கமல் ஹாசனின் பார்ப்பன நரித்தந்திரம்
[ கதையின் முதன்மையான கரு பாசிசம். வெளிப்படையாகவும் அருவெறுக்கத்தக்க முறையில் துருத்திக் கொண்டும் இந்துத்வக் கருத்தும் முசுலீம் வெறுப்பும் படத்தில் திணிக்கப்பட்டிருந்த போதும், அவை இல்லாமலேயே கூட இத்திரைப்படம் இந்துத்வ பாசிசத்தை இயல்பாக வெளிப்படுத்துகிறது. ]
”சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். ”வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து.
பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது என்று அவர்கள் தோட்டாவை செரித்துவிட முடியாது. ஆகவே ”விசாரிக்காமல் சுடமுடியாது” என்று கூறுவது யாரோ அவர்தான் உண்மையில் காமன்மேனுடைய கோபத்தின் இலக்கு. அதாவது அதுதான் சொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகம்.
தான் சொல்ல விரும்பிய இக் கருத்தை கமலஹாசன் நேரடியாக, நேர்மையாகச் சொல்லவில்லை. டாக்டர் ராஜசேகர் நடித்த”இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படம் இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் கம்பீரமாகவும் வெளியிட்டது.”கைதிகளை சித்திரவதை செய்துதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியுமேயன்றி சட்டபூர்வமான வழிகளில் விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது” என்று அந்தப்படம்”நேர்மையாக” பிரகடனம் செய்தது. அப்படிப்பட்ட”நேர்மையான”படங்கள் பல வந்துவிட்டன.
அப்பேர்ப்பட்ட ஒரு நேர்மை கமலஹாசனிடம் இல்லை என்று சொல்லலாம். அல்லது சொல்ல விழையும் செய்தியை உரத்துக் கூறாமல் ஒளித்துச் சொல்வதுதான் கலைக்கு அழகு என்ற காரணத்தினாலும், இந்த கலை ஞானித்தனத்தை (அல்லது களவாணித்தனத்தை) கமல் கைக்கொண்டிருக்கலாம்.
காரணம் எதுவாக இருப்பினும் படத்தின் வில்லன் ”ஜனநாயகம்”. ஜனநாயகம் என்ற இந்தக் கருதுகோள் திரைப்படத்தில் என்ன கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறது?
பப்பட் ஷோவில் முசாரப்பின் பயங்கரவாதத்தை கையாளத் தெரியாத கோழிமாக்கான் புஷ், குண்டு வெடிப்பு பயங்கரவாதம் ஆகியவற்றால் மக்களுக்கு நேரும் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் ஆட்சியைப் பற்றி மட்டுமே கவலைப்படும் முதலமைச்சர் (கருணாநிதி), ஜனநாயகத்தின் அதிகாரத்திற்க்கு கீழ்ப்படியுமாறு மோகன்லாலிடம் கூறும் முதுகெலும்பில்லாத தலைமைச் செயலாளர், எதிர்கால முதல்வராக விரும்பும் விஜயகாந்தைப் போன்ற மட்டமான ஒரு நடிகன், இவர்கள்தான் ஜனநாயகத்தின் பௌதிக வடிவங்களாக படத்தில் சித்தரிக்கப்படுபவர்கள்.
இவர்கள் மட்டுமல்ல. லஞ்சம் வாங்கும் டிராபிக் கான்ஸ்டபிள், தூங்கி வழியும் எஸ்.ஐ முதலான கீழ் வர்க்கத்தினரும் (சாதியும்தான்) எள்ளி நகையாடப்படும் ஜனநாயகத்தின் அங்கங்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர்.
இவர்கள் எள்ளி நகையாடத் தக்கவர்களா இல்லையா என்பதல்ல கேள்வி. இவர்களை எள்ளி நகையாடும் கதாநாயகன் யார் என்பதுதான் விசயம்.
அதிகாரத்தின் இந்தக் கீழ்த்தரமான ஜனநாயகத்தின் கீழ் பணியாற்றுமாறு சபிக்கப்பட்டிருக்கும் மோகன்லால், மனைவியை மறந்து மரணத்தை தழுவத் தயாராக இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி, நடமாடும் உருட்டுக் கட்டையான முஸ்லீம் அதிகாரிஸ.அப்புறம் நம்முடைய காமன்மேன் ஆன கிருஷ்ண பரமாத்மா. இவர்கள்தான் கதாநாயகர்கள்.
