அளவான உணவு – ஆரோக்கிய வாழ்வு
மவ்லவி ஹாபிழ் டி.எம். முஜிபுர்ரஹ்மான் சிராஜி திருப்பூர்
[ வெள்ளிக் கிழமை என்றாலே மட்டன், சிக்கன் சமைத்தாக வேண்டுமா? ஸஹாபாக்கள் வெள்ளிக்கிழமை என்ன உணவு சாப்பிட்டார்கள்? வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்கும்போது ஸஹாபாக்களுக்கு வெள்ளிக்கிழமை என்றாலே குறிப்பிட்ட உணவை சாப்பிடப் போகிறோம்! என்ற சந்தோஷம் அவர்களுக்கு வந்து விடும். அப்படி என்ன உணவை சந்தோஷமாக உண்டார்கள் என்பதை அவர்களின் மூலமாகவே நாம் கேட்போம்…… ]
o அனைத்துக்கும் அளவுண்டு
o இறைநம்பிக்கையாளருக்கான உணவு அளவு
o பகிர்ந்துண்பதில் பரக்கத் உண்டு
o பண்புகளில் சிறந்தது பகிர்ந்துண்பது
o அண்ணலாரின் விருப்பம் அசைவ உணவா?
o உணவும் வயிறும்
அனைத்துக்கும் அளவுண்டு
தன்னை வணங்க படைக்கப்பட்ட இந்த மனிதனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அல்லாஹ் இவ்வுலகில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். தங்குதடையின்றி அனைத்துப் பொருளையும் மனிதன் பெறும் வகையில் அல்லாஹ் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளான். குறிப்பாக மனிதனின் வாழ்வுக்கு மிக இன்றியமையாத ஒரு விஷயம் உணவு!
மனிதனின் உணவு ஏற்பாட்டிற்கு அல்லாஹ் பிரமாண்ட ஏற்பாடுகளை – வயல்வெளிகள், மரங்கள், செடிகள், காய்கள், பழங்கள் மூலம் செய்துள்ளான். தாராளமாக உணவுக்கான பொருட்களை கிடைக்கச் செய்கிறான். மனிதர்கள் செய்யும் சில தீய பழக்க வழக்கங்கள் மூலமாகவே தவிர மற்ற எந்த காரணங்களுக் காகவும் அல்லாஹ் உலகில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தியதில்லை.
அல்லாஹ் திருமறையில் குறிப்பிடும் போது ”அவன் எத்தகையவன் என்றால் வானத்திலிருந்து உங்களுக்காக தண்ணீரை இறக்கி வைத்தான். அதிலிருந்து உங்களுக்கு குடிப்பும் உண்டு. இன்னும் அதிலிருந்து புற்பூண்டுகள் உண்டாகின்றன. அதில் நீங்கள் கால்நடைகளை மேய்க்கிறீர்கள். இன்னும் அதன் மூலம் பயிர்களையும் ஜைத்தூனையும் பேரீச்சமரங்களையும் திராட்சை கொடிகளையும் இன்னும் எல்லா கனிகளிலிருந்தும் உங்களுக்காக அவன் விளைவிக்கச் செய்கிறான்.” (அல்குர்ஆன் 16:10,11) என்று கூறுகிறான்.
மனிதனின் உணவுத் தேவைக்காக அல்லாஹ் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளான். அவன் வழங்கியுள்ள உணவை உபயோகம் செய்ய – ருசிக்க – எவ்வித அளவோ, தடையோ அல்லாஹ் வைக்கவில்லை.
”அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து உண்ணுங்கள்.” (அல்குர்ஆன் 6:143) என திருமறை மூலம் இறைவன் கூறுகிறான். ஆனால், நம் உணவுப் பழக்கவழக்கங்கள் நாம் செய்யும் இபாதத் (இறைவழிபாடு) களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிடக்கூடாது. காரணம் நாம் இவ்வுலகில் படைக்கப்பட்டது மற்றும் நமக்கு உலகில் வாழத் தேவையான அனைத்து வசதி வாய்ப்புகளையும் அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது எதற்காக வேண்டியென்றால் ஒரே நோக்கம் அவனை வணங்கி வழிபட வேண்டும் என்பதற்காகத்தான்!
