[ உலக மயமாதலும், வணிக மயமாதலும், தனியார் மயமாதலும் எதுவும் இந்தியாவின் கழிப்பிடத்தின் தரத்தை இம்மியளவும் முன்னேற்றவில்லை என்பதே நிஜம்.
இந்தியாவில் வருகின்ற 80 விழுக்காடு நோய்களுக்கும் கழிவு கலந்த தண்ணீரே காரணமாகிறது என இந்தியாவின் கழிப்பிடப் பெருமையை அறிக்கை மூலம் பறைசாற்றுகிறது உலக நலவாழ்வு நிறுவனம்.
பொதுக் கழிப்பிட சுகாதாரத்துக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு டாலர் பணத்துக்கும் ஏழு டாலர் சமமான பொருளாதார வளர்ச்சி சமூகத்தில் உருவாகும் என்கிறது உலக நலவாழ்வு நிறுவனம். (WHO)]
உலகிலேயே மிக நீளமான கழிப்பிடம் எது ?” எனும் கேள்விக்கு “இந்தியன் ரயில்வே” என்று ஒரு நகைச்சுவைப் பதில் உண்டு.
இது வெறுமனே சிரித்து விட்டுப் போக வேண்டிய நகைச்சுவையல்ல. இந்தச் நகைச்சுவைக்குப் பின்னால் ஒளிந்திருக்கின்ற கனமான சோகம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அது கவனிக்கப்பட வேண்டியவர்களால் கவனிக்கப்படாமல் கண் மூடித் தனமாக நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான் வேதனை.
சிங்காரச் சென்னை மாநகரையே எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் இருக்கின்றன? அவற்றில் எத்தனை சுத்தமாக இருக்கின்றன? எத்தனை பாதுகாப்பாய் இருக்கின்றன? தமிழகத்தின் தலை நகராம் சென்னையிலேயே இந்த நிலை எனில் புற நகரங்கள், சிறு நகரங்களின் கதைகளைப் பற்றி கேட்கவும் வேண்டுமா?
இந்த அவசரச் சிக்கலில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்களே. பயணங்களிலோ, குடும்பத் தேவைகளுக்காக நகரில் அலைய நேர்கையிலோ பொதுக் கழிப்பிட வசதி இல்லாமல் அவர்கள் அவஸ்தைப்படுவது வாடிக்கை நிகழ்ச்சியாகி விட்டது.
ஆண்களைப் போல எந்த இடத்தையும் பொதுக் கழிப்பிடமாக்கிக் கொள்ள முடியாமல், நல்ல, பாதுகாப்பான, பொதுக் கழிப்பிடங்களுக்காக அவள் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறாள். அப்படியும் நிலைமை கை மீறிப் போனால் வேறு வழியில்லாமல் ஏதேனும் அங்காடிகளிலோ, உணவகங்களிலோ சென்று உபாதையைக் கழிக்க வேண்டிய நிலை பெண்ணுக்கு.
அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் ஆண்களுக்கு ஒரு கழிப்பிடம் எனில் பெண்களுக்கு இரண்டு கழிப்பிடங்கள் இருக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. பெண்ணுக்கே உரிய பல்வேறு சிக்கல்களினால் அவள் கழிப்பறைகளில் எடுத்துக் கொள்ளக் கூடிய நேரம் ஆண்களை விட மிக அதிகம்.
அதை உணர்ந்த அமெரிக்கா ஆண்களுக்கான ஒரு கழிப்பிடம் கட்டினால் அந்த இடத்தில் பெண்களுக்காய் இரண்டு கழிப்பிடங்கள் வேண்டும் என சட்டம் இயற்றியிருக்கிறது. உதாரணத்துக்கு நியூயார்க்கின் யாங்கீ ஸ்டேடியத்தை எடுத்துக் கொள்ளுங்களேன், அங்கே ஆண்களுக்காய் இருக்கின்ற கழிப்பறைகள் 176. பெண்கள் கழிப்பிடங்கள் 358 !
உலக அளவிலான IPC (International Plumbing Code) யும் பெண்களுக்கும் ஆண்களுக்குமான கழிப்பிட வசதிகள் 2:1 எனும் விகிதத்தில் இருப்பது மிகவும் நல்லது, தேவையானது என அறிவுறுத்தியிருப்பதும் கவனிக்கத் தக்கது. நமது நாட்டிலோ 1:1 எனும் விகிதத்தில் கூட கழிப்பிடங்கள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
புள்ளி விவரங்களை வெட்கத்துடன் வாசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது நமது தேசம். இன்னும் 50 விழுக்காடு பள்ளிக் கூடங்களில் சிறுமிகளுக்கென தனியான கழிப்பிட வசதி இல்லை என்கிறது மாவட்ட உயர்கல்வி தகவலின் (DISE) 2007 – 2008 ம் ஆண்டின் புள்ளி விவரக் கணக்கு ஒன்று. பள்ளிக் கூடங்களிலேயே இந்த நிலமையெனில் பொது இடங்களில் கேட்கவும் வேண்டுமா ?