இவர்களுடைய கோரிக்கை? அதை மோகன்லால் சொல்கிறார்,”எந்தவித குறுக்கீடுகளும் இல்லாத அதிகாரம்”. அந்த அதிகாரத்தை தங்களுக்கு வழங்கும் பட்சத்தில் பயங்கரவாதத்திலிருந்து மக்களை அவர்கள் பாதுகாப்பார்களாம். அரசியல் குறுக்கீடுகள் அற்ற அதிகாரம்! இந்த சொற்றொடரை அநேகமாக எல்லா துக்ளக் இதழ்களிலும் நீங்கள் படித்திருக்க்கலாம். இத்தகைய அதிகாரத்தை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு வழங்காததனால்தான் இந்தியாவின் பொருளாதாரம் முதல் போக்குவரத்து வரை அனைத்துமே புழுத்து நாறுகிறது என்பதுதான்”சோ” வர்க்கத்தின் கருத்து. இவர்களை இன்னும் கொஞ்சம் சுரண்டினால்”தகுதியான”ஐ.ஏ.எஸ் ஆக இருக்க வேண்டும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காண்பிப்பார்கள்.
அர்சத் மேத்தா முதல் அமெரிக்காவின் சப்-பிரைம் மோசடிக்கான சூத்திரத்தை உருவாக்கிய எம்.ஐ.டி கோல்டு மெடலிஸ்டுகள் வரையிலான எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும் இவர்கள் தங்கள் பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்த மாட்டார்கள். ஆகவே இவர்களைப் பொருத்தவரை சில்லறை அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள்தான் பயங்கரவாதம் தலையெடுக்கவும், தலைவிரித்தாடவும் காரணம். ஆகவே அதிகார வர்க்கத்திற்க்கு முழு அதிகாரம் வழங்கினால் அடுத்த கணமே பயங்கரவாதத்தை அவர்கள் ஒழித்து விடுவார்கள்.
அத்வானி முதல் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வரையிலான பலராலும் பல்லாயிரம் முறை கூறப்பட்டு மக்களுடைய பொதுப்புத்தியில் இந்தப் பொய் உறைய வைக்கப்பட்டிருக்கிறது.எனவேதான் அசாதாரமான ரவுத்திரம் கொண்டு நான்கு பேரை குண்டு வைத்து கொலை செய்யும் இந்தப் படத்தில் குற்றவாளிகளின்”கொடுரமான” குற்றங்களையோ, அல்லது அதனால் பாதிக்கப்பட்ட காமன்மேனின் துயரத்தையோ கோடம்பாக்கத்திற்கே உரிய சென்டிமெண்ட் காட்சிகளின் மூலம் நியாயப்படுத்த இந்தத் திரைப்படம் முயற்சிக்கவில்லை.”நியாயம்”மக்களுடைய மூளைகளில் ஏற்கனவே உறைந்திருப்பதால் தீர்ப்பு மட்டுமே தேவையாய் இருக்கிறது.
பயங்கரவாதிகளை கொடிய மிருகங்களுக்கு ஒப்பிட்டு கமலஹாசன் சாடவில்லை. அவர்களை கரப்பான் பூச்சிகளுக்கு ஒப்பிடுகிறார். இந்தக் கொலை கரப்பான் பூச்சிகளை நசுக்குவதைப் போல முக்கியத்துவம் அற்றது. அந்த உயிர்கள் வெறும் பூச்சிகள். இந்தப் பூச்சிகளைக் கொலை செய்த கையோடு தக்காளி பையுடன் வீட்டிற்குப் போய் மணக்க மணக்க சாப்பிட முடியும் – லாக்கப்பில் ரத்தம் சொட்டச் சொட்ட கைதியை அடித்துக் கூழாக்கிவிட்டு இரவில் மனைவியைத் தழுவும் அதிகாரியைப் போல. கரப்பான் பூச்சிகள்! சாதரண மனிதர்களையும் சிறு குற்றவாளிகளையும் ஏன் மொத்தக் குடிமக்களைப் பற்றியும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி கொண்டிருக்கும் கருத்து இதுதான்.
