தலாக் ஓர் விளக்கம்
அபூ முஹை
[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திலும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆரம்ப இரண்டு கால ஆட்சியிலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கணிக்கப்பட்டு வந்தது. (முஸ்லிம், அஹ்மத்)
தலாக் சட்டத்தை விமர்சிக்கும் எவரும் – தலாக் சட்டத்தை இயற்றிய திருமறைக் குர்ஆனிலிருந்தும், திருக்குர்ஆனுக்கு விளக்கமாக விளங்கிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் (ஆதாரப்பூர்வமான) வழிமுறையிலிருந்தும் மேற்கோள் காட்டி விமர்சியுங்கள். அதுவே உண்மையானதாகவும் – நேர்மையானதாகவும் இருக்கும். ]
தவறாகப் புரியப்பட்ட சட்டங்களில் ”தலாக்” – விவாகரத்துச் சட்டமும் அடங்கும். தங்களை அறிவு ஜீவி(?) என்று சொல்லிக் கொள்பவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ”தலாக்” சட்டத்தினால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள், இஸ்லாத்தில் பெண்ணியத்திற்கு பாதுபாப்பு இல்லை’ என்று அறிவு ஜீவித்தனத்திற்கு – இஸ்லாத்தை விமர்சிப்பதே அளவு கோலாகி விட்டது. இந்த அறிவு ஜீவிகளிடம் மறு பக்க சிந்தனையை ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது.
ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் கட்டாயம் தலாக் – விவாகாரத்தைப் பயன்படுத்தியேயாக வேண்டும் என இஸ்லாம், முஸ்லிம்களை வற்புறுத்துவது போல் – எங்காவது நடக்கும் தலாக் நிகழ்ச்சியை ஊதிப் பெரிதாக்கி, ”பெண்னின கொடுமை” என்று மொத்த பழியையும் இஸ்லாத்தை நோக்கி வீசப்படுகிறது. ”அல்லாஹ் அனுமதித்தவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது தலாக்” (நபிமொழி) என்று வேண்டா வெறுப்பிலேயே ”தலாக்கை” இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. தலாக் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கு முன், திருமணப் பந்தம் பற்றி இஸ்லாம் கூறுவதை அறிந்த கொள்வோம்.
வாழ்க்கை ஒப்பந்தம்
இஸ்லாம், திருமணத்தைப் பிரிக்கவே முடியாத பந்தமாகக் கருதவில்லை – வாழ்க்கை ஒப்பந்தமாகவேக் கருதுகிறது. அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (4:21.) ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணையாக இணைந்து கொள்ள சம்மதித்து, உறுதியான ஒப்பந்தம் செய்து கொள்வதையே இஸ்லாம் திருமணம் என்கிறது.
இஸ்லாமியத் திருமணத்தில் சடங்கு, சம்பிரதாயம் எதுவுமில்லை (அப்படியிருந்தால் அது முஸ்லிம்களாக சேர்த்துக் கொண்டது) மணமகன் – மணமகள் இவர்கள் தவிர இரு சாட்சிகள் தேவை. வாழ்க்கையில் இணைய சம்மதிக்கிறோம் என மணமக்கள் கையொப்பமிட்டு, இதற்கு சாட்சியாக இருவர் கையொப்பமிட்டால் திருமணம் முடிந்தது. வாழ்க்கை ஒப்பந்தத்திற்கு மணமகளின் மனப்பூர்வமான சம்மதம் மிக அவசியம் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
‘’நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது.’’ (4:19.)
