கவிஞர் இக்பால் ராஜா
கல்வியைக் கவச மாக்க
காலமே உகந்த தம்மா!
இல்லையேல் காலா காலம்
இழந்தவோர் இகழ்ச்சிக் காக
சொல்லால் தூற்று வார்கள் !
சோர்ந்துநீ முடங்கி டாமல்
வல்லோன் அருளை யெண்ணி
வாய்ப்பினை உணர்க தோழி !
பெண்ணெனப் பிறந்து விட்டாய் !
பெற்றோர் சொல்பேணி வாழ்ந்து
கண்ணெனக் கல்விக் கற்றால்
கடமைகள் சுலப மாகும் !
அன்பாய் உயர்ந்து வாழ
அறிவுதான் கை கொடுக்கும் !
பண்பாய் பழகி வாழ்ந்தால்
பாரமே இல்லை தோழி !
நாட்டை நீ நினைத்துப் பார்த்தால்
நம்போன்ற பெண்கள் தானே
சுட்டியாய் இருந்தப் போதே
சுறுசுறுப் பாய்கற் றார்கள்
வீட்டின்நற் பெருமைக் கெல்லாம்
விடியலே நாம்தான் தோழி !
போட்டிகள் எதுவென் றாலும்
பெண்களும் சமமாய் நிற்போம் !
கணவனை மிஞ்சும் எண்ணம்
கனவிலும் உனக்கு வேண்டாம் !
உணர்விலே தெளிவு வேண்டும் !
உடையிலே ஒழுங்கு வேண்டும் !
குணத்திலே தங்க மாக
குடும்பமே குறிக்கோ ளாக
மனதிலே வலிமை யோடு
மரபைநீ பேணி வாழ்வாய் !
குழந்தைகள் பெற்றெ டுத்து
குணத்தையும் பண்ப டுத்தி !
பழமையை மறந்தி டாமல்
பகைமையை நினைத்தி டாமல்
தளர்ந்திடும் நிலைஇல் லாமல்
தகுவழி நடந்து காட்டு !
கலங்கரை விளக்காய் நாளை
கல்வியால் உயர்ந்து நிற்பாய் !
உறவினை உரிமை யோடு
உறவாடி ஊக்கு விப்பாய் !
திறம்பட வளர்வ தற்கு
தீன்நெறி பேணி வாழ்வாய் !
முறையுடன் வாழ்ந்துகாட்டி
முன்னேற வாராய் தோழி !
இறையவன் அருளைநாடி
இறைஞ்சுவோம் வாராய் தோழி !
(அய்யம்பேட்டை நேரு நகர் அல்மத்ரஸத்துல் காதிரிய்யா புதிய கட்டிட்த் திறப்பு விழா சிறப்பு மலரிலிருந்து)