அபூமூஸா அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”குளிர்ந்த இரு நேரங்களில் (பஜ்ர், அஸரை) ஒருவர் தொழுதால் அவர் சொர்க்கத்தில் நுழைவார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அபூமூஸா அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஒரு அடியான் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் அவருக்கு, அவர் உடல் ஆரோக்கியத்துடன் ஊரில் இருந்த சமயம் செய்தது போலவே (கூலி) எழுதப்படும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி).
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஒருவன் அழகிய முறையில் உளுச் செய்து, பின்பு ஜும் ஆவிற்கு வந்து (ஜும்ஆ உரையைக்) கேட்டு, அமைதியுடன் இருந்தால், அவருக்கு இந்த ஜும்ஆவிற்கும் அடுத்த ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட மற்றும் கூடுதலாக மூன்று நாட்கள் (ஆக 10நாட்கள்)வரை உள்ள பாவங்கள் மன்னிக்கப்படும். (உரையின் போது தரையில் கிடக்கும்) கற்களை தொட்டு(விளையாடி)க் கொண்டிருந்தால் அவர் (ஜும்ஆவின் நன்மையை இழந்து விட்டார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.(முஸ்லிம்).
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஒரு முஸ்லிமான அடியான் உளுச் செய்யும் போது தன் முகத்தைக் கழுவினால் அவனின் முகத்திலிருந்து அவன் பார்த்த ஒவ்வொரு தவறுகளும் அவனது கண் வழியே தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசிச் சொட்டுடன் வெளியேறிவிடும். தன் கைகளை அவன் கழுவினால், அவனது செய்த தவறுகள் அனைத்தும் அவனது கைகள் வழியாக தண்ணீருடன், அல்லது தண்ணீரின் கடைசிச் சொட்டுடன் வெளியேறிவிடும்.
அவன் கால்களைக் கழுவினால் அவனது கால்கள் நடந்து செய்த தவறுகள் அனைத்தும் (அவனது கால்கள் வழியாக) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசிச் சொட்டுடன் வெளியேறி விடும். இறுதியாக (உளுச் செய்ததன் மூலம்) பாவங்களை விட்டும் பரிசுத்தமானவனாக வெளியேறுவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஐந்து நேரத் தொழுகைகள் மற்றும் ஒரு ஜும்ஆ முதல் மறு ஜும்ஆ வரை, ஒரு ரமளான் முதல் மறு ரமளான் வரை பெரும் பாவங்கள் தவிர்க்கப்பட்டிருந்தால், அவைகளுக்கிடையே உள்ள சிறு குற்றங்களை அவை அழித்து விடும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்).
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ்விடம் தவறுகளை அழிக்கவும், பதவிகளை உயர்த்தவும் காரணமாக உள்ள செயலை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். ‘சரி! இறைத்தூதர் அவர்களே! என்று நபித்தோழர்கள் கூறினர்.
‘சிரமமான நேரங்களிலும் உளுவை முழுமையாக செய்வது, பள்ளிவாசல்களுக்கு (நடப்பது மூலம்) அதிக காலடிகள் வைப்பது, ஒரு தொழுகை முடிந்து மறு தொழுகைக்காக காத்திருப்பது (ஆகியவையாகும்). இதுதான் இறைவனின் பாதையில் (வழிபாடுகளில்) உள்ளவையாகும்” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்).