ஏ.வி.எம். ஜாஃபர்தீன்
[ கடந்த 59 ஆண்டுகளில் இக்கல்லூரி பெற்ற வளர்ச்சி அளவிட முடியாதது. இன்று இக்கல்லூரியில் 8528 மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள. 1999ஆம் ஆண்டு 70 மாணவிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் (ஷிஃப்ட்) பிரிவில் இப்போது 2420 மாணவிகள் உள்ளனர். இவர்களில் 55 சதவீதம் பேர் முஸ்லிம் மாணவிகள் என்பது நமக்குப் பெருமை அளிக்கும் விஷயமாகும்.
கேரளப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அப்துர் ரஹ்மான் கல்லூரிக்கு வந்தபோது, வெகுவிரைவில் இக்கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கையைவிட மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்றார். அது விரைவில் உண்மையாகிவிடும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகிறது.]
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி 1951ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் இணைந்த கல்லூரியாக துவக்கப்பட்டது. இது ஒரு மதச் சிறுபான்மையினரின் கல்விக் கூடமாக அங்கீகரிக்கப்பட்டது.
87 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இக்கல்லூரி, அன்றைய முதல்வர் குமாரசாமி ராஜா அவர்களால் சென்னை ஆளுநர் பவநகர் மஹாராஜா தலைமையில் துவக்கப்பட்டது.
ஆரம்பத்தில், பட்டப்பிடிப்பில் 250 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையம் கொண்டு துவங்கிய இக்கல்லூரியில் 1963 இல் பல உயர் பட்டப் படிப்புகளையும் தொடங்க பல்கலைகழகம் அனுமதி அளித்தது.
கடந்த 59 ஆண்டுகளில் இக்கல்லூரி பெற்ற வளர்ச்சி அளவிட முடியாதது. இன்று இக்கல்லூரியில் 8528 மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள் என்று கூறினால் ஆச்சரியப்படுவீர்கள்.பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலேயே, முதன் முறையாக கம்பியூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்தியது ஜமால் முஹம்மது கல்லூரியில்தான். தவிர எல்லா பாடங்களிலும் பட்டப்படிப்பும், உயர்கல்வி பட்டப்படிப்பும் (UG and PG) கற்பிக்கப்படுகிறது.
இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் எல்லா துறைகளிலும் பிரகாசிக்கிறார்கள். நீதிபதிகளாக, அமைச்சர்களாக, சட்டமன்ற–பாராளுமன்ற உறுப்பினர்களாக, வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள், கல்லூரிவேந்தர் எனப் பல்வேறு துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்ழ சாதனை படைத்து வருகிறார்கள்.
இக்கல்லூரி தன் பொன்விழாவைக் கொண்டாழய ஆண்டு தேசிய தரக்கட்டுப்பாடு அமைப்பு (NAAC) இக்கல்லூரிக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்தை அளித்து கௌரவித்தது. கடந்த ஆண்டு மறு ஆய்வின்போது ஐந்து நட்சத்திர அந்தஸ்தைவிடவும் பெரிய அங்கீகாரத்தை வழங்கியது.
2004-2005 இல் இக்கல்லூரியைத் தன்னாட்சி கல்லூரியாக பாரதிதாசன் பல்கலைக் கழகமும் பல்கலைக்கழக மானியக் கமிஷனும் அங்கீகரித்தன. இதன் மூலம் இக்கல்லூரி எல்லா துறைகளிலும் தன்னிச்சையாகச் செயல்பட முடியும். இதனால் கல்லூரியின் தரமும் உயரும்.
1999 ஆம் ஆண்டு இக்கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் அப்துல்லாஹ் பாஷா, மாணவர்கள் பிற்பகல் 3 மணிக்கு தங்கள் வகுப்பு முடிந்து வெளியேறிய பிறகு, கல்லூரி எவ்வித உபயோகமும் இன்றி இருப்பதை கல்லூரி நிர்வாகத்திற்கு எடுத்துக் காட்டினார். மேலும், மாணவர்களுக்கு காலை 8.30 மணிக்கு வகுப்பை ஆரம்பித்தால் பிற்பகல் 1.00 மணிக்கு முடித்துவிடலாம். பிற்பகல் 1.30 லிருந்து மாலை 6.30 மணி வரை மாணவிகளுக்கு வகுப்பு நடத்தலாமே என்றும் யோசனை கூறினார்.
