பிரளயத்தின் விளைவும் பெரும் அழிவும்
கம்பம் மவ்லானா பீர்முஹம்மது பாகவி
வெள்ளப் பிரளயம் ஏற்பட்டிருந்த போது நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது மகனை எச்சரித்தார்கள். உனது நீச்சலும் மலையும் காப்பாற்றும் என எண்ணாதே என இரக்கத்துடன் எச்சரித்தார்கள். அவனோ வியக்கும் வண்ணம் நீந்தி வந்து கொண்டிருந்தான்.
இதற்குள்ளாக இருவருக்கு மிடையே ஒரு பேரலை எழுந்து குறுக்கிட்டு விட்டது. ஆபத்தும் அழிவும் தன் கண்முன்னே தெரிந்தும் அகந்தை பேசிய அவனை, அப்படியே அமுக்கி முழ்க வைத்து அழித்து விட்டது. மகனின் மரணம் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனதைப் பெரிதும் பாதித்து விட்டது. அடக்கிக் கொண்டார். வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளப் பிரளயம் உலகம் முழுவதும் ஏற்பட்டிருந்தது.
ஒரு மாபெரும் வெள்ளப்பிரளயம் உலகை உலுக்கிய செய்தியை முந்தைய வேதங்களும் உலகின் தொன்மை யான வரலாற்று நூல்களும் கூறு கின்றன. இவ்வுலகின் இறுதி வேதமாம் இறைமறை அல்குர்ஆனில் இது குறித்துத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. இம்மண்ணகத்தில் இறைவனுக்கெதிரான அனைத்துச் சக்திகளும் அழிக்கப்பட்டிருந்தன. உண்மைக்கு எதிரான அனைவரும் மூழ்கடிக்கப்பட்டு முற்றிலும் துடைத் தொழிக்கப் பட்டிருந்தனர்.
மீண்டும் இறைக்கட்டளை பிறந்தது! ”பூமியே!உனது நீர் முழுவதையும் விழுங்கி விடு!வானமே!நீர் பொழிவதை நிறுத்திக் கொள்!”நீர் வற்றத் துவங்கியது.வானம் வறண்டு போனது.பயணப்பட்டுக் கொண்டிருந்த கப்பல் அமைதியடைந்தது.
”ஜூதி”எனும் மலையில் நிலை கொண்டது.நீர்மயம் மறைந்து நிலம் தெரிந்தது. ”அக்கிரமம் புரிந்த மக்கள் அழிக்கப்பட்டு விட்டனர்!”எனும் செய்தி அறைகூவலாக ஒழித்தது.நபி நூஹின் மனம் பாசமகளை எண்ணிப் பரிதவித்தது.இறைவா!எனது குடும்பத்தினரையும் காப்பாற்றுவதாக வாக்குறுதி தந்தாயே!என் மகனும் என் குடும்பத்தைச் சார்ந்தவனல்லவா?எனப் பிரார்த்தித்தார்கள்.
நூஹே! நீர் அறியாமல் பேசிகிறீர்! அவன் உன் மகனாக இருக்கலாம். ஆனால் அவனிடம் நற்பண்புகள் இல்லாததால் நல்லவனாக இல்லாததால் அவன் உம் குடும்பத்தைச் சார்ந்தவன் அல்லன். உனக்குத் தெரியாதவை பற்றியெல்லாம் கேட்டு என்னிடம் தர்க்கம் செய்யாதீர்! என இறைவன் கடிந்தான்.
நூஹ் அலைஹிஸ்ஸலாம் தனது அவசரத் தவறுக்காக மனம் திறந்து மன்னிப்புக் கோரினார்கள். தந்தை இறைத் தூதராக இருக்கின்றார் என்பதற்காகத் தனயன் ஈடேற்றமடைந்து விட முடியாது. அவரவர் இறை விசுவாசம் கொண்டு தூய நெறிகளைப் பேணிப் பண்போடு வாழும்போதே சிறப்படைகின்றனர். இறை அன்பைப் பெறுகின்றனர்.
குர்திஸ்தான் பகுதியில் இபுனு உமர் தீவுக்கு வட கிழக்குப் பகுதியில் ஜூதிமலை உள்ளது. இன்றும் இது இப்பெயரால் இங்கு பிரபலமாக அழைக்கப்படுகின்றது. கடந்த நூற்றாண்டில் இம்மலையின் உச்சியில் மிகவும் சிதைந்து போன பழமையான மரக் கலம் ஒன்று அகழ்வராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இது நூஹ் அலைஹிஸ்ஸலாம்அவர்களின் கப்பல் என உறுதி செய்யப்பட்டது.
நோவாவின் மரக்கலத்துண்டுகள் என இன்னும் மக்கள் கூறுகின்றனர். 1400 ஆண்டுகளுக்கு முன் அருள்மறையில் கூறப்பட்டுள்ள செய்திக்கு அண்மையில் வரலாற்றுத் தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நபி நூஹின் மீதும் அவரைப் பின்பற்றிய அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் அன்பும் பொழியப்பட்டன. அவர்களிலிருந்து வேறு சில சமூகங்களும் தோன்றும் என அறிவிக்கப்பட்டது. அம்மக்கள் புதிய உலகத்தில் புதிய வாழ்க்கை வாழத்துவங்கினர்.
புயலென வீசிய மாபெரும் சூறைக்காற்று!
வெள்ளம் வடிந்து மக்கள் புதிய வாழ்வைத் துவக்கினர். அன்று பூமி புனிதமடைந்திருந்தது. உண்மை இறைவனை நம்பியோர் மட்டுமே இருந்தனர். ஆண்டுகள் பல கடந்தன. ஆங்காங்கு மக்கள் பெருகினர். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம்அவர்களின் வாழ்வும் முடிந்தது.காலம் செல்லச் செல்ல மக்கள் நெறி பிறழ்ந்து சென்று கொண்டிருந்தனர். பெரும்பாலும் நெறி பிறழ்வது மக்களின் இயல்பாக அமைந்து விட்டது. படைத்தாளும் இறைவன் அவ்வப்போது தூதர்களை அனுப்பி மனிதர்களைச் செம்மைப் படுத்தி வந்தான். இது மனித இனத்துக்கு இறைவன் செய்த பேரருளாகும்.
வேதங்கள், மனித வாழ்வின் பாடப்புத்தகங்களாகவும் தூதர்கள், அப்புத்தகங்களை விளக்கிக்கூறி, வாழ்வின் இரு பக்கங் களான இம்மை மறுமைக்கு வழிகாட்டும் பேராசிரியர்களாகவும் திகழ்ந்தனர். ”நான் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தரும் ஆசானா கவே வந்திருக்கின்றேன்” என இறுதித்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறிய செய்தி நம் சிந்தையை ஈர்க்கின்றது.
தூதர்கள் தோன்றியிராவிட்டால் மாந்தர்கள் விலங்கினும் கீழாய் ஆகியிருப்பர். இறைத்தூதர்களின் சீர்திருத்தப் பிரச்சாரம் மக்களைச் செம்மைப் படுத்தியது. அவர்களில் இறையுணர்வையும், இறையச்சத்தையும் தோற்றுவித்தது.
இறைத்தூதர்கள் அறிவொளி ஏந்தி வந்தனர். அறிவு, அறியாமையைப் போக்குகின்றது. வெளிச்சம் இருட்டை விரட்டுகின்றது அவர்கள் ”இறையச்சம்” எனும் சர்வரோக நிவாரணியைக் கொண்டு வந்தனர். அது மனிதனின் உடல் உளப்பிணிகளைப் போக்கி எல்லா விதப் பாவ நோய்களையும் அகற்றுகின்றது.
ஆக, வகுப்பில் ஆசிரியரின் பங்கும் பணியும் எவ்வளவு முக்கியமானதோ அவ்வாறே உலகப் பள்ளிக்கு இறைத்தூதர்களின் பணி மிக உன்னதமானதாக இருந்தது. தூதர்களின் தொடர் தொடர்ந்தது. ஆங்காங்கிருந்த சிற்றூர், பேரூர், நாடு, நகரங்களில் அந்தந்த மொழி இனங்களிடையே இறைத் தூதர்கள் இறைவனால் அறிவிக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர்.
தன்னைப் பற்றி அறிவிக்கவும் தனது கட்டளைகளைத் தெரிவிக்கவுமே இறைவன் தூதர்களைத் தோற்றுவித்தான். உன்னைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எவரும் எங்களிடம் வரவில்லை” என யாரும் இறைவனிடம் குறை கூறி முறையிட முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவு, சிந்தனை, தெளிவு, பகுத்துப் பார்க்கும் உணர்வு, சீர்தூக்கிப் பார்க்கும் செறிவு, நல்லதைப் பின்பற்றும் மனநிலை ஆகியவை வைத்தே இறைவன் படைத்திருக்கின்றான். சிலர் இவற்றைப் பயன்படுத்த வில்லை என்றால் அது அவர்களின் குற்றமே அன்றி இறைவனின் குற்றமன்று.
நோய் தீர்க்கும் அருமருந்திருக்கும் போது அதை வைத்து பிணிநீக்க முற்படுவது தானே அறிவுடைமை. ஆரம்ப காலத்திலிருந்தே தூதர்கள் ஆங்காங்கே தோன்றிக் கொண்டே இருந்தனர். வாய்மையும் பொறுமையும் நிறைந்த நபியாக இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் வந்தார்கள். மக்களிடம் மார்க்க அழைப்புப் பணியை மகிமையுடன் செய்தார்கள்.
”ஆத்” எனும் சமூகத்தாரிடம் ஹூத் அலைஹிஸ்ஸலாம்எனும் சிறப்பு வாய்ந்த தூதர் நபியாக வந்தார். ‘அல்லாஹ்வை நம்பி அவனுக்குப் பணிந்து வாழுங்கள், அவனையே வணங்குங்கள்’ என்று அன்பாகக் கூறினார். அகந்தை கொண்ட அம்மக்கள் அவரது இறைச்செய்தியை நிராகரித்தனர். பொய்யர் என்றும், அறிவற்றவர் என்றும் வாய்க்கு வந்தவாறெல்லாம் தூற்றிப் பேசினர்.
