[ தேயிலைச் சந்தையில் கலப்படம் ஏற்பட முதல் காரணம் தேயிலை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்கள்தான். ஏனென்றால் இவர்கள்தான் விலையைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்.
இதனால், தேநீர்க் கடைகள் மற்றும் ஓட்டல்கள் தங்களுக்குக் கட்டுபடியான விலையில் தேயிலைத் தூளைத் தேடும்போது, அவர்களுக்குக் கிடைப்பது பெரும்பாலும் கலப்படத் தேயிலைத் தூளாகத்தான் இருக்கிறது.
தேயிலை கலப்படம் புற்றுநோய் ஏற்பட காரணங்களில் ஒன்று. எனவே கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் தண்டனையை கொடுத்தால் தான் இதை ஒழிக்க முடியும. உணவு சுகாதாரத்துறை ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருந்தால் இதை தடுக்க முடியும். ]
சில காலங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மளிகைக் கடைகள் மற்றும் தேநீர்க் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி தேயிலைத் தூள் பொட்டலங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில் 50 சதவீத தேயிலைத் தூள் கலப்படமானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நல்ல தேயிலையுடன் சாயம் தோய்க்கப்பட்ட மரத்தூள் கலந்து விற்கப்பட்டுள்ளது. சில தேயிலைத் தூள்களில் தேநீர் வாசனை தரும் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை உடல்நலனுக்குத் தீங்கானவை என்பதில் சந்தேகம் இல்லை.
இதுபோன்று சோதனைகள் நடத்தப்படுவது புதிதல்ல. கடந்த மார்ச் மாதம் உதகையில் உள்ள ஒரு தேயிலைத் தொழிற்கூடத்தில் தேயிலை வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி, 16,000 கிலோகிராம் கலப்படத் தேயிலைத் தூளைப் பறிமுதல் செய்தனர். செப்டம்பர் மாதம் சென்னை மாநகரில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வுகளில் 300 கிலோ கிராம் கலப்படத் தேயிலை கண்டறியப்பட்டது. தற்போது சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின்போது, 3,000 கிலோகிராம் கலப்படத் தேயிலைத் தூள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் ஒரு தேநீர்க் கடை இருக்கிறது. இந்தியாவில் உள்நாட்டில் தேயிலையின் பயன்பாடு ஆண்டுக்கு 802 மில்லியன் கிலோகிராம். அதாவது ஒவ்வொரு தனிநபரும் 750 கிராம் தேயிலையைப் பயன்படுத்துகிறார்.
ஆனாலும், கலப்படத் தேயிலைத் தூள் நடைமுறையில் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இதைத் தடுக்க முடியாததன் முதல் காரணம், தேயிலையின் அபரிமிதமான விலை.
தேயிலைச் சந்தையில் கலப்படம் ஏற்பட முதல் காரணம் தேயிலை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்கள்தான். ஏனென்றால் இவர்கள்தான் விலையைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். இதனால், தேநீர்க் கடைகள் மற்றும் ஓட்டல்கள் தங்களுக்குக் கட்டுபடியான விலையில் தேயிலைத் தூளைத் தேடும்போது, அவர்களுக்குக் கிடைப்பது பெரும்பாலும் கலப்படத் தேயிலைத் தூளாகத்தான் இருக்கிறது.
பெரிய நிறுவனங்களுக்குப் போட்டியாக, சிறு தேயிலைத் தோட்டங்களை வைத்திருப்போர் தங்கள் தேயிலையைத் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்த காலகட்டத்தில், பெரும் நிறுவனங்களைக் காட்டிலும் விலை மலிவாக நல்ல தரமான தேயிலை கிடைத்தது என்பது உண்மையே.
ஆனால், பெரிய நிறுவனங்களின் விலைக்கும் சிறு தேயிலைத் தோட்டங்களின் விலைக்கும் இடையே காணப்பட்ட பெரிய இடைவெளி, இடைத்தரகர்களை சிறுதேயிலைத் தோட்டங்களிடம் ஒட்டுமொத்த கொள்முதல் வணிகத்தில் ஈடுபட வைத்தது. நாளடைவில் இந்த இடைத்தரகர்கள்தான் பெரும் நிறுவனங்களின் வணிகப்பெயர்களில் தேயிலைப் பொட்டலங்களைச் சந்தைக்கு அனுப்புவதும், கலப்படத் தேயிலையை தேநீர்க் கடைகளுக்கு விநியோகம் செய்பவர்களுமாக மாறினர். இவர்கள் யார் என்பது அதிகாரிகளுக்குத் தெரியாதது அல்ல. ஆனாலும், “எல்லாரும் அறிந்த காரணங்களால்’ இந்தக் கலப்படம் முடிவில்லாமல் தொடர்கிறது.