கதையின் முதன்மையான கரு பாசிசம். வெளிப்படையாகவும் அருவெறுக்கத்தக்க முறையில் துருத்திக் கொண்டும் இந்துத்வக் கருத்தும் முசுலீம் வெறுப்பும் படத்தில் திணிக்கப்பட்டிருந்த போதும், அவை இல்லாமலேயே கூட இத்திரைப்படம் இந்துத்வ பாசிசத்தை இயல்பாக வெளிப்படுத்துகிறது.
ஹேராம் படத்தில் முசுலீம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதனால்தான் இந்து தீவிரவாதியாக தான் மாற நேர்ந்ததாக மிகவும் விலாவாரியாக சித்தரிக்கும் கமல் அந்த நியாயத்தை முசுலீம் தீவிரவாதத்திற்கு வழங்கவில்லை. கோவை குண்டு வெடிப்பிற்காக கைது செய்யப்பட்ட தீவிரவாதி அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி சம்பவம் என்று காலத்தால் பிந்தைய ஒன்றை கூறுகிறார். கமல் சினிமாவிற்காகவே வாழ்பவர். பெர்ஃபெக்ஷனிஸ்ட். நாற்பதுகளின் கொல்கத்தாவை கண் முன்னால் கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து செட் போட்டவர். அப்பேற்பட்ட கமலின் படத்தில் இவ்வளவு அலட்சியமான பிழை எப்படி நேர்ந்தது, ஏன் நேர்ந்தது?
போலீசு தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகைகளில் ஏன் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன? ஏனென்றால் குற்றவாளிகளை லாக்கப்பில் அவர்கள் ஏற்கனவே தண்டித்து விடுகிறார்கள். அப்புறம் இரண்டு மாதம் ரிமாண்டு. போலீசைப் பொறுத்தவரை தீர்ப்பு தண்டனை எல்லாம் முடிந்து விட்டது. நீதிமன்றம் என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத அசவுகரியம். அதனால்தான் அலட்சியம்.
ஒரு முசுலீமை தீவிரவாதி என்று காட்டுவதற்கு ”அவன் தாடி வைத்திருந்தால் போதாதா, அதற்கு மேல் என்ன சாட்சியங்கள், பின்புலங்கள், நியாயங்கள் வேண்டும்” என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் பார்வை.
1947க்கு முந்தைய இந்து முசுலீம் கலவரங்களில் இருதரப்பிலும் பல அட்டூழியங்கள் நடந்தன. அதன்பின் இந்தியாவில் சிறுபான்மையாகிவிட்டதால் திருப்பியடிக்கும் சமூக வலிமையை இசுலாமிய சமூகம் இழந்திருந்தது. 90 களுக்குப்பிறகு இந்து மதவெறியர்களுக்கு பதிலடி என்ற பெயரில் குண்டு வெடிப்புக்கள் நடக்க ஆரம்பித்தன். இதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற போதிலும் இந்து மதவெறியர்களைப் போல கற்பழிப்பு, உயிரோடு எரிப்பு முதலான சமூகமே நடத்தும் கலவரங்களில் இசுலாமிய தீவிரவாதிகள் ஈடுபடவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை.
கடைசிக் காட்சியில் காமன்மேன் கமல் மிக உருக்கமாக வருணிக்கும் கருவறுத்த கதையே ஒரு முசுலீம் பெண்ணுக்கு இந்து வெறியர்கள் இழைத்த கொடுமைதான். 2002 குஜராத் முசுலீம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் கவுசர்பானு என்ற பெண்ணின் மேற்சொன்ன கதையைப் போல பலநூறு கதைகள் உள்ளன. கவுசர்பானுவின் பிறப்புறுப்பில் கையை விட்டு கருக்குழந்தையை எடுத்து அந்தப் பெண்ணை கொல்லுமளவு இந்து மதவெறி தலைவிரித்தாடியது.
