அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ‘‘ஒருவனிடம், தன் சகோதரனுக்குரிய கண்ணியத்திலோ அல்லது வேறு பொருளிலோ அநீதம் செய்து இருந்தால், இதற்காக இன்றே தீனாரும், திர்ஹமும் இல்லாத (அந்த மறுமை) நாள் வரும் முன் தன்னை தூய்மையாக்கிக் கொள்ளட்டும்! அவனிடம் நற்செயல் இருந்தால் அவன் அநீதமிழைத்தலுக்கு ஏற்ப அவனிடம் எடுத்து, (அவனது சகோதரனிடம் கொடுக்கப்படும்). அவனிடம் நன்மைகள் இல்லை என்றால், அவனது சகோதரனிடம் தீமைகள் இருந்தால் அந்த தீமைகள் எடுக்கப்படும் – இவனிடம் அது தரப்படும்” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி)
அப்துல்லாஹ் இப்னு அம்ரூப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஒருவனின் நாவிலிருந்தும். அவனின் கையிலிருந்தும் முஸ்லிம்கள் அமைதி பெற்றுவிட்டால் அவனே (சிறந்த) முஸ்லிமாவான். அல்லாஹ் தடுத்துள்ளவைகளை விலக்கிக்கொள்பவனே ‘முஹாஜிர்’ ஆவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
அபூஉமாமா என்ற இயாஸ் இப்னு ஸஹ்லபா அல்ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ‘‘ஒரு முஸ்லிமின் உரிமையை தன் வலக்கரத்தால் ஒருவன் எடுத்தால், அவனுக்கு அல்லாஹ் நரகத்தை கட்டாயமாக்கி விட்டான். அவன் மீது சொர்க்கத்தை தடை செய்து விட்டான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! அது சாதரணமாக இருந்தாலுமா?”என்று ஒருவர் கேட்டார். ”ஒரு ‘அராக்’ மரக்குச்சியாக இருந்தாலும்தான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்”. நூல்: புகாரி,முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”உரிமைகளை அதற்குரியவர்களிடம் மறுமையில் நிறைவேற்றித் தரப்படும். எதுவரை எனில், இறுதியில் கொம்பில்லா ஆடு, கொம்புள்ள ஆட்டிடம் (அது முன்பு முட்டி இருந்தால்) பழி வாங்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்).
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்: ”நிலத்தில் ஒரு சாண் அளவுக்கு (பிறரிடம் இருந்து பறித்து) ஒருவன் அநீதம் செய்தால், (அது போன்ற) ஏழு நிலங்களை (மாலையாக மறுமையில்) அவன் (கழுத்தில்) போடப்படும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்).
அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ‘‘நிச்சயமாக அல்லாஹ் அநீதக்காரனுக்கு (தண்டனை தருவதில்) தாமதம் செய்வான். பிறகு அவனை அல்லாஹ் பிடித்தால் அவனை விடவும் மாட்டான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறி விட்டு, பின்வரும் வசனத்தை ஓதினார்கள். ”அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் – நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவும் மிகக் கடினமானதாகவும் இருக்கும்.” (அல்குர்ஆன் : 11:102) (புகாரி, முஸ்லிம்)