தேயிலைத் தூள் விலை அதிகமாக இருக்கும்வரை சந்தையில் கலப்படத் தேயிலைத் தூள் நுழைவதைத் தடுக்க முடியுமா என்பது சந்தேகமே. தேயிலை விலையை முறைப்படுத்தி, குறைந்த விலையில் கிடைக்கச் செய்தால் கலப்படம் தானாகவே ஒழியும். ஆனால் அதற்கு இந்தப் பெரிய நிறுவனங்கள் ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள் போனால் போகட்டும் என்று மனமிரங்கினாலும்கூட நடக்காது. ஏனென்றால், இப்போது சிறு மற்றும் நடுத்தரத் தேயிலைத் தோட்டங்களை நேரடியாகவும் பினாமி பெயர்களிலும் வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பவர்களில் பலரும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள்தான். இவர்கள் தங்கள் லாபத்தைக் குறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
தேயிலை விற்பனையில் இந்த நிறுவனங்கள் உள்நாட்டுச் சந்தையிலும், ஏற்றுமதியிலும் அடையும் லாபம் பல நூறு மடங்கு. இதில் முன்னிலை வகிப்பவை பன்னாட்டு நிறுவனங்கள். இவர்களுடன் டாடா தேயிலை போன்ற உள்நாட்டு ஜாம்பவான்கள் சிலரும் போட்டியில் தாக்குப்பிடித்து நிற்கின்றனர். பன்னாடு, அல்லது உள்நாடு எந்த நிறுவனமாக இருந்தாலும் இவர்களின் ஒரே நோக்கம்-இந்தியத் தேயிலையை உலகச் சந்தையில் விற்றுப் பெரும் பணம் சம்பாதிப்பது மட்டுமே!
முந்தைய நிதியாண்டில் இந்தியத் தேயிலை ரூ. 1,889 கோடிக்கு ஏற்றுமதியானது. இந்த ஆண்டு 20 சதவீதம் மேலும் கூடியுள்ளது. அதாவது ரூ. 2,275 கோடிக்கு ஏற்றுமதி.
இவ்வளவு வருவாயைப் பெறும் தேயிலைத் தொழில்துறையின் வருத்தமெல்லாம், உலகச் சந்தையில் தங்கள் பங்கு மிகக் குறைவாக இருக்கிறதே என்பதுதான். உள்நாட்டில் இப்படியான அதிக விலை நிர்ணயிப்பதால் கலப்படத் தேயிலை மிகுந்துபோய், மக்கள் நோய்க்கு ஆளாகிறார்களே என்று கவலைப்பட யாருமில்லை. அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் இவர்களோடு “தொழிலதிபர்’களாகக் கலந்துவிட்டபோது, இந்தக் கலப்படம் குறித்து மக்களோடு மக்களாகக் கவலைப்பட யார் இருக்கிறார்கள்?
தேயிலை கலப்படம் புற்றுநோய் ஏற்பட காரணங்களில் ஒன்று. எனவே கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் தண்டனையை கொடுத்தால் தான் இதை ஒழிக்க முடியும. உணவு சுகாதாரத்துறை ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருந்தால் இதை தடுக்க முடியும்.
அரிசியை விளைவிக்கும் விவசாயிக்கு அதன் விலையை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தேயிலைக்கு மட்டும் அவர்கள் இஷ்டத்துக்கு விலை வைத்துக்கொள்ளலாமா? 802 மில்லியன் கிலோகிராம் பயன்பாடு என்பதில் இருந்தே இதுவும் மக்களின் அன்றாட, அத்தியாவசிய பொருள் என்பது புலனாகிறது. அப்படி என்றால் இதையும் அரசே தன நேரடிக் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அதுதானே நியாயம்..? சேற்றில் உழும் விவசாயிக்கு ஒரு நீதி.., ஏ.சி.யில் அமர்ந்து தேனிர் பருகி மதிப்பீடு செய்யும் “தொழிலதிபர்”களுக்கு ஒரு நீதியா.?
திருடுனாக பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற கூற்றின்படி இந்த சமுதாயத்தில் இப்படிப்பட்ட கேடு கேட்டவர்கள் தாங்களாக பார்த்து திருந்தாவிட்டால் இதை தடுக்க முடியாது. இந்த நவீன காலத்தில் எதில் கலப்படம் இல்லை. அரிசி, பருப்பு, தேயிலை, மருந்து மற்றும் மாத்திரை, எல்லாவற்றுக்கும் மேலாக காற்றிலே கூட கலப்படம்.
எதிர் கால தலைமுறைக்கு இது ஒரு பெரிய பிரச்சினையாக அமையும். சட்ட திட்டம் இயற்றும் அரசியல்வாதியும் இதில் ஒரு கூட்டாளி எனவே மக்களிடையே ஏற்படும் விழிப்புணர்ச்சியே இதற்கு ஒரு முடிவு கட்டும். அதற்கான காலம் இப்போதைக்கு இல்லை. பூனைக்கு மணி கட்டுவது யார் என்று முடிகட்டுவதே இப்போதைக்கு பெரும்பாடாக இருக்கிறது. ம்ம்ம்ம்ம்ம்…….