்தோடச் செய்திருப்பேன். ஆனால் இவர் என் உயிரினும் மேலான அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவராகவல்லவா இருக்கிறார்” என்று கூறினார்கள்.
எனவே அன்பளிப்பை பெறுகிற போதும் ஹராம் ஹலாலை பேணுவது நன்மை தரும் செயலாகும். அப்படியே ஹராமான வருவாய் உள்ளவரால் அன்பளிப்பு வழங்கப்பட்டு விட்டது என்றால் அதை நாம் உபயோகம் செய்யாமல் வேறு ஏழை எவருக் காவது அதை பயன்படுத்த வழங்கி விடலாம். இதுவும் பேணுதல் மிகுந்த செயலாகும்.
(தொடரும்)