எனவே, பரீட்சார்த்தமாக முதலாம் ஆண்டில் 70 மாணவிகள் சேர்க்கப்பட்டனர். அதற்கு அடுத்த ஆண்டு மாணவிகள் எண்ணிக்கை அதிகமானதால் போக்குவத்துக்காக புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு மாணவிகளைப் பத்திரமாக அவரவர் இல்லங்களுக்கே கொண்டுவிட ஏற்பாடு செய்யப்பட்டது.
இம்மாணவிகள் அனைவரும் உள்@ளுர் திருச்சி வாசிகளாக இருந்தனர். அப்போது மாணவிகளுக்கென்று இக்கல்லூரியில் தங்குமிட வசதி (Hostel) இருக்கவில்லை.
2003 ஆம் ஆண்டு பேராசிரியர் டாக்டர் முஹம்மது ஷேக் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து பெண்களுக்கு தனி ஹாஸ்டல் வசதி செய்து தரப்படவேண்டும் என்று அயராது உழைத்தார்.
அதன் தொடர்ச்சியாக 2005ஆம் ஆண்டு முதன் முதலாக ஏழு மாணவிகளுக்கு மட்டும் ஹாஸ்டல் வசதி செய்து தரப்பட்டது. அது படிப்படியாக வளர்ந்து இவ்வாண்டு 400 மாணவிகள் ஹாஸ்டலில் தங்கி கல்வி கற்று வருகிறார்கள்.
1999 ஆம் ஆண்டு 70 மாணவிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் (ஷிஃப்ட்) பிரிவில் இப்போது 2420 மாணவிகள் உள்ளனர். இவர்களில் 55 சதவீதம் பேர் முஸ்லிம் மாணவிகள் என்பது நமக்குப் பெருமை அளிக்கும் விஷயமாகும்.
பல முஸ்லிம் கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் சேர்ந்து கல்வி பயிலும் (Co-Education) முறைதான் உள்ளது. அல்லது பெண்களுக்கு மட்டும் என்று தனிக் கல்லூரிகள் உள்ளன. ஜமால் முஹம்மது கல்லூரியில் மட்டும்தான் ஷிஃப்ட் வசதி உள்ளது.
பெண்களுக்காக தனியாக என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். ஆகியவற்றோடு, ஸ்போர்ட்ஸ் தினம், பட்டமளிப்பு விழா, கல்லூரி நாள், மீலாத் விழா ஆகியவை பெண்களுக்கென்றே தனியாக நடத்தப்படுகின்றன.
அண்மையில், முதல்வர் கலைஞரின் 86ஆவது பிறந்த நாளையொட்டி தமிழக அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில், ஜமால் முஹம்மது கல்லூரி மாணவிகளின் ஹாக்கி குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தீனியாத் வகுப்புகள்
மாணவர்களுக்கு ஏற்கெனவே தீனியாத் வகுப்பு மூலம் மார்க்க அறிவு போதிக்கப்பட்டு வருகிறது. ஹாஸ்டலில் தங்கியுள்ள மாணவிகளுக்கு பிற்பகல் 1.30க்குத்தான் வகுப்புகள் துவங்குகிறது என்பதால் காலை முதல் மதியம் வரை மாணவிகளுக்கான தீனியாத் வகுப்புகளுக்கு முதல்வர் டாக்டர் ஷேக் ஏற்பாடு செய்தார்.
இதனால் ஜமாலில் படிக்கும் மாணவிகள் பட்டப் படிப்பு மட்டுமல்லாது, மார்க்கக் கல்வியும் பெற்று வெளியேறுவார்கள். மாணவிகளுக்கும் மார்க்கக்கல்வி போதிக்கப்படுவது தெரிந்து பெற்றோர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்ததுடன், ஒரு மாணவியின் தாயார் தன் மகளுக்கு திருக்குர்ஆனை மனனம் செய்யும் ஹிப்ளுப் பிரிவு தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க, அதற்கும் முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார்.
ஆக, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி ஒரு சிறந்த இஸ்லாமியத் தலைமுறையை உருவாக்குகிறது என்றே சொல்லாலாம்.