கி.மு 2500 களிலேயே இந்தியாவில் மக்கள் அமர்ந்து பயன்படுத்தக் கூடிய, சுட்ட செங்கற்களால் ஆன, பாதாளச் சாக்கடைகளோடு இணைந்த கழிப்பிடங்கள் இருந்தன என்கிறது ஹரப்பா அகழ்வாராய்ச்சி. அதுவும் ஒவ்வோர் வீட்டுக்கும் ஒவ்வொரு கழிவறை இருந்திருக்கிறது. அப்படியெனில் உலகிலேயே கழிப்பிட வசதிகளில் முதன் முதலில் அசத்திக் காட்டிய நாடு இந்தியா தான். ஆனால் இப்போதைய நிலமை ?
உருவாகி சில நூறு ஆண்டுகள் மட்டுமே ஆன அமெரிக்கா போன்ற நாடுகளெல்லாம் இன்று கழிப்பிடங்கள் போன்ற அடிப்படை விஷயங்களில் தன்னிகரில்லாமல் இருக்க, பல ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட நாமோ வெறும் வரலாறுகளைப் புரட்டுவதிலும், வீண் பெருமை பேசுவதிலும் மட்டுமே தன்னிறைவு அடைந்திருக்கிறோமோ என நினைக்கத் தோன்றுகிறது.
இன்றைக்கு உலக அளவில் 2.6 பில்லியன் மக்கள் சரியான கழிப்பிட வசதி இல்லாமல் இருக்கிறார்கள்.
இதில் 1.3 பில்லியன் மக்கள் இந்தியாவையும், சீனாவையும் சார்ந்தவர்கள்.
கி.மு 2500 ல் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கழிப்பிடம் !.
கி.பி 2009 ல் 80 சதவீதம் மக்களுக்கு சரியான கழிப்பிட வசதி இல்லை !!.
இதுவே கழிப்பிட விஷயத்தில் இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சி.
இந்தியாவில் வருகின்ற 80 விழுக்காடு நோய்களுக்கும் கழிவு கலந்த தண்ணீரே காரணமாகிறது என இந்தியாவின் கழிப்பிடப் பெருமையை அறிக்கை மூலம் பறைசாற்றுகிறது உலக நலவாழ்வு நிறுவனம் (WHO). உலகிலேயே பொருளாதாரத்தில் மிக வேகமாக வளரும் மூன்றாவது நாடு நமது இந்தியா என பெருமையடிப்பதில் என்ன அர்த்தமிருக்கப் போகிறது ?
சரியான எண்ணிக்கையில் கழிப்பிடங்கள் இல்லை. இருக்கும் கழிப்பிடங்களில் சுத்தம் என்பது சுத்தமாய் இல்லை. சுத்தமில்லாத கழிப்பிடங்களில் பாதுகாப்பாவது இருக்குமா என்றால் அதுவும் இல்லை. இது தான் இந்தியாவிலுள்ள பெரும்பாலான பொதுக்கழிப்பிடங்களின் இன்றைய நிலை.
பொதுக் கழிப்பிட சுகாதாரத்துக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு டாலர் பணத்துக்கும் ஏழு டாலர் சமமான பொருளாதார வளர்ச்சி சமூகத்தில் உருவாகும் என்கிறது உலக நலவாழ்வு நிறுவனம். சுகாதாரமான கழிவறைகள் நலமான வாழ்க்கைக்கான உத்தரவாதம் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
உலக மயமாதலும், வணிக மயமாதலும், தனியார் மயமாதலும் எதுவும் இந்தியாவின் கழிப்பிடத்தின் தரத்தை இம்மியளவும் முன்னேற்றவில்லை என்பதே நிஜம். சரியான வரையறைகளோ, வழிமுறைகளோ, திட்டங்களோ இல்லாமல் இந்தியாவில் பொதுக் கழிப்பிட திட்டங்களெல்லாம் ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் உழலும் பெண்ணுக்கு மேலும் ஒரு சுமையாகவே மாறியிருக்கிறது.
நன்றி: அலசல்