எனவேதான் அல்லாஹ் திருமறையில் குறிப்பிடும் போது ”பரிசுத்தமானவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள். நற்செயலை செய்யுங்கள்.” (அல்குர்ஆன் 23:51) என்று கூறுகிறான்.
நமக்கு இறைவனால் வழங்கப்படும் உணவு அதனால் கிடைக்கும் உடல் ஆற்றல் அனைத்தும் அவனை வழிபடும் வகையில் செலவு செய்ய வேண்டும். வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணமாக அமைந்துவிடக்கூடாது. எனவே உணவில் நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இறைநம்பிக்கையாளருக்கான உணவு அளவு
அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரோக்கியமான வாழ்வுக்கு உணவுமுறையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கூறியுள்ளார்கள். இதோ அவர்களின் கூற்று. ”மனிதம் நிரப்பும் பாத்திரங்களிலேயே மிக மோசமானது மனிதனின் வயிறு என்ற பாத்திரம்தான். அவனுடைய முதுகெலும்பு நிற்பதற்கு சில கவள உணவுகள் அவனுக்கு போதுமானதாகும். அவ்வாறு அளவிட முடியவில்லை யானால் அவனின் வயிற்றில் மூன்றில் ஒரு பாகம் உணவு, மூன்றில் ஒரு பாகம் தண்ணீர், மூன்றில் ஒரு பாகம் காலியாக இருக்க வேண்டும். (இது ஆரோக்கிய முறையாகும்)” அறிவிப்பாளர் : ஹள்ரத் மிக்தாத் இப்னு மஅத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி இஹ்யா உலூமித்தின்.
முஃமினின் உணவு பழக்கங்கள் அவர் அல்லாஹ்வை வழிபாடு செய்ய எவ்வித இடையூறும் ஏற்படுத்தாவண்ணம் இருக்க வேண்டும்.
ஹள்ரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். ”ஒரு மனிதர் அதிகமான அளவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வயிறு புடைக்க சாப்பிடுவார். அப்படிப்பட்டவர் ஒரு நாள் புனித இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து அவர் குறைவாக உண்ணும் பழக்கமுடையவராகிவிட்டார். அவரின் உணவுப் பழக்கம் அடியோடு மாறி, அளவோடு உணவு உண்பவராக ஆகிவிட்டார். இந்த நபரின் இந்த மாற்றம் குறித்து அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் ”இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறை மறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்” என்று கூறினார்கள். நூல்: புகாரி (5397)
இந்த ஹதீஸிற்கு விளக்கம் இவ்வாறு எழுதப்படுகிறது. அதாவது இறை மறுப்பாளன் தன் மனம் விரும்பும் எல்லா உணவுகளையும் விதிவிலக்கில்லாமல் புசிப்பான். ஆனால், இறைநம்பிக்கையாளர் (முஃமின்) அனுமதிக்கப்பட்ட (ஹலால்) உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவார். அப்போது தான் இபாதத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும்.
அதிகமாக உண்பதால் ஏற்படும் இடையூறுகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் அவருக்கு இலகுவாயிருக்கும். (நூல்: ஃபத்ஹுல்பாரி)
ஹள்ரத் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எப்போது உணவு சாப்பிட்டாலும் ஒரு ஏழை ஒருவரை அமர்த்தி உணவு உண்பார்கள். ஒரு நாள் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் சாப்பிட ஒரு ஏழை ஒருவரை ஹள்ரத் நாபிஃ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அழைத்துச் சென்றார்கள். அவருக்கு உணவு பரிமாறிவிட்டு தானும் அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்கள். இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ! அவர்களுடன் சாப்பிட்ட நபர் அளவுக் கதிகமாக சாப்பிட்டார். வயிறுபுடைக்க சாப்பிட்டார். சாப்பிடுவதில் வரைமுறை இல்லாத நிலையை மேற்கொண்டார். அவர் சாப்பிட்டு முடித்து வெளியே சென்ற பின் ஹள்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹள்ரத் நாபிஃ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து கூறினார்கள்.
