[ தனது நாட்டில் உழைக்கும் ஏழைகளுக்கு ஒழுங்கான ஊதியம் கொடுக்காதவன், அந்நிய பெண்களை பணிப்பெண்ணாய் தன் வீட்டிற்குள் அனுமதித்து அவர்களை கொடுமை செய்பவன், அவர்களை மானபங்கப்படுத்துபவன், உண்மை முஸ்லிமாக இருப்பானா? அவனிடமிருந்து உண்மையான இஸ்லாத்திற்கான உதவியை எதிர்பார்க்கத்தான் முடியுமா?
சஊதி பணத்தில் உயிர் வாழும் அத்தனை இயக்கங்களும் இன்று ஒன்று ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. தன்னை தௌஹீத் என்று பிரகடனப்படுத்திக் கொள்பவர்கள், மௌலானா மௌதூதியை வழிகேடர் என்று பிரசாரம் செய்கின்றனர்.
தஃவா என்ற பதம் பிக்ஹு பிரச்சினைகளை முன் வைத்து வாதாடும் வாய்ச்சண்டை களமாக கொச்சைப்பட்டு நிற்கிறது. உண்மையான இஸ்லாமிய தஃவாவின் ஒளியில் உலகம் ஒளிர வேண்டிய காலத்தில் சர்ச்சைகளை ஏற்றுமதி செய்து சஊதி இன்பம் காணுகிறது. ]
ஒரே மஸ்ஜித் நிர்வாகத்ததில் ஆயிரம் கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகம், இந்த முஸ்லிம் சமூகம். இப்போது இந்த சமூகத்தில் ஒற்றுமை சிதறடிக்கப்பட்டு இருக்கிறது. மஸ்ஜிதுக்கு மஸ்ஜித் குரோதம் வெடித்துக் கொண்டிருக்கிறது.
ஆயிரம் கருத்து முரண்பாடுகளுடன் ஒரு பள்ளிவாசலில் அல்லாஹ்வை வணங்கி வந்த இந்த சமூகம், ஒரே உறவுகளாய் ஒரே ஜமாஅத்தாராய் வாழ்ந்த இந்த சமூகம், ஊர்களில, நகரங்களில், கிராமங்களில் பிரிந்து நின்று சண்டையிடுகின்றன. குடும்பங்கள் பிளவுபட்டு கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வின் இல்லங்கள் முஸ்லிமின் இரத்தத்தில் உறைந்து அவமானப்படுகிறது. எம்மை பிரிக்க சதி செய்தோர் பின்னால் இருந்து பார்த்து ரசிக்கின்றனர்.
ஒற்றுமையின்மையும், சண்டையும், சச்சரவுகளும் நோய்களாய் இந்த உம்மத்தை எப்படி பற்றின?
ஜாஹிலிய்யத்தின் பக்கம் வெகு வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கும் உலகை நாசத்திலிருந்து காத்து இஸ்லாத்தின் நிழலில் நிறுத்த வேண்டிய சமூகம். அல்குர்ஆனின் கட்டளைகளுக்குள் முழு உலகையும் கொண்டு வரவேண்டிய சமூகம். எரியும் பிர்சினைகள் எவ்வளவோ இருக்க இந்த சமூகத்தை வீணான சர்ச்சைகளிலும், விதண்டா வாதங்களிலும் மூழ்கிக் கிடப்பதற்கு பிக்ஹு பிரச்சினைகளை தஃவா என்று அர்த்தப்படுத்திக் கொடுத்த அந்த சக்தி எது?
வெளிநாட்டுப் பணத்தால் முஸ்லிம் உம்மத்தின் ஒரு பிரிவினரை மூளைச் சலவை செய்தது யார்?
இந்தப் பிரிவினர் நாளுக்கு நாள் அவர்களுக்குள்ளேயே பிளவு பட்டு, கருத்து முரண்பட்டு குழுக்களாய் பிரிந்து புதிய புதிய பெயர்களில் இயக்கங்கள் அமைத்து செயற்படுவதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?
இவை எல்லாவற்றிற்கும் இருப்பது ஒரே ஒரு பதில்!