இதை செய்தவர்கள் இந்து மதவெறியர்கள் என்ற உண்மையை மறைப்பதோடு”இந்த சம்பவம் ஒரு இந்துவுக்கு நடந்திருந்தால் என்ன, ஒரு முசுலீமுக்கு நடந்திருந்தால் என்ன?”என்று மத நல்லிணக்கம் பேசி இரண்டு சொட்டு கண்ணீர் விடுகிறார் கமல்.இதுதான் பார்ப்பன நரித்தந்திரம்.இசுலாமியர்களுக்கு நடந்த அநீதியையே இசுலாமிய தீவிரவாதிகளைக் கொல்வதற்கு பயன்படுத்தும் இந்த மோசடிக்கு பார்வையாளர்களை சுலபமாக வென்றெடுக்கலாம் என்பது கமலின் துணிபு. அதை இந்தப் படத்தை பார்ப்பவர்கள், பாராட்டியவர்கள் நன்றியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
மேலவளவு சம்பவத்தில் தேவர் சாதி பஞ்சாயத்து தலைவரை தலித் மக்கள் கொலை செய்து விட்டதாக காட்டினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் உன்னைப் போல ஒருவனும் இசுலாமிய பயங்கரவாதம் பற்றி கூச்சமில்லாமல் பொய் பேசுகிறது. ஆனால் பார்வையாளர்கள், பதிவுலகில் விமரிசனம் எழுதிய பலரும் இது குறித்தெல்லாம் அக்கறைப்படவில்லை என்பது இந்த படம் தோற்றுவித்திருக்கும் அபாயகரமான பிரச்சினையாகும். இவர்களின் அக்கறையின்மை என்பது இசுலாமிய பயங்கரவாதம் குறித்த ஊடகங்களின் பொய்யான புனைவுகளில் நிலைகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
கவுசர்பானுபோல கீதாபென் என்ற இந்துப்பெண் தனது முசுலீம் கணவனை காப்பாற்றப்போய் இந்து மதவெறியர்களால் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதுவும் குஜராத் இனப்படுகொலையில் நடந்த உண்மைதான். ஒரு முசலீமின் விந்து கரு ஒரு இந்துப்பெண்ணின் கருப்பையில் நுழைவதா? என்ற அளவுக்கு இந்து மதவெறி குஜராத்தில் தலைவிரித்தாடியது. இன்றைக்கும் முசுலீம் ஆண்களை திருமணம் செய்யும் இந்துப்பெண்களுக்கு எதிராக இந்துப்பெண்களின்”கவுரவத்தை” காப்பாற்றுவதற்காக ஒரு இயக்கத்தையே இந்துமதவெறியர்கள் வட இந்தியாவில் நடத்துகிறார்கள். இந்த சமீபத்திய வரலாற்றின் துயரங்களை தெரிந்து கொண்டால்தான் கமலின்”இந்துவுக்கு நடந்தால் என்ன, முசுலீமுக்கு நடந்தால் என்ன?” என்று பேசும்”தத்துவ அயோக்கியத்தனத்தை”புரிந்து கொள்ளமுடியும்.
கவுசர்பானுவின் கதையை கேட்டு உருகி பழிவாங்க நினைத்தால் குஜராத்தின் மோடியையோ, அதற்கு உதவியாக இருந்த போலீசு, அதிகார வர்கக்த்தையோ பழிவாங்கியிருக்க வேண்டும். மாறாக இந்த அநீதிகளை இந்த நாட்டின் சட்ட அரசியல் அமைப்பு தண்டிக்கவில்லை என்று பொறுமி இசுலாமிய தீவிரவாதம் குண்டுவெடிப்பின் மூலம் எதிர்வினையாற்றுகிறது. கமலோ, கவுசர்பானுவின் துயரத்தையே திருடி இசுலாமிய தீவிரவாதிகளுக்கு குண்டு வைக்கிறார். அதற்காக மொட்டை மாடியிலிருந்து ஆவேசப்படுகிறார். தனது நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்.
ஆனால் உண்மையான குஜராத்தின் யதார்த்தம் வேறுமாதிரி. 2000த்திற்கும் குறைவில்லாத முசுலீம்களை படுகொலை செய்த கும்பலுக்கு தலைமை வகித்த மோடி மீண்டும் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுகிறார். இந்நிலைமையில் ஒரு சராசரி முசுலீமின் மனநிலை எப்படியிருக்கும்?
