”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் ‘எனக்கு உபதேசம் செய்யுங்கள்’‘ என்று கேட்டார். ‘கோபம் கொள்ளாதே என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். ‘கோபம் கொள்ளாதே’ என்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.” (அறிவிப்பாளர்: , அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி).
”ஓர் இறைவிசுவாசியான ஆண் மற்றும் பெண்ணிற்கு அவரது உயிர் மற்றும் அவரது குழந்தை, அவரது சொத்து என அனைத்திலும் சோதனை இருந்து கொண்டே இருக்கும். இறுதியாக அவர் (சோதனை மூலம் மன்னிப்பு ஏற்பட்டதால்) குற்றம் ஏதுமின்றி அல்லாஹ்வை சந்திப்பார். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ).
”எனக்குப்பின் உரிமை பறித்தலும், நீங்கள் வெறுக்கும் காரியங்களும் உருவாகும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ”இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (இது விசயமாக) நீங்கள் இடும் கட்டளை என்ன?’ என்று நபி தோழர்கள் கேட்டனர், உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள்! உங்களுக்கு தேவையானதை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி,முஸ்லிம்)
”மூஃமினான எனது அடியானுக்கு உலக மக்களில் விருப்பமானவரை நான் கைப்பற்றி. பின்பு அவன் (பொறுமையாக இருந்து) நல்லதை எதிர் பார்த்திருந்தால், அவனுக்கு என்னிடம் கூலி, சொர்க்கத்தைத் தவிர வேறு இல்லை’ என்று அல்லாஹ்; கூறுவதாக’‘ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி).
”ஒரு முஸ்லிமுக்கு சிரமம், நோய், கவலை, துக்கம் நோவினை, மயக்கம் மற்றும் அவனின் காலில் குத்திவிடும் முள் வேதனை உட்பட அனைத்திற்காகவும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்’‘ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.” அறிவிப்பாளர்கள்: அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு,(நூல்கள்: புகாரி, முஸ்லிம்).
”மனிதர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவனிடம் பிழை பொறுத்திட வேண்டுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு நூறுமுறை பாவமன்னிப்பு(தவ்பாச்)செய்கிறேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அல்அஹர்ரு இப்னு யஸார் முஸனிய்யி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்).
”பாலைவனத்தில் காணாமல் போன தன் ஒட்டகத்தை மீண்டும் பெற்றுவிட்டதால், அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட, தன் அடியான் தன்னிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது, அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்’‘ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹம்ஸா என்ற அனஸ் இப்னு மாலிக் அல்அன்சாரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்).