அது தான் சஊதி தஃவா பணம்!
பணத்தை வீசி முஸலிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சஊதிக்கு ஏன் இப்படி ஒரு தேவை?
உட்பூசல்களைகயும், பிரிவினையையும் அது எதற்காக ஏனைய முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்?
சஊதியின் மன்னர் அரசியலுக்கும், அமெரிக்காவின் எண்ணெய் அரசியலுக்கும் உள்ள உறவின் பிறப்பே இந்த முஸ்லிம் உம்மத்தை கூறு போடும் சஊதியின் சதி!
அதை வேறுவிதமாக இப்படியும் சொல்லலாம்.
சஊதி அரேபியா உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் சொந்தமான பூமி! ஏனைய முஸலிம்களுடனான அதன் உறவு ஈமானோடு தொடர்புடையது. அது அல்குர்ஆன் பிறந்த பூமி! அல்லாஹ்வின் தூதர் வளர்ந்த பூமி! அல்லாஹ்வின் தீன் எழுந்த பூமி! அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டுகின்ற, பாதுகாக்கின்ற தார்மீக பொறுப்பு அந்த நாட்டிற்கு இருக்கிறது. உலகளாவிய முஸ்லிம் உம்மத்தை பாதுகாக்கின்ற பொறுப்பும் அந்த நாட்டிற்கு தான் இருக்கிறது. இஸ்லாமிய கிலாபத்தின் தாத்பரியமும் இதைத்தான் சொல்கிறது. சஊதியை அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவது முழு முஸ்லிம் உம்மத்தையும் ஆதிக்கம் செய்வதற்கு ஒப்பானதாகும்.
இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு உலகையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அது சூறையாடிய ஆபிரிக்க நாடுகள் பஞ்சத்தில் மரண படுக்கையில் வீழ்ந்து கிடக்கின்றன. மத்திய கிழக்கின்எண்ணெய் வளத்திற்கு கண்ணை வைத்த அமெரிக்கா தான் முஸ்லிம்களால் வெறுக்கப்படுகின்ற ஒரு நாடுஎன்பதையும் நன்கு உணர்ந்திருக்கிறது. அது தனது எண்ணெய் வியாபாரத்தை பாதுகாப்தற்காக சஊதி மன்னராட்சியை பாதுகாக்கிறது. அமெரிக்காவிற்கு சஊதி மன்னராட்சியை பாதுகாப்பதென்பது தனது நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு சமனான விடயமாகும். சஊதியில் மன்னராட்சி சரிவதென்பது அமெரிக்காவின் சரிவுக்கு சமனானதாகும்.
இருபதாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கிலும், இந்திய உபகண்டத்திலும் தோற்றம் பெற்று வளர்ந்து வரும் கிலாபத், இஸ்லாமிய அரசு பற்றிய கருத்தும், இயக்கச் சிந்தனையும் சஊதியின் வயிற்றில் மட்டுமல்ல அமெரிக்காவின் வயிற்றிலும் புளியைக் கரைத்தது.
காலமெல்லாம் எண்ணெய் சூறையாடலை ஒழுங்காகவும், நேர்த்தியாகவும் செய்ய முடியும் என்று நம்பிக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கும், காலமெல்லாம் மன்னர்களாக மகுடம் சூடி ஜாஹிலிய்யத்தின் ஜாம்பவான்களாக ஜொலிக்க முடியும் என்று கனவு கண்டுக்கொண்டிருந்த சஊதிக்கும் இது இடையூறாகவே இருந்தது.
மத்திய கிழககில் எழுந்துவந்த இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கமும், பலஸ்தீன் போராட்டமும், இந்திய உபகண்டத்தில் உதயமான ஜமாஅத்தே இஸ்லாமியின் (ஆரம்ப காலம்) இயக்கமும் கிலாபத் சிந்தனையை கூர்மைப்படுத்தின. எழுபதுகளின் இறுதிப் பகுதியில் ஈரானில் ஏற்பட்ட மன்னராட்சியின் வீழ்ச்சியும், இஸ்லாத்தின் எழுச்சியும் சஊதியை குலை நடுங்க வைத்தன.
