நடுநிலை பேணுவது காலத்தின் கட்டாயம்!
MUST READ
இஸ்லாமிய சமூகம் இலக்கற்று பயனித்துக் கொண்டிருக்கின்றது. நோக்கம் மறந்த நகர்வுகளால் இலக்குகள் தவறிப் போகும் அபாயத்தை அடிக்கடி நமது உள்ளத்திற்கு உணர்த்த வேண்டியது கட்டாயத் தேவை.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கிய அந்த தன்னிகரற்ற சமூகமானது பரந்த மனப்பான்மையோடும், நடுநிலை பேனும் முக்கியமான பன்போடும், எந்த விஷயத்தையும் நிதானமாக அனுகும் போக்கோடும் சிறந்து விளங்கியதால் தான் அவர்களால் தம் இலக்கை இலகுவாக எய்த முடிந்தது.
நாம் எல்லோரும் சத்தியத்தைத் தேடி ஓயாப் பயணம் மேற்கொண்டிருக்கின்றோம். இல்லை சத்தியத்தில் தான் இருந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒரு துரதிஷ்ட நிலை என்னவென்றால், மார்க்கத்திலுள்ள சில அம்சங்களை அனுகும் விதத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் நம்மை சுக்கு நூறாக உடைத்து சிதறவைத்துள்ளன.
மாறுபட்ட கருத்துக்கள் அகீதாவிலோ அல்லது அடிப்படை அம்சங்களிலோ இருத்தல் தகாதது. ஆனால் கிளை அம்சங்களில் கருத்து முரண்பாடுகள் விளைகின்ற பொழுது, நாம் அந்த இடத்தில்தான் மிகவும் நிதானிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். ஏனென்றால் நிதானம் தவறுகின்ற போது ஆளுக்கொரு கருத்துக் கொள்ளும் நிலை தோன்றி பின்னர் பல குழுக்கள் தோற்றம் பெற காரணமாகி விடுவதை நம்மால் தவிர்க்க முடியாமல் போய் விடுகின்றன.
இன்று உலகலவில் ஒரு தாய் மக்களாக இருக்கும் இந்த பரந்து விரிந்து கிடக்கும் இஸ்லாமிய சமூகத்தில் ஒரு தொற்று நோயாகவும் தொடர் நோயாகவும் குழுவாதங்களும், இயக்க வெறிகளும் தாண்டவமாடுகின்றன.
ஒற்றுமையாக, இறுக்கமான உறவோடு உலகத்தின் மாந்தர்களில் தன்னிகரற்று திகழ்த்த இன்னிலை மாறி பளுவிழந்த ஊர்தியாய், துடுப்பிழந்த ஓடமாய் ஆகியதற்கு மேற்கூறிய காரணங்கள் பிரதானமானவையாகும். கருத்து வேறுபாடு ஏற்பட்டு நம்மை நாமே துண்டாடும் போது ஷைத்தானுக்கு நாமே வழி வகுக்கிறோம் என்பதை நன்கு உணரக் கடமைப்பட்டுள்ளோம். துரதிஷ்ட வசமாக இயக்க முரண்பாடுகளும், குழுப் பிரிவினைகளும் ஒட்ட முடியாத துருவங்களாக ஒதுங்கிக் கிடக்கின்றன.
சஹாபாக்களுக்கு மத்தியிலும் ஒரு விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்தன. ஆனால் அவைகள் அவர்களைத் துண்டாடவுமில்லை, பிரிவினைக்கு அப்புனிதர்கள் இடம் கொடுக்கவுமில்லை. அதேவேளை அவர்களால் ஒற்றுமையை எவ்வாறு கட்டிக்காக்க முடிந்தது என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
உண்மையில் அவர்களிடத்தில் இருந்த மனத்தூய்மை, பரஸ்பரப் புரிந்துணர்வு, ஒற்றுமைக்காக ஓயாது செயற்பட்டமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, எந்த ஒன்றையும் நிதானமாகவும், ஆழமாகவும் அனுகிய விதம் போன்ற பன்புகள் தான் கடைசி வரைக்கும் ஒரே கப்பலில் பயணிக்கச் செய்துள்ளது என்பதை இலகுவில் உணர்ந்து கொள்ளலாம்.
”Jazaakallaahu khairan” suvanathendral