”வயிறார உணவு கொடுப்பதில் எனக்கு இருவேறு கருத்து கிடையாது. ஆனால், நீர் அழைத்து வந்த நபர் வயிறார சாப்பிடவில்லை. வயிறு புடைக்க வரைமுறைகளன்றி சாப்பிடுபவராக உள்ளார். இனிமேல் இந்த நபரை எனது இல்லத்துக்கு அழைத்து வராதீர். காரணம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறை மறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்’ எனக்கூற நான் கேள்விப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள். நூல்: புகாரி (5393)
முஃமினின் அடையாளமே அளவோடு உண்பதுதான் என்பது அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களின் அருமைத் தோழர்களும் கூறுகின்ற விமர்சனமாகும்.
பகிர்ந்துண்பதில் பரக்கத் உண்டு
அளவோடு உணவு உண்ணும் பழக்கம் ஏற்பட பல வழிகளை காண்பித்த அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றுமொரு வழிமுறை சொல்லித்தருகிறார்கள். ”இருவருக்கான உணவு மூவருக்கு போதுமானதாகும். மூவருக்கான உணவு நால்வருக்கு போதுமானதாகும்” அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரி (5392)
விளக்கம் என்னவெனில் ஒருவர் வயிறார சாப்பிடும் உணவு இருவர் பகிர்ந்து உண்ணலாம். இருவர் வயிறார உண்ணும் உணவு மூவர் பகிர்ந்து சாப்பிட போதுமானதாகும். இவ்வாறு பகிர்ந்து உண்பதில் பரக்கத் ஏற்படுவதோடு அளவோடு உண்பதால் ஆரோக்கியமும் ஏற்படுகிறது.
பகிர்ந்துண்பதில் பரக்கத் உண்டு என்பதை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிரூபிக்க, அற்புதமான சான்று ஒன்றை தோழர்களுக்கு எடுத்துக்காட்டுகிறார்கள்.
ஒரு நாள் ஹள்ரத் அபூதல்ஹா ஜைத் அல் அன்சாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் துணைவியார் ஹள்ரத் உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டில் ரொட்டி தயாரித்து, சில ரொட்டித் துண்டுகளை ஹள்ரத் அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு துணியில் சுற்றி கொடுத்தனுப்புகிறார்கள்.
அதைப் பெற்றுக் கொண்டு ஹள்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வரும்போது அண்ணலாரைச் சுற்றி தோழர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து ”உம்மை அபூதல்ஹா அனுப்பி வைத்தாரா?” என்று கேட்டார்கள். ஆம்! என்று ஹள்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியபோது
”உணவு ஏதாவது கொடுத்து அனுப்பி உள்ளாரா?” என்று அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க, ஆம் என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பதில் சொன்னார்கள். உடனே அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடன் அமர்ந்திருப்பவர்கள் அனைவர்களையும் பார்த்து என்னுடன் எழுந்து வாருங்கள் ! நாம் அனைவரும் அபூதல்ஹா அவர்களின் வீட்டிற்கு உணவருந்தச் செல்வோம் என்று கூறி எழுந்தார்கள்.
உடனே அனைவரும் எழுந்து அண்ணலாரைப் பின் தொடர்ந்து ஹள்ரத் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீடு நோக்கி நடக்கிறார்கள். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்கள் சூழ ஹள்ரத் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டுக்கு வருவதை, முன்கூட்டியே ஹள்ரத் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சொல்வதற்காக, ஹள்ரத் அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சென்றார்கள். அண்ணலாரிடம் வந்து ஹள்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விபரத்தை சொன்னதும் ஹள்ரத் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது துணைவியாரும் ஹள்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயாருமான ஹள்ரத் உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம்
”உம்மு சுலைமே! அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களுடன் நம்வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்களாம். அவர்கள் அனைவருக்கும் உணவளிக்க போதுமான அளவு நம்மிடம் இல்லையே!” என்று சொன்னார்கள்.