ராகேஷ் ஷர்மாவால் எடுக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலையை விவரிக்கும் பைனல் சொலியூஷன் (FINAL SOLUTION)என்ற ஆவணப்படத்தின் இறுதியில் ஒரு ஐந்து வயது முசுலீம் சிறுவன் பேசுகிறான். தனது உறவினர்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்தவனிடம் எதிர்காலத்தில் நீ என்னவாக வர விரும்புகிறாய் என்று சர்மா கேட்கிறார். அதற்கு அவன் தான் ஒரு போலீசாக வர விரும்புவதாக கூறுகிறான். ஏன் என்று கேட்கிறார் சர்மா. இந்துக்களை கொல்ல வேண்டும் என்று மழலை மொழியில் கூறுகிறது அந்தக் குழந்தை.
கலவரங்களை கண்ணால் கண்டு மனதில் தேக்கி வைத்திருக்கும் ஒரு குழந்தையே இப்படி பேசுகிறது என்றால் இசுலாமிய பயங்கரவாதம் ஏன் குண்டு வைக்காது? இந்த யதார்த்தத்தை கமல் கேலிசெய்கிறார் அல்லது நிராகரிக்கிறார்.
முசுலீம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால்”நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு,”ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா?” என்கிறார் கமல். இதுதான் கமல் பிராண்ட் களவாணித்தனம்.ஆர்.எஸ்.எஸ் கூட முசுலீம்களுக்கெதிராக இந்துக்களுக்குத்தான் கோபம் வரவேண்டும் என்று சொல்கிறது. கமலோ இந்தக் கோபம் இந்துக்களுக்கு மட்டுமல்ல மற்ற அனைவருக்கும் வரவேண்டும் என்கிறார். காமன்மேன் ஆர்.எஸ்.எஸ்-ஐ விஞ்சுகிறார்.
இரா.முருகனின் அசட்டுத்தனம் காரணமாகவும் கமலின் திமிர்த்தனம் காரணமாகவும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்கிற இத்தகைய சில வசனங்களும் காட்சிகளும் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒருவேளை இவை இல்லை என்றாலும் இது ஒரு இந்துத்வ பாசிஸ்ட் திரைப்படம்தான். இந்திய அரசும் அதிகார வர்க்கமும் தன்னியல்பாக இந்துத்வத்தை வரித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அதிகார வர்க்கத்திற்கு அதிகாரம் கொடு என்ற கோரிக்கையே நடைமுறையில் ஒரு இந்துத்வ கோரிக்கைதான்.
தங்களுடைய சொத்து சுகங்களை பாதுகாக்க வேண்டும் என்று பச்சையாக முதலாளிகள் எந்தக் காலத்தில் கோரியிருக்கிறார்கள்? சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றுதான் அவர்கள் கோருவார்கள், கூறுவார்கள். அதுதான் இது, இதுதான் அது. காஷ்மீர் முதல் கோவை வரை முசுலீமாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் கதை வெறும் கதையல்ல. நீதிமன்றங்களில் நீருபிக்கப்பட்ட உண்மை.
காஷ்மீர், குஜராத், கோவை, புலிகள் அனைத்திலும் அதன் அரசியல் காரணங்கள் கழுவி நீக்கப்பட்டு வெறும் பயங்கரவாதம் என்று பேசப்படும் வக்கிரத்தை கமலும் செய்கிறார்.இந்த பயங்கரவாத விளக்கத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பிற்காகவும், தேசிய இனவிடுதலைக்காகவும் போராடும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இசுலாம் பெயர் கொண்ட அனைத்து இயக்கங்களும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றன. இந்த வகையில் இந்தப்படம் ஒடுக்கப்படும் மக்களுக்கெதிராகவும் தன்னை காட்டிக் கொள்கிறது.