இந்த கிலாபத் கருத்தை திசை திருப்பும் நோக்கமாக சஊதி அரசாங்கம் ஆரம்பத்தில் இந்த இயக்களுக்கு நிதியதவியை வழங்கி போஷித்து வளர்த்தது. தனது பெற்றோல் பணத்தின் பொறிக்குள் இஸ்லாமிய அரசியல் சித்தாந்தவாதிகளை சிக்கவும் வைத்தது.
இஸ்லாமிய அரசியல் சிந்தனையை வாயிலும் அதற்கு நேரெதிரான மன்னராட்சியை இதயத்திலும் வைத்துக்கொண்ட தாஈகளின் கூட்டம் அந்த சதியில் பிறப்பெடுத்தது.
இந்த இயக்க தலைவர்களுக்கு புமப்ஊஸ்பூ என்ற பட்டம் (சஊதி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு ) வழங்கி ஆயிரக்கணக்கில் படியும் வழங்கியது. சஊதியில் மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்களுக்கு சஊதிக்கு பாதகம் இல்லாமல் தஃவா வை வடிவமைக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது. சஊதியின் இஸ்லாத்திற்கு முரணான செயல்களையும் தமது சம்பளப் பணத்தையும் பாதுகாத்துக்கொண்டு சேவையாற்றும் சிறந்த தாஈகளாக இவர்கள் உருவாகினார்கள்.
தொன்னூறுகளில் கிலாபத் இயக்கங்களுக்கு போட்டியாக சஊதி தனக்கே உரிய பித்அத்களுக்கு எதிராக போராடும் வஹ்ஹாபிஸத்தை களம் இறக்கியது. அந்தக் காலப்பிரிவில் வளைகுடாவில் ஏற்பட்ட ஈராக் குவைத் பிரச்சினை அமெரிக்காவிற்கு மத்திய கிழககில் கால் பதிக்க சிறந்த காரணமாக மாறியது.
அமெரிக்க படையின் குவைத் மீட்பிற்கு பிறகு வஹ்ஹாபிஸததையும், கிலாபத் சிந்தனையையும் இரு கூறுகளாக மாற்றி சஊதி, அமெரிக்க உளவு நிறுவனங்களின் மேற்பார்வையில் இந்த தஃவா இயக்கங்களுக்கு நிதி வழங்கப்படகின்றது. வஹ்ஹாபிஸ இயக்கங்களுக்கு சஊதியும், கிலாபத் சிந்தனையுள்ள இயக்கங்களுக்கு குவைத்தும் பகிரங்கமாகவே உதவியளித்து வருகின்றன.
சமூகத்தின் சிந்தனைகள், கருத்து முரண்பாடுகள் இஸ்லாத்தின் அடிப்படை நோக்கததிலிருந்து வேறுபக்கம் திசை திருப்பி சில்லரை பிரச்சினைகளுக்குள் சமூகத்தை சிக்க வைப்பதில் சஊதி வெற்றி கண்டிருக்கிறது.
உண்மையில் சஊதி அரசாங்கம் இஸ்லாத்தின் மீது பற்றுக்கொண்ட ஒரு நாடாக தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அவசியம் அதற்கு இருக்குமேயானால், தன்னிலுள்ள ஜாஹிலிய்யத்தான அசிங்கங்களை அகற்றி ஒரு உண்மை முஸ்லிம் நாடாக அதற்கு முன்னுக்கு வர முடியும். இஸ்லாத்தின் தலைமைத்துவத்தை அதனால் ஏற்று முழு உலகிற்குமே முன்னுதாரணமாய் அதற்கு திகழ முடியும்.
ஆனால் சஊதி தன் தலையில் சூடிக்கொண்டிருப்பதோ மௌட்டீகத்தின் மறுபிறப்பான மன்னராட்சி! ஷரீஆ சட்டம் என்ற போர்வையில் இருப்பதோ வலிமையாளன், எளிமைமையானவனை ஏய்த்துப் பிழைக்கும் சமூக அநீதி!