அதற்கு உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டில் உணவு போதுமான அளவு இருக்கிறது. அல்லது இல்லை ! என்று பதில் சொல்ல வில்லை. மாறாக ”(நம் வீட்டின் நிலையை) அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் !” என்று சொன்னார்கள். சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் எந்தளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள் பாருங்கள். சிறிது நேரத்தில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வர்கள் அபூதல்ஹா வீட்டை அடைந்தார்கள். ஹள்ரத் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு வர்கள் முகம் மலர அண்ணலாரை வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றார்கள். வீட்டினுள் நுழைந்த அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்முசுலைம் ரளியல்லாஹு அன்ஹா அம்மையாரிடம்
”உம்மு சுலைமே! உம்மிடம் என்ன உணவு இருக்கிறதோ அதை கொண்டு வந்து வையும்!” என்று கூறினார்கள். ஹள்ரத் உம்முசுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சில ரொட்டிகளை கொண்டு வந்து வைத்தார்கள். அதை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வர்கள் பிய்த்துப் போட்டு அதில் உருக்கிய வெண்ணையை ஊற்றச் சொன்னார்கள்.
பின்பு அதில் ”பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று கூறி வேறு சில துஆக்களையும் ஓதினார்கள். பின்பு வெளியில் உள்ள தனது தோழர்களில் பத்து பத்து பேராக உள்ளே வரச் சொல்லுங்கள். என்று அபூதல்ஹாவிடம் கூறினார்கள். பத்து பேர் உள்ளே வந்தார்கள். அவர்களுக்கு ரொட்டி பரிமாறப்பட்டது. அவர்கள் அனைவரும் பசிதீர உண்டார்கள். அவர்கள் உண்டு முடித்ததும் அடுத்து பத்துபேர் அனுமதிக்கப் பட்டார்கள். அவர்களும் பசிதீர உண்டார்கள். இவ்வாறு பத்து பத்து பேராக எண்பது நபர்கள் சாப்பிட்டார்கள்.
சில நபர்களுக்கு மட்டுமே போதுமான அந்த உணவை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பரக்கத்தால் பகிர்ந்துண்டால் பரக்கத் உண்டு என்பதை தோழர்களுக்கு உணர்த்தும் முகமாக அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எண்பது நபர்களை வயிறார உண்ணச் செய்தார்கள். (நூல்: புகாரி 5381)
பண்புகளில் சிறந்தது பகிர்ந்துண்பது
பொதுநலன் என்பது அபூர்வமாகிவிட்ட தற்காலத்தில் சுயநலமே மேலோங்கி இருக்கிறது. எது ஒன்றும் எனக்குத் தான் கிடைக்க வேண்டும். அப்புறம்தான் மற்றவர்களுக்கு! என்று நுகர்வு வெறி தற்காலத்திக் பெரும்பாலான மனிதர்களிடம் குடிகொண்டுவிட்டது. இப்படிப்பட்ட சுயநலம் கூடாது. எல்லாமும் எல்லோரும் பெற வேண்டும் என்ற பொதுநலநோக்கு ஒவ்வொரு மனிதரிடம் வரவேண்டும் என்பதற்காக அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வாழ்வில் பல வழிகாட்டுதல்களை தந்துள்ளார்கள். குறிப்பாக உணவு விஷயத்தில்! வரலாற்றில் பகிர்ந்துண்ணலுக்கு மற்றொரு சான்று பாருங்கள்.
ஒரு நாள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் 130 தோழர்கள் அமர்ந்திருந்தார்கள். உணவு வேளை வருகிறது! அப்போது அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”உங்களிடம் உணவுக்கான பொருள் ஏதேனும் உள்ளதா?” என்று வினவுகிறார்கள். ஒரு ஸாஉ அளவு மாவு மட்டுமே உள்ளது என தோழர்களிடமிருந்து பதில் வந்தது. சிறிது நேரத்தில் ஆட்டு வியாபாரியிடம் ஒரு ஆடு விலைக்கு வாங்கப்பட்டது.