மீனம்பாக்கத்தில் நடந்த குண்டு வெடிப்பு, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ராஜிவ் காந்தியின் கொலை எல்லாம் மறக்கப்பட்டதாக கமல் கவலைப்படுகிறார். மாறாக இதைச் சொல்வதன்மூலம் ஈழமக்களின் உரிமைப் போராட்டத்தையும் மறக்கச் சொல்கிறார். அதன்மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் ஒரே வரியில் பயங்கரவாதமாக மாற்றப்படுகிறது. குண்டு வெடிப்புகள் குறித்து மக்கள் மறக்கிறார்கள் என்று கவலைப்படும் கமல் கோவை காவலர் செல்வராசு கொலைக்குப்பின் நடந்த முசுலீம் எதிர்ப்பு கலவரத்தையோ, குஜராத் இனப்படுகொலையையோ மக்கள் மறந்து விட்டதாக கவலைப்படவில்லை. ஏனெனில் இந்துமதவெறியர்கள் எதைக் கவலைப்படவேண்டுமென நினைக்கிறார்களோ அவைதான் கமலின் கவலையும் கூட.
எல்லாவற்றிலும் அரசியல் காரணங்களை கழுவிவிட்டு பயங்கரவாதமாக சித்தரிப்புது ஒன்று.
இரண்டாவதாக இந்த பயங்கரவாதங்களை ஜனநாயக முறையில் எதிர்கொள்ளமுடியாது, எதிர்பயங்கரவாதத்தினால்தான் முறியடிக்க முடியும் என்பது.
மூன்றாவது இந்த பாசிச முறையை பெருமைப்படுத்துவது.
இது ஏதோ முசுலீம், ஈழம் பற்றி மட்டுமல்ல, நேபாளில் மாவோயிஸ்ட்டுகள் பயங்கரவாதம், இந்தியாவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதம், இப்படி எல்லாவற்றையும் பயங்கரவாதமுத்திரை குத்துவது யாருக்கு சேவையளிக்கிறது?
ஒவ்வொரு நாட்டிற்கும், பகுதிக்கும் தனித்தனியான வரலாற்றுக்காரணங்கள் உள்ளன. ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை அகற்றுவதற்காக தாலிபான்களையும், பின்லாடனையும் வளர்த்து விட்டது அமெரிக்கா. காஷ்மீர் மக்களின் போராட்டத்தை, ஆரம்பத்தில் மதச்சார்பற்றதாக இருந்த இயக்கங்களை மதவாதத்தில் மூழ்கவைத்து சிதைக்கும் வேலையை இந்திய அரசு செய்தது. பின்னர் பாக்கிஸ்தான் அதை நன்கு பயன்படுத்திக்கொண்டது. இந்தியாவின் பல இடங்களில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு இந்துமதவெறியர்களின் கலவரங்கள் காரணமாக இருக்கின்றன. கோவை குண்டுவெடிப்பெல்லாம் பாக்கின் மேற்பார்வையில் நடக்கவில்லை. நியாயம் கிடைக்காத முசுலீம் இளைஞனின் கோபமே அதை சாத்தியமாக்குவதற்கு போதுமானதெனும்போது ஐ.எஸ்.ஐக்கு என்ன தேவை இருக்கிறது?
பாலஸ்தீனின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஈராக்கின் போராளிகள் எல்லாரும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக போராடுகிறார்கள். இவர்கள் எல்லோரையும் முசுலீம் பயங்கரவாதம் என சித்தரிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.
அமெரிக்காவையும், இந்துமதவெறியர்களையும் எதிர்ப்பதற்கு இசுலாமியத் தீவிரவாதத்தின் செயல்கள், வழிமுறைகள் தவறு என்பது வேறு. அதன் வரலாற்றுக்காரணத்தை புரிந்து கொள்ளாமல் மொத்தமாக பயங்கரவாதிகள் என்று காட்டுவது நாட்டில் எந்த அமைதியையும் கொண்டுவந்து விடாது. கமல் முன்வைக்கும் பாசிச அரசு வந்தாலும் இந்த எதிர்வினைகளை அடக்கிவிடமுடியாது. மாறாக இந்தப் பிரச்சினைகள் மட்டுமல்ல எல்லாப் பிரச்சினைகளுக்கும் போராடும் ஜனநாயக, புரட்சிகர சக்திகளை ஒடுக்குவதற்கே அந்த பாசிசம் பயன்படும்.