சஊதி போன்ற ஒரு நாடு பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இப்தார் (நோன்பு துறக்க) வைப்பதற்கும், துல் ஹஜ் மாதம உழ்ஹிய்யா கொடுப்பதற்கும் பல கோடிக்கணக்கான ரூபாய்களை தனது ஏஜன்ட்கள் மூலம் வழங்கி வருவதை நாம் எல்லோரும் அறிவோம்.
தனது நாட்டில் உழைக்கும் ஏழைகளுக்கு ஒழுங்கான ஊதியம் கொடுக்காதவன், அந்நிய பெண்களை பணிப்பெண்ணாய் தன் வீட்டிற்குள் அனுமதித்து அவர்களை கொடுமை செய்பவன், அவர்களை மானபங்கப்படுத்துபவன், உண்மை முஸ்லிமாக இருப்பானா? அவனிடமிருந்து உண்மையான இஸ்லாத்திற்கான உதவியை எதிர்பார்க்கத்தான் முடியுமா?
ஒரு வாதத்திற்கு, எல்லா அரபுகளும் அப்படியல்ல நல்லவர்கள் தான் எமக்கு எமது தஃவாவிற்கு பணம் தருகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், தனது நாட்டில் நடக்கும் இந்த கொடுமைகளை ஏன் இந்த நல்லவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? அதை தடுத்து நிறுத்தி இஸ்லாத்தின் பெயரை பாதுகாக்காமல் இலங்கைக்கு பள்ளிவாசலும், உழ்ஹிய்யா இறைச்சியையும், இப்தாருக்கு ஈத்தம் பழங்களை வழங்குவதால் இவர்களின் கடைமை நீங்கு விடுமா?
வாழ்க்கையின் உயர்வு வேண்டி தொழில் நாடி தனது நாட்டிற்கு வரும் தொழிலாளர்களுக்கு சஊதி கொடுக்கும் சித்திர வதையை வாயால் சொல்லித் தீர்க்கத்தான் முடியுமா? சொந்தங்களை பிரிந்து அபலைகளாய் அந்த நாட்டில் தஞ்சம் புகும் பணிப்பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு அந்த நாடின் சட்டங்களால் கூட பாதுகாப்பு வழங்க முடிவதில்லையே! சுருக்கமாக சொன்னால் அன்று இஸ்லாம் ஒழித்துக்கட்டிய அடித்துவத்தைதிற்கும் இன்று தொழிலாளர்களுக்கு இவர்கள் வழங்கும் துன்புறுத்தல்களுக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை.
அன்று ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்க்கை முழுவதும் அடிமையாக இருந்த நிலை மாறி இன்றைய சஊதியின் நவீன ஜாஹிலிய்யத்தில் இரண்டு அல்லது அதற்கு கூடிய வருடங்கள அடிமையாக இருக்க வேண்டிய நிலை எற்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வருட அடிமை வாழ்வில் அவர்களுக்கு ஊதியமாய் வழங்கப்படுவதோ மிகவும் சொற்ப பணம். சொற்ப பணத்திற்கு 24 மணிநேரமும் உழைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. இத்தகைய இஸ்லாம் விரும்பாத அத்தனை செயல்களுக்கும் முன்னுதாரணமாக இந்த முடியாட்சி நாடு விளங்குகிறது.