அதை அறுத்து அதன் ஈரலை எடுத்து முதலில் பொறிக்கும் படி அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். ஈரல் பொறிக்கப்பட்டு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தரப்பட்டது. அதை அவர்கள் துண்டாக்கி – அங்குள்ள 130 பேருக்கும் பங்களித்து தந்தார்கள். அப்படியும் அதில் பாக்கி இருந்தது. அதை சபையில் இல்லாதவர்களுக்காக எடுத்து வைத்து – அவர்கள் வந்ததும் அவர்களுக்கு வழங்கும்படி அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஹள்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அபீபக்கர் ரளியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி – 5382)
உணவை பொறுத்தவரை பகிர்ந்தளித்து உண்ணும் பண்பாட்டை பல வேளைகளில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களுக்கு வழிகாட்டியதோடு அதில்தான் பரக்கத்தும் உண்டு என்பதை நிரூபித்தும் காட்டியுள்ளார்கள்.
அண்ணலாரின் விருப்பம் அசைவ உணவா?
இன்று பரவலாக முஸ்லிம்கள் என்றாலே அசைவ உணவை விரும்பிச் சாப்பிடுபவர்கள் என்ற பேச்சுள்ளது. அசைவ உணவு சாப்பிடலாம் தவறில்லை. ஆனால் அதற்குத் தகுந்தாற்போல் வேலைப்பளு என்பது தற்காலத்தில் குறைந்து விட்டது விளைவு! உடல் பெருக்கம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற உபாதைகளுக்கு தள்ளப்படுகிறோம். குறிப்பாக இறைவழிபாடு, தொழுகை, நோன்பு போன்றவற்றுக்கு அதுபோன்ற உபாதைகள் இடையூறை ஏற்படுத்தி விடுகிறது. அசைவப் பொருளை வாங்குவது கட்டாயம் என்பது போன்ற சில தினங்களை நாம் ஏற்படுத்தி உள்ளோம். குறிப்பாக ஜும்ஆ வுடைய தினம் என்றாலே மட்டன், சிக்கன் எடுத்தாக வேண்டும் என்ற கட்டாய நிலையை ஏற்படுத்திக் கொண்டோம்.
வெள்ளிக் கிழமை என்றாலே மட்டன், சிக்கன் சமைத்தாக வேண்டுமா? ஸஹாபாக்கள் வெள்ளிக்கிழமை என்ன உணவு சாப்பிட்டார்கள்? வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்கும்போது ஸஹாபாக்களுக்கு வெள்ளிக்கிழமை என்றாலே குறிப்பிட்ட உணவை சாப்பிடப் போகிறோம்! என்ற சந்தோஷம் அவர்களுக்கு வந்து விடும். அப்படி என்ன உணவை சந்தோஷமாக உண்டார்கள் என்பதை அவர்களின் மூலமாகவே நாம் கேட்போம்.
ஹள்ரத் சஹ்ல் இப்னு சவுத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். வெள்ளிக்கிழமை வந்து விட்டாலே நாங்கள் சந்தோஷமும் மகிழ்வும் அடைவோம். காரணம் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வழக்கமாக ஒரு வயோதிகப் பெண்மணி எங்களுக்காக ஒரு உணவை தயார் செய்து கொடுப்பார். அதை நாங்கள் சாப்பிடுவதில் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைவோம். அப்படி என்ன ஸ்பெஷலான உணவு அது? என்று பார்த்தால் – தண்டுக் கீரையும், கோதுமையும் கடைந்து தயாரிக்கப்பட்ட ஒரு வகையான உணவுதான் அது ! அதை ஜும்ஆ தினத்தில் சாப்பிடுவதில்தான் ஸஹாபாக்கள் குதூகலம் அடைந்துள்ளார்கள். ( புகாரி 5403 )
எனவே ஜும்ஆ தினம் என்றாலே அசைவ உணவு சமைத்துத்தான் ஆக வேண்டும் என்பதில்லை. அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பல்வேறு சமயங்களில் சைவ உணவுப் பொருளை விரும்பி சாப்பிட்டுள்ளார்கள்.
