Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தீனை நிலைநாட்டுதல் என்றால் என்ன?

Posted on October 2, 2009 by admin

மெளலானா மெளதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி

[ இறைத்தூதர்களுக்கெல்லாம் ”தீனை நிலைநாட்டுங்கள்” என்கிற கட்டளை இடப்பட்டதெனில் அதற்கு என்ன பொருள்? இறைத்தூதர்கள் எல்லோருமே தீனின் கட்டளைகளுக்கேற்பச் செயல்பட வேண்டும் என்பது மட்டும்தானா? ]

இறைத்தூதர்கள் அனைவருக்கும் தீனின் தன்மை கொண்ட சட்ட திட்டம்தான் அருளப்பட்டது. அதுவும் ஒரு முக்கியமான வழிகாட்டுதலுடனும் அறிவுறுத்தலுடனும் தான் அருளப்பட்டது.

அதாவது இறைத்தூதர்கள் அனைவருமே இந்த தீனை நிலைநாட்டுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டனர். இந்தக் கட்டளையுடன்தான் அவர்களுக்கு இந்த தீன் அருளப்பட்டது.

“அக்கீமுத்தீன்” என்பதற்கு ஷா வலியுல்லாஹ் அவர்கள் ”தீனை நிலைநாட்டுங்கள்” என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஷா ரஃபீயுத்தீன் சாகிபும் ஷா அப்துல் காதிர் அவர்களும் இதற்கு ”நிலை நிறுத்தப்பட்ட நிலையில் தீனை வைத்திருங்கள்” என மொழி பெயர்த்துள்ளனர்.

இந்த இரண்டு மொழி பெயர்ப்புகளும் பொருத்தமானவையே! இகாமத் என்பதற்கு நிலைநாட்டுதல் என்கிற பொருளும் உண்டு. நிலை நிறுத்தப்பட்ட நிலையில் வைத்திருத்தல் என்கிற பொருளும் உண்டு. இறைத்தூதர்கள் எல்லோருமே இந்த இரண்டு பணிகளையும் செய்வதற்காகவே பணிக்கப்பட்டிருந்தார்கள்.

எங்கு இந்த தீன் நிலைநாட்டப்படவில்லையோ அங்கு இந்த தீனை நிலைநாட்டுவது அவர்களின் முதன்மைக் கடமையாக இருந்தது. எங்கு இந்த தீன் நிலைநாட்டப்பட்டு விட்டதோ அங்கு நிலைநிறுத்தப்பட்ட நிலையில் தீனை வைத்திருப்பது அவர்களின் இரண்டாவது கடமையாக இருந்தது.

நிலைநிறுத்தப்பட்ட நிலையில் ஒன்றை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் எப்போது வரும்? அது ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்டிருக்கும்போதுதானே..! இல்லையெனில் முதலில் அதனை நிலை நாட்ட வேண்டியிருக்கும். பிறகு அது நிலை நிறுத்தப்பட்ட நிலையிலேயே நீடித்திருப்பதற்காகத் தொடர்ந்து இடைவிடாமல் பாடுபடவேண்டியிருக்கும்.

இப்போது இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக தீனை நிலை நாட்டுதல் என்பது என்ன? இரண்டாவது எதனை நிலைநாட்டும்படியும் எதனை நிலைநிறுத்தப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கச் செய்யும்படியும் நமக்குக் கட்டளையிடப்பட்டிருக்கின்றதோ அந்த தீன் எது? எதனைக் குறிக்கின்றது?

இந்த இரண்டையும் நல்ல முறையில் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

ஒரு திடப் பொருளை நிலை நாட்டுங்கள் என்றால் என்ன பொருள்? சாய்ந்து கிடப்பதை நேராக நிறுத்துங்கள் என்பது தானே! எடுத்துக்காட்டாக கீழே விழுந்து கிடக்கின்ற கோலையோ, தூணையோ நிமிர்த்தி நேராக நிலைநிறுத்தி வைத்தல்; அல்லது சிதறிக்கிடக்கின்ற உட்பகுதிகளை ஒன்று சேர்த்து மேலெழுப்புதல் என்றும் அதற்குப் பொருள் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, வெற்று மைதானத்தில் கட்டிடம் கட்டி எழுப்புதல். அதே போன்று உயிருள்ளவற்றை நிலை நாட்டுங்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? அமர்ந்திருப்பவரை நிற்கச் செய்வதுதானே! எடுத்துக்காட்டாக, உட்கார்ந்திருக்கின்ற மனிதனையோ, விலங்கையோ நிற்கச் செய்தல்.