சில வீடுகளில் பெண்கள் காலை முதல் இரவு வரை தொலைக்காட்சியில் சீரியல்களைப் பார்த்துக் கொண்டே தங்களைக் காணடிழத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் பிள்ளைகள் படிகிறார்களா? மதரஸாவுக்கு ஓதச் செல்கிறார்களா என்பதையெல்லாம் கவனிப்பதில்லை. உரிய நேரத்தில் கணவனுக்கு உணவுகூட எடுத்து வைப்பதில்லை.
ஜமாலில் படித்துப் பட்டம் பெற்று வரும் பெண்கள் திருமணமாகி குடும்பப் பெண்ணாக மாறும்போது அவள் ஒரு சிறந்த மனைவியாகவும், தன் பிள்ளைகளுக்குச் சிறந்த மனைவியாகவும், தன் பிள்ளைகளுக்குச் சிறந்த தாயாகவும் திகழ்வாள். தன் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட கல்வியை அளிப்பது என்பதிலிருந்து பிள்ளைகள் எவ்வாறு பழக்கிறார்கள் என்பதுவரை கண்ணும் கருத்துமாக இருப்பாள்.
வேலைக்குச் செல்பவராக இருந்தால் அலுவலக வேலையையும் திறம்படச் செய்வதோடு, தன் வீட்டையும் கணவன் பிள்ளைகளையும் கவனிப்பார். இவைகளுக்கு அடிப்படையாக இருப்பது ஜமாலில் அவர்கள் பெற்ற பட்டப்படிப்பு மட்டுமல்லாது, அவர்கள் பெற்ற மார்க்க அறிவும்தான்.
ஒருமுறை அக்கல்லூரிக்குச் சென்றுவந்த (சென்னை ரஹ்மத் அறக்கட்டளை) மவ்லவி அ.முஹம்மது கான் பாக்கவி, கல்லூரியில் ”நுழைந்தவுடனே இஸ்லாமிய மணம் கமழ்கிறது. முஸ்லிம் மாணவர்களும் ஆசிரியர்களும் என்னைப் பார்த்தவுடன் ஸலாம் கூறினார்கள். இந்தப் பழக்கத்தை வேறு எந்த முஸ்லிம் கல்லூரியிலும் காணமுடியாது” என்றார்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வியை இறைவன் பொதுவில் வைத்தான். அதாவது ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்.
காலம் கடந்தாலும் இப்போதாவது முஸ்லிம் சமுதாயம் கல்வியின் அவசியத்தை, அதிலும் குறிப்பாக பெண்கல்வியின் அவசியத்தை உயர்ந்திருக்கிறதே, அதற்காக நாம் மகிழத்தான் வேண்டும்.
இக்கட்டுரையைப் படித்தபின் கவலைப்படப் போகிற ஒருவர் கல்லூரி முதல்வர் டாக்டர் ஷேக்முஹம்மது என்பதை அக்கல்லூரியின் 9 ஆட்சிமன்ற உறுப்பினர்களில் ஒருவன் என்ற முறையில் இப்போதே என்னால் கணிக்க முடிகிறது.
அடுத்த ஆண்டு அட்மிஷன் சமயத்தில் அவர் என்ன பாடுபடப் போகிறாரோ தெரியவில்லை! இக்கட்டுரையைப் படித்த பெற்றோர்கள் தங்கள் பெண்மக்களை ஹாஸ்டலில் சேர்க்க வேண்டும் என்று ஒரே சமயத்தில் வந்து நின்றால் என்ன ஆவது?
இந்த ஆண்டைவிட அடுத்த ஆண்டும் பெண்கள் ஹாஸ்டலில் இடம் அதிகரிக்க இப்போதே முதல்வர் ஆவன செய்து வருகிறார். இருந்தாலும் அத்தனை மாணவிகளுக்கும் இடம் கிடைக்குமா என்பதே கேள்வி.
கேரளப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அப்துர் ரஹ்மான் கல்லூரிக்கு வந்தபோது, வெகுவிரைவில் இக்கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கையைவிட மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்றார்.
அது விரைவில் உண்மையாகிவிடும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகிறது.
”Jazaakallaahu khairan” சமநிலை சமுதாயம்