ஆலங்குடி நூ. அப்துல் ஹாதி பாகவி
எனக்குத் தெரிந்த ஆலிம்-எழுத்தாளர்கள் சிலர் தம் எழுதுகோலை மூடிவைத்துவிட்டு ஆன்மிகப் பாதையில் சென்றுவிட்டனர். அவர்களைத் தட்டி எழுப்பிச் சமுதாய மக்கள் பயன்பெறத்தக்க வகையில் அவர்கள் தம் ஆக்கங்களைத் தொடர்ந்து எழுத வேண்டும் எனத் தூண்டுவதற்கே இக்கவிதை.
ஆன்மிகமும்-இஸ்லாமும்
பிரிக்க முடியாத
இரட்டை வித்துக்கள்தாம்.
ஆனால்-நீயோ
ஆன்மிகம் மட்டுமே போதும்-என
ஆழ்மனதில் நினைத்துக்கொண்டு
அல்லாஹ்வை நினைவுகூர்வதில்
அனுதினமும் ஈடுபட்டால்
உன் கல்வியால் இச்சமுதாயத்துக்கு
என்ன பயன்?
தஸ்பீஹ் மணிகளை உருட்டுவதால்
நன்மையைப் பெற்றுக்கொள்வது
நீ மட்டும்தான்-ஆனால்
உன்னால் இச்சமுதாயத்துக்குக்
கிடைக்க வேண்டிய
எண்ணற்ற பயன்கள்
முடங்கிவிட்டனவே!
“மக்களுள் சிறந்தவர்
மக்களுக்கு மிகப்பயனுள்ளவரே”-என
நபிகளின் நாயகர்
நவின்றுள்ளதை-நீ
அறியாதவனில்லையே!
பரந்த புவியினைப்போல்-உன்
எண்ணத்தை விசாலமாக்கு.
உயர்ந்த விண்ணைப்போல்-உன்
சிந்தனையை உயர்வாக்கு-உன்
எண்ணத்திற்கேற்பவே- நீ
இறைவனைக் காண்பாய்.
உன் உள்ளத்திற்குள்
புதைந்து கிடக்கின்ற
எண்ணங்களையும் கருத்துகளையும்
வண்ணங்களாக்கு.
மனித மனங்களில்-அவற்றைப்
படிமங்களாக்கு.
எழுந்திரு!
தஸ்பீஹ் உருட்டியதுபோதும்.
முஸ்லிம்கள் நலன்களுக்காக-உன்
பேனாமுனை பேசட்டும்.
அதுவே எதிரிகளைத்
துளைக்கின்ற
கூராயுதமாகட்டும்!
உன்
ஆக்கங்களை வாசிக்க
எத்தனையோபேர்-பெரும்
ஏக்கங்களோடு
எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
எழு! எழுது!
நாளைய உலகின்
சரித்திர ஏட்டில்
உன் பெயரைப் பதிவுசெய்!
நீ மரணித்த பிறகும்
உன் வினைச்சுவடியில்
நன்மைகள் வந்துசேர
இப்போதே நீ-அதற்கான
விதையைத் தூவு!