குத்துச்சண்டையில் உலக சாம்பியன் பட்டம் வழங்கும் சர்வதேச குத்துச்சண்டை கழகம் (International Boxing Association) 2012 ஒலிம்பிக்கில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாபுடன் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
IBA வின் செய்தித் தொடர்பாளர் இது பற்றி கூறுகையில், “இஸ்லாமிய பெண்கள் அவர்களுக்குரிய முழு ஹிஜாப் அணிய தற்ப்பொழுது எந்த தடையுமில்லை” என்று கூறினார்.
2012 ல் லண்டனில் நடக்கூடிய ஒலிம்பிக்கில் தான் பெண்கள் முதன் முறையாக ஒலிம்பிக்கின் பட்டியலின் கீழ் குத்துச்சண்டை போட்டியில் மோதுகிறார்கள்
சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு கூறியதாவது, “இந்த போட்டியில் பெண்கள் மூன்று பிரிவுகளில் மோதுவார்கள், Flyweight (48 – 51kg), Lightweight (56 – 60kg) மற்றும் Middleweight (69 – 75kg). இதில் ஒவ்வொரு பிரிவிலும் 12 வீராங்கனைகள் பங்கெடுத்துக்கொள்வார்கள்” என்று தெரிவித்தது.
இஸ்லாமிய நாடுகள் பல தங்கள் நாட்டிலிருந்து இந்த போட்டிக்கு வீராங்கனைகளை ஹிஜாபுடன் அனுப்புவது குறித்து ஆராய்ந்து வருகின்றன.இஸ்லாம் ஹிஜாபை கட்டாயமாக கடைப்பிடிக்கக்கூடிய ஒன்றாக கருதுகின்றது. மாறாக ஹிஜாப் தங்கள் மதத்தை வெளிப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்டது அல்ல.
IBA வின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கட்டாயமாக, மத தேவைகள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதன் அடிப்படையில் நாங்கள் இதனை அனுமதித்துள்ளோம்” என்று கூறினார்.
விளையாட்டில் ஹிஜாப் என்பது மேற்குலகில் சமீபகாலமாக தான் மக்களின் பார்வைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி அமெரிக்க உயர்நிலைப்பள்ளி நட்சத்திர ஓட்டக்காரர் ஹிஜாப் அணிந்ததற்காக அவருடைய பகுதியில் நடந்த போட்டியில் பங்கெடுக்க அனுமதிக்கப்பட வில்லை.
ஹிஜாப் அணிந்ததற்காக கனடா நாட்டைச்சேர்ந்த 11 வயது சிறுமி தேசிய ஜூடோ விளையாட்டு பந்தயத்திலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
2007 மார்ச்சில் சர்வதேச கால்பந்து கழகம் International Football Association Board (IFAB) கால்பந்து விளையாட்டுகளில் ஹிஜாபை தடை செய்தது.
இன்றுஆப்கானிஸ்தானில் ஹிஜாப் அணிந்து விளையாடப் போகும் மங்கையர் குழு ஒன்று 2012 ஒலிம்பிக் போட்டிக்காக தங்களை தயார் படுத்திக்கொண்டு வருகின்றது.
ஆப்கானின் தேசிய மகளிர் குத்துச்சண்டை குழுவில் மொத்தம் 25 வீராங்கனைகள் உள்ளனர். இவர்கள் 14 – 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.இவர்கள் ஆப்கானின் ஒலிம்பிக் மைதானத்தில் இந்த குத்துச்சண்டை போட்டிக்காக கடும் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
2008 ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில், அல் கசரா என்ற பஹ்ரைன் வீராங்கனை 200 மீடர் ஓட்டப்பந்தயத்தில் ஹிஜாப் அணித்து பங்கெடுத்து வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.