ஆனால் திடப் பொருளாகவோ, உயிருள்ள பொருளாகவோ இல்லாத, சிந்தனையை நிலைநாட்டுங்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? அந்தச் சிந்தனையைப் பரப்புங்கள்; மக்கள் மத்தியில் அந்தச் சிந்தனையைக் குறித்துப் பிரச்சாரம் செய்யுங்கள் என்பது தானா? இல்லை. சிந்தனையை அல்லது சித்தாந்தத்தை நிலைநாட்டுங்கள் என்றால் அந்தச் சிந்தனையைப் பரப்புங்கள்;மக்கள் மத்தியில் அதனைக் குறித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்யுங்கள் என்பதோடு பொருள் முடிந்துவிடுவதில்லை. அந்தச் சித்தாந்தத்தைக் கூடுதலோ குறைவோ இல்லாமல் முழுமையாகச் செயல்படுத்துங்கள்; அதனையே நடைமுறையாக்கி விடுங்கள்; அதனை அன்றாட வாழ்வில் நிறுவி விடுங்கள் என்று அதன் பொருள் விரிந்து கொண்டே போகும்.

எடுத்துக்காட்டாக, இன்னாரின் மகன் இன்னார் தம்முடைய ஆட்சியை நிறுவினார் என்று சொல்லும்போது அதற்கு என்ன பொருள்? இன்னாரின் மகன் இன்னார் தம்முடைய ஆட்சியின் பக்கம் மக்களை அழைத்தார் என்பதா? இல்லை. அதற்கு மாறாக, அவர் தம்முடைய நாட்டு மக்களைத் தம்முடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்பவர்களாக ஆக்கிக் கொண்டார்; அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளையும் தம்முடைய ஆணைகளுக்கு ஏற்ப செயல்படுகின்றவையாக மாற்றி அரசாங்கத்தின் மீது தம்முடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். தம்முடைய விருப்புவெருப்புகளின் அடிப்படையில் நாட்டின் அனைத்து விவகாரங்களும் அரங்கேறுகின்ற வகையில் எல்லாவற்றிலும் தம்முடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டார் என்றுதான் அதற்குப் பொருள்.

இதே போன்று இந்த நாட்டில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன என்று சொன்னால் அதற்கு என்ன பொருள்? அழகான கட்டடங்கள் கட்டப்பட்டுவிட்டன என்பதா? நீதியரசர்கள் பல்லாண்டுகள் நாட்டின் சட்ட திட்டங்களைப் படித்து மக்களுக்கு சட்ட நுணுக்கங்கள் குறித்து பாடம் நடத்துகின்றார்கள் என்பதா? நீதி, நியாயம் ஆகியவற்றின் முக்கித்துவத்தையும் சிறப்பையும் வலியுறுத்தி மணிக்கணக்காகப் பேசுகின்றார்கள்; மக்களும் அவர்களின் எழுச்சிமிகு உரைகளைக் கேட்டு மனம் லயித்து நீதியின் சிறப்பை உணர்ந்து கொண்டார்கள் என்றா பொருள்? நிச்சயமாக இல்லை.

அதற்கு மாறாக, அழகான, பரந்து விரிந்த கட்டடங்களும் இருக்கின்றன; நீதியை நிலைநாட்டுவதற்காக நீதியரசர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கின்றார்கள்; நீதம் செறிந்த திர்ப்புகளையும் குறித்த நேரத்தில் அளிக்கின்றார்கள்; மக்களுக்கு நீதி தாமதமின்றி, செலவின்றி கிடைத்துவிடுகின்றது என்பதுதான் ”நாட்டில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன” என்பதற்குப் பொருள் ஆகும்.

இதே போன்று தொழுகையை நிலைநாட்டுங்கள் என குர்ஆனில் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது எனில், அதற்குப் பொருள் தொழுகையின் முக்கியத்துவம், சிறப்பு போன்றவற்றைக் குறித்தும் தொழுகையினால் கிடைக்கின்ற நன்மைகள் பற்றியும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதல்ல.

தொழுகையை அழகாக, நேர்த்தியாக, குறைவில்லாமல் தாமும் நிறைவேற்றுவதுடன் நம்பிக்கையாளர்கள் எல்லோருமே ஐவேளைகளிலும் ஜும்ஆவிலும் குறித்த நேரத்தில் எவ்வித சிரமுமில்லாமல் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவதற்கும் வசதி செய்தல் வேண்டும்; பள்ளி வாசல்கள் பாங்குடன் இயங்க வேண்டும்; குறித்த நேரத்தில் தொழுகைக்காக அழைப்பும் கொடுக்கப்பட வேண்டும்;

இமாம்களும், கதீப்களும் நியமிக்கப்பட்டு அவர்களும் தத்தமது பணிகளைச் செம்மையாக நிறைவேற்ற வேண்டும்; மக்களும் ஐவேளையும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுது போகின்றவர்களாக மலர வேண்டும்.

