வார்த்தைகள் அல்ல
இது,
ஒரு மூளையின் இபாதத்
ஒரு பேனா,
குனிந்து செய்த சஜதாவின் சுவடுகள்
மண்ணிலும், உங்கள் மனதிலும்
முளைக்க விழும் சில குர்-ஆனிய விதைகள்.அஸ்ஸலாமு அலைக்கும்
ஓ ரமலான்,
நீ எங்கள் இரத்தத்தை இனிப்பாக்க வருகிறாய்
எங்கள் ஆன்மாவில் அழுக்கெடுக்க வருகிறாய்
ஒரு முஜாஹிதீனின் ரத்தக்காயத்தில் முத்தமாக வருகிறாய்
எங்கள் இதயப் பள்ளத்தாக்கில் ரோஜாக்களை பயிரிட வருகிறாய்
ஓ ரமலான்,
நீ எங்கள் இரத்தத்தை இனிப்பாக்க வருகிறாய்
வா…
இனி,
எங்கள் வீட்டுத் தீமைகள்
நெருப்பின் வாடை நுகரும்
என் தொழுகையின் அறுந்து போன ஆத்மீக நரம்புகள்
உயிர் கொள்ளும்
குர்-ஆன்
நாவிலிருந்து இருதயத்திற்குள் இறங்கும்
நீ குடியிருக்கும் மனதெல்லாம்
மஸ்ஜிதுகளாகும்
எங்கள் குருதிக்கும் உறுதியும்
உறுதிக்கு குருதியும் பாய்ச்சப்படும்.
நாளை,
மனிதனை மனிதன் ஓதலாம்
ஒரு நோன்பு, எம்மை பிடிக்கலாம்.
ஒரு ஏழையின் வயிற்றுச் சுரப்புகளை
இருபதாவது மாடியின் இருதயங்கள் விளங்கலாம்
அதனால்,
ஒரு தாயின் மார்பகம் போல்
நாளை ஜகாத்கள் சுரக்கலாம்
இறையச்சம் இறுகும்
ஈமான் இறுகும்
விழிகள் கலங்கும்.
அதோ ஒரு வியாபாரி,
அதோ ஒரு விவசாயி,
அதோ ஒரு மாணவன்,
அதோ ஒரு கைக்கூலி,
அதோ ஒரு முடவன்,
அதோ ஒரு இந்து,
மீண்டும் மீண்டும் முஸ்லீமாகலாம்.
ஏன்,
ஒரு ஜனாதிபதி கூட நாட்டிற்கு நல்லது செய்யலாம்.
இதோ நோன்பு வருகிறது.
என் கல்பு நோக்கி
கலிமா வருகிறது.
ஹமாஸின் ராணுவப் பிரிவிற்கு
ஒரு ஆயுதக் கிடங்கு வருகிறது.
மண்ணிலோ, மண்ணிற்கு அடியிலோ
என் அடுத்த ஆண்டிற்கான பயிற்சி பாசறை வருகிறது.
ரமலான் வருகிறது.
செருப்பில்லாதவனை பல்லக்குகளும்
மாட்டுத் தொழுவத்தை மாடிகளும்
பசியை செமியாகுணமும்
அறிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் வருகிறது.
அதோ ரமலான் வருகிறது.
சொமாலியாவை அமெரிக்காவும்
கூவத்தை கருணாநிதியும்
தெரிந்துகொள்ள முப்பது நாட்கள் வருகிறது
இதோ ரமலான் வருகிறது.
எனது சகாராவில்
புத்தம் புது குளிர் மழை வருகிறது.
இனி கானகங்கள் மாறும்
காட்டுக்குயிலின் ஓசை மாறும்,
எல்லோரும் தூங்கும் சாமத்தில்
இதயத்தில் இடி இடித்து
இரு விழியில் மழை பெய்யும்
காகங்கள் கலையும் செவ்வந்தி மாலையின்
அல்லாஹு அக்பரில் – ஓர் சந்தோசம்
பறவைகள் கீச்சிடும் சுட்ட சுபகின்
அல்லாஹு அக்பரில் – ஓர் ஆன்மிகம்.
இதோ ரமலான் வருகிறது
என் வீட்டிற்கு
அல்லாஹ்வின் தூதர் வருகிறார்.
என் இதயத்திற்குள்
ஹப்பாப் வருகிறார்.
கதறிக் கதறி அழுகிறார்.
மீண்டும் மீண்டும் யாசீர்
அல்லாஹுஅஹத் என்ற ஒசையோடு விழுகிறார்
நான் உஹதுக்களம் செல்கின்றேன்.
சஹீதாகின்றேன்.
நான் பதுருக்களம் செல்கின்றேன்.
சஹீதாகின்றேன்.
நடூ இரவில்
வியர்வையோடு விழிக்கின்றேன்.
