[ இன்று தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு இஸ்லாமியப் பிரிவினரும், இஸ்லாமிய இயக்கங்களில் இருப்பவர்களும் தங்களுடைய இயக்கத்தைச் சாராத, பிரிவைச்சாராத மற்ற இயக்கத்தில், பிரிவில் உள்ள முஸ்லீம்கள் மீது வரம்பு மீறி தங்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள். அவர்களுக்காகவே இக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்கிறோம். – adm. nidur.info ]
முஸ்லிம்களுக்கு மத்தியில் உறவு முறிவை உருவாக்குவது ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்று. ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்ற பெரும்பாலோர் மார்க்கம் அனுமதிக்காத காரணங்களுக்காகவெல்லாம் தம் சகோதர முஸ்லிமை வெறுக்கின்றனர். தங்களிடையே உள்ள உறவை முறித்துக் கொள்கின்றனர்.
ஒன்று கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட ஏதாவது கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது அற்பமான காரணமாக இருக்கலாம்.
இந்த உறவு முறிவு நீண்ட காலத்திற்கு நீடிக்கும். சில சமயம், நான் உன்னிடம் பேசவே மாட்டேன் என சத்தியம் செய்து விடுகின்றனர். அவன் வீட்டு வாசல்படியில் கூட மிதிக்கக் கூடாதென சத்தியம் செய்கின்றனர். வழியில் அவனைக் கண்டால் புறக்கணித்து விடுகின்றனர். ஏதேனும் ஒரு சபையில் அவனை சந்தித்தால் அவனுக்கு முன்னால் பின்னால் இருப்பவரிடம் மட்டும் முஸாஃபஹா செய்து விட்டு அவனைத் தாண்டிச் சென்று விடுகின்றனர். முஸ்லிம் சமுதாயம் பலவீனமடைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதனால் தான் இது விஷயத்தில் இஸ்லாமியச் சட்டமும், எச்சரிக்கையும் மிகக் கடுமையானதாக இருக்கின்றது.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது: ”தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது எந்த முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல. அவ்வாறு மூன்று நாட்களுக்கு மேல் யாரேனும் வெறுத்து அந்த நிலையில் அவர் மரணமடைந்தால் நரகம் செல்வார்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்) அபூகராஷ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது: ”ஒருவன் தன் சகோதரனை ஒரு வருடம் வெறுத்தால் அவன் அவனைக் கொலை செய்தவன் போலாவான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அதபுல் முஃப்ரத்)
முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ள உறவைத் துண்டிப்பதினால் விளையும் தீங்குகளில் இறைவனுடைய மன்னிப்புக் கிடைக்காமல் போவது ஒன்றே போதும்.
”ஒவ்வொரு வாரமும் இருமுறை – திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் மனிதர்களின் செயல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப்படுகின்றன. அப்போது மூமினான ஒவ்வொரு அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படும். பகைத்துக் கொண்ட இருவரைத் தவிர. அவ்விருவரையும் விட்டு விடுங்கள் அல்லது அவ்விருவரின் விவகாரத்தை ஒத்திப் போடுங்கள் – அவ்விருவரும் சமாதானம் ஆகும் வரை!” என வானவர்களிடம் கூறப்படும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
சண்டைப் போட்டுக் கொண்ட இருவரில் யார் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கொரி திருந்துகிறாரோ அவர் தன் நண்பரிடம் சென்று ஸலாம் சொல்ல வேண்டும். இப்படி அவர் நடந்து கொள்ளும் பட்சத்தில் அவருடைய நண்பர் அவரை (ஏற்க) மறுத்து விட்டால் – அவருடைய பொறுப்பு நீங்கி விடும். (அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை) மறுத்தவர் மீதே குற்றம் எஞ்சியிருக்கும்.
அபூஅய்யூப் அல் – அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ”ஒருவர் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக் கொள்ளக் கூடாது. இருவரும் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் புறக்கணித்துச் செல்லக் கூடாது. அவ்விருவரில் யார் முதலில் ஸலாம் சொல்கிறாரோ அவரே சிறந்தவர்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி)
ஆனால் இவ்வாறு பகைத்துக் கொள்வதற்கு தொழுகையை விடுதல், மானக்கேடான காரியங்களில் பிடிவாதமாக இருத்தல் போன்ற மார்க்க ரீதியான காரணம் இருந்தால், அதே நேரத்தில் பகைத்துக் கொள்வது தவறிழைப்பவனுக்கு பலனளிக்கும் என்றிருந்தால் – அதாவது அவன் தன் தவறை உணர்ந்து சரியான நிலைக்குத் திரும்புவான் என்றிருந்தால் பகைத்துக் கொள்வது கடமையாகின்றது.
ஆனால் பகைத்துக் கொள்வதால் தவறிழைத்தவன் மேலும் வரம்பு மீறிய போக்கையே மேற்கொள்கிறான், பாவம் செய்வதிலேயே பிடிவாதமாக இருக்கிறான் எனில் இந்த நேரத்தில் பகைத்துக் கொள்வது பொருத்தமாக இருக்காது. ஏனெனில் அதனால் மார்க்கம் விரும்புகின்ற நன்மை ஏற்படாது. மாறாக தீமையே அதிகரிக்கும். எனவே இதுபோன்ற சமயத்தில் அவனுக்குத் தொடர்ந்து அறிவுரை வழங்குவதும் நல்லுபதேசமும், நல்லுபகாரமும் செய்வதுமே ஏற்றமானதாகும்.
நன்றி: இஸ்லாம் தளம்