”ஹூத்” நபி சொன்ன எந்த விஷயத்தையும் அவர்கள் கேட்கவில்லை. எங்களின் முன்னோர்கள் என்ன செய்தார்களோ அதைத்தான் நாங்கள் செய்வோம். உமது புதிய கொள்கையான ஓரிறைக் கொள்கையை ஒரு போதும் ஏற்கமாட்டோம்” என விடாப்பிடியாய் நின்றனர்.
”ஆத்” சமூகத்தினரே! நூஹ் நபியின் சமூகத்தாருக்குப்பின் இப்புவியில் நீங்களே சிறந்த சமுதாயத்தினராக இருக்கின்றீர்கள். முதலில் நீங்கள் இந்த உண்மையை உணர்ந்து பின் பற்றுங்கள். பின்னர் மற்றவர்களுக்கும் கூறுங்கள்” என இதமாக இனிமையாக எவ்வளவோ எடுத்துரைத்தும் அவர்கள் கேட்கவில்லை.
”உமது இறைவனின் தண்டனை வரும் வரும் என எங்களை மிரட்டிக் கொண்டிருக்கின்றீரே! எங்கே அந்த வேதனையை வரச்சொல்லும் பார்க்கலாம்!” என ஏளனமாகக் கேட்டனர். அருள்மயமான இறைவன் அந்த அக்கிரமக்காரர்கள் மீது அடங்காச்சினம் கொண்டான். பெரும் சூறைக்காற்றை அனுப்பினான். அது படுபயங்கரமாக வீசியது. இறை நிராகரிப்பாளர்களான ஆணவக்காரர்களைத் தூக்கி வீசி எறிந்து கொண்டிருந்தது.
”ஆத்” சமூகத்தினர் மிகப்பெரிய கடும் சூறாவளியால் அழிக்கப்பட்டார்கள். அல்லாஹ் அந்தக் காற்றினை அவர்கள் மீது ஏழு இரவுகளும் எட்டுப் பகல்களும் தொடர்ந்து ஏவினான். இற்றுப்போன ஈச்சமரத் துண்டுகளைப் போன்று அவர்கள் முகங்குப்புற வீழ்ந்து கிடந்தனர். (அல்குர்ஆன்).
உடலில் அழுகிய பகுதி இருந்தால் அதனை வெட்டி எடுத்துப் பாதுகாக்கின்றோம். புற்று நோய் பற்றியிருக்கும் அங்கத்தை அகற்றி விடுகின்றோம். உண்மையை ஏற்காத இவர்கள்ஸ சத்தியத்தை நிராகரித்த இவர்கள்ஸ மனித இனத்தின் அழுகிய அங்க மாகும். புற்றுப் பகுதியாகும். எனவே தான் படைத்தாளும் இறைவன் இவர்களை முற்றிலுமாகத் துடைத்தொழித்தான். நல்லவர்களைப் பாது காத்தான். ஈடேற்றமடையச் செய்தான்.
இனிய நெஞ்சங்களே! உலகின் தொடக்க காலத்திய இறைத்தூதர்கள் பற்றிய செய்திகளும் அன்று வாழ்ந்த மக்கள் பற்றிய நிலைமை நிகழ்வு களும் நீங்கள் தெரிந்து கொள்வதற்காக ஈண்டு எடுத்துக் காட்டப்படு கின்றன. ஆரம்ப காலம் தொடுத்தே இறைநெறியின் பக்கம் மக்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த உண்மையை அருள்மறை அல்குர் ஆனின் வெளிச்சத்தில் நாம் அறிந்து கொள்கின்றோம்.
இறை நம்பிக்கை கொண்டு இறைக்கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த நல்லோர் என்றுமே பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர். உண்மையை ஏற்று உண்மையாய் வாழ்ந்தோர் இறையன்பைப் பெற்று இனிதே வாழ்ந்திருக் கின்றனர். இதுவே இறைவனின் நியதி. நாட்கள் நகர்ந்தன. காலம் சுழன்றது. அடுத்தடுத்த தலைமுறை தோன்றியது. நேர்த்தியான நெல் மணியில் பதர்களும் கலந்தன.
மீண்டும் தூய இறைநெறியை மறந்து மனம் போன போக்கில் மக்கள் வாழத் தலைப்பட்டனர். அக்காலத்தில் ”ஸமூத்” எனும் சமூகத்தார் சிறந்து விளங்கினர். அவர்களிடையே இறை உணர்வையூட்டி சீர்திருத்தம் செய்வதற்காக ஸாலிஹ் நபி (அலை) அவர்களை இறைவன் தெரிந்தெடுத்து அறிவித்தான். மக்களிடையே தோன்றிய அவர்கள் இறைமார்க்க அழைப்புப் பணியைத் துவங்கினார்கள்.
நன்றி : குர் ஆனின் குரல் ( அக்டோபர் 2009 )