”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் ‘எனக்கு உபதேசம் செய்யுங்கள்’ என்று கேட்டார். ‘கோபம் கொள்ளாதே என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். கோபம் கொள்ளாதே’ என்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
”ஓர் இறைவிசுவாசியான ஆண் மற்றும் பெண்ணிற்கு அவரது உயிர் மற்றும் அவரது குழந்தை, அவரது சொத்து என அனைத்திலும் சோதனை இருந்து கொண்டே இருக்கும். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன்)
”எனக்குப்பின் உரிமை பறித்தலும், நீங்கள் வெறுக்கும் காரியங்களும் உருவாகும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ”இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (இது விசயமாக) நீங்கள் இடும் கட்டளை என்ன?’ என்று நபி தோழர்கள் கேட்டனர், உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள்! உங்களுக்கு தேவையானதை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.” (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி,முஸ்லிம்).
”என் அடியான் என்னிடம் ஒரு எட்டு நெருங்கினால், நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குவேன். என்னிடம் ஒரு முழம் நெருங்கினால், அவனிடம் நான் இரண்டு முழம் நெருங்குவேன். என்னிடம் அவன் நடந்து வந்தால் நான் அவனிடம் விரைந்து வருவேன்’ என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.” (நூல்: புகாரி)
”இரண்டு அருட்கொடைகள். இந்த இரண்டு விஷயத்திலும் மக்களில் அதிகமானோர் நஷ்டப்பட்டு விடுகின்றனர். அவை (1) ஆரோக்கியம், (2) ஓய்வு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி).
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் நின்று வணங்குவார்கள். அவர்களின் இரு பாதங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு விடும். ‘இறைத்தூதர் அவர்களே! இவ்வாறு ஏன் செய்கிறீர்கள்? அல்லாஹ் உங்கள் முன் பின் பாங்களை மன்னித்து விட்டானே?’ என்று கேட்டேன். ‘நான் நன்றியுள்ள அடியான் ஆக வேண்டும் என நான் விரும்ப வேண்டாமா?’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்.” (அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, முஸ்லிம்).