ஹள்ரத் அனஸ் இப்னு மாலிம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்களை துணி தைப்பவர் (டைலர்) தனது வீட்டுக்கு உணவு உண்ண அழைத்தார். நானும் அண்ணலாருடன் அவரின் வீட்டுக்குச் சென்றேன். அன்போடு வரவேற்று தனது வீட்டில் அமரச் செய்து தையல்காரர் உணவு பரிமாறினார். கோதுமை ரொட்டியும் உப்புக்கண்டம் மற்றும் சுரைக்காய் போட்டு தயாரிக்கப்பட்ட குழம்பு பரிமாறப்பட்டது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழம்புள்ள பாத்திரத்தில் கரண்டியின் மூலம் தேடி, தேடி எடுத்து ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருளை தனது தட்டில் போட்டு விரும்பி உண்டார்கள். அது என்ன என்று பார்த்தால் சுரைக்காய்த்துண்டுகளைத்தான் அவ்வாறு விரும்பி உண்டார்கள். அன்றிலிருந்து அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பிச் சாப்பிட்ட சுரைக்காயை நானும் விரும்பி சாப்பிட ஆரம்பித்தேன். (நூல் : புகாரி 5439)
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காய்கறி போன்ற சைவ உணவுப் பொருட்களையும் விரும்பி உண்டுள்ளார்கள் என்பதை மேற்காணும் நபிமொழி நமக்கு அறிவிக்கிறது.
உணவும் வயிறும்
நாளொரு நோயும் பொழுதொரு உபாதைகளும் உருவாகும் தற்காலத்தில் பெரும்பாலான நோய்களை விட்டு நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்கு அதிகமான மருத்துவர்கள் சிபாரிசு செய்வது உணவுக்கட்டுப்பாடுதான். வயிறு புடைக்க உண்பது கொழுப்புச்சத்து நிறைந்த அசைவ உணவுப் பொருளை உண்பது போன்றவற்றால் உடல் உபாதைகள் ஏற்படுவதோடு வணக்க வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும்.
வயிறு நிரம்ப உண்ணலாமா?
ஃபத்ஹுல் பாரியில் இது சம்பந்தமாக ஒரு குறிப்பு காணப் படுகிறது. அதாவது வயிறு நிரம்ப உண்பது சரியா? உண்ணலாமா? என்றால் உண்ணலாம் என்பதுதான் பதிலாகும்.
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ஸஹாபாக்கள் சில சமயம் வயிறு நிரம்ப சாப்பிட்டுள்ளார்கள். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை தடுக்கவில்லை. எனினும் கடமையான பணிகளையும், வழிபாடுகளையும் நிறைவேற்ற இடையூறு ஏற்படுத்தும் அளவு வயிறு புடைக்க சாப்பிடுவது விரும்பத்தக்கது அல்ல! என்று அந்த குறிப்பில் காணப்படுகிறது. மேலும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை பல்வேறு சமயங்களில் வலியுறுத்தியுள்ளார்கள்.
வயிறுதான் உடலின் தடாகம் போன்று இருக்கிறது. நரம்புகள் அதிலிருந்து பருகுகின்றது. வயிறு ஆரோக்கியத்தோடு இருக்குமானால் நரம்புகளும் ஆரோக்கியத்தோடு அதில் பருகிச் செல்லும். வயிறு நோய்வாய்ப்பட்டிருக்குமானால் நரம்புகளும் நோயுடன் திரும்பிச் செல்லும் என்று அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ( நூல்: பைஹகீ )
சுருங்கக்கூறின் நம் ஆரோக்கியமான வாழ்விற்கும் இறை வழிபாட்டை இலகுவாக நிறைவேற்றுவதற்கும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றி வாழ வேண்டும். பசிக்காக சாப்பிட வேண்டும்! ருசிக்காக சாப்பிடக் கூடாது. பசி அடங்கிவிட்டால் உண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கு சில கவள உணவுகள் நமக்கு போதுமாகும். உண்பதற்காகத்தான் வாழ்க்கை என்றாகி விடக்கூடாது.
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமையான வாழ்வுதனை பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு வாழ்வதோடு அளவற்ற முறையில் இபாதத் செய்யக்கூடியவர்களாகவும் அல்லாஹ் நம்மை ஆக்குவானாக.