மணமகளின் சம்மதம் பெறாமல் நடந்த திருமணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரத்து செய்திருக்கிறார்கள். மணமக்கள் இருவரும் விரும்பி -கணவன், மனைவியாக சேர்ந்து வாழ ஒப்புதலளித்து, ஒப்பந்தம் செய்து கொள்வதே இஸ்லாமியத் திருமணம். ஒப்பந்தம் செய்து கொள்ளும் எதுவும், ஒப்பந்தம் செய்யப்பட்டவர்களால் எந்த சமயத்திலும் அதிலிருந்து விலகிக் கொள்ளவும் உரிமையுண்டு – திருமணப்பந்தத்திலிருந்து விலகி – விவாகரத்துப் பெற்றுக் கொள்வதில் கணவன், மனைவி இருவருக்கும் சமவுரிமையுண்டு என்பதையும் விளங்கலாம். ”கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று, மனைவியர்க்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு” (4:228) இஸ்லாம் ஆண்களுக்கு வழங்கப்பட்டது போன்று – பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இவ்வசனம் கூறுகிறது. இனி தலாக் பற்றிப் பார்ப்போம்
தலாக் ஓர் விளக்கம்
இஸ்லாமிய வழக்கில் கணவன் மனைவியை விவாகரத்து செய்வதையே ”தலாக்” என்ற வார்த்தை குறிக்கும். தலாக் என்றால் ‘விடுவித்தல்’ ‘கட்டவிழ்த்து விடுதல்’ என்பது பொருளாகும். தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று சந்தர்ப்பங்கள் – வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தலாக் கூறி, முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இதுதான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டம் – தலாக் பற்றித் திருக்குர்ஆனில்.. ”அவர்கள் திருமணப் பிரிவினையை (விவாகரத்தின் மூலம்) உறுதிப் படுத்திக் கொண்டால் நிச்சயமாக இறைவன் செவியுறுபவன் நன்கறிபவன்”. (2:227)
தலாக் விடப்பட்டப் பெண்கள் மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை (தம் கணவருக்காக) காத்திருப்பார்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் அவர்கள் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருந்தால் தங்கள் கர்பப்பைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை (குழந்தை உருவாகி இருந்தால்) மறைப்பது ஆகுமானதல்ல. அவர்களின் கணவர்கள் (இத்தாவிலிருக்கும் தம் மனைவியோடு சேர்ந்துக் கொள்ள) நல்லிணக்கத்தை நாடினால் (அந்த கால கெடுவுக்குள்) அழைத்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு. (2:228)
”(இத்தா கால கெடுவுக்குள் சேர்ந்துக் கொள்ளும் வாய்ப்புள்ள) இத்தகைய தலாக் இரண்டுத் தடவைகள்தான். இந்த வாய்ப்புகளில் அவளுடன் அழகிய முறையில் சேர்ந்து வாழலாம் அல்லது அழகிய முறையில் அவளை விட்டு விடலாம்.” (2:229)
முதல் இரண்டு தடவைகள் கூறும் தலாக் பற்றி 2:228, 229 ஆகிய வசனங்களில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் பிணக்கம் ஏற்பட்டு மனைவியை விவாகரத்துச் செய்யும் முடிவுக்கு வருபவன் ”உன்னை தலாக் – விவாகரத்து செய்து விட்டேன்” என்று கூறினால் விவாகரத்து ஆகிவிடும். இதனால் திருமண பந்தம் – ஒப்பந்தம் முற்றாக முறிந்து விடாது. அவனின் மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரைக் காத்திருக்க வேண்டும்.- இந்தக் காத்திருப்பும் அவள் கருவுற்றிருக்கிறாளா என்பதை அறிந்து கொள்வதற்காகவே – இந்த அவகாசத்திங்குள் கணவன், மனைவி இருவரும் எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். அவள் கர்ப்பிணி என்றால் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை திருமண ஒப்பந்தம் முறியாது என்பதை திருக்குர்அன் 65:4 வசனத்திலிருந்து விளங்கலாம்.
”கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (இத்தாவின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையிலாகும். (65:4)
முதல் இரண்டு தலாக்கின் நோக்கங்கள்:- 1. கணவன் சமாதானம் ஆகிவிடுவான் எனக் காத்திருப்பது. 2. கர்ப்பம் உண்டாகியிருக்கிறாளா என்பதை உறுதி செய்வது. இந்த நோக்கம் முதலிரண்டு தலாக்கிற்கு மட்டுமே பொருந்தும். மூன்றாவது முறையாகத் தலாக் சொன்னால் மனைவி (இத்தா) காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, மூன்றாவது முறை தலாக் சொல்லிய கணவன் – முதலிரண்டு முறை தலாக் சொல்லி மீண்டும் சேர்ந்து வாழ்ந்தது போல் சேர விரும்பினாலும் இதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
இவன் தலாக்கை – விவாகரத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்டு மூன்று சந்தர்ப்பங்களையும் தன் வெறுப்பிற்காகப் பயன்படுத்தி – பாழாக்கி விட்டதால் மூன்றாவது முறை தலாக் சொன்னவுடன் விவாகரத்து உறுதியாகிவிடும். அதன் பிறகு உள்ள நிபந்தனையை திருக்குர்ஆன் விவரிக்கிறது..
பின்னர்(மூன்றாவதாகவும்)தன் மனைவியை அவன் தலாக் சொல்லிவிட்டால் அதன் பிறகு அவனல்லாத வேறொரு கணவனை அவள் திருமணம் முடிக்காத வரை முதல் கணவனுக்கு அவள் அனுமதிக்கப் பட்டவளாக ஆகமாட்டாள். (இப்போது இரண்டாம்) கணவனும் அவளை தலாக் சொல்லி விட்டால் (அதன் பிறகு முதல் கணவனும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால்) அவ்விருவரும் இறைவனின் வரம்பை நிலை நிறுத்த முடியும் என்று கருதினால் (திருமணத்தின் மூலம்) மீண்டும் இணைந்துக் கொள்வது அவ்விருவர் மீது குற்றமில்லை. இவைகள் அல்லாஹ்வின் வரம்புகளாகும். அறிவுள்ள சமூகத்தாருக்கு இறைவன் இவற்றை தெளிவு படுத்துகிறான். (2:230)
மூன்றாவது முறையாக தலாக்கை பயன்படுத்தியவன் மீண்டும் தன் மனைவியோடு சேர்ந்து வாழ நினைத்தாலும் அது சாத்தியமில்லை. விவாகரத்து செய்யப்பட்ட மனைவி, வெறொரு கணவனை அவள் திருமணம் செய்து அவனும் அவளை தலாக் சொல்லி பிரிந்த பிறகே முதல் கணவன் அவளை மீண்டும் மணந்து கொள்வது சாத்தியமாகும்.