மன்னராட்சி மூலம் இஸ்லாமிய ஆட்சி தொடர்பான இஸ்லாத்தின் அடிப்படையை தகர்த்துக் கொண்டிருக்கும் சஊதி, அது செய்யும் குற்றங்களை மூடி மறைத்து உலக முஸ்லிம்களை வேறு பக்கம் திசை திருப்பவே தனது ஏஜன்டுகள் மூலம் பிக்ஹு பிரச்சினைகளை பிரச்சாரமாக்கியிருக்கிறது. அல்குர்ஆனின் பக்கம் மக்களை அழைக்கின்ற மகத்தான பணியை அதுமறைத்து வைத்திருக்கிறது. பெயரளவில் அது குர்ஆனை சட்டநூலாக வைத்திருக்கிறது.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுததைப் போன்று தொழ உலகிற்கு பிரசாரம் புரியும் சஊதி, ரசூலுல்லாஹ் ஆட்சி செய்தது போல் செய்வதற்கு தயக்கம் காட்டுகிறது. தொழுகையும் பித்அத்து எதிர்பு மட்டுமே இதன் தஃவாவின் அடிப்படையாக மாறியிருக்கிறது. ஒரு தெருவில் இரண்டு மூன்று பள்ளிவாசல்களை கட்டி சமூகத்தை கூறுபோடும் இதன் போக்கில் ஸக்காத் பெயரளவில் உச்சரிக்கப்படும் ஒன்றாகவெ இருக்கிறது. பட்டினியால் வாடும் நாடுகள் பல இருக்க இலங்கைக்கு இறைச்சி்க்காக கோடிக்கணக்கான பணத்தை கொட்டிக் கொண்டிருக்கிறது.
அரபுகளின் ஸக்காத் பணத்தை அறவிட்டு ஏழை நாட்டிற்கு வழங்கினால் எத்தனை ஏழைகளை வறுமையின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுக்கலாம்?
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதது போல் தொழ மட்டும் தானா வேண்டும்?
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தது போல் ஸக்காத் கடமையை செய்யக் கூடாதா?
பள்ளிவாசல்களை மட்டும் தான் கட்டவேண்டுமா? பாடசாலைகளை கட்டி இந்த முஸ்லிம் சமூகத்தை முன்னேற விடக் கூடாதா?
தஃவா என்ற பதம் பிக்ஹு பிரச்சினைகளை முன் வைத்து வாதாடும் வாய்ச்சண்டை களமாக கொச்சைப்பட்டு நிற்கிறது. உண்மையான இஸ்லாமிய தஃவாவின் ஒளியில் உலகம் ஒளிர வேண்டிய காலத்தில் சர்ச்சைகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்து சஊதி இன்பம் காணுகிறது.
சஊதி பணத்தில் உயிர் வாழும் அத்தனை இயக்கங்களும் இன்று ஒன்று ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. தன்னை தௌஹீத் என்று பிரகடனப்படுத்திக் கொள்பவர்கள், மௌலானா மௌதூதியை வழிகேடர் என்று பிரசாரம் செய்கின்றனர்.
கிலாபத் சிந்தனையை கடனுக்காக பேசுகின்ற ஏனைய இயக்கங்கள் தௌஹீத்வாதிகளை தீவிரவாதிகள் என்கின்றனர். ஒரு குழு ஜிஹாதை பயங்கரவாதம் என்றும், இன்னொரு குழு அமெரிக்காவும், சஊதியும் அது பற்றி என்ன கூறுகிறதோ அதையே ஏற்போம் என்றும் தஃவா செய்கிறது.
ஒரே நாட்டில் இருந்து பணம்பெற்று பல கூறுகளாய் பிரிந்திருக்கும் இவர்களே இந்த சதிக்கு சிறந்த சான்று! இவர்களிடம் இல்லாத ஒற்றுமை இவர்களின் பிரசங்கஙகளை கேட்பதால் மக்களுக்கு எப்படி வரும்?
இன்னுமொன்று சொல்ல இருக்கிறது. அல்லாஹ்வின் தூதரும், அவரின் தோழர்களும் தன் சொந்த உழைப்பிலேயே தஃவா செய்தார்கள். அவர்கள் முனாபிக்குகளின் முதுகு சொறிந்து தஃவா செய்யவில்லலை. அபூஜஹ்ல்களிடம் பணம் அறவிட்டு அவர்கள் தஃவா செய்தார்களா? தன் சொந்த உழைப்பிலே அவர்கள் இஸ்லாத்தை உயிர்ப்பித்தார்கள். அவர்கள் தஃவாவை கடமையாக செய்தார்கள் ஊதியம் பெறும் தொழிலாக செய்யவில்லை.
”Jazaakallaahu khairan” பத்ருகளம்