இத்துணை பரிமாணங்களிலும் எவ்விதமான குறைவும் இல்லாமல் கவனம் செலுத்தப்பட்டால் மட்டுமே தொழுகை நிலைநாட்டப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியும்.

இதுவரை சொன்ன விளக்கங்களையும், எடுத்துக்காட்டுகளையும் படித்த பிறகு ”தீனை நிலைநாட்டுங்கள்” என இறைத்தூதர்களுக்குத் தரப்பட்ட கட்டளையின் முழுவீச்சையும் முழுமையான பரிமாணங்களையும் ஒருவரால் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். அதில் யாதொரு சிரமமோ, குழப்பத்திற்கோ இடமிருக்காது.

இறைத்தூதர்களுக்கெல்லாம் ”தீனை நிலைநாட்டுங்கள்” என்கிற கட்டளை இடப்பட்டதெனில் அதற்கு என்ன பொருள்? இறைத்தூதர்கள் எல்லோருமே தீனின் கட்டளைகளுக்கேற்பச் செயல்பட வேண்டும் என்பது மட்டும்தானா? இல்லை.

இறைத்தூதர் அந்த தீனைக் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்; தீனின் சிறப்பியல்புகளையும், முக்கிய கோட்பாடுகளையும் எந்தவிதச் சிரமத்திற்கும் இடமில்லாத வகையில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்; நேர்வழி என்றும், சரியான, உண்மையான வழிகாட்டுதல் என்றும் மக்கள் அந்த தீனை ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கு தீனை நல்ல முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது மட்டும்தானா? இல்லை.

மக்கள் அந்த தீனை ஏற்றுக்கொண்ட பிறகு இன்னும் ஒருபடி முன்னேறி தீன் முழுவதையும் தம்முடைய வாழ்வில் நடைமுறைப்படுத்தி நிலைநாட்ட வேண்டும்; வாழ்வின் அனைத்து துறைகளும் தீனின் போதனைகளுக்கேற்ப இயங்குகின்ற அளவுக்கு முழுமையான மாற்றம் மலர வேண்டும்; அந்த மாற்றம் நீடித்து நிலைக்க வேண்டும்.

அந்த முழுமையான மாற்றம் நிலைபெறுவதற்காக முழுமையான கவனத்துடனும் அக்கறையுடனும் தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இத்துணை பரிமாணங்களிலும் எவ்விதமான குறைவும் இல்லாமல் கவனம் செலுத்தப்பட்டால் மட்டுமே தீன் நிலைநாட்டப்பட்டதாகச் சொல்ல முடியும்.

அழைப்புப் பணி, பிரச்சாரப் பணி போன்றவற்றுடன்தான் இந்த மிகப்பெரும் பணி தொடங்கும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.தொடக்கத்தில் இந்த இரண்டு பணிகளும் இன்றியமையாதவை என்பதில் சந்தேகமில்லை. இந்த இரண்டை மேற்கொள்ளாமல் அடுத்தக்கட்ட பணிகளை ஏறெடுத்தும் பார்க்க முடியாது என்பதும் உணமையே. ஆனால் பிரச்சாரமும் அழைப்புப் பணியும்தான் எல்லாமே என்பதல்ல. பிரச்சாரம் செய்வதும், அழைப்பு விடுப்பதும்தான் முழுமுதல் நோக்கம் என்பதல்ல.

தீனை நிலைநாட்டுங்கள் என்கிற கட்டளையை அறிவார்ந்த முறையில் ஆய்ந்து பார்க்கின்ற எவரும் இதனை எளிதாக விளங்கிக் கொள்வார். பிரச்சாரம் செய்வதும், அழைப்பு விடுப்பதும் துணைக்கருவிகளே தவிர, முதன்மை இலக்குகள் அல்ல என்பதையும் தீனை நிலைநாட்டுவதும், அதனை நிலைநிறுத்தப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கச் செய்வதும்தான் உண்மையான இலக்குகள் என்பதையும் புரிந்து கொள்வார்.

இந்த முதன்மை இலக்குகளை அடைவதற்குத் துணைபோகின்ற கருவிகள்தான் அழைப்புப் பணியும், பிரச்சாரப் பணியும் என்பதைப் புரிந்து கொள்வார். இறைத்தூதர்களின் தூதுத்துவப் பணியின் ஒற்றை இலக்கே அழைப்புப் பணியையும், பிரச்சாரப் பணியையும் திறம்பட மேற்கொள்வதுதான் என எவருமே சொல்லத் துணியமாட்டார்.

தமிழில் : அஜீஸ்லுத்புல்லாஹ்

நன்றி : சமரசம் செப் 16-31,2009

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

42 − = 38

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb