துபைய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 60 லட்சம் மக்களைக் கொண்ட அமீரகத்தில் 17.5 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் நாட்டவர்கள் 12.30 லட்சம் பேர்களும், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 5 லட்சம் பேர்களும் இங்கு வசிக்கின்றனர். ஆசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், ஈரான், சீனா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, கொரியா, ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 10 லட்சம் பேர் இங்கு வசிப்பதாக “கல்ஃப் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பிராந்தியத்தில் பணிபுரிவோர் எண்ணிக்கை மற்றும் விசா கோரி பதிவு செய்துள்ளவர்கள் ஆகியோரைக் கணக்கில் கொண்டு இந்த புள்ளி விவரப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 5 லட்சம் பேர் இங்கு வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2005-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்த மக்கள் தொகை சுமார் 41 லட்சமாக இருந்தது. இதில் 20 சதவீதம் பேர் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள். தற்போது இந்நிலை முற்றிலும் மாறியுள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.