என் இதயத்தையும்
வீட்டுக்கதவையும்
நட்சத்திரங்களால் அலங்கரிக்கின்றேன்.
நாளைய ஸஹருக்கு தயாராகிறேன்.
தக்வா – குத்பா ஓதுகிறது.
தாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்.
தீய பார்வை நீங்காத வரை
மண்டையில் கிடக்கும் கண்களில் நோன்பில்லை.
தீய வார்த்தை நீங்காத வரை
தாடைக்குள் கிடக்கும் நாவினில் நோன்பில்லை
நன்மைகளை அள்ளாதவரை
தோள்களில் முளைத்த கைகளில் நோன்பில்லை.
தூக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்.
நோன்பின் பெறுமதி
தக்வாவில் தங்கியிருக்கிறது.
நெற்றிகள் சுஜூதில் கிடக்குமே
கால்கள் கண்ணீரில் வேர் விடுமே
கொஞ்சக்கூடிய பிஞ்சுக் கால்களும்
தராவீஹ்-ல் வீங்குமே
இடக்கை அறியாமல் – சிலரின்
வலக்கையில் இதயங்கள் முளைக்குமே
அவைகள் நோன்பு கால உயிரோவியங்கள்.
இளைஞர்களே,
சுவனத்தின் வாரிசுகளே
உங்களோடு நானும் வருகிறேன் வாருங்கள்.
இந்த நன் நாளில்
கேரம்போர்டு விட்டு கையை எடுங்கள்.
டி.வியிலிருந்து
கண்ணை கழட்டுங்கள்.
அந்த டி.வி.டியை
இன்றேனும் தூக்கில் போடுங்கள்.
காதுகளுக்கு கீதம்
விஷம் என்று சொல்லுங்கள்.
எங்கள் மானத்திற்கு வெட்கம் வேண்டும் இளைஞர்களே
அந்த இரவு நேர மரத்திலிருப்பது
தெம்பிலி அல்ல உங்கள் ஒழுக்கங்கள்
– வெட்டாதீர்கள்
அந்த மாமரத்திலிருப்பது
உங்கள் சகோதரனின் நம்பிக்கைகள்- திருடாதீர்கள்
ஒளிரும் தெரு விளக்குகள்
உங்கள் சொத்துகள்
– ஏன் உடைக்கிறீர்கள்.
வெடிகளை அல்ல
– அதை கொளுத்த வேண்டும் என்ற மடமையை கொளுத்துங்கள்.
நோன்பு கால இரவுகள்
மறுமைக்கான ஆயத்தங்கள்.
அந்த இரவுகள்
தூய்மையாகவே இருந்துவிட்டு போகட்டும்.
நாளை உங்கள் இருதயம் வளர்ந்திருந்தால்
பெருநாளின் மறுநாள்
அது நோன்பு நோற்கத் தூண்டினால்
அது ரமலான்
இல்லையேல்
இதுவும் ஒரு செப்டெம்பர் என்று சொல்லுங்கள்.
தோழர்களே….
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல.
இந்த நோன்பு
வாஜ்பாயின் வாசலுக்குச் சென்றிருந்தால்
கத்தியும் கரைவேட்டியும் கீழே விழுந்திருக்கும்.
இந்த நோன்பு
இந்துக்களின் இதயத்திற்குச் சென்றிருந்தால்
பாபரி மஸ்ஜிதும் இந்தியாவின் மானமும் நிமிர்ந்தே நின்றிருக்கும்.
இந்த நோன்பு
பிரபாகரனின் இரத்தத்தில் கரைந்திருந்தால்
என் தம்பியும் வாப்பாவும்
மயானத்தில் அல்ல காத்தான்குடி மஸ்ஜிதில் இருந்திருப்பார்கள்
சுடுகாட்டில் அல்ல சுஜூதில் கிடந்திருப்பார்கள்.
இந்த நோன்பு
ஒரு இராணுவ வீரனின் நெஞ்சில் தக்வாவை தட்டியிருந்தால்
கொகட்டிச் சோலையில் ஒரு கோடீஸ்வரி கொழுத்தப் பட்டிருக்க மாட்டாள்.
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.
நோன்பில்லாத கிளின்டன் தான்
மோனிகாவிடம் தோற்றான்.
நோன்பில்லாத ஹிட்லர்
மண்ணிடம் தோற்றான்.
நோன்பில்லாத கார்ல் மார்க்ஸ்
படைத்தவனிடம் தோற்றான்.
நோன்பு மரம்,
இந்த மரம் மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்
நோன்பு குழந்தை,
இந்த குழந்தை தாய்க்கும் பாலூட்டும்
நோன்பு சுவனத்து வாகனம்,
இது மனிதனின் இருதயத்திற்கு பெட்ரோல் ஊற்றும்.
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.
”Jazaakallaahu khairan” ஜம்மியா.