90களின் ஆரம்பத்தில் நடந்த பம்பாய் கலவரத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்களை கொலை செய்த சிவசேனாவின் பங்கை மறுக்கும் விதமாக இந்து, முஸ்லீம் இருதரப்பினரும் கலவரம் செய்ததாக மணிரத்தினத்தின் பம்பாய் படம் சித்தரித்திருந்தது. இதைக்கண்டித்து ம.க.இ.கவும் சில இசுலாமிய அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. அதன் பிறகு இந்தப் பணியை தொடர முடியாத அளவுக்கு நூற்றுக்கணக்கான படங்கள் முசுலீம் தீவிரவாதத்தை வைத்து வெளிவந்துவிட்டன. இந்தப் படங்களின் நாயகர்கள் காஷ்மீருக்கும், பாக்கிற்கும் சென்று முசுலீம் பயங்கரவாதிகளை அழித்து வந்தார்கள். அப்படித்தான் பொதுப்புத்தியிலும்”முசுலீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முசுலீம்கள்தான்” என்று அழுத்தமாக பதிய வைக்கப்பட்டது.
உலகெங்கும் அரசுகள் மெல்ல மெல்ல பாசிசமயமாகி வருவதை நியாயப்படுத்திக் கொள்கின்றன. முதலாளித்துவத்தால் ஊழல்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து போன தங்களது வளர்ப்பு பிள்ளைகளான அரசியல்வாதிகளை அப்புறப்படுத்துவது என்ற பெயரில் பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஆளும் வர்க்கங்கள் அப்புறப்படுத்திவருகின்றன. கரப்பான் பூச்சிகளான மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைக் காட்டிலும், புத்திசாலிகளான தொழில்முறை அதிகாரவர்க்கத்தின் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதும் அதிகரித்து வருகிறது.
நம்நாட்டிற்கு ஓட்டுப்போடும் உரிமை வந்த காலத்தில் ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கரை பரம்பரை சொத்தாக வைத்திருக்கும் மூப்பனார்கள், வாண்டையார்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக முடியும் என்றும், அவர்களுக்கு ஏழுதலைமுறைக்கு சொத்து இருப்பதால் பொதுப்பணத்தில் கைவைக்க மாட்டார்கள் என்றும் ஒரு பிரச்சாரம் அடிமை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தது. சலூன் கடைக்காரனும், டீக்கடைக்காரனும் அரசியலுக்கு வந்தால் லஞ்சம் வாங்காமல் என்ன செய்வான் என்று காங்கிரசுகாரர்களும் சோ முதலானோரும் அன்றும் இன்றும் பேசிவருகிறார்கள்.
இன்று அதே பாட்டுக்கு புது மெட்டு போடப்படுகிறது. மன்மோகன் சிங்கும், மான்டெக் சிங் அலுவாலியாவும், நந்தன் நீலகேணியும் அரசியல்வாதிகள் இல்லை என்பதே அவர்களுக்குரிய விசேட தகுதியாகிவிட்டது. கமலும் கூட மோகன்லால்களிடம் அதிகாரத்தை கொடுப்பதே சரியானது என இந்தப்படத்தில் வலியுறுத்துகிறார்.
அதனால்தான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம். இந்தப்படம் முசுலீம் எதிர்ப்பு என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. அடிப்படையில் இது பாசிச மனோபாவத்தை ஆதரிக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இனி முசுலீம் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கும், ஜனநாயகத்தை வேட்டையாடுவதற்கும் நாயகர்கள் தேவையில்லை, காமன்மேனே போதும் என்கிறது உன்னைப் போல் ஒருவன்.முசுலீம் தீவிரவாதத்தை ஒழிக்க நினைக்கும் (இந்து) நடுத்தரவர்க்கம் கூடவே பாசிசத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கும் கொண்டுவரப்பட்டிருப்பதால் திரையரங்கில் அத்தகைய வசனங்களுக்கு இரசிகர்கள் கைதட்டுகிறார்கள். வெளியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழையும் இந்தக் காமன்மேன்கள் இருட்டில் கைதட்டுவது குறித்து கூச்சப்படுவதில்லை. பிளாக் டிக்கெட் விற்பதை ஒழிக்கவேண்டும் என்ற சத்திய ஆவேசம் காமன்மேனுக்கு வரும்போது அவர் டிக்கெட் விற்கும் கரப்பான் பூச்சிகளை சுட்டுத்தள்ளுவார். ஜெய் ஹிந்த்!
நன்றி: புதிய ஜனநாயகம்