முத்தலாக்
இங்கே தலாக் பற்றி நிலவும் தவறானக் கருத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. முத்தலாக் என்றோ, தலாக், தலாக், தலாக் என்றோ கூறினால் அவன் மூன்று வாய்ப்புகளைப் பயன்படுத்தி விட்டான் – அவன் மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விட்டாள் என்பது தவறானக் கருத்தாகும்.
மூன்று தடவை என்பதை – மூன்று வேளையாகவே அறிவாளி புரிந்து கொள்வான். சிறு உதாரணம்:- நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் மூன்று வேளை மருந்தை காலை, பகல், இரவு என்று மூன்று நேரங்களில் சாப்பிடும்படிக் கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம், மூன்று வேளை மருந்துகளையும் ஒரு நேரத்தில் சாப்பிட்டவன் மூவேளை மருந்தையும் ஒழுங்காகச் சாப்பிட்டான் என்பதாகாது. கடுமையான வெறுப்புற்று நிதானம் தவறியே தலாக் கூறுகிறான்.
இனி மனைவியின் அவசியம் தேவையில்லை என்ற உச்சக்கட்ட கோபத்திற்கு தள்ளப்பட்டவன் வெறுப்பைக் காட்ட இறைவன் வழங்கிய மூன்று சந்தர்ப்பங்களே தலாக். வாழ்க்கையில் அவனுக்கு வழங்கப்பட்ட இம்மூன்று தலாக் வாய்ப்புகளில் முதல் தலாக்கிலேயே கடுங்கோபம் கொண்டு ஆயிரம் தலாக் என்று கூறினாலும் – இங்கு செயலால் அவன் பயன்படுத்தியிருப்பது ஒரு சந்தர்ப்பத்தைத் தான். என்பதை அறிவுடையோர் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். மேலும் இது பற்றிய நபிமொழிகளையும் அறிந்து கொள்வோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திலும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆரம்ப இரண்டு கால ஆட்சியிலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கணிக்கப்பட்டு வந்தது. (முஸ்லிம், அஹ்மத்)
ருகானா என்பவர் தம்மனைவியை ஒரு இடத்தில் வைத்து மூன்று தலாக் சொல்லி விட்டார் பிறகு வருந்தினார் இதை அறிந்த நபி-ஸல்- அவர்கள் உன் மனைவியை திருப்பி அழைத்துக் கொள் என்றார்கள். அதற்கு அவர் நான் என் மனைவியை மூன்று தலாக் சொல்லி விட்டேனே என்றார். அதை நான் அறிவேன் நீ உன் மனைவியை திருப்பி அழைத்துக் கொள் என்றார்கள். (அஹ்மத், அபூதாவூத், ஹாகீம்)
ஒரு மனிதர் தம் மனைவியை ஒரே நேரத்தில் மூன்று தலாக் சொன்ன செய்தியைக் கேள்விப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெரும் கோபம் அடைந்து, நான் உயிரோடு உங்கள் மத்தியில் இருக்கும் போதே அவர் அல்லாஹ்வின் வேதத்தோடு விளையாடுகிறாரா.. என்றுக் கேட்டார்கள்.(நஸயீ)
ஒருவன் ஒரே நேரத்தில் முத்தலாக் என்றோ, அல்லது தலாக், தலாக், தலாக் என்றோ சொன்னாலும் அது ஒரு தலாக்காகவே கணக்கிடப்படும் என்று நபிவழி சான்றுகளிலிருந்து விளங்கலாம். ஒரு முஸ்லிம் சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தினால் – அது பயன்படுத்தியவனின் அறிவின்மையைக் காட்டும். அதை இஸ்லாத்தை நோக்கி திருப்புவது அறிவுடைமையாகாது.
முஸ்லிம்களும் – முஸ்லிமல்லாதோருக்கும் இங்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். தலாக் சட்டத்தை விமர்சிக்கும் எவரும் – தலாக் சட்டத்தை இயற்றிய திருமறைக் குர்ஆனிலிருந்தும், திருக்குர்ஆனுக்கு விளக்கமாக விளங்கிய நபி ஸல்லல்லாஹு அலை ஹி வஸல்லம் அவர்களின் (ஆதாரப்பூர்வமான) வழிமுறையிலிருந்தும் மேற்கோள் காட்டி விமர்சியுங்கள். அதுவே உண்மையானதாகவும் – நேர்மையானதாகவும் இருக்கும்.